பல்சமயச் சிந்தனை!
ஆசிரியர் குழு
2025 ஜூன் தொடர்ச்சி…
“முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசிகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தெறிந்துவிட்டார்கள். அல்குர் ஆனின் ஞானபோதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்புகொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்திரவையும் பயன்படுத்த வழி இல்லாமல் போய்விட்டது” என்று டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ் என்பவர் கூறுகிறார். கைசேதமே ஒருமுஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தையும், அல்குர்ஆனையும் விளங்கி வைத்திருக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விளங்கிக்கொள்ளவில்லையே என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்னும் முன்னோர்கள், முன் சென்ற அறிஞர்கள் சொன்னார்கள் என்று அவர்களது பெயரால், இறுதி நெறி நூலிற்கும் இறுதித் தூதரின் போதனைகளுக்கும் மாறாகச் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் கற்பனைக் கட்டுக் கதைகளை நம்பித்தானே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் வியப்படைகின்றேன். டாக்டர் சொல்வதைப் பாருங்கள். இறைவனுடன் நேரடித் தொடர்புகொள்ள வழி ஏற்பட்டுவிட்டது என்று அவர் சொல்லவில்லை. உரிமை ஏற்பட்டுவிட்டது என்றே அவர் சொல்கிறார். தனக்குள்ள உரிமையைப் பற்றித் தெரியாதவர்களைக் குறித்து நாம் என்ன சொல்ல முடியும்?
அறியாததை யாரிடம் கேட்டு அறிந்து கொள்வது?
“நீங்கள் அறியாததை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” (பார்க்க 16:48, 21:7) என்று இறைவனே இறுதி நெறி நூலில் சொல்லியிருக்கிறானே என்று மக்களைத் திசை திருப்புவார்கள். இங்கும் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களே அல்லாமல், உண்மையைச் சொல்லவில்லை. இந்த வசனங்களில் “அஹ்லத்திக்ரி‘ என்று இறைவன் குறிப்பிடுகின் றானே அல்லாமல், “அஹ்லல் இல்மி‘ என்று குறிப்பிடவில்லை. அதாவது இறை அறிவிப்புகளை உடையவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறான். ஆனால் அறிவுடையவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. அப்படியானால் ஒருவர் ஒரு ஐயம் வந்து கேட்டால், இறைவன் தன் திருகுர்ஆனில் இவ்வாறு சொல்கிறான். அதற்கு இறுதித்தூதர் இவ்வாறு விளக்கம் கொடுத்தார்கள் என்றல்லவா விளக்கவேண்டும். இறுதி நெறிநூலையும் இறுதித் தூதரின் போதனைகளை யும் விட்டுவிட்டு, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இவர்கள் கற்பனையில் வந்த கட்டுக் கதைகளையா சொல்வது? இப்படியா மக்களை ஏமாற்றுவது? மாணவனுக்கு ஒரு கணக்கில் ஐயம் வந்து ஆசிரியரிடம் கேட்டால், அதன் தொடக்கத்திலிருந்து அந்தக் கணக்கை எப்படிப் போட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதா? அல்லது அதை எல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டு, இறுதியில் வரும் 12 அல்லது 10 என்ற விடையை மட்டும் சொல்லிக் கொடுப்பதா? எது அறிந்துகொள்ளச் செய்வது? நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
பரீட்சையில் காப்பியடிப்பது பெருங்குற்றம் :
தேர்வில் மற்றவனைப் பார்த்து எழுதி வெற்றி பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். காப்பி அடித்ததற்காகத் தண்டிக்கப்படுவான். உலகம் இறைவனால் அமைக்கப்பட்ட தேர்வுக்கூடம். இதை இறைவனே இறுதி நெறிநூலில் (67:2) கூறுகிறான். இந்தத் தேர்வில் இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் தானே படித்து விளங்கிக் கொண்டு தேர்வு எழுதாமல், மற்றவர்களைக் காப்பி அடிப்பவன் நிலை என்ன ஆகும்? இறைவனிடம் பாஸ் மார்க் கிடைக்குமா? இதனை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின் றேன். ஆக இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் படித்து விளங்கிக் கொண்டு செயல்படுபவனே. இறைவனால் சம்மதிக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றுகின்றான். “”எனக்குப் பின்னால் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள், அவை இறுதி நெறிநூலும் எனது போதனைகளும் ஆகும் என்றுதான் இறுதித்தூதர் சொன்னார்களேயல்லாமல், எனக்குப் பின்னால் நான்கு இமாம்களை விட்டுச் செல்கிறேன், அவர்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம், நீங்கள் வழிதவறமாட்டீர்கள்”, என்று சொல்லவில்லையே உறுதியாகச் சொல்லவில்லை.
“ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் மார்க்கத்தைக் கற்றுக்கொள்வது கண்டிப்பான கடமை” என்று இறுதித்தூதர் சொல்லும்போது, அன்று இருந்தது இறுதி நெறிநூலும், இறுதித்தூதரின் போதனைகளுமே ஆகும். உறுதியாக வேறெதுவும் இல்லை. அப்படியானால் இறுதி நெறிநூலையும், இறுதித் தூதரின் போதனைகளையும் மட்டும்தான் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கற்றுக்கொள்வதைக் கடமையாக்கி இருக்கிறார்கள், இறுதித் தூதர் முஹம்மது (ஸல) அவர்கள் என்பது உறுதிப்படுகிறது.
இன்னொரு பெரிய தவற்றையும், இந்த மதவாதிகள் செய்கிறார்கள். ஒருவர் படித்துப் பட்டம் பெற்று, அவர் பெயருக்கு முன்னாலும், பின்னாலும் நீண்ட பட்டங்களை இணைத்துக் கொண்டவராகவும், தோற்றத்தில் பெரியவர் போலக் காட்சி தந்தாலும், அவரைத் தங்கள் வழிகாட்டியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் எதைச் சொன்னாலும், அவர் படித்தவர், தவறாகவா சொல்வார் என்று குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிறார்கள். அவர் இறுதி நெறி நூலுக்கும், இறுதித் தூதரின் போதனைக்கும் மாற்றமாக உபதேசித்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவர்களுடைய எண்ணத்தில் இறை வசனங்களை விட இறுதித்தூதரின் போதனை களைவிட இவர்கள் நம்பும் இந்த வழிகாட்டியின் சொல் மிகமிக முதன்மை வாய்ந்ததாக ஆகிவிடுகின்றது. அவர் இவர்களால் செய்ய முடியாத ஒரு வியத்தகு செயலைச் செய்து காட்டிவிட்டால் போதும், வேறு வினையே வேண்டாம். அவரையே இறைவனாகவும், அவர் சொல்வதையே இறைவாக்காகவும் எடுத்துக் கொள்வார்கள்.
இறைவனின் இறுதி நெறிநூலை விட, இறுதித் தூதரின் போதனைகளை விடப் பல மடங்கு மதிப்புள்ளதாக, இந்த மனிதரின் வாக்கு. இந்த மதவாதிகளிடம் ஆகிவிடுகின்றது. அதற்கு நேர்மாறாக ஒரு சாதாரணமான ஒருவர், தன் சொந்தக் கருத்தைச் சொல்லாமல் இறைவனின் குர்ஆன் வசனங்களிலிருந்தும், இறுதித் தூதரின் போதனைகளிலிருந்தும் எடுத்துக் காட்டினாலும், உடனே இந்த மதவாதிகள் அவரைப் பார்த்து, நீ ரொம்பப் படித்துவிட்டாயோ? நிரம்பத் தெரிந்து கொண்டாயோ? என்று மட்டந்தட்டி, அவரது பேச்சை அல்ல, இறை வசனங்களையும், இறுதித் தூதரின் போதனைகளையும் மறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். என்னே அவர்களின் இரங்கத்தக்க நிலை? இவர்கள் சொர்க்கம் சேரமுடியுமா? எண்ணிப் பாருங்கள்.
மார்க்கத்தின் தெளிவான முடிவு இதுதான்!
மார்க்கத்தில் சொந்தக் கருத்துச் சொல்லப் படித்தவருக்கும் உரிமை இல்லை; படிக்காத வருக்கும் உரிமை இல்லை. அனைவரும் இறுதி நெறிநூலிலும், இறுதித்தூதரின் போதனை களிலும் உள்ளவற்றை எடுத்துப் பறைசாற்றும் உரிமை பெற்றவர்கள் மாத்திரமே. அரசு உத்திரவை பறைசாற்றுவதற்குத் தகுதி என்ன இருக்கிறது? தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து (இஸ்லாத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லவே இல்லை) தேர்ந்தெடுக்கப்படுகிறான். உரத்த குரல் வேண்டும், அரசு சொல்லியதைத் தெரிந்து அப்படியே உரக்கச் சொல்ல வேண்டும்.
கூடக்குறையச் சொல்லவோ, அவன் கருத்தை அதில் இணைக்கவோ அவனுக்கு உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அவன் தண்டிக்கப்படுவான். இதே நிலைதான் மார்க்கத்தை உபதேசிப்பவனுக்கும், இறைவனும், இறுதித் தூதரும் சொல்லியுள்ளவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்; அதை அப்படியே மக்களுக்குச் சொல்லவேண்டும். இதைச் சிறுவன் செய்தாலும் சரி; அறிஞன் செய்தாலும் சரி; மடையன் செய்தாலும் சரி; சொல்லுவது இறைவசனமாகவோ, இறைத் தூதரின் போதனையாகவோ இருந்தால், மக்கள் உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அதனை ஏற்காது ஒதுக்கித் தள்ளவேண்டும்.
சொல்பவனைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அவன் சொல்லக்கூடியது இறுதி நெறி நூலில் உள்ளதா? இறுதி நபியின் போதனையில் உள்ளதா? அல்லது அவை இரண்டிற்கும் ஒத்ததாக இருக்கிறதா? என்று மட்டுமே பார்க்கவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் மார்க்கத்தை அணுகினால் சிக்கல் எழாது; கருத்து வேறுபாடுகள் எழாது; பிளவுகள் எழாது; மதப்பிரிவுகள் உண்டாகாது; இறைவனே வழிகாட்ட வேண்டும்.
இந்தக் கருத்தில் நான் இவ்வளவு வலியுறுத்திக் கூறுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். காரணம் முஸ்லிம் மதவாதிகள், இஸ்லாத்தில் தங்கள் விருப்பப்படி எல்லாம் கூடக்குறையச் செய்து கொண்டதால், உலகில் மார்க்ஸ், ரஸ்ஸல், லெனின், பெரியார், அண்ணா போன்ற பேரறிஞர்களாக எண்ணப்பட்டவர்களெல்லாம், இந்த மதவாதிகள் காட்டும் இஸ்லாத்தைப் போன்றதுதான் என்று முடிவுக்கு வந்து, இறுதியில் இறைவனும் மறுமையும் இல்லை என்ற நாத்திக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற மதவாதி கள் இஸ்லாத்தை ஆராயப் புகும்போது, இந்த முஸ்லிம் மதவாதிகளின் மதங்கொண்ட நிலை கண்டு மிரண்டோடுகிறார்கள்.
இறைவனது நேரான மார்க்கத்திற்கு வர விரும்புவோரெல்லாம் மிரண்டோடுகிறார்கள். சாதாரண மக்கள் ஓடிவிட்டால் பரவாயில்லை. பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் ஓடுகிறார்கள். ஆக இஸ்லாத்தைப் பற்றி ஒரு பெரிய தவறான எண்ணம், மாற்று மத சகோதரர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அந்த அறிஞர்களுக்கும், சகோதரர்களுக்கும் உண்மையான நேரான இஸ்லாம் மார்க்கம் இதுதான் என்பதைப் புலப்படுத்தவே இந்த அளவிற்கு முற்பட்டேன். யாருடைய உள்ளத்தையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமன்று. ஆனால் உண்மை எப்போதும் கசப்பானதே. அதனால் பூமி உருண்டை என்று எடுத்துச் சொன்னவர் கொல்லப் பட்டார். உண்மை நிலைகளை எல்லாம் எடுத்துச் சொன்னவர்கள். அனைவரும் மக்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் உண்மைகளைச் சொல்லாமல் மறைக்க முடியாதல்லவா? இறை வனுக்குப் பதில் சொல்ல வேண்டுமல்லவா?
எனது உரையை முடிவுக்குக் கொண்டு வருமுன் ஒருசில வார்த்தைகள் சொல்ல வேண்டும். எனது இந்தப் பேச்சை புரிந்துகொள்ள யாருக்கு முடிகிறதோ, அவர்கள் மட்டும் சிந்தித்து விளங்கிச் செயல்படவும். அதுவும் இறுதி நெறிநூலிற்கும், இறுதித் தூதரின் போதனைக்கும் ஒத்ததாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளவும். மாற்றமாகப்பட்டால் ஒதுக்கிவிடவும் வேண்டும்; மார்ர்க்கத்தில் அவர்கள் விருப்பப்பட்டதை எல்லாம் சொல்ல உரிமை இல்லை. யாருக்குப் புரியவில்லையோ, அவர்கள் பாதையிலேயே சென்று கொண்டிருக்கலாம். அவர்கள் பாதையில் நாம் குறுக்கிடப் போவது இல்லை. மார்க்கத்தில் பலவந்தமில்லை என்று இறைவனே கூறுகிறான்.
தகப்பன் தான் பெற்று வளர்த்த மகனைக் கூடப் பலவந்தமாக சாந்தி(இஸ்லாம்) மார்க்கத்தில் இணைக்க இறைவன் அனுமதி தரவில்லை. (பார்க்க 2:256,18:29)