ஸிஜ்ஜீன் என்றால் என்ன?

in 2025 ஜுலை

ஸிஜ்ஜீன் என்றால் என்ன?

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

(அளவையிலும், எடையிலும், மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர். (ஆனால்) மற்ற மனிதர்களுக்கு அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் மோசடி செய்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமை யில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில் லையா? மகத்தான ஒரு நாளைக்காக, அதாவது (அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் (நீதி விசாரணைக்காக) மனிதர்கள் (அனைவரும்) நின்று கொண்டிருக்கும் நாள். (தீயோர்கள் எண்ணுவதுபோல்) அவ்வாறில்லை! நிச்சயமாக (அத்தகைய தீயோர்களான) பாவிகளின் (பதிவு) புத்தகம் பெரிதும் கஷ்டத்தில் ஆழ்த்தும் ஸிஜ்ஜீனில் இருக்கிறது. (நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்ன (அது ஒரு மிக நெருக்கடியான இடம்) என்று உமக்கு  அறிவித்தது  எது?  (அல்குர்ஆன் 83:7,8)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இடம்பெயர்ந்து மதீனா வந்தபொழுது அங்கிருந்த மக்கள் அளவையில் மிகவும் மோசமானவர்களாக இருந்தார்கள். (அப்போது) (அளவையிலும், எடையிலும், மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக! என்று தொடங்கும். அல்குர்ஆன் 83ஆவது அத்தி யாயத்தை உயர்ந்தோன் அல்லாஹ் இறக்கி யருளினான். அதன் பிறகு அவர்கள் சரியாக அளந்து கொடுத்து வியாபாரம் செய்தார்கள்.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 10:113-119) இமாம் நஸஈ(ரஹ்) இமாம் இப்னு மாஜா(ரஹ்) ஆகிய இருவரும் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஷைக் அல்பானி(ரஹ்) அவர்கள் ஸஹீஹு மவாரிதித்ழம்ஆன்எனும் நூலில் இந்த நபிமொழியை இரண்டாம் நிலை ஸஹீஹ் தரத்திலானது என்று கூறியுள்ளார்கள்.

தஃப்சீர் பைளாவியின் விரிவுரை நூலாகிய ஷைக் ஸாதாவில் கூறப்பட்டுள்ளது. இஸ்மாயீல் சுத்தி (ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். மதீனாவில் அபூ ஜுஹைனா என்று ஒரு மனிதர் இருந்தார். பிறருக்கு அளந்து கொடுப்பதற்கு ஒரு மரக்காலும், பிறரிடமிருந்து அளந்து வாங்குவதற்கு மற்றொரு மரக்காலும் என இரண்டு மரக்கால்களை வைத்திருந்தார். “அல்முதஃப்ஃபிபீன்அத்தியாயம் அருளப்பட்டது மாநபி(ஸல்) அவர்கள் மதீனா வணிகர் களிடம் சென்று இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்கள். மேலும், அளவையிலும் நிறுவையிலும் அவர்கள் குறைத்தார்கள் எனில் வேளாண்மை பயிர்கள் அவர்களை விட்டும் தடுக்கப்பட்டே தீரும், மேலும் பஞ்ச ஆண்டுகளால் அவர்கள் பீடிக்கப்பட்டே தீருவார்கள்என்று கூறினார்கள். இந்த அறிவுரைக்கும், எச்சரிக்கைக்கும் பிறகு மதீனா வாழ் மக்கள் மோசடி வணிகத்தைக் கைவிட்டார்கள். நியாயமாக அளந்தும், நிறுத்தும், கொடுத்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். (நாஸிருதீன் அல்பானி (ரஹ்) நூல்: ஜாமிஇ தஃப்சீர் இப்னு கஸீர் : 10:113-119)

நீங்கள் அளந்து கொடுத்தால் நிறைவாக அளந்து கொடுங்கள். (17:35) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது எவ்வித மோசடியுமின்றி அளந்து கொடுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைக்காதீர்கள். அடுத்த தொடரில் சரியான சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (17:35) என்று கூறுகின்றான். அதாவது: கோணலோ குழப்பமோ குறுக்கு வழியோ திரித்தலோ இல்லாத தராசில் நிறுத்துக் கொடுங்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:241-243) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்; வணிகர்களே! நீங்கள் முக்கியமான இரண்டு விசயங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தார் பலர் இதனாலேயே அழிந்து போயினர். அவை இந்த அளவையும், நிறுவையும் ஆகும். (தஃப்சீர் இப்னு கஸீர் : 5:241-243)

வானத்தை அவன் உயர்த்தினான், தராசை(யும்) நிறுவினான். (55:7) அதாவது; தராசை என்றால் நீதியை என்று பொருள், இதுகுறித்து உயர்ந்தோன் அல்லாஹ் வேறொரு  வசனத்தில்;

திண்ணமாக நாம் நம்முடைய தூதர் களைத் தெளிவான சான்றுகளுடனும், வழிகாட்டுதலு டனும், அனுப்பினோம். மேலும் அவர்களுடன் இறைநூலையும் தராசையும் அருளினோம். எதற்காக எனில் மக்கள் நீதியை நிலைநாட்டும் பொருட்டு! (57:25) இவ்வாறுதான் இங்கு; (55:8)ஆவது வசனத்தில்; ஏனெனில் தராசி(ன் நிறுவையி)ல் நீங்கள் வரம்பு மீறாதிருப்பதற்காக! நீதியுடன் நிறுப்பதை நிலைநாட்டுங்கள் தராசில் எடைக்குறைவு செய்யாதீர்கள் (என்று அறிவுறுத்தினான்!) அதாவது; வானங்களையும், பூமியையும், சத்தியத்துடனும், நீதியுடனும், அவன் படைத்தான் எதற்காக எனில் எல்லாப் பொருட்களும் சத்தியத்துடனும் நீதியுடனும் அமைந்திட வேண்டும் என்பதற்காகத்தான். இதற்காகவே உயர்ந்தோன் அல்லாஹ்; தராசி(ன் நிறுவையி)ல் நீங்கள் வரம்பு மீறாதிருப்பதற்காக! நீதியுடன் நிறுப்பதை நிலைநாட்டுங்கள் தராசில் எடைக் குறைவு செய்யாதீர்கள் (55:9) என்று அறி வுறுத்தினான்!) அதாவது; சத்தியத்துடனும், நீதியுடனும், நிறுத்துக் கொடுங்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 9:4-10) மேலும்;

இன்னும்மத்யன்” (என்னும் நகர) வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர்ஷிஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்) அவர், “”என்னுடைய சமூகத் தாரே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங் கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத் திற்குரிய வேறு (நாயனில்லை) உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவைப் பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருட்களில் யாதொன்றை அவர்களுக்குக் குறைத்தும் விடாதீர்கள். மேலும், பூமியில் (சமாதானம், அமைதி ஏற்பட்டு) அது சீர்திருத்தம் அடைந்த பின்னர், குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள், நீங்கள் விசுவாசிகளாயின், இவை தாம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார். (அல்குர் ஆன் 7:85) மேலும்;

மத்யன்” (என்னும் ஊர்வாசிகள்) பாலும் அவர்களுடைய சகோதரர் ஷிஐபை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்) அவர், “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. அளவையும், நிறுவையையும் நீங்கள் குறைக்காதீர்கள், நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்கஏன் அளவை, நிறுவையில், மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக (உங்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்என்று கூறினார்.
(
அல்குர்ஆன் 11:84)

அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! அளவையும், நிறுவையையும் நீதமாகவே நிறைவு செய்யுங்கள், மனிதர்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்தும் விடாதீர்கள், பூமியில் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறியும் அலையாதீர்கள்” (அல்குர்ஆன் 11:85)

(நபியாகிய) ஷீஐப் அவர்களிடம்) “நீங்கள் அல்லாஹ்வை) பயப்படமாட்டீர்களா?” என்று கூறியபோது, (அவரை அவர்கள்  பொய்யாக்கினார்கள்)   (அல்குர்ஆன் 26:177)

அளவையைப் பூரணமாக்குங்கள், (அளவைக் குறைத்து ஜனங்களுக்கு) நஷ்டமிழைப் போராகவும் நீங்கள் ஆகிவிடாதீர்கள், மேலும், சரியான தராசு கொண்டு நிறுத்துங்கள்மனிதர்களுக்கு அவர்களின் பொருள்களை நீங்கள் குறைத்தும் விடாதீர்கள், நீங்கள் பூமியில் குழப்பம்  செய்கிறவர்களாகவும்  அலையாதீர்கள்.   (அல்குர்ஆன் 26:181-183)

மேலும், (அவர்களிடம்) நம்முடைய கட்டளை வந்தபொழுது ஷிஐபையும், அவருடன் விசுவாசங் கொண்டிருந்தோரையும், நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு நாம் (இரட்சித்துக்) காப்பாற்றினோம். அநியாயம் செய்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் காலைப் பொழுதை தங்கள் வீடுகளில் முகம் குப்புற (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:94)

அதற்கு முன்னர் அதில் அவர்கள் வசித்திருக்காதவர்களைப் போல் (அழிந்து விட்டனர்) ஸமூது நாசமானது போன்றே இந்த மத்யன் சமூகத்தார்க்கும் நாசம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 11:95)

இறைத்தூதர் ஷிஐப்(அலை) அவர்களிடம் கூட்டத்தினரை அல்லாஹ் அழித்தான். அவர்களுக்கு நாசத்தைக் கொடுத்தான். அதன் காரணம் தராசிலும் அளக்கும் கருவிகளிலும் எடைக்குறைவு செய்து மக்களுக்கு அவர்கள் நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இத்தகையவர்களை எச்சரித்தவனாக உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்.

அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமையில் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 83:4) அதாவது; இப்படிப்பட்டோர் எண்ணிப் பார்ப்பதில்லையா? என்றால் அல்லாஹ்வை அஞ்சுவதில்லையா  என்று பொருள்.

கடுமையான அமளிகள் ஏற்படும் மறுமை நாளில் மிகப் பயங்கரமான அதிக நடுக்கத்திற்குரிய மறுமை நாளில் உயிருடன் மீண்டும் எழுப்பப்படுவதைக் குறித்து, அனைத்து இரகசியங்களையும் உள்ளத்து ஊசலாட்டங்களையும் எண்ணங்களையும் அறியக்கூடிய எல்லாம் வல்ல இறைவனின் திருமுன் கேள்வி விசாரணைக்காக நிறுத்தப்படுவதைக் குறித்து அவர்கள் அஞ்சுவதில்லையா? அந்நாளில் யார் இழப்புக்கு ஆளானானோ அவன் சுட்டுப்பொசுக்கும் நரக நெருப்பில் புகுத்தப்படுவான் என்பது பற்றி அவர்களுக்குப் பயம் இல்லையா என்று பொருள். (தஃப்சீர் இப்னு கஸீர் 10:113-118)

Previous post:

Next post: