தாயின் காலடியில் சொர்க்கமா?
அ. நஜ்முத்தீன்
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் கீழ்கண்ட விளம்பரத்தைப் பார்க்கலாம்.
“தாய்மை ஒரு வரம்”
“நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம்”, இதுவொரு வியாபாரத் தந்திரமாகயிருந்தாலும் அதில் ஒரு உண்மையும் அடங்கியுள்ளது.
தாய்மை என்பது சாதாரண உணர்வு அல்ல, அது மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த, மிக உன்னதமான அன்பின் வடிவம்.
கருவில் குழந்தை உருவான பொழுதிலிருந்து தாய் அனுபவிக்கும் வலி, தியாகம், பொறுமை இதற்கு ஒப்பானது இவ்வுலகில் எதுவே இல்லை.
எனவேதான் இறைவன் இறைநூலில் (குர்ஆனில்) சிரமமானது எது? என்பதை குறிப்பிடும்பொழுது,
“…அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனே பெற்றெடுத்தாள்” அல்குர்ஆன் 46:15 என்று இறைநூல் கூறுகிறது.
இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்:
“தாயின் காலடியில் “சொர்க்கம் உள்ளது” என்பதாக.
இதன் விளக்கம் : தாயை மதித்து, அன்பு செலுத்தி, அவளின் மனதை மகிழ்விப்பது, சொர்க்கத்திற்கு செல்லும் எளிய பாதை என்பதாகும்.
சுருக்கமாக : தாய் ஒரு மனிதனின் முதல் பாட சாலை, முதல் ஆசான், முதல் தோழி, முதல் பாதுகாப்பு. அதனால்தான் தாய், தந்தையரை மதிப்பது பிள்ளைகளின் கடமை என்பதையும் இறைநூல் கூறுகிறது.
“…குழந்தைக்கு இரண்டு வருடங்கள் வரை பாலூட்டி வளர்க்கிறாள். (எனவே) இந்த ஏற்பாட்டினைச் செய்த இறைவனுக்கும், உன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்கும் நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அல்குர்ஆன் 31:14
இது இறைக் கட்டளையாகும்.
குழந்தைகள் வல்ல ரஹ்மான் வழங்கிய பேரருள். கர்ப்பமாக இருந்த காலத்திலிருந்தும், மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்தும் அம்மாவின் உடலிலும், மனதிலும் குழந்தையுடன் ஆழமான ஓர் இணைப்பு உருவாகிறது. இதுவும் இறைவனின் ஏற்பாடு.
அன்பின் உயிர்,
வானத்தில் எழுதப்பட்ட வரம்,
பாவமின்றி தூய்மையான பிஞ்சு உள்ளங்கள், அதன் புன்னகை, முகத்தை பார்த்தாலே பேரானந்தம்.
சிரிப்பு, ஒலி (சத்தம்) அசைவுகள் இவைகளை காணும்போது மனம் உருகிவிடும்.
கவலை, சுமை இவற்றால் பெற்றோர்கள் மனம் படும் வேதனைகளைக் கூட மறக்கச் செய்யும்.
குழந்தைகளை தோளில் தூங்க வைப் தும் தூங்கிய குழந்தையை பாயில்/மெத்தை யில் படுக்க வைப்பது என்பது வானில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை தரையில் Landing செய்வதற்கு சமம்.
குழந்தைகள் பெற்றோரை நம்பிக் காத்திருக்கும் உயிர்.
அந்த உயிருக்கு உணவு, உடை, பாதுகாப்பு, பராமரிப்பு, ஒழுக்கம் எல்லாவற்றையும் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு.
குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது, முத்தமிடுவது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் (சுன்னாவில்) ஒன்றாகும்.
மேலும் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மாபெரும் பரிசு (அருட்கொடை) மற்றும் அல்லாஹ் வழங்கிய அமானிதமாகும். அந்த அமானிதத்தை வளர்த்து பேணி காப்பதும் இபாதத்து (கடமை) ஆகும்.
குழந்தைகள் எதையும் எதிர்பார்க்காமல் பெற்றோரிடம் அன்பு செலுத்தும். அதற்கான பதில்தான் பெற்றோர்கள் காட்டும் அன்பும், செல்லமும்.
ஆனால் பெற்றோர்களில் பெரும்பாலோர் அன்புக்கும், செல்லத்திற்கும் வித்தியாசம் (வேறுபாடு) தெரியாமல் குழந்தைகளை வளர்க்கின்றனர். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பது தவறு அல்ல. அதீத செல்லம் ஆபத்தானது.
ஆரம்பத்தில் அதீத செல்லம் கூட அன்பு, கடமை போல் தோன்றும். ஆனால் அதுவே அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்பதாகும்.
எவ்வாறு என்றால்;
A. குழந்தைகள் எதையும் கேட்டவுடன் வாங்கித் தருவது.
B. தவறு செய்தாலும் கண்டிக்காமல் அல்லது கண்டுக்காமல் இருப்பது.
C. குழந்தைகள் என்ன செய்தாலும் அது சரிதான் என்று செல்லம் கொடுத்து தவறு களை மறைத்து பாதுகாப்பது.
D. குழந்தைகள் விருப்பம் போல பெற்றோர்கள் நடப்பது. இவைகள் அன்பு அல்ல. அன்பு எனும் பெயரில் அவர்களை கெடுக்கும் செயல்களாகும்.
விளைவுகள் :
1. கேட்டவுடன் கிடைத்துவிடும் என்று வளரக்கூடிய குழந்தைகள் பிற்காலத்தில் பொறுமையில்லாமல் இருப்பது.
2. தன்னை யாரும் கண்டிக்கக் கூடாது என்ற வண்ணம் மேலோங்குவதால் பிற் காலத்தில் கீழ்படியாமை, மற்றும் பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடங்களில் சக மனிதர்களோடு சீராக வாழமுடியாத நிலை.
3. தவறை தவறு என்று புரிந்து கொள்ள முடியாத நிலை. அதனால் தவறை மென் மேலும் செய்வது.
4. வயது கூட கூட பயம், தன்னம் பிக்கை குறைவு ஏற்படும்.
5. சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்பை உணராது சுயநல வாழ்க்கை.
6. எதற்கு எடுத்தாலும் எளிதில் கோபம் கொள்ளக்கூடிய மனநிலை.
இதற்கு தீர்வு என்ன?
அன்பும், ஒழுக்கவும் சமநிலையாக இருக்கவேண்டும்.
எவ்வாறு என்றால்,
1. அன்பாக பேசுதல் ஆனால் அடக்கி ஆளும் தன்மை இருக்க வேண்டும்.
2. தவறை புரியவைத்து, நியாயப்படுத்தாமல் தவறை தவறு என்று கூற வேண்டும்.
3. சிறு சிறு வேலைகளை செய்ய தூண்ட வேண்டும். எல்லாவற்றையும் பெற்றோர்களே செய்து கொடுக்கக் கூடாது.
4. இல்லை/முடியாது என்று சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்லவேண்டிய இடத்தில் சொல்லி புரியவைத்தல் வேண்டும்.
5. அடம் பிடித்தாலும், அழுதாலும் சரண் அடைவது கூடாது.
6. செல்லம் கொடுங்கள் ஆனால் அது எல்லையுடன் இருக்கட்டும்.
7. குர்ஆனை அரபியில் ஓத(படிக்க) பயிற்சி கொடுங்கள். அடுத்து குர்ஆனின் மொழியாக்கத்தை தாய்மொழியில் அவசியம் படிக்கச் செய்யுங்கள்.
உலகில் தோன்றி மறைந்த எல்லா இறைத்தூதர்களும் இறைவனின் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதலின்படி மட்டுமே வாழ்ந்தார்கள். அவ்வழிகாட்டுதலின்படி செயல்பட்டு அல்லாஹ் வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
அவர்கள் கடைபிடித்து வாழ்ந்தாலும் அன்றைய சமுதாயத்தினருக்கு இறை வழிகாட்டுதலின்படி வாழவேண்டும் என்ற முக்கியத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டே இருந்தனர்.
அவ்வாறு வாழ்ந்த லுஃக்மான் நல்லடியார் தன் மகனுக்கு கூறிய அறிவுரையை பிரத்தியேகமாக இறைநூலில் 31ம் அத்தியாயத்தில் வசனம் 13-19ல் இறைவன் கூறியுள்ளான்.
இது வெறும் கதை அல்ல. நபிமார்கள், நல்லடியார்கள் தம் பிள்ளைகளுக்கு எதனை அறிவுரையாக கூறினார்களோ அவ்வாறே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரையை தொடர்ந்து செய்துவரவேண்டும்.
(நமக்கு புரிந்த மற்றும் பேசும் மொழியிலேயே அல்குர்ஆன் இப்போது உள்ளது)
நல்லடியார் லுஃக்மான் தன் மகனை நோக்கி கூறியது :
லுக்மான் தம் புதல்வருக்கு “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்” என்று அவருக்கு அவர் உபதேசம் செய்தவராகக் கூறியதை (நினைவுபடுத்துவீராக)
நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்யவேண்டியது) பற்றி போதித்தோம். அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும், அவனுக்குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே அவனுடைய மீளுதல் இருக்கிறது.
ஆனால் எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதைக்கொண்டு எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம். ஆனால், இவ்வுலகில் அவ்விருவருடனும் அழகிய முறையில் தோழமை வைத்துக்கொள்! (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக! பின்னர், உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமே உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
(லுக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ள தாயினும், அது கற்பாறைக்குள் இருந்தாலும், அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன். (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக! நிச்சயமாக இது உறுதிமிக்க செயல்களில் உள்ளதாகும்.
“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! பெருமைக்காரர். ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
“உன் நடையில் நடுத்தரத்தை மேற்கொள்! உன் குரலையும் தாழ்த்திக் கொள்! குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்”. அல்குர்ஆன் 31:13-19)
முடிவாக : எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாக ஆவதும், வழிகெட்டு போவதும் அன்னை (செல்லம் கொடுக்கும்) வளர்க்கும் முறையிலே தான் இருக்கிறது.
“நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய குழந்தைகளும் உங்களுக்கு சோதனையாகும். அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.” (அல்குர்ஆன் 64:15)