எங்கே போறீங்க?
அ. நஜ்முத்தீன்
தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களிடம் (தொழுகைக்காக செல்பவர்களிடம்) பாய் எங்கே போறீங்க? என்று கேட்டால், அந்த ஏரியாவில் (தெருவில்) இருக்கும் பள்ளியின் பெயரை சொல்லுவார்கள். சுமார் 2000 ஆண்டு வரை அவ்வாறுதான் நடைமுறையில் இருந்தது. பள்ளிக்கு சென்று தொழுவதின் காரணம், ஜமாத்தாக தொழுவது நன்மைகள் பல என்பதாலும் மற்றும் நபி வழியும் கூட.
ஆனால் சுமார் 2000 ஆண்டிற்குப் பிறகு பாய் எங்கே போறீங்க? எங்கே தொழுவீங்க? என்று கேட்டால்,
சிலர் சுன்னத் வல் ஜமாத் ……. பள்ளிக்கு போகிறேன்
சிலர் தவ்ஹீத் ஜமாத் …… பள்ளிக்கு போகிறேன்
சிலர் ஜாக் ஜமாத் ….. பள்ளிக்கு போகிறேன்
என்று இப்போது பதில் சொல்லுகிறார்கள்.
இது எவ்வாறு உள்ளது என்றால்,
முருகன் கோயிலுக்கு… போகிறேன்
விநாயகர் கோயிலுக்கு…போகிறேன்
சிவன் கோயிலுக்கு… போகிறேன்
என்று இந்துக்கள் சொல்லுவது போல் முஸ்லிம்களும் சொல்லுகிறார்கள்.
பல கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களும், பல பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்ற கிறிஸ்தவர்களும் அவ்வாறு சொல்வதில் சரி காண்கின்றார்கள்.
ஆனால் முஸ்லிம்களாகிய நீங்கள், ஏக இறைவன் ஒருவன்தான் என்று நம்பிக்கை கொண்ட உங்களிடம் ஏன் இந்த பாகுபாடு. இவ்வாறு சொல்வதற்கு அல்லாஹ்வுடைய அனுமதியும், நபி(ஸல்) அவர்கள் வழிமுறையிலும் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
அல்லாஹ் எல்லா முஸ்லிம்களையும் காப்பாற்றுவானா? அல்லது குறிப்பிட்ட பள்ளியில் மட்டும் தொழுபவர்களை காப்பாற்றுவானா?
பல கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?
இந்து மதங்களில் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் உள்ள மதகுருமார்கள் (பூசாரிகள்/புரோ கிதர்கள்/கிறிஸ்தவ பாதிரியார்கள்) எப்படி அவர்களின் சுயநலனுக்காகவும், வயிற்று பிழைப்புக்காகவும் கடவுளின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்து வைத்து ஒன்றுசேரவிடாமல் பிளவு ஏற்படுத்தி வைத்திருப்பது போல் முஸ்லிம்களில் உள்ள மதகுருமார்கள் (ஹஜரத்துகள்/இமாம்கள், இயக்க தலைவர்கள்) உங்களை பிரித்து வைத்துள்ளார்கள் என்பது உங்கள் அறிவுக்கு எட்டவில்லையா?
உங்களிடம் பள்ளியிலும், தொழுகையிலும் ஒற்றுமை இல்லாதபோது ஒற்றுமையைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தயவு செய்து முரண்பாடுகளை மூட்டை கட்டுங்கள், அவ்வாறு செய்யவில்லை என்றால் மற்ற மதங்களை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
சுன்னத் வல் ஜமாத் இமாம்(சிர்க்) இணை வைப்பவராக உள்ளார். அவர் பின்னாடி எப்படி தொழுவது என்பது சிலருடைய வாதமாக இருக்கின்றது.
தவ்ஹீத் பள்ளியில் பணிபுரியும் இமாம் சிர்க் வைக்கவில்லையா? உங்களுக்குள் எத்தனை விசயத்தில் கருத்து வேறுபாடு?
ஏன்? குர்ஆன் வசனங்களிலேயே கருத்து வேறுபாடு உள்ளதே! இது எப்படி?
சகோதரர்களே!
அரசியலில் பிரிந்து கிடப்பது ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது ஆன்மீக ரீதியாக பிரிந்து கிடப்பது. இது மறுமை வெற்றியை பாதிக்கும். அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று குர்ஆனில் (இறைநூலில்) பாருங்கள்;
“இந்த சமுதாயம் நிச்சயமாக ஒரே சமுதாய மாகும். மேலும் நான் உங்களின் அதிபதி ஆவேன்; எனவே எனக்கு மட்டுமே அஞ்சுங் கள்” (அல்குர்ஆன் 23:52)
மேலும், இறைவன் கூறுகிறான்;
“பிறகு அவர்கள் தம் காரியத்தை (செயலை) பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு கூட்டத் தாரும் தாங்கள் விரும்பியதை செய்து மகிழ்ச்சி அடைகின்றனர். (அல்குர்ஆன் 23:53)
(மேலும் பார்க்க : 30:31,32)
ஒன்றை சிர்க்(இணை வைத்தல்) என்று சொல்லும் தவ்ஹீத் மதகுருமார்கள் அதனையே மற்றொரு தவ்ஹீத் மதகுருமார்கள் சிர்க் இல்லை என்று சொல்வது முரண்பாடு இல்லையா?
உதாரணம் : சூனியம்.
மேற்கண்ட இரண்டு வசனமும் குர்ஆன் (இறைநூல்) இறக்கி அருளப்படும் காலகட்டத்தில் நடந்ததை பேசுகிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பும், அவர்களின் மறைவுக்கு பின்னும் முஸ்லிம் களிடையே ஏற்பட்டிருக்கும்/ஏற்படவிருக்கும் பிரிவுகளை தான் முன்கூட்டியே படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது.
அதாவது ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹம்பலி, அஹ்ல குர்ஆன், அஹ்லே ஹதீத், காதியானி, ரப்பானி, தவ்ஹீத் ஜமாத், ஜாக் ஜமாத் போன்று பல பிரிவுகளைத்தான் எச்சரிக்கிறது.
மேற்கண்ட ஒவ்வொரு பிரிவினரும் தாங்கள் செய்யும் செயல் சரியாக இருப்பதாகவும் அதுவே தலைசிறந்தது என்றும் தவறாக எண் ணிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால்;
இவைகள் சில காலம்தான் நிலைக்கும், பின்பு மறைந்துவிடும். ஆனாலும் இந்த பிரிவுகள் காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்ணெதிரே காண்கிறோம்.
அதாவது முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமை இல்லாமல் பல பிரிவுகளாக பிரிந்துள்ளதை பார்க்கின்றோம்.
முன் சென்ற சமுதாயம் எதனால் பிரிந்தது என்பதையும் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
“வேதம்(இறைநூல்) வழங்கப்பட்டோர், தம்மிடம் தெளிவான சான்று வந்த பிறகே பிளவுபட்டனர்” (அல்குர்ஆன் 98:4) மேலும் பார்க்க : 42:14
நபி(ஸல்) அவர்களை அதிகம் பயம் கொள்ள செய்தது. தஜ்ஜாலை விட தஜ்ஜால் அல்லாதவர்கள் தான்.
எவ்வாறு என்றால்;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே!
“உங்களை தஜ்ஜாலை விட அதிகம் பயம் கொள்ளச் செய்தது எது? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “வழிகெடுக்கும் தலை வர்கள்தான்” என பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூதர்(ரழி) அவர்கள், (நூல்: முஸ்னது அஹ்மத் : 21297)
மேற்கண்ட வசனத்திலிருந்தும், ஹதீதிலிருந்தும் தெளிவாக தெரிய வருவது எது என்பது நன்றாக விளங்கும். எனவே அல்லாஹ் குர்ஆனில் (இறைநூலில்) கூறியுள்ளது போல்,
“இறை நம்பிக்கையாளர்களே! உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகின்றவர்களாகவும், தீயதை விட்டும் தடுப்பவர்களாகவும் இருக்கட்டும் அவர்களே வெற்றியாளர்கள்” (அல்குர்ஆன் 3:104)
இந்த கட்டுரைக்கு பிறகு நாளையே நான்கு மத்ஹபுகளும் ஒன்றாகிவிடும், நாற்பது பிரிவு களாக இருக்கும் தவ்ஹீத் அமைப்புகளும் ஒன்றாகிவிடும் என்ற கற்பனையில் நாம் மிதக்க வில்லை. அவ்வாறு நடக்காது. அதற்கு காரணம் மத்ஹபுகளிலும், அமைப்புகளிலும் இருக்கும் தலைவர்கள் அல்லாஹ் நாடினாலன்றி அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கமாட்டார்கள் மற்றும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையையும் பின்பற்றமாட்டார்கள். அவர்களின் பணம், பதவிக்காக தெரிந்து கொண்டேதான் தவறில் இருக்கிறார்கள். பொதுமக்களாகிய உங்களுக்குத்தான் நாம் இதை நினைவூட்டுகிறோம். பிரிவுகளை தவிர்த்து இறைவன் கூறியபடி வெற்றியாளராக மாறுக!