அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது!

in 2025 செப்டம்பர்

அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது; மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார் கள். மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40) என்பதாக உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். இதில், “”அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாதுஎனும் தொடருக்கு இரண்டு விதமான பொருள்  கூறப்பட்டுள்ளது.

1. அவர்கள் செய்த நற்செயல்களோ அவர்கள் புரிந்த பிரார்த்தனைகளோ அந்த வாசல்கள் வழியாக மேலே செல்லாது என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்), அவ்ஃபீ (ரஹ்) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 3:750-752)

2. அவர்களின் உயிர்களை மேலே கொண்டு செல்வதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படமாட்டாது என்பதாகவும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள் என்பதாக ளஹ்ஹாக்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். சுத்தீ(ரஹ்) அவர்களது கருத்தும் இதுவேயாகும். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 3:750-752) இந்த இரண்டாவது கருத்துக்குப் பின்வரும் நபிமொழி  வலுவூட்டுகிறது.

நபித்தோழர் பராஉ பின் ஆஸிப்(ரழி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவரது (ஜனாஸாவின்) இறுதிக் கடனை நிறை வேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள்  புறப்பட்டோம். நாங்கள் அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம் அங்கு  குழி  தோண்டி  முடிக்கப்படவில்லை.

எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள் நாங்களும் அவர்களைச் சுற்றி எங்களின் தலைகள் மீது பறவைகள் இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபியவர்களது கையில் குச்சி ஒன்று இருந்தது. அதை அவர்கள் தரையில் குத்தலானார்கள். பின்னர் தமது தலையை உயர்த்திமண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுப் பின்னர் தொடர்ந்து  கூறலானார்கள்.

ஏக இறையை மறுக்கும் ஓர் அடியார் இவ்வுலகத்திலிருந்து விடை பெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால் அவரிடம் (கடுமையான) வானவர்கள் சிலர் வானிலிருந்து இறங்கி வருவார்கள். அவர்களின் முகங்கள் கறுப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டுக் கஃபன்) ஆடை ஒன்று இருக்கும் அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில்  வந்து  அமர்ந்து  கொள்வார்கள்.

பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார்மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பு மற்றும் கோபத்தை நோக்கி நீ புறப்படுஎன்பார். பின்னர் அவரது உடல் தளர்த்தப்படும், பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக் கொண்ட முள் கம்பியை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து  இழுத்துப்  பறிப்பார்.

உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம் கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டுவைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று(த் தாம் கொண்டு வந்திருக்கும்) அந்த(முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது பூமியின் மேற்பரப்பில் ஒரு பிணத்திலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம்  வெளிவரும்.

பின்னர் அந்த(க் கெட்ட) உயிருடன் வானவர்கள் மேலே ஏற்றுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் அந்தக் கூட்டத்தார்இந்த மாசடைந்த உயிர் யாருடையது?” என்று கேட்பர். அதற்கு அவர்கள், “இன்னாருடைய மகன் இன்னார்என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக்  குறிப்பிடுவார்கள்.

இறுதியில் அந்த உயிருடன் பூமிக்கு அருகிலிருக்கும் (முதலாவது) வானத்திற்குப் போய்ச் சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது என்று இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக் கப்படமாட்டாது அவர்கள் ஊசியின் துளையில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்எனும் இந்த (7:40) ஆவது வசனத்தை ஓதினார்கள். பின்னர் வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழான பூமியிலுள்ளஸீஜ்ஜீன்எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசி எறிப்படும். இவ்வாறு  கூறிய  நபியவர்கள்;

யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவர் போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்றுவிடும் அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துச் சென்றுவிடும். (22:31) என்ற  இறை வசனத்தை  ஓதினார்கள்.

பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும் அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமர வைப்பர். பின்னர் அவரிடம்உம்முடைய இறைவன் யார்?” என்று கேட்பர். அதற்கு அவர்அந்தோ!” எனக்கு எதுவும் தெரியாதே! என்று (பதில்) கூறுவார். அவ்விருவரும்உனது மார்க்கம் எது?” என்று கேட்பர் அவர்அந்தோ!” எனக்கு எதுவும் தெரியாதே!  என்பார்.

