புத்தகங்களை சுமக்கும் கழுதைகள் யார்?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
இவ்வுலகில் இப்போது 800 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றார்கள், அதில் சுமார் 210 கோடி பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.
இந்த 210 கோடி முஸ்லிம்களும் குர்ஆன் இறை வழிகாட்டி நூல் என்றும், இறைவனிட மிருந்து அருளப்பட்டது என்பதிலும் 100% சதவீதம் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஆனால் எல்லா முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ள அந்த குர்ஆனை படித்து புரிந்து கொண்டுள்ளார்களா? என்றால் இல்லை.
அதற்கு காரணம் மூன்று :
1. குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அதை படிக்காதவர்கள் அல்லது படிக்க ஆர்வமும், முயற்சியும் செய்யாதர்கள்.
2. குர்ஆனை அரபியில் மட்டுமே படிக்க (ஓத) தெரிந்தவர்கள், தெரிந்துக் கொண்டவர்கள் (இவர்களில் அரபி மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் உள்ளனர். வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்களும் உள்ளனர்)
3. அரபு மொழியிலும், தாய் மொழியிலும் குர்ஆனைப் படிக்கத் தெரிந்தவர்கள் அல்லது தாய்மொழியில் மட்டுமே படிப்பவர்கள்/ படித்துக்கொண்டு இருப்பவர்கள்.
மேற்படி மூன்று பிரிவினர்களுக்குள்ள வேற்றுமை என்னவென்றால்;
முதல் பிரிவினரை மிக சுலபமாக மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றமுடியும். அல்லது ஏமாறுபவர்களாக பெரும்பாலோர் உள்ளனர்.
இரண்டாவது பிரிவினர்களில் பெரும்பாலானோர்கள் மதரஸாவில் (அரபி பாடச் சாலையில்) குர்ஆனைப் படித்தவர்கள்/ படிக்கின்றவர்கள்.
(குர்ஆனை மதரஸாவில் படித்த இவர்களில் பெரும்பாலோர் தொழுகையில் ஓத தெரிந்து வைத்திருப்பார்கள் அல்லது இவர்களில் சிலர் அதிலுள்ள வசனங்களை மந்திரிப்பதற்கும், மற்றும் தாளில், தகட்டில் எழுதி தாயத்தாக உபயோகப்படுத்துவார்கள். அல்லது தங்களை ஆலிம்(அறிஞர்) என்று பெருமை பேசுவார்கள்)
மூன்றாவது வகையினர் :
அரபியிலும், தாய்மொழியிலும் ஆர்வமாக படிப்பவர்கள் அல்லது தாய்மொழியில் மட்டுமே குர்ஆனை படிப்பவர்கள். ஆயினும் முழு குர்ஆனையும் வரிக்கு வரி புரிந்து படித்தவர்கள் மிக மிக சொற்பமே.
அதன் விளைவுதான் இன்றைய முஸ்லிம்கள் அறிவியலிலும், அரசியலிலும் ஆன்மீகத்திலும் பின்தங்கி உள்ளனர். மேலும் பல பிரிவுகளாக பிரிந்தும் உள்ளனர்.
யாரேனும் ஆராய்ச்சியாளர்கள் ஏதாவது ஒன்றை புதியதாக கண்டுப்பிடித்து வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது இவர்கள் என்ன கூறுவார்கள் தெரியுமா?
இது எங்கள் குர்ஆனில் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது என்று பெருமை பேசுவார்கள். ஆனால் அதுவரை குர்ஆனை சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள்.
(உதாரணமாக பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இன்ஷா அல்லாஹ் சிந்தனை என்ற தொடரில் விரிவாக காணலாம்)
எனவே தான் வல்ல ரஹ்மான் இதை (குர்ஆனை) “இது அகிலத்தாருக்கு நினைவுறுத்தலே அன்றி வேறில்லை” (அ.கு. 68:52)
என்று கூறியிருந்தாலும் கீழ்கண்ட வசனங்கள் மூலம் மிக முக்கியமான ஒன்றை செய்யுமாறு கூறுகிறான்.
அவை வருமாறு :
1. “இந்த குர்ஆனைச் சிந்தித்து பார்க்கமாட்டார்களா?
இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடு களைக் கண்டிருப்பார்கள்” (அ.கு.4:82)
2. குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? உள்ளங்களில் பூட்டு போடப்பட்டு உள்ளனவா?
(அ.கு. 47:24)
3. “இதில் (குர்ஆனில்) பொய்யாக எதையும் முன்னும், பின்னும் சேர்க்கமுடியாது.
மிகவும் நுட்பமான ஞானத்தைக் கொண்டவனும், மிகுந்த புகழுக்குரியவனுமாகிய இறைவனிடமிருந்து அருளப்பட்டதாகும்”. (அ.கு. 41:42)
4. “இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவிதமான அறிவுரைகளையும் சிந்தித்து பார்ப்பதற்காக மிகத் தெளிவாக கூறியுள்ளோம்”. (அ.கு. 39:28)
5. “சிந்திக்கும் உள்ளத்தைப் பெற்றிருப்பவர்களுக்கு அல்லது செவிசாய்த்துக் கேட்டு சிந்தனை செய்பவருக்கு நிச்சயமாக இதில் நல்லறிவு இருக்கிறது”. (அ.கு.50:37)
6. “…நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இந்த குர்ஆனை அருளினோம்.” (அ.கு. 16:43,44)
மேற்கண்ட வசனங்களின் மூலம் குர்ஆனை சிந்திக்க 6 வித வழிமுறைகளை இறைவன் கூறுகிறான்.
1. குர்ஆனை சிந்திக்க வேண்டாமா?
(அதாவது படித்தால்/ஓதினால் மட்டும் போதுமானது அல்ல)
2. உள்ளங்களில் பூட்டு போடப்பட்டுள்ளனவா?
(அதாவது சிந்திக்காமல் படிக்க(ஓத) என்ன காரணம்?)
3. இறைவனிடமிருந்து வந்தது.
(அதாவது மனித கரங்களால் எழுதப்பட்டதல்ல, இது)
4. குர்ஆனில் முரண்பாடு இல்லை.
(அதாவது மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தான் கூறியதை சில சூழ்நிலையில் அதை மறந்து முரண்பாடாகக் கூறுவான். அல்லது முதலில் தவறாகப் புரிந்துகொண்டு ஒன்றைக் கூறிவிட்டு பிறகு சரியாக புரிந்து கொண்டதாக வேறொன்றைக் கூறுவான்.)
5. குர்ஆனில் எதையும் குறைக்கவோ/ கூட்டவோ சேர்க்கமுடியாது.
(அதாவது அல்லாஹ் சொல்லாததை சொன்னதாக இதில் பொய்யை சேர்க்கமுடியாது. அதற்கு காரணம், இது பாதுகாக்கப்பட்ட இறைநூல்)
6. அறியாதவராக இருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்.
(அதாவது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அறிவு மிகச் சொற்பமானது. அதனால் எல்லாவற்றையும் ஒரு மனிதன் அறிந்திருக்க முடியாது. எனவே தெரியாததை தெரிந்தவர்களிடம் கேளுங்கள்)
மேற்கண்ட 6 (ஆறு) வழிமுறைகளை பின்பற்றுவோமானால் குர்ஆன் எல்லோருக்கும் விளங்கும்.
ஆனால் சிந்திக்காமல் குர்ஆனைப் படித்தால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதையும் இறைவனே கூறுகிறான்.
“தவ்ராத் எனும் இறைநூல் வழங்கப்பட்டு, பின்னர் அதை கடைபிடிக்காமல் இருந்தவர்களின் எடுத்துக்காட்டு, புத்தகங்களைச் சுமக்கும் கழுதையைப் போன்றதாகும்.”
(அ.கு. 62:5)
அவனே வானங்களிலுள்ளவை. பூமியில் உள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (அ.கு. 25:13)
(இன்ஷா அல்லாஹ் சிந்தனை தொடரும்)