எங்கே இருக்கிறது சகோதரத்துவம்?
M. சையத் முபாரக், நாகை
நபித்தோழர்களும் நாமும் :
முன்பு ஒரு காலம்: நீ யாரோ? நான் யாரோ என சிறு சிறு குழுவாகப் பிரிந்திருந்த, சின்னஞ்சிறு பிரச்சனையைக் கூட பூதாகரமாக்கி சண்டையிட்டு பகைமை பாராட்டிய மக்களை இஸ்லாம் ஓரணியில் திரட்டி சகோதரர்களாக மாற்றி ஒற்றுமையை மிளிரச் செய்தது. ஆனால், இப்போது உறவு முறையில் சகோதரர்கள் கூட சிறு சிறு பிரச்சனை காரணமாக சகோதரத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கின்றனர்.
தமது குழந்தைகளுக்கு மட்டுமே இருந்த உணவை, அவர்களை சமாதானப்படுத்தி தூங்க வைத்து, விளக்கை அணைத்துவிட்டு, தாங்கள் சாப்பிடுவது போல் பாவனை செய்து, பசித்துயரோடு வந்தவர்க்கு உணவைப் பரிமாறினர் தல்ஹா(ரழி) தம்பதியினர். தனது தேவையை விட மற்றவர் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த இவர்களின் செயலைப் பாராட்டி அல்லாஹ் வசனத்தை இறக்கினான். (பார்க்க : அல்குர்ஆன் 59:9, புகாரி :4889,3798)
அன்பை, கருணையை, உதவி செய்யும் குணத்தை நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவம் மூலம் வளர்த்தார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? ஒருவர் பசியினால் வாடினாலோ, நோயினால் துன்பப்பட்டாலோ, கூடா சேர்க்கையினால் தீமையின் பக்கம் சென்றாலோ நமக்கென்ன? யார் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; நாம் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று சகோதரத்துவத்தை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.
சிரமங்களைத் தாங்கிக் கொண்டு சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் நபித்தோழர்கள். பணப்பிரச்சனை, இடப் பிரச்சனை என்று காரணம் காட்டி சொந்த உடன்பிறப்புகளையே துண்டித்து வாழ்கின்றோம் இப்போது நாம்.
அல் அவ்ஸ், அல் கஸ்ரஜ் :
இரு சகோதர கிளைகளில் (குலங்களில்) ஏற்பட்ட சிறு பகையால் பல வருடங்களாகச் சண்டையிட்டு பாவச் செயல்களைப் பெருக்கிக் கொண்டிருந்தவர்களை அல்லாஹ் சகோதரர்களாக இணைத்தான்.
“ஒன்றுதிரண்டு யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை (அல்குர்ஆன்) வலுவோடு பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்துவிடாதீர்கள். மேலும் உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக நீங்கள் இருந்தீர்கள். உங்கள் உள்ளங்களை ஒன்றோடொன்று பிணைத்தவன் அவனே. நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக ஆனதும் அவன் அருளால்தான். மேலும் நீங்கள் நெருப்புக் குழியின் அருகில் இருந்தீர்கள். அதிலிருந்து அவன் உங்களைக் காப்பாற்றினான். இவ்விதமாக தன் வழிகாட்டலை உங்களுக்கு தெளிவாக்குகின்றான் அல்லாஹ். நீங்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் 3:103)
முஹாஜிர்கள், அன்சாரிகள் :
அனைத்தையும் துறந்து, தியாகம், வாய்மை, பொறுமை, உதவி செய்தல் போன்ற குணங்களைக் கொண்ட முஹாஜிர்களை நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுடன் சகோதரர் களாக இணைத்தார்கள். மதினா அன்சாரிகளும் மக்கா முஹாஜிர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்தனர். சொத்துகளை, தோப்புகளை ஏன்? மனைவியை விவாகவிலக்கு செய்து முஹாஜிர்களுக்கு தர மனமுவந்து தந்தனர் அன்சாரிகள். இதன் மூலம் அவர்கள் சகோதரத்துவ நேசிப்பின் சிகரத்தைத் தொட்டனர்.
அல்லாஹ்வை நம்பியேற்றவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், இறைவழிப் பாதையில் ஜிஹாத் செய்தவர்கள் ஆகியோரும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து உதவி ஒத்தாசைகள் செய்தார்களே அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், மதிப்புமிகு வாழ்வாதாரமும் இருக்கிறது. (அல்குர்ஆன் 8:74)
ஒன்றுபட்ட சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக, உறுதியாக இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள். ஹுனைன் போரில் கிடைத்த கனிமத் பொருட்களை குறைகளுக்கு பிரித்து கொடுத்த நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்க வில்லை. (காரணம் உண்டு) இதனால் அன்சாரிகள் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர்.
இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் வந்து அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில் மற்றவர்கள் கனீமத் பொருட்களைக் கொண்டு செல்லும்போது, அல்லாஹ்வின் தூதரை நீங்கள் அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில் லையா? எனக் கேட்டார்கள். அன்சாரிகளின் மன வருத்தத்தை மடைமாற்றிய இந்த நிகழ்ச்சியை “அல்ரஹீக் அல்மக்தூம்‘ எனும் நூலில் 514, 515 பக்கங்களில் பார்க்கலாம். (மேலும் பார்க்க : புகாரி :4330)
ஆனால், சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வால் அழைக்கப்படும் நாம் இன்று நமது செயல்களால் அறியாமைக் காலத்தை நோக்கி பின்னுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது மிகப் பெரும் துர்பாக்கியம் அல்லவா? முஸ்லிம்களாகிய நாம் மத்ஹப், சூபி, தரீக்கா, இயக்கம், கழகம், கட்சி என்று பல்வேறாக பிரிந்து சகோதரத்துவ ஒற்றுமை யைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்கண்ட குழுக்களை நாம் திறம்பட இயக்கலாம், செயல்படுத்தலாம். ஆனால், இதன் மூலம் இஸ்லாம் கூறும் உன்னத நிலையை, சகோதரத்துவ ஒற்றுமையை அடையமுடியாது. ஏனெனில், நமது இலட்சியம், முயற்சி அல்லாஹ்விற்காக என்றில்லாமல் இயக்கத்திற்காக என்று மாறிவிடுகிறது. இப்படி பல்வேறாக பிரிந்து, ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருக்கும்போது நமது சமுதாயம் எந்த வகையிலும் வெற்றி பெறமுடியாது.
சகோதரத்துவம் ஏற்பட ஒருசில வழிகளை கீழே பார்ப்போம்.
சகோதரத்துவ ஒற்றுமை மிளிர :
1. அல்லாஹ்வின் உதவி வேண்டும். அதனால், அவனிடம் துஆ செய்ய வேண்டும். (பார்க்க : அல்குர்ஆன் 8:62,63, 2:196)
2. உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பது போல் நாமும் ஒருவருக்கொருவர் இணைய வேண்டும். (பார்க்க : புகாரி : 6011, 2446, முஸ்லிம் : 5043, 5045)
3. நேசிக்க வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும். (பார்க்க: புகாரி:7376, முஸ்லிம் : 4638, 68, 1869, 5016)
4. உதவி செய்ய வேண்டும், தேவைகளை நிறைவேற்ற வேண்டும். (பார்க்க : புகாரி 2442, 6951, முஸ்லிம் 5231)
5. தான் விரும்புவதையே மற்றவர்க்கும் விரும்பவேண்டும். (பார்க்க : புகாரி 13, முஸ்லிம் 71)
6. ஸலாத்தைப் பரப்பவேண்டும். (பார்க்க : அல்குர்ஆன் 24:6, புகாரி: 12, முஸ்லிம் : 63)
7. விருந்தை ஏற்கவேண்டும், நோயாளியை விசாரிக்க வேண்டும், ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும். (பார்க்க: புகாரி: 6235, முஸ்லிம் : 4194)
8. மோதல்களை இணக்கமாகத் தீர்த்து சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். (பார்க்க அல்குர்ஆன்: 4:128, 49:9,10, புகாரி : 2692, 2693, முஸ்லிம் : 3680, 5013)
9. மன்னிக்க வேண்டும். (பார்க்க: அல்குர்ஆன் 24:22, 3:134, முஸ்லிம் : 5047)
10. நல்லொழுக்கம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். (பார்க்க: அல்குர்ஆன் : 68:4, புகாரி: 6203, முஸ்லிம்: 4626)
11. நாவைப் பேணவேண்டும், புறம், அவதூறு பேசக்கூடாது. (பார்க்க:அல்குர்ஆன் 49:12, புகாரி: 6018,6474, முஸ்லிம்: 75)
12. மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பு கூடாது. (பார்க்க : புகாரி : 6065, 6077)
13. சந்தேகம் கொள்ளவோ, தோண்டித் துருவவோ கூடாது. (பார்க்க : அல்குர்ஆன் 49:12, புகாரி: 6064)
14. இழிவுபடுத்தக் கூடாது. (பார்க்க: அல்குர் ஆன்: 49:11, புகாரி: 6032, 6777, முஸ்லிம்: 3417)
15. குறைகளை மறைக்க வேண்டும், கஷ்டத்தை நீக்க வேண்டும். (பார்க்க : புகாரி : 2442, முஸ்லிம் : 5231)
16. தவறுகளை தனிமையில் அல்லது மறைமுகமாக சுட்டிக்காட்ட வேண்டும். (பார்க்க : புகாரி : 6101)
17. அழகிய உபதேசம், விவேகமான விவாதம் செய்யவேண்டும். (பார்க்க : அல்குர்ஆன் 28:55)
18. தொடர்புகளை சீர்படுத்த வேண்டும். (பார்க்க : அல்குர்ஆன் 8:1)
19. கண்ணியம் கொடுக்க வேண்டும். (பார்க்க : அல்குர்ஆன் 15:88, முஸ்லிம் : 4524)
20. நன்மையை ஏவி, தீமையை தடுக்கவேண்டும். (பார்க்க:அல்குர்ஆன் 3:110,114, 12:108, 16:125, 20:25-28)
ஒற்றுமையை மேம்படுத்துவோம் :
கூட்டுத் தொழுகை சகோதரத்துவத்தின் வெளிப்பாடு. இது பிணைப்பை வலுப்படுத்துகிறது. அதுபோலவே மற்ற கடமைகளின் நோக்கமும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தி, ஒற்றுமைக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டிய நாம் அதனைப் புரிந்துகொள்ளாமல், ஒற்றுமையின்றி பிரிந்து கிடக்கின்றோம்.
ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள வெறுப்பும், குரோதமும் ஒற்றுமையாக வாழவேண்டிய மனிதர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துவிட்டது. இது சுயநலமாக மாறிய மனித மனதில் கெட்ட எண்ணங்களை ஊடுருவச் செய்கிறது, நல்ல எண்ணங்களை காணாமலாக்கி விடுகிறது.
முஸ்லிம்கள் உலக அளவில் பின்னடைவைச் சந்திக்கவும், இன்னல், துன்பத்திற்கு ஆளாகவும் காரணம் அல்லாஹ்வின் கட்டளைகளைத் துச்சமாக மதித்ததுதான். ஆகவே, அல்லாஹ் கூறும் ஒற்றுமையை பேணுவோம்.
“உங்களது இந்த சமூகம் ஒரே சமூகமாகும். நானே உங்கள் இறைவன், எனக்கு அடிபணியுங்கள்”. (அல்குர்ஆன்: 21:92)
நாம் நபித்தோழர்கள் காலத்து சகோரதத்துவத்தைப் பேணாதவரை நம் சமூகம் மாற்றம் காணாது, முன்னேற்றம் அடையாது, வெற்றி பெறாது. சுயநலமின்றி கருணை, மன்னிப்பு போன்ற குணங்களையும், பரஸ்பர இணக்கத்தை மற்றும் ஒத்துழைப்பையும் நாம் மேற் கொண்டால் சகோதரத்துவ ஒற்றுமையை மேம்படுத்துவதே அதற்கு முன் உதாரணம். ஆகவே, நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!