அடுத்துஉங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இந்த மனிதர் யார்?” என்று (முஹம்மத்(ஸல்) அவர்களைக் காட்டி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர்அந்தோ!” எனக்கு எதுவும் தெரியாதே! என்று பதிலளிப்பார். அப்போது வானத்திலிருந்து ஓர் அறிவிப்பாளர்என் அடியான் பொய்யுரைத்துவிட்டான்.எனவே அவனுக்கு நரகத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள் அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்து விடுங்கள்என்று  அறிவிப்பார்.

நரகத்தின் வெப்பமும் கடும் உஷ்ணமும் அவரிடம் வரும் அவரை அவரது சவக்குழி (யின் இரு பக்கமும்) நெருக்கும் அதனால் அவருடைய விலா எலும்புகள் (நொறுங்கி) இடம் மாறும். அவரிடம் அவலட்சனமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்துஉனக்கு வருத்தமளிக்கும் செய்தியயான்றை(ச் சொல்கிறேன்) கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட  நாள்  ஆகும்  என்பார்.

அப்போது அவர் அந்த அவலட்சனமான மனிதரிடம் நீர் யார்? “உமது முகம் தீமையைக் கொண்டுவரும் (கோர) முகமாக உள்ளதே!” என்று கேட்பார். அதற்கு அந்தப் பங்கரையான மனிதர்நான்தான் நீ செய்த தீய செயல்என்பார். உடனே அந்த இறை மறுப்பாளர் “”என் இறைவா!” யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்தி விடாதே என்று கூறுவார். (முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 3:751758)  மற்றுமோர்  அறிவிப்பில்;

மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரிடம் வானவர்கள் வருவார்கள். அந்த மனிதர் கெட்டவராக இருந்தால்கெட்ட உடலில் இருந்த மாசடைந்த ஆன்மாவே!” நீ வெளியேறு வாயாக இழிவடைந்த நிலையில் நீ வெளியேறுவாயாக உனக்குக் கொதி நீரும், சீழும், அதைப் போன்ற பல்வேறு வகை (உணவு மற்றும் திரவங்)களுமே உண்டு என்ற நற்செய்தியைப் பெறுவாயாக!” என்பார்கள். இவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டிருக் கும்போது அந்த உயிர் (மிகுந்த சிரமத்தோடு) வெளியேறும்.

பின்னர் அந்த உயிர் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வானத்தை அடைந்ததும் அந்த உயிருக்காக வானத்தைத் திறக்குமாறு கோரப்படும். அப்போதுயார் இவர்?” என்று கேட்கப்படும். அதற்கு “”இன்ன மனிதர்என்று கூறுவார்கள். அப்போதுகெட்ட உடலில் இருந்த மாசடைந்த ஆன்மாவுக்கு (இங்கு) வரவேற்பு (எதுவும்) கிடையாது; இழிவடைந்த நிலையில் நீ திரும்பிச் சென்றுவிடு உனக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படமாட்டாதுஎன்று கூறப்படும் பின்னர் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அது அலைக்கழிக்கப்படும். இறுதியாக அது அதன் மண்ணறைக்குப் போய்ச்சேரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 3:751-758)

மேலும்; இப்னு  ஜுரைஜ்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில்இறை மறுப்பாளர்களின் செயல்கள், அவர்களின் உயிர்கள் ஆகிய இரண்டுக்குமே வானங்கள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்கள். எதுவரையயனில்; “ஊசியின் துளையில் ஒட்டகம் நுழையும்வரைஇதையே: “ஊசியின் துளையில் ஒட்டகம் நுழையும் வரைஅவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். (7:40) என்பதாக உயர்ந்தோன் அல்லாஹ் குறிப்பிடுகின் றான். இதில்ஒட்டகம்என்பதைக் குறிக்கஅல்ஜமல்எனும் சொல் இடம் பெற்றுள்ளது பெரும்பாலான அறிஞர்கள் இதைஅல்ஜமல்என்றே வாசித்திருப்பதுடன்ஒட்டகம்என்றே பொருள் கூறியுள்ளார்கள் இந்த வகையில்ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரைஎன்பது இதற்குப் பொருளாகும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி), அபுல் ஆலியா, ளஹ்ஹாக் (ரஹ்) உள்ளிட்ட பெரும்பாலான முற்கால அறிஞர்களின் கருத்தும் இதுதான். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் கருத்தும் இதுதான் என்று அவ்ஃபீ(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 3:751-758)

Previous post:

Next post: