ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துந் நபியா? நமது சலாம் சலவாத்துகளை அவர்கள் அறிகிறார்களா?
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துந் நபி என்றதொரு தவறான குருட்டு நம்பிக்கையை ஒரு சிலர் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக உண்டாக்கி வைத்துள்ளனர். அல்குர்ஆன் 3:144, 39:30 ஆகிய வசனங்கள் தெளிவாக மரணித்துவிட்டார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன. நபி(ஸல்) அவர்கள் மரணித்தவுடன் நபித்தோழர்களில் சிலருக்கு நபி(ஸல்) அவர்கள் மரணிப்பவர்கள் அல்லர் என்ற சந்தேகம் இருந்தது. அப்போது அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் மிகத் தெளிவாகவே, “யார் முஹம்மதை(ஸல்) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அந்த முஹம்மத்(ஸல்) இறந்துவிட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும், அந்த அல்லாஹ் உயிரோடிக்கிறான், நித்திய ஜீவி, அவனுக்கு மரணம் என்பதே இல்லை” என்று அறிவித்து மேலே கண்ட இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அதே சமயம் நபி(ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் சலாம், ஸலவாத் அவர்களைப் போய் சேருகின்றது என்பதற்கு கீழ்க்காணும் ஹதீத் ஆதாரமாக இருக்கிறது. “என்னுடைய கப்ரை திருவிழாக்கள் (உரூஸ்) நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்; என் மீது ஸலாவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்” என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹுரைரா (ரழி), அபூதாவூத்
ஐயம் : மண விழாவில் குர்ஆன், ஹதீது வசனங்களுடன் உள்ள குத்பா தயாரிப்பு ஓதுவது நபி வழியா?
தெளிவு : நிக்காஹ் “குத்பா” செய்வது நபி வழிதான், “குத்பா” என்றால் சொற்பொழிவு என்பதே அதன் பொருள். திருமணத்திற்காக உறவினர்கள், பந்துக்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார்கள் என்று சகல மதத்தினரும் வருகைத் தருவார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏற்றவித மாக அந்த சொற்பொழிவு அமையவேண் டும். மாற்று மதத்தாரின் சிந்தனையையும் கிளறி அவர்களும் இஸ்லாம் மார்க்கத்தின் மேன்மை பற்றி சிந்திக்கத் தூண்டவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அந்த சந்தர்ப்பத்தை பிரசாரத்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நபி(ஸல்) நிக்காஹ் சொற்பொழிவுகளில் ஓதிக் காட்டிய 3:102, 4:1, 33:70,71 போன்ற வசனங்களை ஓதி, அவற்றின் பொருள் உணர்ந்தால் இது தெளிவாகப் புரியும். ஆனால் கைசேதம்! நமது மவ்லவிகள் நிகாஹ் குத்பாவை இன்று ஒரு சடங்காக ஆக்கிவிட்டார்கள். மந்திரம் ஓதுவதுபோல் ஆக்கிவிட்டார்கள். கூடி இருக்கும் மக்களுக்கு விளங்காத நிலையில் இந்ந குர்ஆன் வசனங்களை நீட்டி முழக்கி இராகம் போட்டு ஓதி தங்களின் குரல் வளத்தைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் செய்வது நிக்காஹ் “குத்பா” அல்ல; வேதபாராயணமாகும். இந்த நடைமுறை நபி வழியல்ல. ஆனால் அரபி மொழியில் ஒன்றுமே ஓதாவிட்டாலும், ஒருவர் அந்த குர்ஆன் வசனங்களை விளங்கி அவற்றை கூடி இருக்கும் மக்கள் புரியும் வகையில் அவர்களது மொழியில் சொற்பொழிவு நிகழ்த்தினால் அதுவே “நிக்காஹ் குத்பா”வாக அமையும். இதுவே அசலான நபி வழியாக அமையும்.
ஐயம் : நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது. அப்படி இருந்தும் பாவிகளுக்கு தண் டனை தருவது நியாயமா?
தெளிவு : இந்த கேள்விக்கு பலமுறை நாம் விளக்கம் தந்துள்ளோம். சுருக்கமாகச் சொன்னால் விதி பற்றி நமது மூளையைக் குழப்பாமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும். காரணம் முழுமையாக அது பற்றி அறிந்துக்கொள்ளும் ஆற்றல் மனித பகுத்தறிவுக்கு இல்லை.
ஐயம் : சிலர் “ஜமாஅத்தே இஸ்லாம்” இயக்கத்தை பற்றி தவறாக சித்தரித்து காட்டுகிறார்களே? மேலும் “மவ்லானா மஃதூதி” அவர்களை “வழிகேடர்” என்று கூறுகிறார்களே? இவ் வியக்கத்தை பற்றி உங்கள் கருத்து என்ன? “மஃதூதி” அவர்களின் கருத்துகள் சரியானவையா?
தெளிவு : சத்தியத்தைச் சொன்ன, சொல்கிறவர்கள் அனைவருமே சுயநலமிகளால் இழித்தும், பழித்தும் தூற்றப்படும் நிலை அன்றிலிருந்தே தொடரும் தொடர் கதையாகும். மெளதூதி அவர்களை யார் “வழிகேடர்” என்று சொல்லுகிறார்களோ அவர்களை விட மெளதூதி சீரிய சிந்தனையாளர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவரது தனி இயக்கம் என்ற அடிப்படை தவறானதேயல்லாமல் நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். தனி இயக்கம் ஆரம்பித்தது தவறு என்று சொல்லமுடியும். மெளதூதி அவர்களின் கருத்துக்களில் ஒருசில தவிர பெரும்பான்மையானவை குர்ஆன், ஹதீதுக்குச் சரியானவை என்றே எமது அறிவுக்குப் படுகிறது.
ஐயம் : நான் என் குடும்பத்திற்கு போதுமான அளவு செலவுக்கு பணம் கொடுத்து விடுகிறேன். இஸ்லாமிய புத்தகங்கள் நிறைய வாங்கி புதிய மக்களுக்கு கொடுப்பதற்கு பணம் செலவாகிறது. உலக ஆசை நிரம்பிய என் குடும்பத்தார் அதை கடுமையாக எதிர்க்கிறார்கள். நான் இப்படி செலவு செய்வதால் சில சமயம் சிறு சிரமங்கள் ஏற்படுவது உண்மையே. என் குடும்பத்தார் தீனுக்காக சிறு சிறு கஷ்டங்களை கூட சகித்துக்கொள்ள தயாராக இல்லை. ஆனால் வீண் விசயங்களுக்காக பெரிய பெரிய கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறார்கள். இப்போதைய சூழலில் மேற்படி நல்ல விசயங்களுக்கு பணம் செலவு செய்வதை நிறுத்த வேண்டியுள்ளது. “குர்ஆன், ஹதீத்” அடிப்படையில் வழிகாட்டவும்.
தெளிவு: குடும்பத்தார்கள் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வது நமது கடமையாகும். அவற்றிற்குப் பாதிப்பு வரும் வகையில் நமது இதர செலவழிப்புகள் இருப்பது முறையல்ல. அதேசமயம் குடும் பத்தார் ஆடம்பர, அனாவசிய செலவு செய்ய முற்படுவதைத் தடுப்பது நம்மீது கடமையாகும். அழகிய உபதேசம் கொண்டு அவர்களைத் திருத்த முற்படவேண்டும். அல்லாஹ்வுக்காக சிறு சிறு கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு பிரச்சார பணி செய்வதின் அவசியத்தை உணர்த்தவேண்டும். நாளை மறுமையில் நஷ்டத்தை விட்டு நம்மைக் காப்பாற்றிக் கொள்ள பிரசாரப்பணி செய்வதும், அதனால் ஏற்படும் கஷ்டங்களுக்கு பொறுமை காப்பதும் அவசியம் என்பதையும் உணர்த்த வேண்டும்.