“எம்மதமும் சம்மதம்” சமூக நல்லிணக்கத்தைத் தருமா?
M. சையத் முபாரக், நாகை
இந்து மதத்தில் பல பழமையான திருவிழாக்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனைகளையும் தராமல் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் பழமை என்று கட்டமைத்து புதிதாக நடத்திய விழாக்கள் மக்களிடம் அச்சத்தை, அச்சுறுத்தலை, பதட்டத்தை, வன்முறையை ஏற்படுத்துவதற்காக வடிவமைக் கப்பட்டு, அவைகளை தங்கு தடையின்றி செயல்படுத்துகின்றது.
அது மட்டுமா? இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளை சீர்குலைக்க இவர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் கிறிஸ்துமஸின் போது தேவாலயங்களில், சபைகளில் தாக்குதல் நடத்தினர். அடையாள சின்னங்களை, அலங்காரங்களைச் சேதப்படுத்தினர், கிறிஸ்துவ பொருட்களை விற்பனை செய்த வர்களை மிரட்டினர். இவைகளை நாம் 26.12.2025 நாளிதழ்களிலும் பல இணையச் சேவை களிலும் பார்த்தோம். மேற்கண்ட நிகழ்வுகள் இவர்கள் ஆதிக்க உணர்வோடு பிறர்மீது தமது நிலைப்பாட்டைத் திணிப்பதாகும். இவைகள் பகைமையை, வேற்றுமையை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கும்.
எம்மதமும் சம்மதம் :
மற்றவர்கள் கடவுள் நம்பிக்கையை சீர் குலைக்க வேறு ஒரு வழியையும் கையில் எடுக்கின்றனர். இவர்கள் “நடுநிலை‘ என்ற போர்வையில் “எம்மதமும் சம்மதம்‘ என்ற கோத்தை எழுப்புகின்றனர். இதுவே மதநல்லிணக்கத்திற்கு ஆணிவேர் என்றும் கூறுவர். இவர்கள்தாம் அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் குறையாளர்கள்.
பல கடவுள்களை வணங்குபவர்களுக்கு அத்துடன் வேறு இறைவனைச் சேர்த்த வணங்கு வதில் எந்த முரண்பாடும் ஏற்படாது. இது அசைவம் சாப்பிடுபவர்கள் சைவமும் சேர்த்து சாப்பிடுவதைப் போன்றது. இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்பவர்களை இல்லை! இல்லை சமூக நல்லிணக்கத்திற்காக நீங்கள் பல தெய்வங்களையும் வணங்கவேண்டும் என்பது சைவம் சாப்பிடுபவர்களை நீங்கள் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று வலுக்கட்டாயமாக ஊட்டுவதைப் போன்றது. இது நியாயமானதுதானா? எம்மதமும் சம்மதம் என்பது கேலிக் கூத்தானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
சமூக நல்லிணக்கத்திற்கு “எம்மதமும் சம்மதம்” என்பது சரியான தீர்வே அல்ல. அவரவர் மதம் அவரவர்களுக்கு என்பதை மதித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்மை தரும் செயல்களில் உதவி செய்தும், உறுதுணையாகவும் இருக்கவேண்டும் இதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்; நான் யாரை வணங்கு கின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம். (அல்குர்ஆன்109:4-6)
மேலும் பார்க்க : அல்குர்ஆன் 10:41,28:55)
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை:
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு”:
இந்த மூதுரைகளுக்கு உதாரணமாக இருப்பது இஸ்லாமிய கோட்பாடு.
மத நல்லிணக்கம் என்பது அன்பை, அமைதியை, நட்பை உருவாக்க வேண்டும்; மனிதம் காக்கப்படவேண்டும்; மற்ற மதத்தினர்க்கும், படைப்பினங்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். இவைகளை மனப்பூர்வமாக செய்ய பரந்த மனப்பான்மை யும், சகிப்புத்தன்மையும் தேவை.
ஒரே சமுதாயம் :
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள உங்களை சமூகங்களாக, கோத்திரங்களாக அமைத்தோம். (அல்குர்ஆன் 49:13)
மேலும் ஒன்றே குலம் என்ற சகோதரத்து வத்தை உயர்த்திப் பிடிப்பது இஸ்லாம் மட்டுமே.
சமூக உறவு :
…பெற்றோருடன் நல்லவிதமாக அன்பு டன் நடந்துகொள்ளுங்கள். உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள். உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், நண்பர்கள், வழிப் போக்கர், உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டோர் (அடிமைகள் – வேலையாட்கள்) ஆகியோருடன் நயமாக நடந்துகொள்ளுங்கள். திண்ணமாக அறிந்துகொள்ளுங்கள் வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் 4:36)
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்?” எனக்கேட்டபோது, “அவனது நாசவேலையிலிருந்து அவனது அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்‘ என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி: 6016)
“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறை நம்பிக்கைக் கொண்டவராகமாட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 13)
“ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?” எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், அறிந்த வர்க்கம் அறியாதவர்க்கும் நீர் ஸலாம்(அமைதி உண்டாகட்டும்!) கூறுவதுமாகும்”. (புகாரி:12)
“விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி பகலில் நோன்புநோற்பவர் போன்றவராவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:6006, 5353)
படைப்பினங்களுக்கும் உதவி :
“அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களுக்கு உதவும் விசயத்தில் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் “(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விசயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்” என்றார்கள். (புகாரி:6009)
“(படைப்பினங்கள் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்பட மாட்டார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6013)
சமூக நீதி :
இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். (நீங்கள் நீதி செலுத்துங்கள்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். (அல்குர்ஆன் 4:58)
(மேலும் பார்க்க : அல்குர்ஆன் 4:135, 16:90, 60:8)
…(பிறரது) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், “எவர் ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவரது கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டித் தொங்கவிடப்படும்” என்று கூறினார்கள். (புகாரி : 2453)
இஸ்லாத்தில் அனைவர்க்கும் நீதி என்பதில் பாகுபாடு என்பதே கிடையாது.
(மக்கா வெற்றியின்போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமாபின்த்அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விசயமாக குறைசிகள் மிகவும் கவலைக்குள்ளானார்கள். அவள் விசயமாக அல்லாஹ்வின் தூதரிடம் அவரின் செல்ல பிள்ளை உஸாமா பின் ஜைத்(ரழி) அவர்களைத் தவிர வேறு யாருக்கு துணிவு வரும்? என்று கூறினர். உஸாமா(ரழி) நபி(ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விசயத்திலா (அதைத் தளர்த்த) நீ பரிந்துரை செய்கிறாய்? என்று கோபத்துடன் கேட்டு விட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்; அதில் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வள் திருடிவிட்டால் அவளுக்கு தண்டனை அளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ் வின் மீதாணையாக! முஹம்மதின்(என்) மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நான் துண்டிப்பேன்” என்று சொன்னார்கள். (புகாரி: 3475, 3733)
நீதி உட்பட எந்த சட்டங்களை, கொள்கை கோட்பாடுகளை எடுத்துக் கொண்டாலும் அவைகளுக்கு இஸ்லாம் அறை கூவல் விடுக்கும் எனது சட்டமே சிறந்தது என்று. இஸ்லாமிய கொள்கைகளே சமய நல்லிணக்கத்திற்கு மிகவும் இணக்கமானது என்பதை மக்கள் உணரவேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்.