சுன்னாவின் அவசியம்!
M. சையத் முபாரக், நாகை
நாம் எப்படி வாழவேண்டும்? என்பதைக் கற்றுக்கொடுக்கும் அல்குர்ஆனை நாம் ஓதுகிறோம்; ஆனால், பொருளையோ, கருத்தையோ அறியாமல், அதன் மொழி பெயர்ப்பை ஏனோதானோ என்று நமது மொழியில் படிக்கவும் செய்கின்றோம். ஆனால், அல்குர்ஆனை கருத்தூன்றி படிக்கும் எண்ணம் நம்மிடம் இல்லை; அத்துடன் சிந்திப்பதுமில்லை; அதனை உள்வாங்கி செயல்படுத்துவதுமில்லை.
அதுபோல, சுன்னா பற்றிய தெளிவும், மார்க்கச் சட்ட திட்டங்களில் (சரீஆவில்) அதன் முக்கியத்துவம் பற்றிய அறிவும் நம்மிடம் இல்லை. அதனால், தான்தோன்றித்தனமாக அல்லது யாரை நாம் கண்மூடித்தனமாக நம்புகிறோமோ அவரின் அல்லது அவர்களின் சொல்லுக்கு முன்னுரிமைக் கொடுத்து அதனை மார்க்கமாகப் பின்பற்றுகிறோம்.
பாதுகாப்பு :
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை (சொல்) மற்றும் கருத்து. அதனை மாற்ற முடியாது. அதே அமைப்பில் எழுத்து மற்றும் மனனம் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
“இந்த நினைவூட்டலை அருளியது. நாம்தான்; இதனைப் பாதுகாக்கப்போவதும் நாமேதான்”. (அல்குர்ஆன் 15:9)
சுன்னா என்பது அல்லாஹ்வின் கருத்து. அதன் சொல்(மொழி) வடிவம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குரியது. இது நடைமுறையில், செயல் வடிவில் பாதுகாக்கப்பட்டது.
“உங்கள் தோழர் நபி(ஸல்) அவர்கள் வழி தவறவும் இல்லை, வழிகெடவுமில்லை. தம் விருப்பம் போல் (மன இச்சையுடன்) பேசுவதும் இல்லை. இதெல்லாம் அவருக்கு அறிவிக்கப்படும் இறைச் செய்தியே!” (அல்குர்ஆன் 53:2-4)
அல்குர்ஆன் என்பது சொல் மற்றும் கட்டளை. சுன்னா என்பது அதனைச் செயல்படுத்தும் வழிமுறை.
சுன்னா பற்றி அல்குர்ஆன் :
“…உமக்கும் நினைவூட்டலை (அல்குர்ஆனை) அருளுகின்றோம். தமக்கு அருளப்படுவதென்ன என்பதை மக்களுக்கு தெளிவாக நீர் விளக்கிக் கூறுவதற்காக! அவர்கள் சிந்தித்து உணர்வதற்காக! (அல்குர்ஆன் 16:44)
“அவர்களிடம் சொல்லிவிடுங்கள், அல்லாஹ்விற்குக் கீழ்ப்படியுங்கள், தூதருக்கு கட்டுப்படுங்கள், முடியாதென நீங்கள் புறக்கணித்துவிட்டால் தன்மீது சுமத்தப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமே தூதரின் பொறுப்பு என் பதையும், உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்கள் பொறுப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டால் வெற்றி பெறுவீர்கள். மற்றபடி தெளிவாக எடுத்துரைப்பது ஒன்றே தூதர் மீதான பணி!”
(அல்குர்ஆன் 24:54)
மேலும் பார்க்க: அல்குர்ஆன் 3:32,50,132, 4:13,69,80,113, 5:92, 8:1,20, 9:71, 24:47, 33:21,33,34,66,71, 48:17, 38:13, 64:12, 72:23.
ஆகவே நாம் அல்குர்ஆனோடு சுன்னாவை யும் கடைபிடித்தாக வேண்டும்.
பித்ஆ(பித்அத்) :
“…உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல்(அல்குர்ஆன்); வழிகாட்டலில் சிறந்தது முஹம்மது நபி(ஸல்) வழிகாட்டல். செயல் களில் தீயவை(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (புதிதாக உருவாக்கப்படும்) அவை ஒவ்வொன்றும் வழிகேடு ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 1573)
அல்குர்ஆன் மட்டும் போதும் என்பதில்…
கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க, மூட நம்பிக்கைகளை ஒழிக்க ளயீஃபான ஹதீதுகளுடன் ஸஹீஹான ஹதீத்களையும் புறக்கணித்துவிட வேண்டும் என்பது அஹ்லே குர்ஆன் வாதிகளின் முடிவு
போலி கடவுள்கள் இல்லை என்பதை நிலை நாட்ட திராவிடக் கழகத்தினர் உண்மையான ஓரே இறைவனையும் இல்லை என்று மறுக்கும் நிலைக்கு ஒப்பாக இது இருக்கிறது. போலிகளை ஒழித்துக்கட்ட உண்மைகளைப் புறந்தள்ளுவது எப்படி பகுத்தறிவாக இருக்க முடியும்?
அல்லாஹ் அல்குர்ஆனில் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்றவைகளை நமக்குக் கடமையாக்கினாலும், அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்களின் (சுன்னாவின்) மூலம் தானே அறிந்துகொண்டு செயல்படுத்த முடி யும். ஆக, அல்குர் ஆனோடு சுன்னாவும் அவசியம்.
மத்ஹப்களில்…
மத்ஹப்களில் நல்ல செயல்கள் என்ற அடிப் படையில் பல அனாச்சாரங்கள் (பித்அத்) புகுந்து விட்டன. அதானுக்கு முன் ஸலவாத்து கூறுவது, ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் திக்ர்களை இமாம் ஸுப்ஹானல்லாஹ் என்று சப்தமிட்டு ஆரம்பிக்க மஃமூம்கள்(பின் தொடர்ந்து தொழுதவர்கள்) அதனைத் தொடர்ந்து ஓதுவது, மிஃராஜ் நோன்பு, பராஅத் நோன்பு என்றும் அவ்விரவுகளில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள். இப்படி பல வகையான பித்ஆக்களை இவர்கள் “நன்மை” என்று செய்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராதவற்றைச் செய்வது வரம்பு மீறுதலுடன், அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியாதது எனக்குத் தெரியும் என்பது மேதாவித்தனத்தை, மமதையைக் காட்டுவதாக அமையாதா? ஆகவே, மார்க்கம் எதை எதைச் சொல்லியிருக்கிறதோ அதை மட்டும் செய்வோம்.
நம்மில் பலர் சுன்னாதானே என்று பலவற்றை விட்டுவிடுகிறோம். நன்மை கிடைக்காதே தவிர பாவம் இல்லை என்று ஈஸியாக நாம் அவற்றைக் கடந்து விடுகிறோம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் காட்டித் தந்தல்லவா அந்த சுன்னாக்கள் என்பதை நம் உள்ளம் உணர்வதில்லை; அந்த எண்ணம் நம்மிடம் மேலோங்குவதும் இல்லை. ஆகவே, இனி நாம் சுன்னாவை பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
ஃபத்வாக்களில்….
ஸலஃப்களில் சிலர் முன்னோர்களின் ஃபத்வாக்களில் இப்படி இப்படி இருக்கிறது என்றும், நாங்கள் ஆராய்ச்சி செய்வதன் விளைவாகக் கிடைத்த ஃபத்வாக்கள் இவைகள் என்றும் புதிது புதிதாக விளக்கம் கொடுத்து, பலவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றனர். அல்குர்ஆன், சுன்னாவை விட ஃபத்வாக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றனர் இவர்கள்.
இமாம் ருகூவிற்குப் போகுமுன் ஜமாஅத்தில் சேர்ந்தாலும் பாத்திஹா ஸூரா ஓதாததால் மஃமூம் அந்த ரக்அத்தைத் திருப்பித் தொழவேண்டும். ருகூவில் சேர்ந்தால் அந்த ரக்அத் கிடைத்துவிடும். பிறையை அறிந்து கொள்வதை விட மக்கள் அனைவரும் (காஜி) தீர்மானிக் கும் நாளில் நோன்பு பிடிக்கலாம். பெருநாள் கொண்டாடலாம், ரமழான் மாதத்தில் இருப்பவர் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற அல்குர் ஆனுக்கு மாற்றமாக என்றும் கூறி, இவைகளைப் போன்றவற்றை புகுத்துகின்றனர்.
அல்குர்ஆன் வசனங்களை, ஹதீத்களை ஒன்றிணைத்து அவைகளிலிருந்து தெளிவு பெறுவதற்குப் பதிலாக, தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் பல குழுக்களாகப் பிரிய வழி காட்டுகின்றனர். நாம் அல்குர்ஆன், சுன்னாவிற்கு முன்னுரிமை கொடுப்போம்.
எதைப் பின்பற்றுவது :
நாம் அனைத்து பித்ஆக்களைத் தவிர்த்து விட்டு அல்குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடிப்போம்.
“அல்லாஹ் அனுமதிக்காதவற்றை வாழ்வியல் கோட்பாடாக (மார்க்கமாக) அறிவிக்கின்ற பிற தெய்வங்கள் (அல்லாஹ்வோடு அவர்கள் பங்காளியாக்கிய தெய்வங்கள்) உள்ளனவா? (அல்குர்ஆன் 42:21)
“என் சமுதாயத்தவர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னபோது, மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் “எனக்குக் கீழ்படிந்தவர் சொர்க்கம் புகுவர்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று கூறினார்கள். (புகாரி: 7280)
அஞ்சுவதும், கட்டுப்பதுவதும்:
“எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி (பயந்து), அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து கொள்கிறார்களே அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (அல்குர்ஆன் 24:52)
மேலும் பார்க்க அல்குர்ஆன் 3:51, 59:7, 71:2,3
ஆகவே, நாம் அல்லாஹ்விற்கு அஞ்சுவோம், அடிபணிவோம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிவோம், கட்டுப்படுவோம்.
கருத்து வேறுபாடுகளின் போது :
“ஒரு வியத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்ப்பளித்துவிட்டால் அதில் மாற்றுக் கருத்து கொள்ள இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆணிற்கோ, ஒரு பெண்ணிற்கோ அனுமதியே இல்லை. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் அப்பட்டமான வழிகேட்டில் போய் விழுகிறான்.” (அல்குர்ஆன் 33:36)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 4:59,65, 16:64, 24:51
நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும், “”அல்லாஹ்வே! ஜிப்ரயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இரட்சகனே! வானங்களையும், பூமியையும் படைத் தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! அடியார்கள் கருத்து வேற்றுமை கொண்ட விசயத்தில் நீயே அவர்களுக்கு மத்தியில் (மறுமையில்) தீர்ப்பளிப்பவனாக இருக்கின்றாய். கருத்து வேற்றுமைக் கொள்ளப்பட்டதில் உண்மை பக்கம் உன் நாட்டத்தால் என்னை நிலைத் திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றாய்” என்று கூறுவார்கள். (முஸ்லிம் : 1418)
ஆகவே, நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பற்றிப் பிடிப்போம்! ´ர்க், பித்ஆக்களைத் தவிர்ப்போம்!! அல்லாஹ்வின் அருளை, நேசத்தைப் பெறுவோம்!!!
அல்ஹம்துலில்லாஹ்!