புரிந்ததும் – புரியாததும்…!
அ. நஜ்முத்தீன்
உலகில் புரிந்ததும் புரியாததும் பல உள்ளன. சாதாரண மனிதர்கள் முதல் சாதனை படைத்த மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல.
உதாரணமாக;
மாவீரர் நெப்போலியன் தன் அரண்மனையில் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அதை பராமரிக்க உணவும், தண்ணீர், பால் போன்றவைகளை கொடுக்க காவலர்களையும் நியமித்தார். அந்த பூனை தங்குவதற்காக ஒரு மரப்பெட்டியும் அரண்மனை தச்சர் (Corpenter) மூலம் செய்யப்பட்டது. சில காலங்களுக்கு பிறகு அந்த பூனை சில குட்டிகளை ஈன்றது.
மன்னருக்கு மகிழ்ச்சியும், கவலையும் ஏற்பட்டது. எனவே குட்டி பூனை தங்குவதற்கு அரண்மனை தச்சர் மூலம் அந்த மரப்பட்டியில் குட்டி பூனைகள் உள்ளேயும்/வெளியேயும் போய் வருவதற்கு மற்றொரு பாதை போடுமாறு கூறினார்.
தச்சருக்கு ஒன்றும் புரியவில்லை, குழப்பமாக இருந்தது. சொன்னது மன்னராச்சே, எதிர்த்து கேள்வி கேட்கவும் பயம். இருப்பினும் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு மன்னரிடம் சொன்னார்.
மன்னா! மற்றொரு பாதை தேவையில்லை என்றார்.
மன்னர் ஏன் என்று கேட்டார்?
தாய் பூனை போய் வரும் அந்த மரப்பெட்டி பாதை வழியே இந்த குட்டி பூனையும் போய் வருமே! அதனால் தனியாக மற்றொரு பாதை தேவை இல்லை என்றார்.
மன்னருக்கு (நெப்போலியனுக்கு) அப்போதுதான் புரிந்தது. இந்த விசயத்தில் தான் எந்த அளவு புரியாமல் இருந்துள்ளோம் என்று.
இது ஐரோப்பாவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு கதை. அது உண்மையா? உவமையாக கூறப்பட்டதா என்பது தெரியவில்லை.
இது போலவே பல வியங்கள் புரிந்தும் சில விசயங்கள் புரியாததும் உலகில் உள்ளன.
மார்ட்டின் லூதர்கிங் என்ற பெரும் புரட்சிகாரர் வாழ்வில் நடந்த பலருக்கு புரியா ததும் அவருக்கு மட்டும் புரிந்த ஒரு உண்மை சம்பவம் உண்டு.
(கட்டுரையில் சுருக்கத்தை கருதி அதை இங்கு விரிவாகக் குறிப்பிட முடியவில்லை)
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினா வந்த புதிதில் விவசாயிகள் காலம் காலமாக செய்துவந்த ஒரு பழக்கத்தை அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறினார்கள். இந்த சம்பவம் அந்நஜாத் வாசகர்கள் அனேகம் பேர் அறிந்த ஒன்று என்பதால் அதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட வில்லை. (முஸ்லிம் 471, 4712, 4713)
நபி(ஸல்) அவர்களுக்கு அப்போது புரியாத ஒன்றாக அது இருந்தது.
மேலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் புரிந்தும்–புரியாததும் பல உள்ளன.
உதாரணமாக : பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த, வாழ்கின்ற கணவன்–மனைவிகளுக்குள் புரிந்தும்–புரியாததும் பல உள்ளன.
தாய் தந்தையர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் கூட புரிந்தும்–புரியாததும் உள்ளன.
நெருங்கி பழகுகின்ற நண்பர்கள் மத்தியில் கூட புரிந்தும் – புரியாததும் உள்ளன.
பல வருடங்களாக ஒன்றாக பணி புரிகின்ற முதலாளி – தொழிலாளிகளுக்குள் கூட புரிந்தும் – புரியாததும் உள்ளன.
உறவுகளுக்குள் சரியான புரிதல் இல்லாமல் உறவு அறுந்து போனதும், போவதும் புரிந்தும் – புரியாததாலே.
சில நூல்களை (புத்தகங்களை) எத்தனை முறை படித்தாலும் புரிந்தும்–புரியாததும் உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம்?
புரிதலில் பல உள்ளன :
1. சிலவற்றை கேட்டால் மட்டுமே தெரிந்து கொள்ளமுடியும்.
2. சிலவற்றை உணர்ந்தால் மட்டுமே அறிந்து கொள்ளமுடியும்.
3. சிலவற்றை பயன்படுத்தி பிறகுதான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
4. சிலவற்றை விளைவுகளால் (அனுபவங் களால்) புரிந்து கொள்ளமுடியும்.
மேற்கண்ட பல வழிகள் இருந்தும் பல விசயங்கள் புரிந்தும்–புரியாமலும் இருக்க என்ன காரணம்?
1. தவறான புரிதல்,
2. நடைமுறை தவறுகள்,
அதுபோல குர்ஆனிலும் (இறைநூலிலும்) புரிந்தும் – புரியாத வசனங்கள் உள்ளனவா?
ஆம்! உண்டு.
ஆனால் அது சிந்திக்காமல் படிப்பதாலும், கேட்டு தெரிந்து கொள்ளாமலும் இருப்பதால் ஏற்படுவது தானே தவிர உண்மையில் புரிந்துகொள்ள முடியாத வசனங்கள் என்று எதுவும் இல்லை. இறைவன் எல்லா வசனங்களையும் படித்தவுடன் புரிந்து கொள்ளுமாறு சொல்லி இருக்கலாமே என்ற சந்தேகம் கூட வரலாம். நியாயமான சந்தேகம்.
மனிதனுக்கு இந்த சந்தேகம் வரும் என அறிந்ததாலே (படைத்தவனுக்கு தெரியும் அல்லவா?) இரண்டு விதமான வசனங்கள் குர்ஆனில் உள்ளது என கூறுகிறான். (அ.3, வ.7)
ஒன்று : முஹ்(க்)கமாத் (தெளிவாக படித்தவுடன் புரிதல்)
மற்றொன்று : முதஷாபிஹாத்(சிந்தித்து படித்தல், பார்த்தால், புரிதல்)
ஆனால் புரியாத வசனம் என்று எதுவும் இல்லை. ஆயினும் மேற்கண்ட இரு வசனங்களை மேற்கோளாகக் காட்டிக்கொண்டு அரபி மதரஸாவில் படித்தவர்களுக்கு மட்டுமே குர்ஆன் புரியும் என்றும் மற்றவர்களுக்கு புரியாது என்றும் மக்களை வழிகெடுக்கிறார்கள். மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இதை செய்கிறார்கள்.
(இதற்கு பலமுறை சில கட்டுரையின் வாயிலாக விளக்கம் ஏற்கனவே அந்நஜாத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது அதற்குள் செல்லவில்லை)
அல்லாஹ் ஏன் இரண்டுவிதமான வசனங்களை கூறியுள்ளான்.
இன்ஷா அல்லாஹ்! அடுத்த இதழில் காணலாம். தொடரும்….