ஸஜ்தா இல்லையேல்…..!  ஷைத்தானால் தொல்லையே!!

in 2025 டிசம்பர்

ஸஜ்தா இல்லையேல்…..!  ஷைத்தானால் தொல்லையே!!

ஷேக் அலாவுதீன்

ஈமான்கொண்டவர்களே! நீங்கள் ருகூஃவு செய்யுங்கள். இன்னும் ஸஜ்தா செய்யுங்கள். இன்னும் உங்கள் ரப்பை வணங்குங்கள்; மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு  நன்மையே  செய்யுங்கள்.     அல்குர்ஆன் 22:77

என்று வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால், முஸ்லிம்கள் எனப் பெயர் மட்டும் வைத்துக் கொண்டு திரியும் பெரும்பாலானச் சகோதரர்கள் தொழுவதே இல்லை! சிலர்  சில நாட்கள் தொழுவதும், பல நாட்கள் தொழாமல் இருப்பதும், கேட்டால் முக்கியமான வேலை என்றும் அல்லது கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என்றும் காரணம் சொல்கிறார்கள். இன்னும் சில அதிசயமானவர்கள் தொழுகை ஒரு உடற் பயிற்சிதான் என மிக இலேசாகச் சொல்லி விடுகிறார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு மட்டும் வாசனைத் திரவியங்கள் பூசி வழவழப்பான உடைகளை அணிந்து கொண்டு இமாம் தக்பீர் கட்டும் வரை பள்ளிவாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு வாய் கிழிய அரட்டை அடித்துக் கொண்டு சினிமா, அரசியல் விவகாரங்களைப் பற்றி புறம் பேசி முடித்துவிட்டு, தக்பீர் சப்தம் கேட்டதும் தலை தெறிக்க ஓடிவந்து அவசரமாக தொழுகையில் கலந்துகொண்டு சலாம் கொடுத்ததும் இமாம் துஆ என்ற பெயரில் எதையாவது ஓத இவர்கள் மூச்சுவிடும் போதெல்லாம் ஆமீன் போட்டுவிட்டு, உடனே வந்த வேகத்தில் வீட்டுக்குத் திரும்பி ஓடும்போது, தாம் என்னவோ வாழ்நாள் முழுதும் தொழுதுவிட்டது போல் நினைத்துக் கொண்டு நானும் முஸ்லிம் தான் என்ற போலி எண்ணத்தில் காலரை தூக்கி விட்டுக்கொண்டு செல்லும் அவல நிலையைத்தான் இன்று காணமுடிகிறது.

ஆனால் இவர்கள் நிச்சயமாக அல்லாஹ் (ஜல்)வை அஞ்சித் தொழுவதில்லை. வெள்ளிக் கிழமை கூட தொழாதவன் என்று அடுத்தவர்கள் பேசிவிடக் கூடாது என்ற பீதியில்தான் இந்த வெள்ளிக்கிழமை வெளி வேசம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ மட்டும் தொழுதுவிட்டால் போதும் நாமும் முஸ்லிம் தான் என்று எண்ணிக் கொண்டார்களா? இன்னும் (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான் அவர்கள் எத்தகையோர் என்றால், தம் தொழுகையில் பாராமுகமாக இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்கவே  தொழுகிறார்கள். 
அல்குர்ஆன் 107:4-6

இந்த இறை வசனம் இவர்களை நோக்கிக் கூறப்படுவது போல் உள்ளது அல்லவா? ஆனால் இவர்களில் பெரும்பாலோர் தம் உடலை வருத்தி பொருளை செலவழித்துப் பிரயாணத்தை மேற்கொண்டு, வலிமார்களின் கப்ருகளைத் தேடிப்பிடித்து, அந்த கபரடியில் ஸஜ்தாவில் விழுந்து தங்கள் நெற்றியைப் போட்டு மணிக்கணக்கில் தேய்த்து, அழுது புலம்புகிறார்கள் என்னே இவர்கள் பேதமை?

வல்ல அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதென்றால் மூட்டுவலி வந்துவிடுகிறது. கப்ருகளில் விழுந்து புரண்டு அல்லாஹ்வினாலும் நபி(ஸல்) அவர்களாலும் தடுக்கப்பட்ட ஸஜ்தாவைச் செய்வதென்றால் இவர்களுக்குப் புத்துணர்வுப் பிறந்து விடுகிறது. இத்தகையவர்கள் நபி(ஸல்) அவர்களின் இக்கட்டளையை சிந்திப்பார்களாக.

நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வீரா? என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அவ்வாறு நான் செய்யமாட்டேன் என பதில் கூறினேன், அதற்கு அவர்கள் ஆம்! கப்ருகளுக்குச் ஸஜ்தா செய்யாதீர்கள்! என்றார்கள். கைஸ் இப்னு சயீத்(ரழி), அபூதாவூத்.

இன்னும் சில தரீக்காக்காரர்கள் தொழுகையைப் பேணி கடமையான ஸஜ்தாவைச் செய்வதில்லை. கேட்டால் நாங்கள் படித்தரத்தில்(?) உயர்ந்துவிட்டோம் என்று சரடு விடுகின்றார்கள். அதேநேரத்தில் தங்கள் பீர்கள், ஷேகுகள் பாதத்திற்குச் ஸஜ்தா செய்து தங்கள் நெற்றிக்கு மெருகேற்றிக் கொண்டு திரிகிறார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதை விட தங்கள் ஷேகுமார்களின் பாதம் உயர்வானதாகத் தெரிவதுதான் இவர்களின் உயர்ந்த படித்தரம்(?) போலும்! இத்தகையவர்கள் கீழ்க்கண்ட திருவசனத்தையும், நபி(ஸல்) அவர்களின் கட்டளையையும் சிந்திப்பார்களாக! திரை அகற்றப்பட்டுவிடும் நாளில் ஸுஜூத் செய்யும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால்! அவர்கள் (அதற்கு) இயலாது  போய்விடுவார்கள்.

