கோட்டையில் இருக்கும் கோமாளிகள்….!!!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
உலக வல்லரசு நாடுகள் என கூறப்படும் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளாகட்டும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளாகட்டும், பிரிவினைப் பெற்று சுதந்திரம் அடைந்த நாடுகளாகட்டும், மற்றும் சிறு சிறு நாடுகள் முதல் ஏனைய உலகிலுள்ள நாடுகளாகட்டும் குடிமக்கள் பதிவேட்டை (ளீஷ்மிஷ்குeஐவிஜுஷ்ஸ்ரீ யூeஉலிrdவி)ஐ தயாரித்து தங்கள் நாட்டை சார்ந்தவர்கள் (குடிமகன்கள்) என்பதற்கான அடையாள அட்டையை வழங்குவது என்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு.
அதன் அடிப்படையில் உலகிலுள்ள எல்லா நாடுகளும் இவர் எங்கள் நாட்டை சார்ந்த குடிமகன் தான் என்று அடையாள அட்டையை வழங்கி குடியுரிமையை பாதுகாத்தன. அது கடமையும் கூட.
“இந்தியாவை தவிர”
குடியுரிமை அடையாள அட்டை பெற்றதன் மூலம் அவர்களும், அவர்களின் வழிதோன்றல் களும் குடிமக்கள் என்ற அந்தஸ்தோடு வாழ்கின்றார்கள். மேலும் அரசு பணி முதல் அனைத்து பணிகளுக்கும், தேர்தலில் வாக்களிப்பதற்கும், அதுவே போதுமானதாக இருந்தது, இருக்கின்றது.
1939ல் நடந்த இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலக முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் நமது நாடும் ஒன்று. அதன் விளைவு இந்திய குடிமகன்கள் யார்? யார்? என்று சரியாக தெரியாததால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது வினியோகம் மூலம் அரிசி முதல் உணவு பொருட்கள் வரை வினியோகம் சரியான முறையில் செய்யமுடியாத நிலையில் ஆங்கில அரசு இருந்தது. அது சமயம் பிரிவினை படாத நாடாக (இந்தியா–பாகிஸ்தான்) இந்தியா இருந்தது.
1951ல் அக்டோபரில் தொடங்கி 1952 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்த வாக்காளர் கள் அப்போது 17.3 கோடி பேர் மட்டுமே, அதில் வாக்கு செலுத்தியவர்கள் 10.5 கோடி பேர் வாக்கு பதிவு சதவீதம் சுமார் 60.7 சதவீதம்.
அது சமயம் முறையான குடியுரிமை சான்றிதழ் இல்லாததால் சுமார் 7 கோடி பேருக்கு மேல் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
ஆனால் நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு (1947க்கு பிறகு) பாஸ்போர்ட்டைத் தவிர வேறு எதுவும் குடிமக்கள் என்பதற்கான அடையாளச் சான்றை வழங்கவில்லை. அதுமட்டுமல்ல குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனவரி 26, 1950க்கு பிறகும் அடையாளச் சான்று எதுவும் வழங்கவில்லை, முயற்சியும் செய்யவில்லை.
1951ஆம் ஆண்டு முன்முதலாக எடுக்கப் பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகாவது அதன் அடிப்படையில் குடியுரிமை அடையாள அட்டையை வழங்கி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை.
வழங்காதது, வழங்க தவறியது யார் குற்றம்?
1960ஆம் ஆண்டு உணவு பொருள் வழங்குவதற்காக ரேன் கார்டை இந்திய அரசு வழங்க துவங்கியது. அதன் பிறகு அதுவும் இந்திய குடிமகன் என்பதற்கு சான்றாகவும் இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வயதை வைத்து 21வயது பூர்த்தியானவர்கள் தேர்தல் நடந்தபோது வாக்களித்தார்கள்.
தேர்தலில் வாக்களிக்க அதுவே போதுமான அடையாள அட்டையாக (1993ஆம் ஆண்டு வரை) இருந்தன.
1993ல் வாக்காளர் அடையாள அட்டையை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுதந்திரம் அடைந்து சுமார் 46 ஆண்டுகள் கடந்த பிறகே வோட்டர் கார்டு வழங்கப்பட்டது. அதுவரை வழங்காதது, “”யார் குற்றம்?”
உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலும் வோட்டர் கார்டு (வாக்காளர் அடையாள அட்டை) வைத்திருப்பவர்களும் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கும் ஆதாரமாகவும் இருந்தது, இருக்கின்றது. குடியுரிமை பெறாதவர்கள் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. இதுவே உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட விதி.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் ஒருவருக்கு வோட்டர் கார்டு வழங்கியிருந்தால் அவர் இந்தியர்தான் என்பதும், இந்திய குடிமகன் தான் என்பதும் நிதர்சனமான உண்மை.
ஏன் என்றால்;
அது விசிட்டிங் கார்டு அல்ல.
எவ்வாறு என்றால்;
இந்திய தேர்தல் ஆணையம் கோரிய அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகே வோட்டர் கார்டு வழங்கியது, வழங்குகிறது.
கடந்த 78 ஆண்டுகளுக்குள் நடந்த அனைத்து தேர்தலிலும் சுதந்திரமாக வாக்களித்தார்கள். ஆனால் இப்போது வோட்டர் கார்டு இருந்தாலும், ஏன் உயிருடன் இருந்தாலும் கூட வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
“கோட்டையில் இருக்கும் கோமாளிகளின்” பேச்சை கேட்டு இவ்வாறு கூறுகிறது.
இதுவாவது பரவாயில்லை.
ஒவ்வொரு இந்தியனையும் அணு அணுவாக ஆராய்ந்து 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய குடிமகன்தான் என்பதற்கு ஆதாரமாக. ஆதார் கார்டு வழங்கியது, வழங்கி வருகிறது.
அதாவது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் நாட்டின் அனைத்து குடிமக்க ளுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்கி இந்திய குடிமகன் தான் என்பதற்கு அடையாளமாக வழங்கப்பட்டதுதான் ஆதார் கார்டு.
இப்போது இதுவும் செல்லாது என்று “கோட்டையில் இருக்கும் கோமாளிகள்” கூறுகிறார்கள். இதை எப்படி சகித்துக்கொள்வது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 11 ஆதாரங்களில் தேர்தலில் வாக்களிக்கப் போதுமான ஆவணமாக ஆதார் கார்டும் இருந்தது.
அவைகள் :
1. ஆதார் அட்டை
2. பான் கார்டு
3. ஓட்டுனர் உரிமம்
4. பாஸ்போர்ட்
5. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்,
6. வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்.
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை.
8. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,
9. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட காப்பீடு ஸ்மார்ட் கார்டு.
10. மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
மேற்கண்ட அத்தனையும் ஆதார் கார்டு அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகும். அதாவது ஆதார் கார்டு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் இல்லை.
இப்போது ஆதார் கார்டும் இந்திய குடிமகன் என்பதற்கு சான்று இல்லை என்று கூறும் இவர்கள் “கோட்டையில் இருக்கும் கோமாளிகள்” தானே? இத்தகைய கோமாளிகளிடமிருந்து கோட்டையை (நாட்டை மீட்க) இந்திய சுதந்திரம் அடைந்த 79ஆம் ஆண்டில் சூழுரைப்போம்.