நல்லதொரு குடும்பம்!

in 2025 செப்டம்பர்

நல்லதொரு குடும்பம்!

புலவர் செ.ஜாஃபர் அலி

மறு பதிப்பு : 

மனிதர்களுள் பெரும்பாலோர், “அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்என்று வாயளவிலேயே மொழிகின்றனர். அவர்களுடைய செயல்கள் இறை நம்பிக்கையையோ, இறையச்சத்தையோ பிரதிபலிப்பதில்லை.

இம்மை இன்பம்ஒன்றையே கருத்தில் கொண்டு ஓடியாடி உழைத்து, பொருளீட்டி, மனைவிமக்களை மகிழ்விப்பதிலும் தம் சுய தேவைகளைசரீர இச்சைகளை திருப்தி செய்வதிலுமே அதிகமான காலத்தைச் செலவழிக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், நம் சமுதாயத்தவர்களில் பலர் சோதிடத்தை நம்புவதிலும், இராகு காலம்எமகண்டம் பார்ப்பதிலுமே நம்பிக்கை வைத்துஇறை நம்பிக்கையை எள்ளளவும் இதயத்தில் கொள்ளாமல்  இருக்கின்றனர்.

“(நபியே! விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும் உங்களுடைய தந்தையர்களும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகி விடுமோ என்று நீங்கள் அஞ்சி (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வணிகமும், உங்களுக்கு (மிக்க) விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை விடவும், அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதை விடவும், உங்களுக்கு மிக்க விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள்) உண்மை விசுவாசிகளல்லர். நீங்கள் அடைய வேண்டிய (தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை” (அல்குர்ஆன் 9:24)

நம்முடைய செல்வம், மனைவி, மக்கள், வீடு, வயல் எதுவுமே மறுமைக்கு பயன்படாது. மாறாக, நம்முடைய நற்செயல்களும், இறையச்சமும், முழுமையான இறை நம்பிக்கையுமே  மறுமையின்  வித்துக்களாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவனாக இருக்கின்றான். நாம் அவனுக்கு என்ன கைமாறு செய்கின்றோம். மிஞ்சிப் போனால், அவனை ஐவேளை வணங்கி நன்றி செலுத்துகின்றோம் ஆண்டில் ஒரு திங்களில் (ரமழானில்) நோன்பு நோற்கின்றோம்; செல்வமிருந்தால் கணக்கிட்டு இரண்டரை விழுக்காடுஜக்காத்கொடுக்கின்றோம். இறுதியாகஹஜ்கடமையை நிறைவேற்றுகின்றோம். இரங்கத் தக்கவர்களுக்கு உதவியும், குடும்பத்தார்க்கு சகல வசதிகளும் செய்கின்றவர்கள், அவர்களையும் இறைவனுக்கு நன்றி செலுத்தச் செய்யும் இறை நேசர்கள்  நம்மிலே  எத்தனை  பேர்?

“(நபியே!) தொழுது வருமாறு நீர் உம் குடும்பத்தார்க்கு ஏவும் நீரும் அதன்மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும் உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுத்து வருகின்றோம். முடிவான நன்மை, தூய்மையான தன்மைக்குத் தான்  (அல்குர்ஆன் 20:132)

இறை வணக்கம்என்பது இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றிய தன்மைக்கும், நாம் பெற்றுள்ள நன்மைகளுக்கு, நன்றி செய்யும் தன்மைக்கும் நம்மை ஆட்படுத்துகின்றது. மேலும், மனிதன் என்பவன், சமுதாயத்தில் தன் குடும்பத்துடன் இணைந்தவனாகவே கணிக்கப்படுகின் றான். ஆகவே, அவனுக்குள்ள தற்காப்பு, இறையச்சம் இறை நம்பிக்கை, தன் குடும்பத்தார்க்கும் தேவையான வைகளாகவே கருதப்படவேண்டும். அப்போது தான் அவன் உண்மையிலேயே குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொண்ட வனாவான்!

விசுவாசிகளே! நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், மனிதர்களும், கற்களும் எரிபொருள்களாகக் கூடிய நரக நெருப்பிலிருந்து இரட்சித்து(பாதுகாத்து)க் கொள்ளுங்கள். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் (வானவர்கள்) ஏற்படுத்தப்பட்டிருக்கின் றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் (ஒரு சிறிதும்) மாறுசெய்யார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே  செய்துவருவார்கள்” (.கு.66:6)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! “சமுதாயம்என்பது ஒரு பெருங்கடல் என்றால், “குடும்பம்என்பது ஒரு சிறு ஆறாகும். அதில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நீர்த்துளிகளாவர். எனவே, குடும்பம் சிறந்ததாகக் கருதப்பட்டால் தான் மனிதன் தலை நிமிர்ந்து வாழ இயலும்! எனவே உங்கள் வாழ்வும், வளமும் குடும்பத்துடன் இரண்டறக் கலந்ததே! நீங்கள், இறைவனுக்காகச் செய்யும் கடமை ஒவ்வொன்றையும் உங்கள் குடும்பத்தார்க்கும் நினைவுபடுத்துங்கள்!

வீட்டிலுள்ள சிறு குழந்தைகள் முதல், பெரியோர்கள் வரை அனைவருடைய உள்ளங்களிலும், இறையச்சத்தையும் இறை நம்பிக்கையையும்  விதையுங்கள்!

ஏகத்துவம்என்னும் இறை ஒருமைப்பாடு ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துவிட்டால், அங்கே, இணை வைத்தலுக்கு எவ்வித  வேலையும்  இல்லையன்றோ?

எனவே, “குடும்பம்என்னும் கண்ணாடிப் பாத்திரத்தைச் சற்று கவனமாகவே கையாளுங்கள்! சற்றுக் கவனக்குறைவு ஏற்பட்டாலும்இணை வைத்தல்என்னும் கை நடுக்கத்தால் அப்பாத்திரம்  கீழே  விழுந்து  சுக்கு நூறாக  உடைந்துவிடும்!

யா அல்லாஹ்! எங்களை உன்னையே வணங்கி உன்னிடமே கையேந்தும் நல்லடியார்கள் குழுவில் இணைத்து வைப்பாயாக!  (ஆமீன்)

Previous post:

Next post: