வரலாறும்! அதிசயமும்!
உலகெங்கும் ஒரே மொழி!
அ. நஜ்முத்தீன்
அதான்(பாங்கு) என்றால் அரபி மொழியில் அறிவிப்பு செய்தல், முழக்கமிடுதல், எடுத்துரைத்தல் என்று பொருள்.
இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகைக்காக அறிவிப்பு செய்வதை “அதான்”(பாங்கு) என்று கூறப்படும். இது அனைவரும் அறிந்த ஒன்று.
நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது “அதான்” நடைமுறையில் இல்லை. (அப்போது முஸ்லிம்கள் மிக சொற்பமானவர்களே இருந்தனர்) தேவைப்படவும் இல்லை.
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினா வந்த ஆரம்ப காலத்திலும் “அதான்‘ சொல்லி அழைக்கும் வழக்கம் இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகே ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகியதால் தொழுகைக்கான அழைப்பு அவசியம் தேவை என்பதும் ஏற்பட்டது.
எனவே எவ்வாறு தொழுகைக்காக அழைப்பு (அறிவிப்பு) செய்வது என்பதைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனையின் ஆரம்பத்தில் அழைப்பு விடுக்க மணி அடிக்கலாம் என்ற கருத்து சில நபி தோழர்களால் (சஹாபாக்களால்) கூறப்பட்டது. மேலும் சில ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.
நபி(ஸல்) அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. காரணம், அது கிறிஸ்தவர்களின் வழி முறைக்கு ஒப்பாக இருந்தது. அதனால் அதை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை.
சில நாட்களுக்கு பிறகு ஒரு நாள் நபி தோழரான அப்துல்லாஹ் இப்னு ஸைது இப்னு ரப்பிஹ்(ரழி) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். கனவில் வந்த அந்த மனிதரின் கையில் மணி ஓசை எழுப்பும் கருவி இருந்தது. அந்த மனிதரிடம் அல்லாஹ்வின் அடிமையே இந்த மணியை எனக்கு தருவாயா என்று நான் (அப்துல்லாஹ் இப்னு ஸைது இப்னு ரப்பீஹ்) கேட்டேன். அதற்கு மனிதர் இதைக் கொண்டு நீ என்ன செய்வாய்? என்று என்னிடம் கேட்டார்.
நான் அவரிடம் இதைக் கொண்டு மக்களை தொழுகைக்காக அழைப்பு விடுப்பேன் என்று கூறினேன். அதற்கு கனவில் வந்த அந்த மனிதர் இதைவிட (மணியை விட) சிறந்த ஒன்றை நான் கூறட்டுமா? என்று கேட்டார்.
ஆம்! கூறுங்கள் என்றேன். அவர் (கனவில் வந்தவர்) இவ்வாறு கூறு என்று சொல்லிவிட்டு அன்றும், இன்றும், என்றும் நடைமுறையில் உள்ள பாங்கோசையை சொல்லிக் காட்டினார்.
நான் மறுநாள் காலை நபி(ஸல்) அவர்களை சந்தித்து கனவு குறித்து கூறினேன். அதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் இது ஓர் உண்மையான கனவு, இதை இன்ஷா அல்லாஹ் நடைமுறைப் படுத்தலாம் என கூறினார்கள்.
அந்த நபி தோழர் கனவில் கண்ட பாங்கோசையை முதன்முதலாக பஜர் தொழுகைக்காக பிலால்(ரழி) என்ற நபி தோழர் மூலம் ஆரம்பிக்கப்பட்டு அன்றும், இன்றும் நடைமுறையில் உள்ளது.
(இந்த ஹதீத் மிக நீண்டதாகும். நாம் சுருக்கமாக இங்கு குறிப்பிட்டுள்ளேன்)
ஹதீஃத் இடம்பெற்ற நூல்கள்: அஹமத்: 1588, திர்மிதீ: 174, அபூதாவூது 423,436, இப்னு மாஜா : 698
இன்னும் பல ஹதீத் நூல்களில் இடம் பெற்றுள்ளன. இந்த கனவை (அதானை) நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்ததற்கு காரணம், அதனில் சொல்லப்படும் வார்த்தைகள் மிகவும் சிறப்பிற் குரிய ஒன்றாக இருந்தது.
உலகெங்கும் ஒரே மொழி பாங்கைப் பற்றியான குர்ஆன் வசனங்கள் :
அல்லாஹ் கூறுகிறான் :
வசனம் : 1 நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம். அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)
வசனம் : 2 “இறை நம்பிக்கை கொண்டவர் களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிவாசலுக்கு) விரைந்து சொல்லுங்கள். (அல்குர்ஆன் 62:9)
ஹதீத் : “பாங்கின் வசனங்களை இரண்டி ரண்டு முறை சொல்லவேண்டும். இகாமத் சொல்லும்போது பாங்கின் வசனங்களை ஒற்றையாகவும், “கத்காமதிஸ்ஸலாத்” என்பதை இரட்டையாகவும் சொல்லுமாறு பிலால்(ரழி) கட்டளையிடப்பட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரழி), நூல் : புகாரி : 605, 606
“பாங்கு சொல்வதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்” அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரவி), நூல்: புகாரி : 611
பாங்கு சப்தத்தைச் செவியுறும்போது, “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே சொல்லிவிட்டு, “ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ்” என்று முஅத்தின் சொல்லும்போது மட்டும் “லாஹவ்லா வலா குவத்த இல்லாஹ் பில்லாஹி” என்று கூறவேண்டும்.
மற்றொரு ஹதீத் :
பாங்கைக் கேட்பவர், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே கூறுவதும் பின்பு நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, அவர்களுக்குச் சொர்க்கத்தின் உயர்ந்த பதவி கிடைப்பதற்கும் துஆச் செய்வதும் விரும்பத்தக்கதாகும். நூல் : முஸ்லிம், பாடம் : 7 (தொழுகை)
இதில் அதிசயம் என்னவென்றால், கனவின் மூலம் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்ட இந்த பாங்கோசை உலக முடிவு நாள் வரை நிலைத்திருப்பது போல், மற்றொன்று நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கனவில் கண்ட குர்பானி சம்பவமும் உலக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும்.
இதுவரை வரலாற்றை பார்த்தோம். பாங்கு ஓசையில் அதிசயம் என்ன இருக்கிறது? என்பதைப் பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)