படைத்தவனும், படைப்பினங்களும்

in 2025 செப்டம்பர்

படைத்தவனும், படைப்பினங்களும்

அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்!

முஹிப்புல் இஸ்லாம்

மறுபதிப்பு : 

ஆகஸ்ட்   மாத  தொடர்ச்சி

இப்படி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இணைத்துப் பார்க்கிறோம். இதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கண்ணியப்படுத்துவதாக இந்திய முஸ்லிம்கள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் இதற்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றானவர்கள் என்று சித்தரிப்பதே இதை உருவாக்கியோர்கள் உள்நோக்கம் என்பதை உணரத் தவறிவிட்டோம்.

அல்லாஹ்வுடன், அவனது தூதரையும் இணைத்துப் பார்த்தல், இறைக்கிணையாக்கும் இதை மன்னிப்பில்லா மாபாதகம்! என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து உணர்ந்து, இந்த விபரீதத்திலிருந்து விடுபட முன்வர வேண்டும்.

இப்போது ஹஜ் சீசன், ஹஜ்ஜுக்கு செல்வோர் பயணம் சொல்லிக் கொள்ள வருகிறார்கள். உங்களை நோகச் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அறிந்தோர், உறவினரிடம் மன்னிப்புக் கோரும்போதுஅல்லாஹ், ரஸூலுக்காக, மன்னித்துக் கொள்ளுங்கள்என்று சர்வ சாதாரணமாய் சொல்லி வருகிறார்கள். இப்படி சொல்லாதோர் குற்றவாளிகளாக்கப்படு கிறார்கள். இப்படி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இணைத்தே  பார்க்கிறார்கள்.

அல்லாஹ்தான் அனைத்து படைப்பினங் களின்  ஒரே  எஜமானன்:

 அல்லாஹ்தான் அனைத்துப் படைப்பினங்களின் ஒரே எஜமானன். அவனல்லாத அனைத்தும் அந்த அல்லாஹ்வின் படைப்பினங்களே. இதிலிருந்து அல்லாஹ் எந்த படைப்பினத்திற்கும் விலக்களிக்கவில்லை. அதனால் நபி(ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் அல்லாஹ்வின்  அடிமைகளே!

உயர்  அந்தஸ்திற்குரித்தானவர்கள்:

மனித சமுதாயத்தில், அல்லாஹ்விடம் மற்றவர்கள் எட்டிப்பிடிக்க முடியாத உயர் அந்தஸ்திற்கு உரித்தானவர்களே நபிமார்கள். ஆயினும் அந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு  அடிமைகளே!

அல்லாஹ்தான் நபிமார்களுக்கு அந்த உயர் அந்தஸ்த்தை அருளியுள்ளான். அதே அல்லாஹ் தான் அந்த நபிமார்களை அல்லாஹ் வின் அடியார்கள் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளான். சம்பந்தப்பட்ட நபிமார்களும் அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்க, தங்களை அல்லாஹ்வின் அடிமைகள் என்றே பிரகடனப்படுத்திச்  சென்றுள்ளார்கள்.

இணைத்தலே  இணைவைத்தல் :

அல்லாஹ்வுடன் தங்களை இணைத்துப் பார்ப்பதை எந்த நபியும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக கடுங்கண்டனத்துடன் தடுத்துச் சென்றுள்ளார்கள். வாழும் காலங்களில் அல்லாஹ்வின் அடிமைகளாய் வாழ்வதற்கு நபிமார்கள் மனித சமுதாயத்திற்கு முன் உதாரணமாய்த்  திகழ்ந்தார்கள்.

மனித எதிர்ப்புகள் எல்லை தாண்டும் போது:

நபிமார்கள் அனைவரும் அவர்கள் வாழும் போது அல்லாஹ்வின் அடிமைகளாய்த் திகழ்ந்ததால்தான் மற்ற சக மனிதர்களின் கடும் எதிர்ப்பிற்கும் ஆளானார்கள். ஆட்சி யாளர்களின் கொடுமைகளுக்கும் ஆளானார்கள். அடிக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள். எழுத்தில் வடிக்கவியலா ஏச்சு, பேச்சு களையும் திட்டுக்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

மனித எதிர்ப்புக்கள் எல்லையைத் தாண்டும் போது சொந்த நாட்டையும் நபிமார்கள் துறந்து இடப்பெயர்ச்சி செய்துள்ளனர். இதற்கு நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹிஜ்ரத் போதிய சான்றாகும். சில நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஏளனம் செய்யப்பட்டுள்ளனர். கேவலப்படுத்தப்பட்டுள்ளனர்.

வாழ்வு முழுவதிலும் மனிதர்கள் அல்லாஹ்விற்கு அடிமையாகி அல்லாஹ் ஒருவனை ஒருமைப்படுத்த வேண்டும்! என்ற ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலித்ததற்காக எல்லா வகையான மனித இன்னல்களுக்கும் இரையானார்கள்.

அல்லாஹ்வின் நபி என்ற உயர் அந்தஸ்து அல்லாஹ்வின் அடிமை என்பதை நிலைநாட்டவே!

அல்லாஹ்வின் நபி என்ற அல்லாஹ்வால் அருளப்பட்ட உயர் அந்தஸ்து, நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகள் என்று நிலைநாட்டுவதற்காகவே. மாறாக, நபிமார்களை அல்லாஹ்வுடன் இணைப்பதற்கல்ல. அல்லாஹ்வால் நபிமார்களுக்கு அருளப்பட்ட வஹி. இதை அறிவித்தல், இதை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கும். அல்லாஹ்வை ஒரே இறைவனாக அவனது படைப்பினங்கள் ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மட்டுமே அடிமையாகி விடவேண்டும் வல்ல அல்லாஹ் எந்த படைப்பினத்திற்கும் இதிலிருந்து விதி விலக்களிக்கவில்லை. 19:93 இதனைத் தெளிவாக  அறிவிக்கின்றது.

அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வின்  அடிமைகள்!

அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிக பிரம்மாண்ட படைப்பினமாயிருந்தாலும் சரி, மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சரி, பிரமிக்கத்தக்க ஆற்றலுடையதாயினும் சரி, சராசரி மனிதனைக் காட்டிலும், அறிவு திறமையில் விஞ்சி நின்று சாதனைப் படைத்திருந்தாலும் சரி, பிரமிக்கத்தக்க சாகஸங்களால் சக மனிதர்களை போன்றவர்களாய் இருந்தாலும் சரி, மற்ற மனிதர்களால்  எத்தனை ஈர்க்கப்பட்டிருந்தாலும் சரி. அதுவும், அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! இதிலிருந்து எவர்க்கும், எதற்கும், எந்தப் படைப்பினத்திற்கும் அல்லாஹ் விதிவிலக்களிக்கவில்லை. இதை முஸ்லிம்களில் பெரும்பாலோர் முறையாக உணர வில்லை. அதனால்தான் இந்திய தேச வழக்கப்படி இந்திய முஸ்லிம்களும் படைத்தவனோடு படைப்பினங்களை ஐக்கியமாக்கி விடுகின்றனர். இஸ்லாத்தின் பார்வையில், இது இறை மன்னிப்பில்லா மாபாதகம் என்பதும் முறையாக உணர்த்தப்படவில்லை.

இஸ்லாமிய இறையியலின் தனித்துவம் :

படைத்தவனைப் படைத்தவனாகவும், படைப்பினங்களைப் படைப்பினங்களாகவும் வேறுபடுத்திக் காட்டும் இஸ்லாமிய இறையியலின் உன்னதம், இஸ்லாமிய இறையியலின் தனித்துவம், இந்திய முஸ்லிம்களுக்கு முறையாக உணர்த்தப்படவில்லை. அதனால் தான்.

இந்திய முஸ்லிம்களுக்கு, நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை ஜீரணிப்பது கடினத்திலும் கடினமாயிருக்கிறது. இன்று, வல்ல அல்லாஹ், அந்த நிலையை அவனது பிரத்யேக அருளால் மாற்றி வருகிறான்.  அல்ஹம்துலில்லாஹ்.

ஓரிறைக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வாழ்க்கைத்  திட்டம்!

நபிமார்கள் அல்லாஹ்வின் அவதாரங்கள் அல்லர். தெய்வாம்சம் பொருந்தியவர்களும் அல்லர். கடவுள் தன்மையைப் பிரதிபலிக்க கூடியவர்களும் அல்லர். எந்த நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் ஒரே இறைவனோடு ஐக்கியமாகிவிடக் கூடியவர்களும் அல்லர். இதை மனித சமுதாயத்திற்குத் தெளிவாகவும், உறுதியாகவும் பிரகடனப்படுத்தவே வல்ல அல்லாஹ். ஓரிறைக் கொள்கை. அந்த ஓரிறைக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வாழ்க்கைத் திட்டத்துடன் நபிமார்களை அனுப்பிக் கொண்டேயிருந்தான்.

மகத்தான அருட்கொடை :

எங்கெல்லாம் எப்போதெல்லாம் ஓரிறைக் கொள்கை. இறைக்கிணையாக்குதலால் மாற்றப்பட்டதோ, அங்கெல்லாம் அப்போதெல்லாம், வல்ல அல்லாஹ், அதை மனித சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தி எச்சரிக்கத் தவறவில்லை. இதுதான் வல்ல அல்லாஹ் மனிதர்களுக்குப் புரிந்துள்ள அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடையாகும். இதற்குரிய சான்றுகள் இறுதி இறைநெறிநூல் நெடுகிலும் நிறையாக உள்ளன. இது முறைப்படி உணர்த்தப்படாததால், இந்திய முஸ்லிம்கள், இறைக்கிணையாக்குதலை வணக்கம், வழிபாடு, நன்மை, புண்ணியம் என்று முனைப்புடன் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதைக் கண்ணுறும் உண்மை முஸ்லிம்கள் யாரும் இரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது. மற்ற நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள்தான்; ஆனால் நமது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்பதை ஏற்க முடியவில்லை என்கின்றனர். நிலைமையின் விபரீதத்தை இதன் மூலம் எளிதாய் புரிய முடிகிறது. அன்பிற்குரியவர்களே! நமது நபியவர்களை, அந்த வல்லவன் அல்லாஹ் அடியார் என்றே பிரகடனப்படுத்தியுள்ளான். அதை நபி(ஸல்) அவர்களும் வழி மொழிந்துள்ளார்கள். இதை மேலே இடம் பெற்றுள்ள இறை வாக்குகளும் நபி(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டலும் ஐயத்திற்கிடமின்றி, தெளிவு படுத்துகின்றன.

அல்லாஹ்வின்  எச்சரிக்கை :

நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள் அல்லர் என்ன எண்ணமுடையோர், கடுங் கண்டத்திற்கும், இறைத் தண்டçணைக்கும் உரியவர்கள்.

“(ஈஸா) மஸீஹும் (அல்லாஹ்விற்கு மிக) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்விற்கு அடிமையாயிருப்பதை இழிவாக கருதமாட்டார்கள். எவர்கள் அல்லாஹ்விற்குப் (அடிமையாகி) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி கர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் அனைவரையும் (தண்டிப்பதற்காக) மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.       .கு. 4:172

…. எவர்கள் (அல்லாஹ்விற்கு அடிமையாகி) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமை கொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.  அல்குர்ஆன் 4:173

அல்லாஹ்வின் அடிமைகள் என்றே அந்த வல்ல அல்லாஹ் நபிமார்களைச் சிறப்பித்துள்ளான். தனது படைப்பினங்கள் தனக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இந்த இறைக்கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிபவர்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்னும் பெரும் பேறு பெற்றவர்கள். அந்த பட்டியலில் முதலிடம் வகிப்பவர்கள் தான் நபிமார்கள் மாறு செய்வோர் அல்லாஹ்வின் அதிருப்திக்கும், தண்டனைக்கும் ஆளாவார். அல்லாஹ் காத்தருள்வானாக!

அன்பு  வேண்டுகோள்!

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடிமை என்று திட்ட வட்டமாய் பிரகடனப்படுத்தியிருக்க, அதற்கு முற்றிலும் மாற்றமான கருத்தில் முஸ்லிம்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இது நாள் வரை, நமது சிந்தனைக்கு கொண்டு வரப்படாத இறைவாக்குகளை, இந்த ஆய்வின் கருப் பொருளாக்கியுள்ளோம்.

அறிஞர்கள் அபிப்பிராயங்கள், பெரும்பாலோர், முன்னோர்கள், ஊர் வழக்கம் என்று உதாசீனம் செய்யாமல், அல்லாஹ்வின் வாக்குகளை ஆழ்ந்து கற்று, சிந்தித்து தெளிவு பெற்று, தம்முடைய தவறான பாதையிலிருந்து விடுபடவேண்டும் என்று அல்லாஹ்வின் நல்லருளை ஆதரவு வைத்து அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன்,

முரண்டு பிடிப்போர், உண்மையை உணர அல்லாஹ்விடம் துஆ செய்து, அவர்கள் உண்மை உணர்வதற்காக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அன்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன். முயற்சிகள் தொடரட்டும். (இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!! சீர் பெறுவோம்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அவர்களுடைய நபிமார்களையும் நல்லோர்களையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து படுகுழியில் வீழ்ந்ததைப் போல நீங்கள் என்னை அளவுக்கு அதிகமாக புகழாமல் என்னை அல்லாஹ்வின் அடிமை என்றும் அல்லாஹ் வின் தூதர் என்றும் அழையுங்கள்

Previous post:

Next post: