எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது!

in 2025 டிசம்பர்

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது. எனவே (நன்மையைத் தருவதும் தீமையைத் தடுப்பதும் அவன்தான் என்று) ஒருவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்கிறார் எனில்; அவருடைய உள்ளத்தில் நேர்வழி (பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். (இதனால் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப் பட்டதைப் பொருந்திக் கொண்டு பொறுமையுடனிருக்க) அவன் வழிகாட்டுகின்றான். (64:11) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் ஏற்படமுடியாது. அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் என்றால் அல்லாஹ்வின் கட்டளையில்லாமல் அதாவது அவன் விதித்த விதி, அவனுடைய நாட்டம் தொடர்பான கட்டளையில்லாமல் ஏற்பட முடியாது என்று பொருள். அடுத்த தொடரில்;

எனவே (நன்மையைத் தருவதும் தீமையைத் தடுப்பதும் அவன்தான் என்று) ஒருவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை  கொள்கிறார்  எனில்;

அவருடைய உள்ளத்தில் நேர்வழி (பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். (அதாவது அவருடைய உள்ளத்தில் நேர்வழி (பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். அதாவது ஒருவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அது அல்லாஹ் நிர்ண யித்த விதியினாலும், அவனுடைய தீர்ப்பினாலும் தான் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் அறிந்துகொண்டு பொறுமையாக இருக்கிறார். இருந்தால் எனில் அதற்கான மறுமைக் கூலியை எதிர்பார்த்திருக்கிறார் எனில் உலகத்தில் அவருக்குக் கைகூடாமல் போனவற்றுக் குப் பகரமாக அவருடைய உள்ளத்தில் நேர்வழிக்கான சிந்தனையையும் உண்மையான மன உறுதியையும் அல்லாஹ் உதிக்கச் செய்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் 9:451-454) இது குறித்து:

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்; உறுதியின் பக்கம் அவருடைய உள்ளத்திற்கு வழிகாட்டுகிறான் என்று பொருளாகும். அதனால் எந்த ஒரு துன்பம் (அல்லது நன்மை) அவரை அடைந்ததோ அது அவரை அடைந்திடாமல் தவறுவதற்கு உரியது அல்ல என்பதையும் அவர் அறிந்து கொள்கிறார். அத்துடன் எந்த ஒரு துன்பம் (அல்லது நன்மை) அவரை அடையாமல் தவறி விடுகிறதோ அது அவரை அடைவதற்கு உரியது அல்ல என்பதையும்  அவர்  அறிந்து கொள்கிறார்.

இந்த வசனம் தொடர்பாகவே; எனவே (நன்மையைத் தருவதும் தீமையைத் தடுப்பதும் அவன்தான் என்று) ஒருவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்கிறார் எனில்; அவருடைய உள்ளத்தில் நேர்வழி(பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். (அதாவது அவருடைய உள்ளத்தில் நேர்வழி (பற்றிய சிந்தனை)யை அல்லாஹ் உதிக்கச் செய்கிறான். எனும் வசனம் தொடர்பாக அல்கமா(ரழி) அவர்கள் கூறியதாக அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது.

உள்ளத்தில் நேர்வழி பெறும் மனிதருக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறபொழுது அது அல்லாஹ்விடம் இருந்து வந்ததுதான் என்று அறிந்து அதனைப் பொருந்திக் கொள்கிறார் முழுக்க முழுக்க அதனை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். மேலும் இது குறித்து,

ஸயீத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிடுகிறார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அவன் பக்கமே திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம் என்ற கூறுகிறார் என்று பொருள் மேலும்;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஓர்) இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும்  துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இதை ஸுஹைப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம் : 5726. இந்த நபிமொழிக்கு ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் உஸைமீன்(ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்  வருமாறு.

மனித வாழ்வில் இறைவன் நிர்ணயித்த விதி என்பதும் இன்பம், துன்பம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும் வாழ்க்கையில் சில பொழுது மகிழ்ச்சியும் இன்பமும் மனிதனை வந்தடைகின்றன. கண் குளிர்ச்சியான மனைவி மக்கள், கண்ணியம் காக்கும் உறவுகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை உலக ரீதியிலான அருட்பேறுகள் இதேபோல் நற்கல்வியும் நற்செயல்கள் செய்யும் நல்வாய்ப்பும் மனிதனுக்குக் கிட்டுகின்றன. இவை மார்க்க ரீதியிலான அருட்பேறுகள் இத்தகைய மகிழ்வான நேரங்களில் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி  செலுத்துகிறான்.

சில நேரங்களில் வாழ்க்கையில் துன்பமும் துயரமும் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அப்பொழுது ஓர் இறை நம்பிக்கையாளன் பொறுமையோடு அவற்றைத் தாங்கிக் கொள்கின்றான். அதற்கான கூலியையும் இன்ப நிலையையும் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கின்றான். ஆக பொறுமை, நன்றி எனும் இவ்விரு பண்புகளும் அவனுடைய வாழ்க்கையை அலங்கரிக்கும் இரு அணிகலன்களாகும். அதற்கு இறை நம்பிக்கையாளனின் ஈமான் எனும் நம்பிக்கையும் அதனால் மலரும் வாழ்க்கைப் போக்கையும், நல்ல திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டி அவனுடைய நிலையைக் குறித்து நான் வியப்பு அடைகிறேன் என்று இங்கு கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 9:451-454, ரியாளுஸ் ஸாலிஹீன்) 

எனவே, அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொண்டவர்கள் தமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள், நெருக்கடிகள், இழப்புக்கள், வீழ்ச்சிகள், எதுவாக இருந்தாலும் அது தனக்கு அல்லாஹ்வின் அனுமதி கொண்டே வருகின்றன என்பதை உறுதியாக நம்பவேண்டும். ஏனெனில் அல்லாஹ் பரிசுத்த குர்ஆனில்;

பூமியில் அல்லது உங்களில் ஏற்படும் எந்தத் துன்பமும் அதனை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமி யிலோ, அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும். (அல்குர்ஆன் 57:22) படைப்பினங்களின் விதியை முன்னரே நிர்ணயித்து முடித்துள்ள தன்னுடைய ஏற்பாட்டைப் பற்றி உயர்ந்தோன். அல்லாஹ் இங்கே அறிவிக்கின் றான்.   (தஃப்சீர் இப்னு கஸீர் : 9:179-183) 

மேலும்; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு  கூறியதை நான் கேட்டிருக்கிறேன். வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு 50, ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (அனைத்துப் படைப்பினங்களின்) விதிகளையும் அல்லாஹ் நிர்ணயித்துவிட்டான். அப்பொழுது அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. எனும் சொற்றொடரை இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்கள் அதிகமாகச் சேர்த்துள்ளார்கள். அதன் கருத்து இதுதான். அப் பொழுது தண்ணீர் மட்டும்தான் இருந்தது.  பிறகுதான் ஏனைய படைப்பினங்கள் படைக்கப்பட்டன என்பதால் அல்லாஹ்வின் அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம்: 5160, முஸ்னது அஹ்மத், திர்மிதீ : 2156, தஃப்சீர் இப்னு கஸீர் 9:179-183)  இதனைத்  தொடர்ந்து  அடுத்த  வசனத்தில்,

(இதனைத் தெரிவிப்பது) எதற்காக எனில் உங்களுக்குக் கை கூடாமல் போய்விட்டவை குறித்து நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது (என்பதற்காகத்தான்) மேலும் உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் மனம் பூரித்துவிடக்கூடாது என்பதற் காகவும்தான்! தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்கிற பெருமை பேசுகின்ற ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (57:23) அதாவது: உங்களுக்கு நாம் அறிவித்துவிட்டோம். படைப்பினங்களை அவை உருவாகும் முன்னரே நாம் அறிந்திருக்கின்றோம். அதற்கு முன்னரே அவற்றை நாம் ஏட்டில் பதிவு செய்திருக்கின்றோம் என்பதை எல்லாம். மேலும் இந்தப் பேரண்டம் உருவெடுப்பதற்கு முன்னரே அவை பற்றிய விதியை நாம் நிர்ணயித்துவிட்டோம் என்பதை எல்லாம் உங்களுக்கு நாம் அறிவித்தோம்.

எதற்காக எனில் எந்தத் துன்பங்கள் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டனவோ அந்தத் துன்பங்கள் உங்களை அடையாமல் தவறிவிடக் கூடியவை அல்ல என்பதையும் எந்தத் துன்பங்கள் உங்களை அடையாமல் தவறிவிட்டனவோ அந்தத் துன்பங்கள் உங்களுக்கு ஏற்படக் கூடியவை அல்ல என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே உங்களுக்குக் கைகூடாமல் போய்விட்டவை குறித்து நீங்கள் மனம் தளர்ந்திட வேண்டாம். (தஃப்சீர் இப்னு கஸீர் : 9:179-183) 

அத்துடன் அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாகக்) கண்காணிப்பவனாக இருக்கின்றான். கடலிலும், திடலிலும், உள்ள மரம் செடி, கொடிகளில் இருந்து ஓர் இலை உதிர்வதும் அவனது (துல்லியமான) கணக்கில் உள்ளது. அவன் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. (6:59) என்ற தொடருக்கு;

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள்; நிலத்திலும், நீரிலும் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மரத்திலிருந்து(உதிர்ந்து) கீழே விழுகின்ற (ஒவ்வொரு) இலைகளை(யும்) அவர் பதிவு செய்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 460) 

மேலும்; நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றை (எல்லாமே) அவன் அறிகின்றான். அவன் அறியாமல் (அவனுடைய அறிவுக்குத் தெரியாமல்) ஓர் இலை கூட உதிர்வதில்லை. பூமியின் காரி ருளில் உள்ள எந்த வித்தும், ஈரமான மற்றும் காய்ந்த எந்தப் பொருளும் தெளிவான பதிவேட்டில் (துல்லியமாக) இல்லாமலில்லை (6:59) அதாவது தரையிலும், கடலிலும், வாழ்கின்ற அனைத்து உரியினங்களையும் உயிரற்ற ஒவ்வொரு பொருட்களையும் முழுமையாக அல்லாஹ் அறிகின்றான். அவற்றில் எதுவும் அவனது (துல்லியமான) அறிவிலிருந்து தப்பிவிடாது. 

மேலும்; கடலிலுள்ள, பூமியிலுள்ள, வானத்திலுள்ள, பால்வெளி மண்டலத்திலுள்ள, கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்திலுமுள்ள ஓர் அணுகூட, ஏன் அணுவின் ஒரு துகள் கூட, அவனுடைய விசாலமான, துல்லியமான, அறிவிலிருந்து மறைந்துவிடாது. மண் ணின் எண்ணிக்கையையும் அதன் துல்லியமான கணக்கையும் அறிந்தவன் மனிதர்கள் உட்பட ஒவ்வோர் உயிரினங்களின் உரோமங்களின் எண்ணிக்கையையும் அல்லாஹ் துல்லியமாக அறிந்தவன்.  (72:28, 3:5, 41:47, 6:59)

பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) காரிருளில் உள்ள எந்தவொரு வித்தும், ஈரமான மற்றும் காய்ந்த, எந்தப் பொருளும் (துல்லியமான கணக்கின் அடிப்படையில்) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59) பூமியிலுள்ள ஒவ்வொரு மரத்திற்கும், அதிலே ஊசி துளையிடும் (ஒவ்வொரு) துவாரத்திற்கும் கூட ஒவ்வொரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். மரம் ஈரப்பதத்துடன் இருக்கும்போதும், காய்ந்த நிலையில் இருக்கும்போதும், அதன் நிலைகளை எல்லாம் அந்த வானவர் அல்லாஹ்விடம் சமர்ப்பிப்பார் என்று அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்(ரழி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3:460)

மேலும், இதுகுறித்து, வானத்திலோ, பூமியிலோ உள்ள எந்தப் பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குத் தெரியாமலில்லை (3:5) என்றும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் கிளைகளில் இருந்து வெளிப்படுவதில்லை. எந்தப் பெண்ணும் கர்ப்பம் அடைவதோ பிரசவிப்பதோ இல்லை.  (41:47)

மழை பொழிவதும், “இன்னின்ன நட்சத்தி ரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகின்றவர்  அல்லாஹ்வை  நிராகரித்த  காஃபிராவர் 

ஸைத் இப்னு காலித்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா என்னுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகையை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கிஉங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும், என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால் அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர் இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர் என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள். புகாரி : 1038, முஸ்லிம்:126)

மேலும் பரிசுத்த குர்ஆனில்; இதனைப் பொய்ப்படுத்துவதைத்தான் உங்கள் (பங்கிலான) நற்பேறாக நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா? (56:82) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். அதாவது; உலக வாழ்வில் நீங்கள் பெற்ற பேராக (நட்சத்திரமாகிய) இதையா நீங்கள் ஆக்குகிறீர்கள் என்று அல்லாஹ் கேட்கிறான் என்றால் (அல்லாஹ்வை) நீங்கள் பொய்ப்படுத்துவதையே நீங்கள் செலுத்தும் நன்றியாக ஆக்குகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான் என்று பொருள். இன்ன இன்ன தாரகையின் மூலம் எங்களுக்கு மழை  பொழிவிக்கப்பட்டது. இன்ன இன்ன நட்சத்திரத்தின் மூலம் எங்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டது என்று நீங்கள்தானே சொல்கிறீர்கள் என்று அல்லாஹ் கேட்கிறான் என்று பொருள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ(ரழி) அவர்கள், நூல்கள் (முஸ்னது அஹ்மத், இப்னு அபீஹாத்திம், திர்மிதி, தஃப்சீர் இப்னு கஸீர்: 9:109-115)

பிறகு இவ்(வளவு உன்னத) வாக்கை நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்களா?” (56:82) அதாவது; நட்சத்திரங்களின் விடயத்தில் இன்ன இன்ன நட்சத்திரத்தின் மூலம் எங்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டது என்று அன்றைய மக்கள் கூறிக் கொண்டிருந்ததை இது குறிக்கும். இது அல்லாஹ்விடமிருந்து பொழியப்பட்ட மழை இது. அவன் தந்த ரிஜ்க் (எனும் நற்பேறு) என்று கூறுங்கள் என்பதாகவே நபியவர்கள் சொன்னார்கள் என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும், ளஹ்ஹாக்(ரஹ்) அவர்களும் அதிகமான அறிஞர்களும் கூறியுள்ளார்கள். தஃப்சீர் இப்னு கஸீர்: 9:109-115. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: