இஸ்லாத்தின் பார்வையில் சோதனை!

in 2025 டிசம்பர்

இஸ்லாமிய  வாழ்வியல்

இஸ்லாத்தின் பார்வையில் சோதனை!

முஹிப்புல் இஸ்லாம்

மறுபதிப்பு  :

வாழ்க்கைஓர்  மனித  கண்ணோட்டம் :

வானங்களையும், பூமியையும் அவனே (அல்லாஹ்) ஆறு நாட்களில் படைத்தான். மேலும் அவனுடைய சிம்மாசனம் (அர்ஷ்) நீரின்  மீதுள்ளது.

உங்களுள் எவருடைய செயல்கள் மிக சிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (இவற்றைப் படைத்தான்)  ஹூது 11:7

மனிதர்கள்  வாழப்  பிறந்தவர்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! வழக்கமாய் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கை குறித்து கொண்டிருக்கும் பொது கருத்து. எது வாழ்க்கை? எப்படி வாழ்வது? என்பதில்தான் மனிதர்கள்  மாறுபடுகிறார்கள்.

மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள்; வீழ பிறந்தவர்கள் அல்லர். வாழ்வதற்காக, மனிதர்கள் தாங்களாய் தேடிக்கொண்ட வழிகள் எதுவாக இருப்பினும் சரி. அந்த வழிகள் சிலவற்றால் சில மனிதர்கள் இம்மையில் தற்காலிகமாய் பலன் பெறலாம். அத்தகைய வழிகளால் இம்மையில் கூட தொடர்ந்து பலன் பெறமுடியாது. தொன்றுதொட்டு மனிதன்  சரிகண்ட  மதங்கள்!

சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில் முதல் காரல் மார்க்கஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, தமிழகத்தில் ஈ.வே.ரா. வரை அனை வரும் சரிகண்ட சித்தாந்தங்கள், தத்துவங்கள்! இவைகளில் எதை எடுத்து பரிசீலித்தாலும் சரி! (இனி உருவாகப் போகும் எந்த தத்துவமா யிருந்தாலும் சரி) இவைகள் எதிலும், நிச்சயம் மனித வாழ்வு முழுமைக்கும் வழிகாட்டுதல் இல்லை குறைந்தபட்சம் இவைகள் குறிப்பாக கோடிட்டுக் காட்டும் இயல்கள், துறைகளுக் காவது வழிகாட்டுதல் உண்டா? என்றால்  அதுவும்  இல்லை.

கம்யூனிஸ  வீழ்ச்சி :

மற்றெல்லா காலங்களைக் காட்டிலும் சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கம்யூனிஸத்தின் நிலை என்ன? ஆரம்பத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கம்யூனிஸம்! பின்னர் மனித வாழ்வை நசுக்கும் நச்சுக் கொள்ளி என்று இனங் கண்டு கொள்ளப்பட்டது. விளைவுகம்யூனிஸ வீழ்ச்சி! கம்யூனிஸத்துக்கு  சமாதி  கட்டப்பட்டது.

கம்யூனிஸத்தால் நன்மை ஏற்படவில்லையா? ஆம்! ஒருசில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அவைகளும் தற்காலிகமானவைகள். நிரந்தரமானவை அல்ல. அது ஏற்படுத்திய நன்மை கடுகளவு, தீமைகள், வழிகேடுகள் கடல் அளவு! இது அனுபவப்பூர்வமாய் உணரப்பட்டபோது கம்யூனிஸம் தூக்கி எறியப்பட்டுவிட்டது.

வாழப் பிறந்த மனிதர்களை வீழ்த்திய கம்யூனிஸத்தை மனித சமுதாயமும் வீழ்த்தி விட்டது. மற்ற இஸங்களின் கெடுதிகள் சிறுக, சிறுக உணரப்பட்டு முற்றாக ஓரங்கட்டுப்பட்டுள்ளன. ஒருசில இஸங்கள் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ்! அந்த இஸங்களும் முற்றாக புறக்கணிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதை மனித சமுதாயம் அன்று முதல் இன்று வரை நிதர்சனமாய் கண்டு வருகிறது. (இனி இவ்வுலகு உள்ளளவும் காணப்போகிறது) ஆனால் இதிலிருந்து மனித சமுதாயம் படிப்பினை பெறவில்லை. வியப்பிற்குரிய வேதனை தரும் உண்மை  இது.

மனிதர்கள் கண்டுபிடித்து சரிகண்ட வழிகள் அனைத்தும்  வழிகேடுகளே!

மனித சமுதாயம் தானாக வரிந்து கொண்ட வழிகள்! ஒருவர் ஒரு விடயத்துக்கு வழிகாட்டலாம். சிலர் சில விடயங்களுக்கு வழிகாட்டலாம். அத்தனை மனிதர்கள் ஒன்று கூடினாலும் முழு மனித வாழ்வுக்கும் வழிகாட்ட முடியாது? இவைகள் அனைத்தும் மனிதர்கள் கண்டுபிடித்த, சரிகண்ட வழிகள்! மனிதர்கள் உருவாக்கிய வழிகள் அனைத்தும் அல்லது எதுவானாலும் அதனால் எத்தனை நன்மைகள் விளைகின்றன என்று வாதிட்டாலும் சரி, அவைகள் அனைத்தையும் இஸ்லாம் பகிரங்க வழிகேடுகள் என்றே பறைசாட்டுகிறது. இங்குதான் இஸ்லாத்தின் தனித்தன்மை நிலைநாட்டப்படுகிறது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்துவிடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக்கொண்டார். அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும்  நன்கறிவோனாகவும்  இருக்கின்றான்.  (அல்குர்ஆன் 2:256)

நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் இறைவனுக்கு  இணையாக்குதல்:

மனித சமுதாயத்தில் மிகப் பெரும்பாலோர் இறைவனுக்கு இணையாக்குதலை(சிர்க்) நன்மை, புண்ணியம், வணக்கம், வழிபாடு என்ற உறுதியான நம்பிக்கையில் செய்து வருகின்றனர். இது பகிரங்க வழிகேடு என்று மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும், கடமையும் ஏற்றிருப்பவர்கள் முஸ்லிம்கள். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? இறைவனுக்கு இணையாக்குதலில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு நன்மையை, புண்ணியத்தை ஈட்டிக் கொண்டிருப்பதாய் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவனுக்கு பகிரங்க இணையாக்குதல் முஸ்லிம்களால் வணக்க வழிபாடுகளாய்  செய்யப்பட்டு  வருகின்றன.

(.கா.) சமாதி சடங்குகள் இறைவனுக்கு இணையாக்குதலில் முஸ்லிம்கள் மாற்றார்களி டமிருந்து சற்று வேறுபடலாம். அன்றி இறைவனுக்கு இணையாக்குதலிலிருந்து முஸ்லிம்களே முற்றிலும் விடுபடவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை என்னென்பது? அதனால் இது விடயத்தில் முஸ்லிம்கள் மாற்றார்களால் பழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர். என்றைக்கு இந்த இழிநிலை நீங்கும்? இறைவனுக்கு இணையாக்குதல் மனித வாழ்வை மேம்படுத்தும் சர்வ நிவாரண சஞ்சீவி என்று மனிதர்கள் தப்பு கணக்குப் போட்டுள்ளனர். இது ஒரு பானைக்கு ஒரு சோறு  பதம்!

இதுபோன்று மனிதர்கள் கண்டுபிடித்து சரிகண்ட செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி நம் அனுபவத்தில் அவைகள் தற்காலிகமாய் சில நன்மை ஏற்படுத்தியிருந்தாலும் சரி. அவைகள்  அனைத்தும்  வழிகேடுகளே!

வழிகேட்டிலிருந்து  விடுபட  முடியாதா?

மனித சமுதாயம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதற்குக் காரணம் இந்த வழிகேடுகளே. நன்மை, புண்ணியம் என்ற போர்வையில்தான் எல்லா வழிகேடுகளும் இறக்குமதியாகின்றன. கால ஓட்டத்தில் இவைகள் வழிகேடுகள் என்று உணரப்பட்டாலும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அப்படியே குறிப்பிட்ட ஒரு வழிகேட்டிலிருந்து விடுபட்டாலும் வேறொரு வழிகேட் டில்  மாட்டிக்  கொள்கிறார்கள்.

மனித சமுதாயம் முழுமையாக வழிகேட் டிலிருந்து  விடுபட  முடியாதா?”

அப்படி விடுபட முடியுமென்றால் அதற் குரிய  வழிதான்  என்ன?”

வழிகேட்டிலிருந்து விடுபட்டோர் எங்கேனும் இருந்துள்ளார்களா?” என்று அடுக்கடுக்கான தொடர் வினாக்கள் நம் உள்ளத்தை துளைத்தெடுக்கின்றன.

வழிகேட்டிலிருந்து  விடுபட்டோம்!

அல்லாஹ்(ஜல்) மனிதர்களுக்கு அவன் அருளிய நேர்வழியை வாழ்க்கை(நெறி)யாக்கிக் கொள்ள கட்டளையிட்டான். மாறாக, மனிதர்கள் வழிகேடுகளையே வாழ்க்கையாக்கிக்  கொண்டுள்ளனர்.

அல்லாஹ் அருளிய நேர்வழியைத் தங்கள் வாழ்க்கை நெறியாக்கிக் கொண்ட நபிமார்களும் இறைத் தூதர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோர் மட்டுமே வழிகேட்டிலிருந்து விடுபட்டோர். இவர்கள் நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலம் வரையும் இருந்து வந்தனர். இப்போதும் இருந்து வருகின்றனர். இவ்வுலகு உள்ளளவும் இருந்து வருவார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவே இருப்பார்கள். அதனால்தான் இப்படிப்பட்டவர்களை நம் காலத்தில் இனங்காண்பது அரிதிலும் அரிதாக  இருக்கிறது.

அப்படியே இனங்கண்டு கொள்ளப்பட்டாலும் இத்தகையோர் பிரபல்யமானவர்களாய் இருப்பதில்லை. பிற்படுத்தப்பட்டோராய் இருக்கிறார்கள். ஏற்றி போற்றப்படாவிட்டாலும் பரவாயில்லை. (அந்த அவசியமும் அத்தகையோர்க்கில்லை) என்றாலும் பழிக்கப்பட்டவர் களாய், இழிவிற்குள்ளாக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தின் கடும் எதிர்ப்புகள், கண்டனக்கணைகள் இவர்களின் அன்றாட யதார்த்த வாழ்வை வெகுவாய் அலைக்கழித்து விடுகின்றன. சராசரி மனிதனாகவும் உலாவர முடியாமல் புழு பூச்சிகளை விட கேவலமாய் மதிக்கப்படுகிறார்கள். இதை இவர்கள் அல்லாஹ்விற்காக இவ்வுலகில் தாங்கிக் கொண்டால் இன்ஷா அல்லாஹ்! மறுமையில் இவர்களும், மற்றவர்களும் எண்ணி பார்க்கமுடியாத உயரத்திற்கு அல்லாஹ் இவர்களைக் கொண்டு செல்வான் என்பது மட்டும்  சர்வ  நிச்சயம்.

இன்று பலர் உண்மை, சத்தியத்தை உணர்ந்தாலும், சமுதாய நிந்தனைக்குப் பயந்தே அவைகளை நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். எந்த நிலையிலும் முஸ்லிம்கள் நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் செய்வானாக (ஆமீன்) எல்லோரும் துஆ செய்வோம். துஆவோடு நின்றுவிடாமல், அதற்குரிய முயற்சிகள் மேற் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மனிதர்கள்  அனுபவிக்கும்  துன்பங்கள்!

வழிகேட்டில் மூழ்கி துன்பம் அனுபவிக்கும்போது, அது வழிகேட்டால் விளைந்தது என்று யாரும் எண்ணுவதில்லை. இஸ்லாத்தைப் பின்பற்றும்போது ஏதேனும் துன்பங்கள் ஏற்பட்டு விட்டால் போதும். அந்த பழியை இஸ்லாத்தின்  மீது  ஏற்றிவிடுகிறார்கள்.

மனிதர்கள் சரிகண்ட மதங்கள், இஸங்கள், நாத்திகம், அறிவியல் என்று எதை ஏற்றிருந்தாலும் அதை ஏற்றிருப்பவர்கள் யாரும் துன்பங்கள்  அனுபவிக்காமல்  இருக்கிறார்களா?

நேர்வழியில் நிலைத்து நின்றாலும் சரி, வழிகேட்டை வாழ்வாக்கிக் கொண்டாலும் சரி, அனைத்து மனிதர்களும் துன்பப்படுகிறார்கள். அனுபவிக்கும் துன்பங்கள் விகிதாச்சாரம் வேண்டுமானால் மனிதனுக்கு, மனிதன், மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடலாம். அன்றி துன்பம் அனுபவிக்காத மனிதர்கள் யாருமுண்டா?

துன்பங்கள்  குறுக்கிடும்போது….

நேர்வழியில் நிலைத்து நின்ற நபிமார்களும், இறைத் தூதர்களும் மற்ற மனிதர்களைக் காட் டிலும் அதிகமாக துன்பங்கள் அனுபவித்துள் ளனர். அவர்களைத் துன்பங்கள் தீண்டிய போதும் சரி, அவர்கள் துன்பங்கள் அனுபவித்த போதும் சரி, அவர்களில் யாரும் தன்னிலை இழக்கவில்லை. புரண்டு புலம்பி பொறுமை இழக்கவில்லை. அழுது அங்கலாய்க்கவில்லை. அல்லாஹ் சோதித்துவிட்டான், துன்பப்படுத்தி விட்டான் என்று சோக கீதங்கள் பாடவில்லை.

துன்பங்கள், சோதனைகளிலிருந்து விடுபட குறுக்கு வழிகள் நாடவில்லை. வழிகேடு களைத் தேடவில்லை. எத்தனை துன்பங்கள், சோதனைகள் அவர்களைச் சூழ்ந்த போதும், நேர்வழியில் நிலைத்து நின்றார்கள். பொறுமை காத்தார்கள். மற்றவர்களைக் காட்டிலும் அசாத்திய பொறுமையுடையவர்களால் திகழ்ந்தார்கள். அதனால் அல்லாஹ்(ஜல்) அந்த இறைத் தூதர்கள், நபிமார்கள் வாழ்வை நமக்கு படிப்பினையாக்கியுள்ளான். இறுதி நெறிநூல். எடுத்துக்காட்டும் 25 நபிமார்கள் வாழ்வும் இதையே நமக்குப் படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அதிலிருந்து நாம் படிப்பினைப்  பெறத்  தவறிவிட்டோம்.

மனிதர்கள் வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். வாழ்க்கைப் பற்றி அல்லாஹ்(ஜல்) தரும் சரியான தெளிவாக்காம்.

உங்களுள் எவர் அழகிய(சிறந்த) செயல்களை உடையவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் (அல்லாஹ்(ஜல்)) மரணத்தையும், வாழ்வையும் படைத்துள்ளான். அவன் வல்லமை மிக்கவனும்,  மிக்க மன்னிப்பவனுமாவான்.   (அல்முல்க் : 67:2)

Previous post:

Next post: