தலையங்கம் :
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
“யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு நூல் கூறும் கருத்து.
நன்மையும் தீமையும் பிறர் தருவதில்லை. ஒருவரின் நற்செயல், தவறான செயல் ஆகியவற்றின் பலன் அவருக்கே வந்து சேரும். அதாவது, நம் வாழ்வில் சந்திக்கும் நன்மை தீமை அனைத்தும் நம்முடைய செயல்களின் விளைவே அன்றி, பிறரால் வருவதில்லை.
தமிழ் நூல்களில் சொல்லப்பட்ட “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கருத்து, இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குர்ஆனில் பல இடங்களில், மனிதன் செய்யும் நற்செயலும் தீச்செயலும் அவனுக்கே திரும்பும் என்று கூறப்படுகிறது.
மனிதனுக்கு அவன் முயல்வதெல்லாமல் வேறில்லை. இறைநூல் : 53:39
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும். இறைநூல் : 53:40
மேலும்: “யார் நன்மை செய்வாரோ, அது அவருக்கே; யார் தீமை செய்வாரோ, அது அவருக்கே”. இறைநூல் : 45:15
மேலே குறிப்பிட்டது போல் திருகுர்ஆனிலும், புறநானூறு நூலில் குறிப்பிட்டுள்ளது “குடி குடியை கெடுக்கும்” என்பது நன்றாக தெரிந்தும் தமிழக அரசியல் கட்சிகள் மக்களின் வாழ்வை பற்றி கவலைப்படாமல் அரசே சாராயக் கடைகளை நடத்தி அதன் மூலம் தங்களுக்கும் தங்களது ஆட்சிக்கும் வருமானத்தை பெருக்கிக் கொண்டனர்.
“குடி குடியை கெடுக்கும்…” இதன் பொருள்: குடி(மது) குடிப்பதால் குடி (மனிதக் குடும்பம் /வாழ்க்கை) நாசமடைகிறது என்பதாகும். மது குடிப்பதால் உடல் ஆரோக்கியம் கேடு அடையும். அறிவு மங்கிவிடும், நல்லதையும் கெட்டதையும் பிரிக்க முடியாமல் போகும். மது அடிமை பழக்கத் தால் மனிதன் தன் வாழ்க்கையைத் தானே அழித்துக் கொள்கிறான்.
மது குடிப்பவர் வீட்டில் சண்டை, தகராறு, மற்றும் வன்முறை செய்வார். பொருளாதாரத்தை வீணடிப்பார். குடும்ப அமைதி குலைந்து, குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும். சாலை விபத்துகள், சண்டைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும். நல்ல மனிதன் கூட மதுவால் கெட்ட பழக்கங்களில் சிக்கிக் கொள்கிறார். சமூகத்தின் ஒழுங்கு குலையும்.
“குடி குடியை கெடுக்கும்” என்பதன் மூலம் முன்னோர்கள் எச்சரித்தது, மது ஒருவரின் உடலையும், குடும்பத்தையும், சமூகத்தையும் கெடுக்கும் ஆபத்தான விசயம் என்பதையே. குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் நல்ல திறமையான வேலை ஆட்கள் உடல் நலம் கெட்டு பணி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.
இதனால் ஏற்பட்ட வேலை ஆட்கள் பற்றாக்குறையினால் வடமாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அப்படி அமர்த்தப்பட்ட பணியாளர்கள் தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்து வேலைகளை செய்து சம்பாத்தியம் செய்துகொண்டு தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அதுவரை தமிழக அரசியல் கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் இப்போது மத்திய ஆட்சியாளர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு இங்கு ரேசன் கார்டுகளும் கொடுத்தனர். அதையும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்தன. இப்போது மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமையை வந்தவுடன் தமிழக அரசியல் கட்சிகள் பதறுகின்றனர். எங்கு தமிழக கட்சிகள் காணாமல் போய்விடுமோ? என்று அஞ்சுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் மதுவை எளிதாகி பணியாளர்கள் கிடைக்காமல் செய்ததன் பலன் இப்போது தமிழக அரசியல் கட்சிகளின் இருப்பையே கேள்விக்குறியாகி உள்ளது.
இதற்கு மேலும் தமிழக அரசியல் கட்சிகள் மதுவை தடை செய்யாவிட்டால் அதன் பலன் இன்னும் மோசமான நிலைக்கு போவதை பார்ப்பார்கள். வட மாநிலத்து பணியாளர்கள் அதிகமாக வருவதை தடுக்க, தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் நிறுத்தவேண்டும். அதன் மூலம் அரசு ஏற்படும் செலவினங்கள் மிச்சமாகும். விவசாய பணியாளர்களும் தொழிற்சாலை பணியாளர்களும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு செல்வதால் பணியாளர்கள் பற்றாகுறை ஏற்படுகிறது. மேலும் மதுவை ஒழித்து அடிமையாக இருக்கும் பணியாளர்கள் பணிக்கு திரும்ப செய்தால் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்மையாக இருக்கும்.