திரை அகற்றப்பட்டுவிடும் நாளில் ஸுஜூது செய்யும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவ்வாறு ஸுஜூது செய்வதற்கு) அவர்கள் இயலாதவராகிவிடுவர். அவர்கள் பார்வைகள் கீழ்நோக்கி இருக்கும். அழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) அவர்கள் சுகமாயிருக்கும்போது ஸுஜூது  செய்யும்படி  அழைக்கப்பட்டனர்.  அல்குர்ஆன் 68:42,43

அபூஹுரைரா(ரழி)  அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒருவரை மற்றொருவருக்கு ஸுஜூது செய்ய கட்டளை இடுவதாயிருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவருக்கு ஸுஜூது செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பேன். (திர்மிதி)

(நபியே!) ஸரீஅத்தின் ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆளாக்கி இருக்கிறோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றி நடப்பீராக! அறிவற்றவர்களின் (சொந்த) விருப்பங்களை நீர்  பின்பற்றாதீர்.  (அல்குர்ஆன் 45:18)

தரீகத், ஹகீகத், மஹ்ரிபத் பாதையில் இருக்கிறோம். அதாவது ஸரீஅத்தைவிட உயர்ந்த படித்தரத்தில்(?) இருக்கிறோம். நாங்கள் தொழுகையைப் பேண வேண்டியதில்லை. ஆனாலும் எங்கள் ரூஹூ தொழுதுவிடுகிறது(?) எங்களுக்கு ஹலால், ஹராம் இல்லை என்று ஸரீஅத்திற்கு மாற்றமாக ஏமாற்றித் திரிபவர்களை நோக்கிக் கூறப்படுவது போல் மேற்கூறிய  வசனம்  உள்ளது  அல்லவா?

இப்படிக் கடமையான ஸஜ்தாவை விட்டு தடுக்கப்பட்ட ஸஜ்தாவை முலாம் பூசி மெருகேற்றி இவர்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. இது ஷைத்தானின் வழிகெடுத்தல் அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்? தங்களை ஸனது பெற்ற ஆலிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரும் இவ்வாறு தடுக்கப்பட்ட ஸஜ்தாவுக்கு ஆலவட்டம் சுற்றுவது தான்  மிக  வேதனைக்குரிய  விஸயம்.

ஷைத்தான் கீழ்கண்டவாறு அல்லாஹ் விடமே சபதம் செய்து இருப்பதை அல்லாஹ்வே  சொல்லிக்  காட்டுகிறான்.

(இப்லீஸ்) நீ என்னை வழிகெட்டவனாக வெளியேற்றி விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுக்க அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.

பின் நிச்சயமாக நான் அவர்களின் வலப் பக்கமும், இடப்பக்கமும் முன்னும், பின்னும் வந்து(அவர்களை வழிகெடுத்து)க் கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலா னோரை உனக்கு நன்றி செலுத்துவோர்களாகக்  காணமாட்டாய்.   (அல்குர்ஆன் 7:16,17)

அதற்கு இறைவன் நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வேறுட்டப்பட்டவனாகவும், வெளியேறிவிடு. அவர்களில் உன்னை பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.    (அல்குர்ஆன் 7:18)

இப்லீஸ், அல்லாஹ்வினால் ஏன் சபிக்கப்பட்டான்? ஏன் நிந்திக்கப்பட்டான்? ஏன் விரட்டப் பட்டான்? இதை நாம் அவசியம் சிந்திக்க வேண்டும். பின்னர் நாம் மலக்குகளை ஆதாமுக்குப் பணி(ந்து ஸஜ்தா செய்)யுங்கள் என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தா செய்தனர். அவன் (இப்லீஸ்) மறுத்தான்; ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் காஃபிர்களில் ஒருவனாகிவிட்டான்.   அல்குர்ஆன் 2:34

அல்லாஹ்வின் கட்டளையாகிய ஸஜ்தா செய்வதை மறுத்தான். அதனால்தான் சபிக்கப்பட்டான். நிந்திக்கப்பட்டான், வெருட்டப்பட்டான். அதுபோல் அல்லாஹ் மனிதனைத் தனக்கு (மட்டும்) ஸஜ்தா செய்யச் சொல்லி கட்டளை இட்டுள்ளான். அந்த வல்ல நாயனின் கட்டளைக்கு மனிதனும் மாறு செய்தானேயானால்  7:18 ஆயத்தில் சொல்லியது போல் ஷைத்தானைப் பின்பற்றிய காரணத்தினால் ஷைத்தானுடன் சேர்ந்து நரகை நிரப்புவான்  என்பதில்  ஐயமில்லை.

ஆகவே அன்புச் சகோதர சகோதரிகளே! கடமையாக்கப்பட்டுள்ள ஐவேளைத் தொழுகையில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து அவன் கட்டளைக்கு அடிபணிய முன்வாருங்கள். அறிவற்றவர்களின் விருப்பங்களைப் பின்பற்றி நஷ்டமடைந்தோர்களில் ஒருவராகி விடாதீர்கள். எவன் ஐவேளைத் தொழுகையின் மூலம் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய வில்லையோ! நிச்சயம் அவனுக்கு ஷைத்தானால்  தொல்லையே!

Previous post:

Next post: