தலையங்கம் :
இஸ்லாமிய அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்….
எந்தவொரு சமூகமாக இருந்தாலும் அது பெண்ணை எவ்வாறு மதிக்கிறது என்பதில் தான் அதன் அடையாளம் வெளிப்படுகிறது.
இஸ்லாமிய பார்வையில் ஹிஜாப் என்பது ஒரு துணி மட்டுமல்ல, அதுவொரு அடையாளமாகும். ஏன் என்றால்;
அதாவது ஹிஜாப் என்பது முஸ்லிம் என்பதற்கான அடையாளம் மட்டும் அல்ல; அதுவோடு இறைவனுக்கு கீழ்ப்படிந்தவள் என்றும் காட்டும் அடையாளத்தின் ஒரு பகுதி.
அது அல்லாஹ்வின் கட்டளை :
பெண்ணின் கண்ணியம், பெண்ணின் தனிப்பட்ட உரிமை.
குர்ஆன் கூறுகிறது:
நபியே! “இறை நம்பிக்கையுள்ள பெண்களிடம் கூறுங்கள்; அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு, தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்…” அ.கு.24:31
எனவே தான் இஸ்லாம் பெண்ணின் உடலுக்கும், உரிமைக்கும் மிக உயர்ந்த மரியாதையை அளிக்கிறது. அவளது அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணையோ அவள் ஆடையையோ தொடுவது என்பது அத்துமீறல் ஆகும்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை அரசு விழாவில் நேரிடையாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்டபோது அதில் முஸ்லிம் பெண்மணியான நஸ்ரத் பர்வீனுக்கும் வழங்கப்பட்டது. அந்த மருத்துவர் ஹிஜாப் என்ற முகத்திரை அணிந்திருந்தார் அது சமயம் முஸ்லிம் பெண்மணியின் ஹிஜாப்பை (முகத்திரையை) பீஹார் முதல்வர் அதை கழட்ட முயற்சி செய்த சம்பவம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பெரும் கண்டனத்திற்கு பேசு பொருளாகவும் உள்ளது.
அதை அகற்ற எந்தவொரு நாட்டின் உயர் பதவியில் உள்ளவருக்கு உரிமை கிடையாது. வேண்டுமானால் பீஹார் முதல்வர் ஹிஜாப்பை அகற்ற அன்புடன் சொல்லியிருக்கலாம். அதுவும் கட்டளையாக (Orderஆக) கூறமுடியாது. அதுவே நெறியாகும். ஏன் என்றால்; உணவாக இருக்கட்டும், உடையாக இருக்கட்டும், கொள்கையாக இருக்கட்டும். ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட உரிமையாகும். யாரும், எவரையும் நிர்பந்தம் செய்யமுடியாது.
ஒருவர் முதல்வராக இருப்பதால் பெண்ணின் உடையில் கை வைக்கும் உரிமையோ, மத நம்பிக்கையில் தலையிடும் அதிகாரமோ கிடையாது.
சிலர் இதை ஒரு வெறும் சம்பவம். அந்த பெண் எதிர்த்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆம்! அந்த பெண் அந்த நேரத்தில் அதை எதிர்க்கவில்லை தான்.
காரணம்; பொது மேடை நாகரீகம், அதிகாரம், அழுத்தம், பயம், வேலை, எதிர் காலம், பாதுகாப்பு இவை அனைத்தும் கலந்ததே. அதற்காக அந்த பெண் மெளனமாக இருந்தது சம்மதம் அல்ல.
முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரை இது தனி நபர் பிரச்சனை அல்ல.
ஒரு சமூகத்தின் மீது அநீதி நடந்தால், அதை நீ தடுக்க முயலாதவர்களும் குற்றத்தில் பங்காளிகள் என்பதாக ஹதீத் உள்ளது.
இந்த சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லும் பாடம் :
ஹிஜாப் பெண்ணின் உரிமை. அரசியலில், அதிகாரம் இருப்பதால் எவரும் வரம்பு (சுதந்திரத்தை) மீற அனுமதிக்கக் கூடாது.
பெண் கண்ணியம் என்பது வெறும் பேசு பொருளாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அவள் பாதுகாக்கப்பட வேண்டிய உயர்வானவள்.
முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அறிவுடன் எதிர்வினை காட்டவேண்டும்.
ஒரு பெண்ணின் முகத்திரையை அனுமதியின்றி அகற்ற முயன்றது நாகரீகமான செயல் அல்ல ஒழுக்கச் சீர்கேடாகும்.
அந்த செயலை செய்தவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல;
ஒரு மாநிலத்தின் முதல்வர். இது அதிகார அகந்தையின் வெளிப்பாடாக தெரிகிறது.
பீகார் முதல்வரின் மனநிலை ஆபத்தானதாக இருக்கின்றது. அவரின் மனநிலையில் கோளாரா? அல்லது மதபாகுபாடா? அல்லது என்று தெரியவில்லை அல்லது கல்வியறி வின்மையின் வெளிப்பாடா?
எது காரணமாக இருந்தாலும் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த செயலை ஒரு இந்து அல்லது கிறிஸ்தவ பெண்மணியின் மீது செய்திருப்பாரா?
இது தனி நபர் தவறு அல்ல. இஸ்லாமிய அடையாளத்தின் மீது நடந்த அவமதிப்பாகும்.
முடிவுரை :
இது தொடரக்கூடாது. “சிறிய விசயம்” என கடந்து செல்லக்கூடாது. அரசியல் ஆதாயத்திற்காக மூடி மறக்க கூடாது.
அறிவோடும், நெறியோடும் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு எதிர்கொள்ளவேண்டும்.