அறிதல்! புரிதல்!! செயல்படுதல்!!!

in 2026 ஜனவரி

அறிதல்! புரிதல்!! செயல்படுதல்!!!

M. சையத் முபாரக், நாகை

அறிந்து கொள்ளுதல் :

ஒரு விசயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது; இருப்பதைப் பார்ப்பது; தகவலைப் பெறுவது. இதை அறிமுக நிலை எனலாம்.

புரிந்து கொள்ளுதல் :

அந்த விசயத்தின் ஆழத்தை முழுமையாக உணர்வது; அதன் அர்த்தத்தை உள்வாங்குவது; உள்ளத்தில் இணைத்துவிடுவது, இதை விளக்க நிலை எனலாம்.

செயல்(பயன்) படுத்துதல்:

அறிந்து, விளக்கமாகப் புரிந்த அந்த விசயத்தைப் பயன்படுத்துவது. இதை செயல்நிலை  எனலாம்.

கற்றலும்  புரிதலும் :

படிப்பீராக! படைத்த உமது இறைவனின் பெயரால்“. (அல்குர்ஆன் 96:1)

அல்லாஹ் முதன்முதலாக இறக்கிய வசனமே படிப்பதை(அறிதலை)ப் பற்றியதாகவே இருக்கிறது. இது கற்றலின் முக்கியத்துவத்தை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மனிதனுக்கு அவன் அறியாததை எல்லாம் கற்றுக்கொடுத்தான்”.     (.கு. 96:5)

இந்த வசனம் நாம் விளக்கமாக புரிந்து, அதன்படி செயல்படவேண்டும் என்ற ஊக்கத்தை நமக்கு ஊட்டுகிறது. ஆகவே, நாம் கற்றறிய வேண்டும்; அதை சிந்தித்து விளக்க மாக புரிந்து கொள்ள வேண்டும்; அதன்படி மனப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.

ஒன்றை நாம் எளிதாக அறிந்துகொள்ளமுடியும். அறிந்தாலே போதும் நாம் புரிந்து கொண்டுவிட்டோம்; நம்மால் அதை விளக்கமுடியும்; அதில் மேதையாகிவிட்டோம் நாம் என்று அரைவேக்காட்டுத்தனத்துடன் ஆர்ப்பரிக்கின்றோம். இதனால்தான் குழப்பங்கள், பிரச்சனைகள், பிரிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அறிந்தவுடன் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அறிந்தவுடன் அதனைப் பற்றிய நிறைய செய்திகளை உள்வாங்கவேண்டும். கற்றதை சிந்தித்தால்தான் புரிதல் ஏற்படும். அந்த புரிதல் உடையவர்கள்தாம்நிறைகுடம் தளும்பாதுஎன்பதைப் போல் அடக்கி வாசிக்கின்றனர்.

புரியாமல் பலன் கிடைக்குமா?

உலகிலேயே அர்த்தம் புரியாமல்; ஆனால், மனப்பூர்வமாக ஓதக்கூடிய ஓர் நூல் (புத்தகம்) இருக்கிறது என்றால் அது அல்குர்ஆன் மட்டுமே. அது அல்குர்ஆனுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பும் கூட.

நமது அமல்களையும் நாம் புரிந்து கொள்ளாமல்தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் எதையும் புரியாமல் படிக்கமுடியாது; செயல்படுத்துவதும் சிரமம். பாட புத்தகங்களை வேண்டுமானால் மதிப்பெண் பெற மன ஈடுபாடு இல்லாமல் மனனம் செய்து எழுதுவர்.

கணக்கை (Maths) எடுத்துக் கொண்டால் புரியாமல் போடமுடியாது. பரிசோதனைக் கூடத்தில் (Laboratory) புரியாமல் எந்த சோதனையிலும் தீர்வு காணமுடியாது. தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் சரி; மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி புரியாமல் எதனையும்  செயல் படுத்திட  முடியாது.

அல்குர்ஆனை நாம் புரியாமல் ஓதினாலும் அதற்கு நன்மை இருக்கிறது என்பதால் மனப்பூர்வமாக ஓதுகிறோம். ஆனால், அல்குர்ஆனின் நோக்கம் புரிந்து செயல்படுவதே ஆகும். அதன்மூலம் நாம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும்.

சிந்திப்பதும், புரிவதும் :

நாம் எளிதாக அறிந்ததை கவனிப்பதன் மூலமாக, நமக்கு எழும் ஐயங்களை வினாக்கள் எழுப்புவதன் வழியாக, சிந்தனையைத் தூண்டுவதன் வாயிலாக, ஆராய்ச்சி செய்வதன் பலனாக விளங்கிக் கொள்ள முடியும். அந்த விளக்கம்தான் நம்மை புரிதலை நோக்கி செலுத்தும். அந்த புரிதல்தான் அதில் தெளிவான பார்வையைத் தரும்.

உங்களுக்கு அருளிய இது (அல்குர்ஆன்) மிக்க வளமான நூல். அறிவுத்திறன் மிக்கோர் இதன் வசனங்களைக் குறித்து சிந்தித்து ஆராய்வதற்காக!”  (அல்குர்ஆன் 38:29)

புரிதலின் வழியில் செயல்படுதல் :

நாம் கடற்கரைக்கோ, சுற்றுலாத் தலத்திற்கோ, புத்தகக் கண்காட்சிக்கோ செல்வதென்றால், அந்த நேரத்திற்கு முன்பே தயாராகிவிடுவோம். அங்கு செல்வது சந்தோசத்தை, மகிழ்ச்சியைத் தரும். மன அமைதி, மன நிறைவு ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்தி ருக்கிறோம்.

இதற்கு நேர்மாறாக, தொழுகை எனும்போது பள்ளிவாசலுக்கு இகாமத் சொன்ன பிறகோ, அலட்சியம் காட்டியோ, பொடுபோக்குத் தனமாகவோ செல்கின்றோம். அதற்குக் காரணம் தொழுகை முக்கிய கடமை, அதனை விட்டால் அல்லாஹ் தண்டிப்பான் என்பது மட்டுமே.

அந்த தொழுகையில் சந்தோசம், மகிழ்ச்சி, கண் குளிர்ச்சி, மன நிறைவு போன்ற அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதை நாம் புரிந்திருந்தால் தொழுவதில் பேணுதலற்று இருப்போமா? முன்னதாகவே பள்ளிவாசலுக்குள் வந்துவிடுவோம் அல்லவா! தொழுகைப் பற்றிய புரிதல் நமக்கு வந்துவிட்டால் மேற்கண்ட அனைத்தும் நமக்கு வசப்பட்டுவிடும்.

நபி(ஸல்)  அவர்களின்  நிலை :

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் எழுந்து (தொழ) நில்லுங்கள், கொஞ்ச நேரம். பாதி இரவோ, அதில் கொஞ்சம் குறைத்தோ (அல்லது) கூட்டியோ! நிறுத்தி நிறுத்தி நிதானமாக குர்ஆனை ஓதுங்கள்!” (அல்குர்ஆன் 73:1-4)

நிச்சயமாக, இரவில் எழுவது மன ஓர்மைக்கும், விசயத்தை புரிந்துணர்வதற்கும் தோதான பொழுதாகும்!”  (அல்குர்ஆன் 73:6)

அல்லாஹ்விற்கே அடிபணியுங்கள்! நன்றி செலுத்தும் மக்களாக மாறுங்கள்!”   (.கு.39:66)

இந்த வசனங்கள் எல்லாம் இறங்கியதும் நபி(ஸல்) அவர்கள் நீண்ட நேரம் தஹஜ்ஜத் தொழுதார்கள். நன்றியுள்ள அடியானாக வேண்டாமா? என்று கேட்டார்கள். இப்படி ஒவ்வொரு வசனத்தையும் செயல்படுத்துவதில்  முனைப்புக்  காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?” என்றபோது, “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?” என்றார்கள். (புகாரி:4837.மேலும் பார்க்க: புகாரி: 1130, முஸ்லிம்5432, 5433)

நாம்  நடைமுறைப்படுத்திட :

நாம் ஒவ்வொன்றிலும் நபி(ஸல்) அவர்கள் வழியைப் பின்பற்றவேண்டும் என்கிறோம். நபிவழித் தொழுகை, நபிவழித் திருமணம் என்பன போன்று. ஆனால், புரிந்து கடைபிடிக்கிறோமா?  என்பதைச்  சிந்தித்துப் பாருங்கள்.

அல்குர்ஆனை எடுத்துக்கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நாம் விளங்கி புரிந்து சிந்திக்கின்றோமா? அதனை வாழ்வில்  செயல்படுத்துகிறோமா?

ஒன்றை மட்டும் நாம் செய்கிறோம். ஸஜ்தா வசனம் வரும்போது ஸஜ்தா செய்கிறோம். மற்றபடி அல்குர்ஆன் சொல்வதற்கு நமது பதில் (Reaction) என்னவாக இருக்கிறது? அல்குர்ஆனோடு நமக்கு ஈடுபாடு எங்கே இருக்கிறது?

ஓங்குயர்ந்த உமதிறைவனின் பெயரை துதித்துப் போற்றுக!” (அல்குர்ஆன் 87:1) இந்த வசனத்தைப் படிக்கும்போது அல்லாஹ்வைப் போற்றுகிறோமா? இப்படி ஒவ்வொன்றிலும் நமது கவனம், ஈடுபாடு எங்கே சென்றது?

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகை தொழும்போது இறைவனைத் துதிப்பது பற்றி கூறும் வசனத்தை ஓதும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு) “சுப்ஹானல்லாஹ்என்பார்கள். (இறை யருளை) வேண்டுவது பற்றி வரும் வசனத்தைக் கடக்கும்போது (இறைவனை) வேண்டினார் கள். (இறைத் தண்டனையிலிருந்து) பாதுகாப்பு கோருவது பற்றிய வசனம் வந்ததும்  பாதுகாப்பு  தேடுவார்கள்…”    (முஸ்லிம் : 1421)

ஆகவே, நாம் அனைத்து செயல்(அமல்)களையும் அறிந்து, விளங்கி, புரிந்து, சிந்தித்து, ஆராய்ந்தது செயல்படுவோமாக! அல்லாஹ் அதற்கு நல்லருள் புரிவானாக!!

அல்ஹம்துலில்லாஹ்.

Previous post:

Next post: