எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா?
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு :
ஒரு காலம் வரும். இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரித்து வெளியாகும். (பைஹகி 1908, மிஷ்காத் பாகம் 1, பக்கம் 91)
இந்த மவ்லவிகளின் கெட்ட நிலையை இதைவிட வெளிப்படையாக யாரும் சொல்ல முடியுமா? அந்தளவு திட்டமாக, தெளிவாக, நேரடியாக இறைவனின் இறுதித் தூதரே விளக்கிவிட்ட பின்னர் பிறரது வேறு விளக்கம் தேவையா?
இம்மெளலவிகளை நம்பி இவர்களின் வழிகாட்டல்படி நடப்பவர்கள் நரகத்தில் தங்களின் இருப்பிடங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? ஓர் உதாரணம் : இம்மவ்லவிகளில் சிலர், சிலர் மீது காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா (தீர்ப்பு) கொடுத்து அவர்கள் பின்னால் நின்று தொழும் தொழுகை நிறைவேறாது என்று தீர்ப்பளித்து அவர்களைக் கண்மூடி நம்பியவர்களை அதன்படி செயல்படவும் செய்து 3:128, 21:92, 23:52, 42:21, 49:16 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து காஃபிராகச் செய்கிறார்கள்.
பைஹகி 1908 ஹதீதில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் இமாம்கள் பற்றி மிகமிகக் கடுமையாக இழிவாக எச்சரித்திருந்தும், அப்பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது. அந்த இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று நபி(ஸல்) ஃபத்வா அளிக்கவில்லை. 2:213, 16:44,64 இறைவாக்குகள் கூறுவது போல் ஹலால், ஹராமை நேரடியாக விளக்கக் கடமைப்பட்ட நபி(ஸல்) அவர்கள் தன் கடமையிலிருந்தும் தவறிவிட்டார்களா? அவர்கள் தவற விட்டதை (நவூதுபில்லாஹ்) அக்கறையுடன் எடுத்து இம்மவ்லவிகள் தீர்ப்பளிக்கிறார்களா? 3:128, 42:21, 49:16 இறைக் கட்டளைகளை நிராகரித்து அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து அல்லாஹ் விதிக்காததை எல்லாம் மார்க்கமாக விதித்து நம்ரூது, ஃபிர்அவ்ன் போன்ற கொடிய காஃபிர், முஷ்ரிக்குகளின் பட்டியலில் இவர்களும் இணைகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? தீர்ப்பளிக்கும் அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், மவ்லவிகள் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) ஒருவருக்கொருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்து ஒருவர் பின்னால் மற்றவர் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் (பார்க்க : 21:92,93, 23:52,53) இம்மவ்லவிகள் நாளை நரகை நிரப்பும் 99.9% பெருங்கூட்டத்தினருடன் இருப்பார்களா? 0.1% சுவர்க்கக் கூட்டத்தினருடன் இருப்பார்களா? சிந்தியுங்கள்! ஆம்! இம்மதகுருமார்களும் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் 99.9% நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபிப்பதைத் திட்டு வதை 7:35-41, 33:36, 66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிபவர்கள் மட்டுமே உணர்வார்கள். அம்மதகுருமார் களிலும் கேடிலும் கேட்டில் விழுந்து கிடப்பவர்கள் குர்ஆன் முஸ்லிம்களின் இறைநூல, அதை மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று பிதற்றும் மவ்லவிகளே. அதிலும் 34:31, 32,33, 40:47,48 வசனங்கள் அடையாளம் காட்டுவது பெருமையடிக்கும் இம்மத குருமார்களையே. 39:72 இறைவாக்குப் பெருமையடிப்போருக்குக் கூலி நரகமே என்று திட்டமாக அறிவிக்கிறது.
7:146 சொல்லும் வீண் பெருமையடிக்கும் முல்லாக்களின் குருட்டுப் ஃபத்வாவை ஏற்று பெரும்பாலான இமாம்களின் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்ப்பவர்கள் 42:21 சொல்வது போல் அல்லாஹ் விதிக்காததை விதித்து, 49:16 சொல்வது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கும் மேதை களாகி, கொடிய சிர்க்கில் மூழ்குகிறார்கள் என்பதை அறிவார்களாக. பிறை விசயத்தில் இம்மூட முல்லாக்களின் வழிகேட்டை நன்றாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும், இம் மூட முல்லாக்களுக்கு மரியாதை கொடுத்து, சில இமாம்களுக்குப் பின்னால் தொழக்கூடாது. கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி கொடுக்கலாம். தங்களின் நடைமுறைகளைக் கொண்டு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த முடியும் போன்ற மூட நம்பிக்கைகளில் இம்மூட முல்லாக்களையே பின்பற்றுவது வேதனையான விசயமாகும். அவர்கள் 9:31 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக குர்ஆன் வசனங்களைப் படித்துத் திருந்தினால் தப்பினார்கள். (பார்க்க: 33:36,66-68)
இப்போது ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களிலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் கற்பனை செய்யப்பட்டுள்ளனவோ அவை அனைத்தின் மதகுருமார்களை விட கெட்டவர்கள், 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல், தங்கள் பாவச்சுமைகளை முழுமையாக சுமப்பது மட்டுமில்லாமல், இவர்கள் வழிகெடுத்த உலக மக்கள் அனைவரின் பாவச் சுமைகளையும் சுமக்கப் போகிறவர்கள் முஸ்லிம் மதகுருமார்களே! இவர்கள் சுமப்பது மிகமிகக் கெட்டதுதானே? எப்படி என்று விரிவாகத் தருகிறோம். கவனம் எடுத்துப் படித்து விளங்குங்கள்.
ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து ஈசா(அலை) அவர்கள் காலம் வரை எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகிற்கு வந்திருந்தாலும், அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நேர்வழிச் செய்திகள் வந்திருந்தாலும், 5:3 இறை வாக்குக் கூறுவது போல் அவை முழுமை பெறவும் இல்லை. பதிந்து பாதுகாக்கப்படவும் இல்லை. மேலும் அவை ஒரு குறிப்பிட்ட இனம், நாடு, பகுதி எனக் குறிப்பிட்டே வந் தன. அவை அனைத்தும் தற்காலிகமான வையே அல்லாமல் நிரந்தரமானவையல்ல. அதனால்தான் அவை இறக்கப்பட்ட மூல மொழிகளில் எம்மொழியும் இன்று புழக்கத்தில் இல்லை. பேச்சு வழக்கில் இல்லை. அம் மொழிகள் அனைத்தும் செத்த மொழிகளாகிவிட்டன. (Dead Languages) முன்னைய நெறிநூல்களின் (வேதங்களின்) உண்மை நிலையை உலகில் யாராலும் நிலைநாட்ட முடியாது.
அந்நபிமார்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த புரோகிதப் பண்டாரங்கள் திருட்டுத்தனமாக அச்சமூகங்களில் புகுந்து, இறைவன் சொல்லாத வற்றையும், அத்தூதர் சொல்லாதவற்றையும் சொன்னதாக அப்பட்டமான பொய்களைக் கூறி முன்னைய இறைச் செய்திகள் அனைத்தையும் (வஹி) மாசு பட வைத்து, கலப்படங்கள் செய்து பல வேதங்களைக் கற்பனை செய்துவிட்டனர். உதாரணமாக, தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று பிரகடனப்படுத்திய (பார்க்க 5:111) ஈஸா(அலை) அவர்களும், அவர்களது சீடர்களும் வாழ்ந்த காலத்தில் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த சவுல், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் வசம் உயர்த்தப்பட்ட பின் (4:157,158) ஈசா(அலை) தனக்குக் காட்சி தந்ததாக அப்பட்டமான பொய்யைக் கூறி இறைவனுக்கு இணை வைக்கும் முக்கடவுள் கொள்கையை கற்பனை செய்து மக்களிடையே பரப்பினார். அந்த சவுலே பரிசுத்த பவுல் என்ற பெத்தப் பேருடன் மகிமைப்படுத்தப்படுவதுடன், அவர் கற்பனை செய்த முக்கடவுள் கொள்கையே கிறித்தவ மதமாகி உலகின் ஆகப் பெரிய மதமாக இருக்கிறது. ஷைத்தானும் தன்னுடைய நேரடி முகவர்களான இம்மதகுருமார்களுக்குப் பேருதவிகள் செய்ய, கோணல் வழிகளான அந்த நெறிநூல்களையும், அவை போதிக்கும் மதங்களையும் குரங்குப் பிடியாக உறுதியாகப் பிடித்துக் கொண்டார்கள். தங்கள் தங்கள் மதங்களைப் பற்றிப் பெருமை பேசுவதோடு அதில் உறுதியாகவும் இருக்கி றார்கள். காரணம் அவர்கள் யாரிடமும் முழுமை பெற்ற பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூல் (வேதம்) இல்லவே இல்லை. அவர்களின் மதகுருமார்கள் சொல்வதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. மதகுருமார்கள் வேதவாக்காகச் சொல்லுபவை சரியா? தவறா? என உரைத்துப் பார்க்க அவர்களிடம் பாதுகாக்கப்பட்ட நெறிநூல் (வேதம்) இல்லவே இல்லை.
இறுதி இறைத்தூதர் வந்து, அத்தூதருக்கு இறுதி நெறிநூல் இறக்கப்படும்போது, அதாவது ஒரே நேர்வழி (6:153) வஹியாக அறிவிக்கப்படும்போது கலப்படமான மாசுபட்ட தங்கள் தங்கள் நெறிநூல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முன்னைய மதகுருமார்களும், அவர்களின் குருட்டுப் பக்தர்களும் இறுதித் தூதரையும் குர்ஆனையும் கச்சையைக் கட்டிக் கொண்டு கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது இறைவன் முஸ்லிம்களுக்காக இறக்கியருளிய நேர்வழி கருத்துக்கள் வருமாறு.
உங்கள் பொருள்களிலும், உங்கள் உயிர்களிலும் திட்டமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்நெறிநூல்(வேதம்) கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைப்போரிட மிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனுக்கு) பயபக்தியுடன் நடந்தால் அதுவே உறுதி மிக்கச் செயலாகும். (3:186)
நன்மையும், தீமையும் சமமாகமாட்டா, நீர்(தீமையை) மிக அழகியதைக் கொண்டு தடத்துக்கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார். (41:34)
இந்த இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் அன்று மக்கா, மதீனா விலிருந்த மாற்று மதத்தினர், மாற்றுக் கொள்கையுடையோர் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்த, கலப்படமாகி, மாசு பட்டிருந்த வேதங்களையுடைய மதகுருமார்களின் வழிகேடு களை நேர்வழியாக நம்பிச் செயல்பட்ட மக்கள் இஸ்லாத்தையும், நபி(ஸல்) அவர்களையும் மிகமிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலும், கடமையாக விமர்சித்த நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் 3:186, 41:34 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அவர்களுடன் அன்பாகப் பழகினார்கள். அவர்களின் சுக துக்கக் காரியங்களில் கலந்து கொண்டார்கள். வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். தேவையற்ற பகைமையைக் காட்டவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தையும், நபி(ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அவர்கள் மீது திணிக்கப்பட்ட போர்களில் மட்டுமே தற்காப்புப் போர்கள் புரிந்ததாகத் தான் வரலாறுகள் கூறுகின்றன. 2:191, 9:6, 47:4, 60:8,9 போன்ற இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எப்போது இம்மதகுருமார்கள் நயவஞ்சகமாக, திருட்டுத்தனமாக இந்த முஸ்லிம் உம்மத்தில் புகுந்தார்களோ அப்போதே தூய இஸ்லாமிய மார்க்கம் இக்கயவர்களால் மதமாக்கப்பட்டு, மற்ற மதங்களில் நிறைந்து காணப்படும் அனைத்து சிர்க்குகள், பித்அத்கள், மூடநம்பிக்கைகள், அநாச்சாரங்கள் அனைத்தையும் முஸ்லிம்களிடையே நுழைத்துப் பிழைப்புக்கு வழிகண்டார்கள். தூய இஸ்லாத்தையும் மற்ற மதங்களைப் போல் ஒரு மதமே என்ற பொய்த் தோற்றத்தை ஷைத்தானின் துணையுடன் நிலைநாட்டி விட்டார்கள்.
இன்று முஸ்லிம்களிடையே இம்மதகுருமார்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. புகாரீ 3348,4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறுவது போல் நரகை நிரப்ப இருக்கும் ஆயிரத்தில் 999 பேர் அவர்கள் பின்னால் தானே செல்வார்கள். இஸ்லாத்தில் ஆலிம்– அவாம் வேறுபாடு இல்லவே இல்லை. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 2:186, 7:3, 18:102-106, 33:36 இன்னும் இவை போன்ற குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு இம்மவ்லவிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீத்களையும் நேரடியாகப் பார்த்து விளங்கி நடப்பவர்கள் மட்டுமே ஆயிரத்தில் ஒரே ஒரு நபராக சுவர்க்கம் புகுவார்.