முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

in 2025 ஜுலை

தலையங்கம் :
முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பொதுவாக இன்று நம்மைப் போன்ற முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும். 

முஸ்லிம் என்ற பெயரில் வழிகேட்டிலிருக்கும் ஈரான் சியாக்களையா? அல்லது அல்லாஹ்வாலும் நபிமார்கள், மலக்குகளாலும் சபிக்கப்பட்ட சியோனிச யூத இஸ்ரேலியர் களையா? என்ற கேள்விக்கு சரியான பதில்.

இன்று நேர்மையின் பக்கமும், அப்பாவி பாலஸ்தீனர்கள் பக்கமும் நிற்கும் சியா முஸ்லிம்கள் ஈரானை ஆதரிப்பதும், துவா செய்வதுமே நமது கடமை! தொடர்ந்து அநியாயமும், அக்கிரமும், அப்பாவி ஆண், பெண், குழந்தைகளை கொன்று குவிக்கும் யூதர்களை ஒரு முஸ்லிம் அல்லாதவர் கூட ஆதரிக்க  இயலாது.

இப்படி கூறி விடுவதாலும்யூதர்களை எதிர்த்து நிற்கும் ஈமானிய சியாக்கள் நேர்வழி பெற்றவர்கள் என்றும் வெற்றி பெற்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிடலாமா? நிச்சயம் அதற்கும் இடமில்லை. காரணம்…. பாலஸ்தீன நாட்டு பிரச்சினை ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தனி நாடாகி 75 வருடம் கடந்த பின்னரும் பாலஸ்தீன சுன்னி முஸ்லிம்கள் நாடற்ற அகதிகளாக அல்லலோகப்படுவதை ஈரான் இது நாள் வரை வேடிக்கையே பார்த்து வந்தது.

அமெரிக்காவை எதிரி என்று பகிரங்கமாக ஈரான் கூறினாலும் அது மறைமுகமாக அமெரிக்கா ஆதரவில்தான் ஈராக்கின் சுன்னி முஸ்லிம் சதாம் உசேன் தூக்கிலிட்டு ஈராக்கை அமெரிக்காவிடம் காணிக்கையாக்கியது ஈரானின்  கொமெனி  முல்லாக்களே!

மத்திய கிழக்கு, அரபு பிராந்தியத்தில் தனது சியா கொள்கை மேலாண்மையை பெருக்கிக் கொள்ள பாலஸ்தீன ஹமாஸ் சுன்னத் போராளிகளை ஒரு பகடைக்காயாக ஈரான் பயன்படுத்திக்கொண்டது. மற்றபடி ஈரான் வளர்த்தெடுத்து ஆயுதம் ஏவுகணை கொள்கை ஹுத்திகளுக்கும் மட்டுமே!

கடந்த 75 வருடங்களாக இஸ்ரேலிய சியோனிச அரசானது பாலஸ்தீனிய மக்களுக்கு சொல்லொன்னாத துன்பங்களை கொடுத்தபோதெல்லாம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத ஈரானியா சியா அரசானதுதன் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்கிவிட்ட ஒரே நோக்கத்திற்காக தற்போது இஸ்ரேல் நகரங்களை ஏவுகணைகளால் சல்லடையாக துளைத்து வருகிறது. இதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு, சிலரை தடுத்துக் கொண்டிராவிடில்.. மடங்கள், கிருஸ்துவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிகளவில் துதிக்கப்படும் மஸ்ஜிதுகள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்!”  அல்குர்ஆன் 22:40

இப்படி அல்லாஹ் சிலரை வைத்து சிலரை தடுக்கிறான் என்பதால் அந்த சிலர் நல்லவர்கள் என்றோ, நேர்வழியாளர்கள் என்றோ கூறிவிட முடியாது. இதையே  நபி(ஸல்) அவர்களின்  நபிமொழியும்  கூறுகிறது.

ஒரு பாவியைக் கொண்டேனும் அல்லாஹ் இஸ்லாத்திற்காக வேலை வாங்குவான்

ஆகவே இன்று நடக்கும் போர்களில் நேர்வழியில் யூதர்களின் அக்கிரமத்தை எதிர்க்கும் ஈரான் முஸ்லிம்களுக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது  அனைத்து நாட்டு முஸ்லிம்களின் கடமை! அதேநேரத்தில் இஸ்ரேலை எதிர்த்து நிற்பதன் மூலம் சியா கொள்கையாளர்கள் நேர்வழிக்கு வந்துவிட்டார்கள் என்ற நம்புவது அறியாமை! மேலும் இறுதி நாளில் இறங்கவிருக்கும் ஈஸா(அலை) அவர்கள் மட்டுமே தஜ்ஜாலை கொல்ல முடியும்! இந்த மஸீஹ் தஜ்ஜால் என்னும் மகா குழப்பக்காரன் இன்றைய ஈரானிலுள்ள இஸ்பஹான் நகரிலிருந்து சுமார் 70,000 ஆயிரம் யூதர்கள் பின்தொடர இன்று ஈரானியர்கள் அணியும் தயாசீலிஎன்னும் ஆடையை போர்த்தியவர்களாக ஈஸா(அலை) அவர்களை எதிர்க்க வருவார்கள் என்பது நபி(ஸல்) அவர்கள் சொன்ன முன்னறிவிப்பு. ஆக 70,000 யூதர்கள் பின் தொடர தஜ்ஜால் புறப்பட்டு வருவது. இஸ்ரேலில் இருந்து அல்ல. ஈரானின் இஸ்பஹான் நகரில் இருந்து என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

இன்று இஸ்ரேலுடன் ஈரான் போர் தொடுப்பது, இஸ்லாமியக் கொள்கைகளை அல்லது பாலஸ்தீன சுன்னி முஸ்லிம்களை காப்பாறறுவதற்காக அல்ல. தன் நாட்டின் மீது 200 போர் விமானங்களை அனுப்பி குண்டு போட்டு நாசப்படுத்தியதற்கு பதிலடியேஈரானிய ஹைப்பர் சோனிக் மிஸைல்தாக்குதல். இரு நாட்டு சண்டையில் இஸ்லாமிய கொள்கையை கலந்து குழம்பிக் கொள்ளக் கூடாது.

Previous post:

Next post: