இறை அத்தாட்சி!

in 2026 ஜனவரி

இறை அத்தாட்சி!

முஹிப்புல் இஸ்லாம் 

மறு பதிப்பு :

இறை அத்தாட்சி (அற்புதங்)கள் நிகழ்வதெப்படி?

இறைஅத்தாட்சிகள்என்பதுநபிமார்கள்வழிஅல்லாஹ்(ஜல்) நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள்! எந்த நபிமார்களுக்கு இந்த இறை அத்தாட்சிகள் அல்லாஹ்(ஜல்)வால் அருளப்பட்டதோ அவர்கள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த நேரங்களில் எல்லாம் இந்த அற்புதங்களை நிகழ்த்திக்காட்ட முடியாது. அப்படி நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை அல்லாஹ் (ஜல்) அந்த நபிமார்களுக்கு வழங்கவில்லை. இதை வல்ல அல்லாஹ்(ஜல்) இப்படி தெளிவுபடுத்துகிறான்.

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள். நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில நாங்கள் ஈமான் கொள்ள மாட்டோம்

அல்லது பேரீத்த மரங்களும், திராட்சைக் கொடிகளும் உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்யவேண்டும்.

அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நேருக்கு நேர் கொண்டு வந்தாலன்றி,

அல்லது ஒரு தங்க மாளிகை உமக்கு இருந் தாலன்றி (உம்மீது நம்பிக்கைக் கொள்வோம்) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும். (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்பமாட்டோம் என்று  கூறுகின்றனர்.

மக்கள் கோரும் அற்புதங்கள் அனைத்தை யும் உடனுக்குடன் நபிமார்கள் வழி நிகழ்த்திக் காட்டுவதை வல்ல அல்லாஹ் வழக்கமாக ஆக்கிவிடவில்லை. இதை மேற்கண்ட இறைவாக்குகள் மிக துல்லியமாக தெளிவுபடுத்து கின்றன.

மனித நியதியிலிருந்து மாறுபட்டதே இறைக் கட்டளை!

நபி(ஸல்) அவர்கள் ஒரு நீரூற்றைப் பூமியி லிருந்து பீறிடச் செய்யவேண்டும். பேரீத்தை மரங்களும், திராட்சைக் கொடிகளும் நிறைந்த தோட்டம் ஒன்று நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாயிருக்க வேண்டும். அதன் நடுவே நதிகள் ஒலித்தோட வேண்டும் ஒரு தங்க மாளிகையும் இருக்க வேண்டும்! இவைகள் ஒரு நபியாக அருளப்பட்டவர் பெற்றிருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் நியதிகளாக்கினார். மனித சமுதாயத்தில் பல்வேறு நாடுகளை அர சாண்ட மன்னர்களும், வசதி படைத்தவர்களும் இதுபோன்றவைகளைப் பெற்றிருந்த னர். இப்போதும் பெற்றிருக்கின்றனர். இவைகள் அனைத்தையும் பெற்றில்லாவிட்டாலும், ஒரு சிலவற்றையாவது அவர்களில சிலர் பெற்றிருந்தனர். அப்படியில்லாமல் ஒன்றிரண்டைப் பெற்றிருந்தவர்களும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பெரிய சகாசங்களும் அல்ல. நாடாள்வோரும் செல்வந்தர்களும் இது போன்றவைகளைப் பெற்றிருக்கும்போது ஒரு நபி இவைகள் எல்லாம் இல்லாமல் இருப்பது மக்களுக்கு மாபெரும் குறையாகப்பட்டது. நபிமார்களும் இது போன்றவைகளைப் பெற் றிருப்பது அவசியம் என்று கருதினர். இதை மேற்கண்ட இறைவாக்குகள் மிக தெளிவாக எடுத்துக்  காட்டுகின்றன.

நாடாள்பவர்களும், செல்வந்தர்களும் பெற்றுள்ள வசதி வாய்ப்புக்களைக் கண்டு அந்த வசதிகளைப் பெற்றில்லாத மக்கள் பிரமித்தனர். அதற்கு வசதி வாய்ப்புக்களைப் பெற்றில் லாதவர்கள் குறைவாளர்களாய் கணிக்கப்பட்டனர். அவைகçள் பெற்றிருந்தவர்கள் நிறை வானவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும், மகத்தானவர்களாகவும் மதிக்கப்பட்டனர்.

உலகியல்  அலங்காரங்கள் :

இதுபோன்றவர்களுடன்இன்னும்சிலஅல்லதுபலவளங்களும், ஆட்சி அதிகாரமும் பெற்றிருந்தோர் பலர் தெய்வங்களாகவும், தன்னிகரல்லாதவர்களாகவும் உயர்த்தப்பட்டிருந் தனர். பிர்அவ்ன், காரூன், நம்ரூத், ஹாமான் போன்ற அராஜாகவாதிகள் இத்தகையவர் களுக்கு எடுத்துக்காட்டானவர்கள். இறுதி இறைநெறிநூல் இவர்களை இனங்காட்டி, நம்மை எச்சரிக் கிறது. இந்த கெடுமதியாளர்கள் அல்லாஹ்வோடு போட்டி போடவும் அதற்கும் மேலாய், ஃபிர்அவ்ன் என்ற கர்ண கரூர கொடுங்கோலன் அல்லாஹ்வை நிராகரித்து, அல்லாஹ்வை மறுத்து அந்த அல்லாஹ்விற்கும் பெரிய இறைவன் நானே! (அனரப்புக் குமுல் அஃலா) என்று கூறத் துணிந்ததற்கும் காரணம் செல்வ செருக்கும், ஆட்சி அதிகாரமும், அதன் அலங்காரங் களும்தான். இவைகளே இந்த ஃபிர்அவ்னும், இவன் போன்ற கேடுகெட்டவர்களும் கெட்டழிந்த தற்குக் காரணமாயின.

இப்படிப்பட்ட கொடுங்கோலன்களின் சாயல் கொண்டவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். நாளையும் இருப்பார்கள் மற்ற மனிதர்களைத் தங்களுக்கருளப்பட்டுள்ள வளங்களாலும், செல்வாக்காலும் அடிமைப்படுத்த முயலும் ஆதிக்கவாதிகள் அனைவரும், இந்த கொடுங்கோலன்களின் வாரிசுகள்தான். நம்முடைய இந்த காலத்தில் இப்படிப்பட்டவர் கள், சாதாரண சாமான்யர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள பல்வேறு சாகாசங்களையும், பல்வேறு தந்திரங்களையும் மிகச் சாமர்த்தியமாகக் காட்டி வருவதை அன்றாக வாழ்வில் நிதர்சனமாய் கண்டு வருகிறோம். பட்டம், பதவி, செல்வம் வழங்கப்பட்டவர்கள் தாங்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் பேச்சு, நடை, உடை,  பாவனை அவர்கள் காட்டும் பந்தா போன்றவைகள் மெய்ப்பிக்கின்றன. இதிலிருந்து விதிவிலக்கானவர்கள் குறைவாகவே இருப்பர். இப்படி மனித சமுதாயத்தில் செல்வந்தர்கள் சாமான்யர்களிடமிருந்து வேறுபட்டிருக்கும்போது அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்களும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும் என்று மனிதர்கள் விரும்பினர்.  இதையும் மேற்கண்ட இறைவாக்குகள் தெளிவாக உணர்த்துகின் றன.

நபிமார்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் மற்ற மனிதர்களைப் போன்ற மனிதர்களே! இறைவன் அருளிய கொள்கைகளையும், இலட்சியங்களையும், வாழ்க்கை நெறிகளையும் தாங்கி நிற்பவர்களே நபிமார்கள்! இவைகளை மனித சமுதாயத்தில் நிலை நாட்ட வந்தவர்களே இந்த நபிமார்கள்! இவைகளைத் தங்கள் வாழ்வில் பிரதிபலித்துக் காட்டி இறையருளிய வாழ்க்கை நெறியின் உயர்வை உலகிற்கு உணர்த்த வந்தவர்களே நபிமார்கள்! மற்ற மனிதர்களிலிருந்து தங்களை வேறுபடுத்தி உயர்த்திக் காட்டும் உத்திகள் எதையும் அவர்கள் கனவில் கூட எண்ணிப் பார்க்காதவர்கள் இதை இப்படி உணர்த்திக் காட்ட அல்லாஹ் (ஜல்) நபி(ஸல்) அவர்களுக்குக்  கட்டளையிட்டுள்ளான்.

….என் இறைவன் மிகத் தூயவன்; நான் (இறைவனுடைய) தூதனாகிய  ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா? என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக! பனீ இஸ்ராயீல் 17:93

நபிமார்களும்  மனிதர்களே!

எல்லா காலங்களிலும் சூனியக்காரர் களின் சூனியத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்த மக்கள் நபிமார்களையும் மந்திர, தந்திர, மாயாஜால வித்தைகளை காட்டும் சூனியக்காரர்கள் என்றே நம்பி வந்தனர். நபிமார்கள் சூனியக்காரர்கள் என்று நம்பப்பட்ட அனைத்து காலக்கட்டங் களிலும் அல்லாஹ்(ஜல்) அதைத் தகர்த்தெறிந்தான். அல்லாஹ் அருளிய மகத்தான வாழ்க்கை நெறியைச் சுமந்துள்ள நபிமார்கள் நிச்சயமாக சூனி யக்காரர்களே அல்லர். இதை அல்லாஹ் (ஜல்) அதிக அழுத்தம் கொடுத்து பரவலாக மனித சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டே வந்துள்ளான். எனினும் மனித சமுதாயம் அதிலிருந்து  படிப்பினை  பெறவில்லை.

அற்புதங்கள் பெயரால் அரங்கேற்றப்படும் வழிகேடுகள் :

அல்லாஹ் நாடும்போது அல்லாஹ்வின் கட்டளைப்படி கோரியும், கோரப்படாமலும் நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டப்படுபவைகளே அற்புதங்கள் நபிமார்கள் வழியாக அல்லாஹ் நிகழ்த்தும் இவ்வற்புதங்களைஇறை அத்தாட்சிகள் (ஆயத்தன்) என்று மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்(ஜல்) எடுத்துக்காட்டுகிறான். தேவைகளையும், சூழ்நிலைகளை யும் அனுசரித்து இவ்விறை அத்தாட்சி களை அல்லாஹ்(ஜல்) நபிமார்களுக்கு அருளிக்  கொண்டேயிருந்தான்.

நுணுக்கமும், நுட்பமும் நிறைந்த அல்லாஹ் (ஜல்) அற்புதங்கள் பெயரால் வழிகேடுகளும், இணைவைத்தல்களும், இறை நிராகரிப்புகளும் நுழைந்துவிடாதிருக்க, அந்த அற்புதங்களை இறை அத்தாட்சிகள் (ஆயத்தன்) எனது அற்புதமாக கோடிட்டு காட்டியுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குரியது இறை மொழியில் இந்த அற்புதங்கள் தமிழக முஸ்லிம்களுக்கு அறிமுக மாகவில்லை. வேறு வழிகளில் இந்த அற்புதங்களுக்குத் தவறான அர்த்தங்களும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக (தமிழகத்தில் மட்டுமல்ல) இந்திய துணைக் கண்டம் முழுவதும் தர்ஹாக்களின் கேந்திரமாய் மாறிவிட்டது. தர்ஹாக்கள் வழி இறை இணையாக்குதல் நன்மை, புண்ணியம் என்ற லேபில்களில் சர்வசாதாரணமாய் அரங்கேற்றப்படுகிறது. இதனால் மாற்று மதத்தினர்கள், சமாதிகளை வணங்குவார்கள் தான் முஸ்லிம்களும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிட்டார்கள். இஸ்லாத்திற்கு முரணாக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வதுடன் இஸ்லாத்தின் உயிர்நாடியான ஓரிறைக் கொள்கைக்கு எதிராகவும் மாறிவிட்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று ஏதும் தேவையா?  இல்லையே!

நினைத்த மாத்திரத்தில் நினைத்த நேரத்தில்நிகழ்த்திக்  காட்ட  முடியுமா?

நபிமார்கள் உயிரோடிருக்கும்போதே நினைத்த மாத்திரத்தில், நினைத்த நேரத்தில், நினைத்த அற்புதங்களை நிகழ்த்திக் காட்டமுடியாது என்பது இறைக்கட்டளையாக இருக்கும்போது, மரணித்த பின்னும் தர்ஹாக்களில் அடக்கமாகியுள்ள வலிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் கள்? என்று நம்புவதை விட மாபெரும் வழிகேடு வேறெதுவும் இருக்கமுடியுமா? இந்த அவலநிலை மாற உழைப்பது உண்மை முஸ்லிம்கள் அனைவரின் மீதும் நீங்காக் கடமையாகும். இப்படிப்பட்ட மூட நம்பிக்கை மனித சமுதாயத்தில் தொன்றுதொட்டு நிலவி வருவதால் தான் இந்த தகாத, தவறான (மூட) நம்பிக்கையை முழு வேகத்துடன் இறுதி இறைநெறி நூல் தரைமட்டமாக்கியுள்ளது. இதிலிருந்து இன்றைய முஸ்லிம்கள் கட்டாயம் படிப்பினைப் பெற கடமைப்பட்டுள்ளார்கள். இந்த மூட நம்பிக்கை ஒழிக்கப்படவில்லை எனில், இறைக்கு இணையாக்கியதிலிருந்து இந்திய துணைக் கண்ட முஸ்லிம்களை விடுவிப்பது  இயலாத  ஒன்றாக  மாறிவிடும்.

விபரீதங்கள், அற்புதங்களாய் நிகழ்த்தப்பட்டிருந்தார்….!

நபிமார்களின் ஆற்றலுக்கப்பாற்பட்ட, “வானம் துண்டு துண்டாய் இடிந்து எங்கள் மேல் விழவேண்டும்அல்குர்ஆன் 17:92 என்ற விபரீதத்தையும் அற்புதமாய் நிகழ்த்திக்காட்ட கோரியுள்ளனர். ஒரு வாதத்துக்காக இந்த அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டிருந்தால் அப்போது, கோரியவர்கள் மாண்டிருப்பர். அதைக் காணும் அந்த அறியாமை கால அரபியர்கள்பார்த்தீர்களா? எப்படிப்பட்ட விபரீதம் நடந்ததுவிட்டது? அற்புதம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு விட்டனரே! எப்படிப்பட்ட மாபாதகத்தை முஹம்மது செய்துவிட்டார்? என்று நபி(ஸல்) அவர்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள். இது போன்றவைகளைப் படைத்தவன் அல்லாஹ் எப்படி நபி(ஸல்) அவர்கள் வழிநடத்திக் காட்டுவான்? அதனால்தான் அல்லாஹ் (ஜல்) கோரப்படும் அற்புதங்களை உடனுக்குடன் நிகழ்த்திக் காட்டுவதில்லை.

நேருக்கு நேர் :

அல்லாஹ்வையும் மலக்குகளையும் நேருக்கு நேர் கொண்டு வந்தாலன்றி… (அல்குர்ஆன் 17:92) இதுவும் அறியாமை கால அரபியவர்கள் கோரிய அடுத்த அற்புதம்! இம்மையில் படைப்பினங் களில் எவர்க்கும், எதற்கும் அல்லாஹ் காட்சியளிக்கமாட்டான். இது இறை நியதி! இதை, அல்லாஹ் (அல்குர்ஆன் 6:103) தெளிவுபடுத்தியுள்ளான். நபிமார்களைத் தவிர மற்றெவருக்கும் மலக்குகள் காட்சி தரமாட்டார்கள். சுய உருவில் அல்லது மாற்று (மனித) உருவில் மலக்குகள் இம்மையில் காட்சி தருவதெல்லாம் நபிமார்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையையும், வஹியையும் சமர்ப் பிக்கத்தான் நபிமார்கள் அல்லாத ஒரு சிலருக்கும் அல்லாஹ்வுடைய கட்டளையுடன் மலக்குகள் காட்சி தந்துள்ளனர். நபி ஈஸா(அலை) அவர்களின் தாயார் மரியம் அவர்களிடம் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் இறை கட்டளையைச் சமர்ப்பித்து இதற்கோர் சான்றாகும். (அல்குர்ஆன் 19:16-26, 3:42-47) இதே போன்று நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது.     (அல்குர்ஆன் 20:38,39)

இதல்லாமல், மலக்குகள் மற்ற மனிதர்களுக்கு இம்மையில் காட்சி தரமாட்டார்கள். மறுமையில் மலக்குகள் அணி வகுக்க அல்லாஹ் வருகை தருவான். அதனால் இம்மையில் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் அறவே இல்லை. படைப்பினங்கள் அனைத்தையும் விட்டும் மறைவாயிருக்கும் அல்லாஹ்வையும், மனிதர்களை விட்டு மறைக்கப்பட்டுள்ள வானவர்களான மலக்குகளையும் ஈமான் கொள்வது இஸ்லாத்தை ஏற்றோர் மீது கட்டாயக் கடமையாகும். அதனால் அல்லாஹ்வையும், மலக்குகளையும் நேரில் கொண்டுவந்து காட்டவேண்டும் என்று கோரப்பட்ட அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவது ஒருபோதும் சாத்தியமே அல்ல. இதையே வல்ல அல்லாஹ் 17:90-93 மூலம் நமக்கு படிப் பினையாக்கியுள்ளான்.

நூல்  வடிவில்  இறைநெறிநூல்  வேண்டும் :

நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து இறுதி இறை நெறிநூல் அல்குர்ஆன் சிறுக, சிறுக இறங்கிக் கொண்டிருந்தது. இறை நெறிநூலையும் இறை அத்தாட்சியாகவே அல்லாஹ்(ஜல்) அருளிக் கொண்டிருந்தான். இன்று நாம் காண்பது போல், இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் இறைநெறிநூல் வடிவம் பெற்றிருக்க வில்லை. இறங்கிய காலம் தொட்டு யுக முடிவு நாள் வரை இறை நெறிநூல் மாபெரும் அற்புதமாய் திகழ்ந்து வரும் மக்கள் கோரும் முன்னே அல்லாஹ் அருளிக் கொண்டிருந்த பேரற்புதம் இறைநெறிநூல் இதையும் அல்லாஹ் அருளிய விதத்தில் ஏற்காமல் வானிற்கு நபி(ஸல்) அவர்கள் ஏறிச் சென்று, நூல் வடிவில் அதை கொண்டு வரவேண்டும் என்று கோரினர்.

மக்கள் கோராமல், அல்லாஹ்(ஜல்) நபி(ஸல்) அவர்களை விண்ணுலகிற்கு அழைத்து சென்றான், நூல் வடிவிலான நெறிநூல் பெற்று வர நபி(ஸல்) அவர்கள் வானத்திற்கு ஏறி செல்லவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கோரியதைக் காட்டிலும் மாபெரும் இறை அத்தாட்சிகளை நபி(ஸல்) அவர்களுக்கு காட்டுவதற்காக மிஃராஜ் என்னும் விண்ணுலக பயணத்தை மேற்கொள்ளச் செய்தான்.  அல்குர்ஆன் 17:1

மக்கள் கோரியதோ வானம் வரை சென்று நெறிநூல் கொண்டுவர வேண்டும் என்பது. வல்ல அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை ஸித்ரத்துல் முன்தஹா என்னும் விண்ணுலகின் கடைசி எல்லை வரை அழைத்துச் சென்றான். அவ்விண்ணுலக பயணத்தில் படைப்பினங்களின் கற்பனைக் கெட்டாத பல்வேறு பிரம்மாண்டமான இறை அத்தாட்சிகளை நபி(ஸல்) அவர்கள் கண்டு வந்தார்கள்.   அல்குர்ஆன் அந்நஜ்மு 53:14-18

தடுக்கப்பட வேண்டியது தழைத்தோங்கி விட்டதே!

அற்புதங்கள் குறித்த அரிய விளக்கங்களையும், தெளிவுரைகளையும் பல்வேறு நபிமார்கள் வழி நிகழ்த்திக் காட்டப்பட்ட அற்புதங்களையும் இறை நெறிநூல் அருமையிலும் மிக அருமையாக எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது ஓர் அற்புதமே! மனிதர்கள் உருவாக்கிய கொள்கை கோட்பாடுகளில் குழப்பங்கள்! இதை சாமர்த்தியமாய் மறைக்க தாங்கள் வரிந்து கொண்ட மதங்களின் தலைவர்களை, கடவுளின் அவதாரங்களாய், அமானுஷ்ய சக்தியுள்ளவர் களாய் சித்தரிக்க வேண்டிய நிர்பந்தம்! புராண இதிகாசங்களில் கடவுள் அவதாரங்களாகக் காட்டப்படும் மஹா புருசர்கள் அனைவரும் அற்புதங்களாக நிகழ்த்திக் காட்டுவதை மட்டுமே இலட்சியமாக்கிக் கொண்டவர்கள் போன்றதொரு மாயை உருவாக்கும் கற்பனைக் கதைகள்! தங்கள் மதங்கள்பால் மக்களை கவர்ந்திழுக்க நடக்காதவைகளை எல்லாம் நடந்ததாக காட்டம் கவிஞர்கள் கற்பனை! இத்யாதிஇத்யாதிமதவாதிகள் தங்கள் மதங்களை தக்கவைத்துக் கொள்ள கையாண்டு வரும் ஜெகஜால தந்திரங்கள் இவைகள் எல்லாம் வழிகேடுகள்!

இறை அருளிய ஓர் இறை கோட்பாட்டின் மூலம் அந்த ஒரே இறைவனை வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருமைப்படுத்துதல்! இந்த உயர் இலட்சிய அடிப்படையில் வாழ்வு முழுவதை யும் அமைத்தும் கொள்வதே நேர் வழி! இதைத் தங்கள் முழு வாழ்விலும் பிரதிபலித்து, மற்றவர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் உன்னதத்தை உணர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் மிக்கவர்களே முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மாற்றார்களை அப்படியே காப்பியடித்து, இஸ்லாம் காட்டும் ஓர் இறை கோட்பாட்டிற்கு இவர்களே வேட்டு வைத்து கொண்டிருக்கிறார்கள் தங்கள் அபிமானத்துக்குரிய வலிமார்கள் பெயரால் உலா வரும் கற்பனைக் கதைகள் எத்தனை, எத்தனை? அந்த வலிமார்கள் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள் பெயரால் புனையப்பட்டுள்ள பொய்யுரைகள் எத்தனை, எத்தனை? இருப்பினும் பின்னும் அந்த வலிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்துகிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தர்ஹாக்களில் கூட்டம் கூட்டமாய் ஈமானை இழந்து கொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாம் அது மட்டுமா?

அல்லாஹ் ஒருவன் மட்டும் ஒரே இறைவனாக ஏற்கப்படவேண்டும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அந்த ஏகனாகிய அல்லாஹ் மட்டும் ஒருமைப்படுத்த வேண்டும் என்று உணராது ஓர் இறை கோட்பாட்டிற்கு தர்ஹாக்களில் அற்புதங்கள் பெயரால் முஸ்லிம்களே சமாதி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தகர்க்கப்பட வேண்டிய வழிகேடுகளை முஸ்லிம்களே தழைத்தோங்க செய்து வருகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டுமே! எப்போதே! தடுக்கப்பட்டிருக்க வேண்டுமே!

Previous post:

Next post: