நான் ஆலிம்/ஆலிமா ஆக முடியுமா?

in 2018 ஏப்ரல்

A. பஷீர் அகமது, புதுக்கோட்டை
பிப்ரவரி 2018 தொடர்ச்சி..
.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு டிகிரி படிப்பும் (7 years Alim degree course) தகுதியுடைய ஆலிம்களை உருவாக்க முடியாது. அந்த படிப்பு நீங்கள் மதீனாவில் போய் படித்து வந்தாலும் சரியே. கோர்ஸ் என்பது எப்படி படிப்பது என்பதை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் How to Learn  என்பது மட்டுமே கோர்ஸ் மூலமாக கிடைக்கும். அதாவது வழிகாட்டுதல் மட்டுமே கிடைக்கும். நீங்கள் தான் சுயமாக படிக்க வேண்டும்.

* Self Learning,  சுயமாக படித்து உணர்தல்

* Continuous Learning, தொடர்ந்து தினசரி நேரம் ஒதுக்கி படித்தல்.

* Lifelong Learning, வாழ்நாள் முழுவதும் படித்து அறிவை மேம்படுத்திக் கொள்ளல்.

* Learning and sharing, படித்து விளங்கியதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.

* Learning and Practising படித்து விளங்கியதை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுதல்.

நீங்கள் ஆலிம் படிப்பு படிப்பதால் உங்களை கற்று அறிந்தவர் என்று உலகம் பார்க்கும். ஆகவே கீழ்கண்ட பாடங்களை நீங்கள் 7 ஆண்டு பாட திட்டத்தில் வைத்து படியுங்கள். இந்த படிப்பு ஒன்றும் சீன வித்தை அல்ல. முயன்றால் நீங்கள் அடையலாம். பகுதி நேரமாக படித்து படித்து நீங்கள் ஆலிம் படிப்பை படித்து முடிக்கலாம். உங்களால் முடியும், இன்ஷா அல்லாஹ்.

கீழ்கண்ட பாடத்திட்டத்தை 7 ஆண்டு பாட திட்டத்தில் வையுங்கள்.

Semester – 1 :
Islamic Knowledge – ஈமான், இஸ்லாம் இஹ்ஸான் பற்றிய தெளிவான இஸ்லாமிய அறிவு.

Semester – 2 :
World History – உலகளாவிய வரலாறுகள் கிரேக்க, ரோமானிய, மங்கோலிய அரசு கள், முகலாயர் ஆங்கிலேய அரசுகள் வரை மற்றும் முதல் இரண்டாம் உலக போர் மற்றும் பிந்தைய வரலாறு வரை

Semester – 3 :
Human Science – உளவியல், சமூகவியல், மனோவியல்.

Semester – 4:
Natural Science – அறிவியல் விஞ்ஞானம்

Semester – 5 :
Contemporary Issues and Solution – நடைமுறை விவகாரங்கள் அதற்கான இஸ்லாமிய தீர்வுகள்.

Semester – 6 :
Language Proficiency மொழி அறிவும், புலமையும் குறைந்தது 4 மொழிகளில் தேர்ச்சி வேண்டும் அரபி, ஆங்கிலம், தமிழ் பிற இந்திய மொழிகள் ஏதாவது?

Semester – 7 :

Skill Development and Practical Training  –  சுயமாக பொருளீட்டும் வகையில் தொழிற் பயிற்சியும் அதற்கான அங்கீகாரமும்.

ஏழு ஆண்டுகள் படித்து முடித்ததும் ஆலிம் படிப்பு படித்து இருக்கின்றார் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஆலிம் ஆகிவிட்டேன் என்று சொல்லாதீர்கள். நமது சமூகம் (முஸ்லீம் உம்மத்) வீடு, வேலை, வியாபாரம் என்று அன்றாடம் அலைந்து கொண்டு இருக்கின்றது. அவர்களுக்கு நீங்கள் என்ன படித்து முடித்துள்ளீர்கள் என்று தெரியாது. ஆனால் உங்களை நம்புகிறது. ஆகவே நீங்கள் இந்த படிப்பு படித்த ஒரே ஒரு காரணத்துக்காக உங்களை ஆலிம் போல காட்டிக் கொள்ளாதீர்கள் தெரிந்ததை சொல்லுங்கள், தெரியாததை தெரியாது என சொல்லுங்கள். தெரிந்தவர்களிடம் கேட்டு அந்த விளக்கத்தை கேட்டவரிடம் சமர்ப்பியுங்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே எதிர்பாருங்கள்.

தீர்வை நோக்கி : 3

1. ஆலிம் படிப்பை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக படித்து ஆலிம் ஆகுதல்.

2. இமாமத் செய்தல்.

3. மார்க்கத்தை அடுத்தவர்களிடம் எடுத்து சொல்லும் தாவா பணி செய்தல்.

ஆகிய 3 தலைப்புகளில் மின்னஞ்சலில் பழைய அந்நஜாத் கட்டுரைகள் உள்ளன. www.annajaath.com  தேடினேன். (நீங்களும் பாருங்களேன்)

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் அபூ அப்தில்லாஹ் மேற்கண்ட தலைப்புகளில் அவர் எழுதிய கருத்துக்கள் நமது இந்த ஆய்வுக் கட்டுரைக்கு பொருத்தமாக இருந்தது. அதன் சுருக்கத்தையும் கருத்துக்களையும் கீழே தொகுத்து தருகிறேன்.

கடமையான மார்க்கப் பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

(2011 டிசம்பர்) (103:1,2,3), (9:71), (3:104) ஆகிய வசனங்களை அல்குர்ஆனில் படித்துப் பாருங்கள்.

இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக் கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்ட தீபமாக உணர்த்துகின்றன.

பிரசாரப் பணிக்காக உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள் என்று கூறும் அல்லாஹ் அவர்களே ஆலிம்கள் என்றோ, அவர்கள் அதற்காகக் கூலி பெறலாம் என்றோ கூறவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. இங்கு கூலி வாங்கிவிட்டால் மறுமையில் வெற்றி கிடைக்காதே!

மேலும் இம்மார்க்கப்பணி ஒட்டு மொத்த முஸ்லிம் ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது, மார்க்கப் பணி செய்ய முஸ்லிம்களில் மவ்லவி-ஆலிம்-மதகுருமார் என ஒரு தனிப்பிரிவு இல்லவே இல்லை என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகின்றன.

மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும். ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது, எதிர்பார்க்கவும் கூடாது என்பதை பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29-51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடிப்பது போல் கூறுகின்றன.

கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி – சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஃத்கள் இது பற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.

“குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

“எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித் துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)

ரசூல்(ஸல்) அவர்கள் பயிற்றுவித்த மக்களை ஸஹாபாக்கள் என்கிறோம். அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களிடம் பயின்ற மாணவர்கள், மனித சமுதாயத்தில் மிக தரம் வாய்ந்த அந்த மாணவர்கள் தான் இன்றைய உலகின் எல்லா ஆலிம்களுக்கும் ஆசிரியர்கள் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த ஸஹாபா பெருமக்கள் யாரும் மதகுருமார்களை போல வாழவில்லை. அவர்கள் எல்லாம் சுயமாக பொருள் ஈட்டி தங்களின் குடும்ப வாழ்க்கையை நடத்தினார்கள் மார்க்கப் பணி செய்வதற்கு கூலி கேட்கவில்லை. சுதந்திரமாக மார்க்கப் பணி செய்தார்கள்.

அன்றாட வாழ்க்கையின் ஊடாகவே மார்க்கத்தை தாமும் பின்பற்றி பிறருக்கும் சொன்னார்கள் அதனால்தான் இஸ்லாம் உலகம் எல்லாம் பரவியது.

Learning and Teaching : (கற்றல் & கற்பித்தல்)

அதாவது தஃலீம் & தாலும் என்ற ஒரு பதம் எல்லோரும் சொல்வார்கள். அது தவறு, கற்றல்-கற்றதை பகிர்ந்து கொள்ளுதல் Learning and Sharing என்பதே சரி. தான் ஒருவருக்கு கற்றுக் கொடுக்கிறோம் என்று மனிதன் நினைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் தன்னை உயர்வாக கருத துவங்கி விடுவான். மனோரீதியாக பிறகு தன்னை ஒரு மதகுருவாக நினைப்பான்.

நபி(ஸல்) அவர்கள் காண்பித்த வாழ்வியல் நெறிக்கு பெயர் இஸ்லாம் இது மதம் அல்ல. அவர் யாரையும் மதகுரு ஆக்கவில்லை. தன் கூட இருந்தவர்களை தோழர்கள் என்று அழைத்தவர். சிஷ்யர்களே என்று ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் நபி(ஸல்) காலத்திற்கு வெகு பின்னால் முஸ்லிம் சமூகம் அவரின் வழிகாட்டல்களை பின்பற்றுவதில் பிழை செய்தார்கள். தவறாக விளங்கி தவறாக போதிக்க ஆரம்பித்தனர். பொதுமக்கள் பொருளாதார ஆசையில், உலக ஆசையில் மூழ்கும் மக்களின் மார்க்க அறிவு வறட்சியாக துவங்கின, வாராவாரம், அல்லது எப்போதாவது ஒரு முறை பள்ளிவாசலுக்கு வந்து பள்ளிவாசலில் சொல்லப்படும் உபதேசத்தை செவிமடுத்து சென்றார்கள். பள்ளிவாசலுக்கும் பொதுமக்களுக்கும் ஆன தொடர்பு குறைய மதகுருமார் எனும் ஒரு கதாபாத்திரம் உருவாக்க தொடங்கியது அது இன்றும் பொருந்தும்.

நீங்கள் மார்க்கத்தை சுயமாக படித்து விளங்கி பின்பற்ற முயலுங்கள். சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் படித்தவர்களிடம் கேட்டு தம்மை சரி செய்து கொள்ளுங் கள். உங்களுக்கு மதகுருமார் தேவைப்படாது. ஆம் அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை லேசாகி தருவான். நாம் கற்க ஆரம்பித்தால்! மதரஸாக்கள், பள்ளிவாசலின் ஒரு பகுதி யாக இருக்க வேண்டும். சமுதாய மக்களை அவரவர் வேலைக்கு சென்றாலும் கூட மதரஸா என்பது ஒரு பாடசாலையாக, பொது மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய மதரஸாக்கள் குருகுல மடங்களை போல செயல்படுகின்றது. இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். நபி(ஸல்) காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் இருந்த வெற்றிகரமான சிஸ்டம் மதரஸாக்கள் அல்ல, அப்படியயன்றால் இந்த மதரஸாக்கள் எப்படி உலக அளவில் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டது? “அபூ அப்தில்லாஹ்” பின்வருமாறு கூறுகிறார்.

தீர்வை நோக்கி : 3

(2011 ஏப்ரல் அந்நஜாத் இதழில் வந்துள்ள “மதகுருமார்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதி கடினமான தமிழில் இருந்தது. அதனை எளிமைப்படுத்தி கீழே தருகிறேன்)

……அந்த வரலாறு இதுதான் :

ஆரம்பக் கல்விக் கூடம் பள்ளிவாசல்களாகவே இருந்தன. அன்று பள்ளிகளில் தீன் கல்வி, உலகக்(துன்யா) கல்வி என்ற பேதமில்லாமல் அனைத்துக் கல்வியும் மிக எளிதாகப் போதிக்கப்பட்டது. மத்ஹபுகள் இந்த மதகுருமார்களால் கற்பனை செய்யப்பட்ட பின்னரே பள்ளிவாசல்களில் தூய மார்க்கக் கல்வி கற்பிக்கும் நிலைக்கு ஆபத்து வந்தது. மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி 361ல் கெய்ரோவில் அல் அஸ்ஹர் நிறுவப்பட்டது. ஹிஜ்ரி 449ல் மத்ரஸா நிஜாமிய்யா நிறுவப்பட்டது. சுல்தான் சலாஹுத்தீன் பைத்துல் முகத்தி சில் முதலில் மதரஸாவைப் புகுத்தினார். மதீனாவிலும் மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மார்க்கக் கல்வி பயில தனி மதரஸா சிஸ்டம் (அரபி மதரசா என்ற பெயரில்) பின்னர் அரபு நாடுகள் அனைத்திலும் தொடங்கப்பட்டன. பின்னர் இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் தனி மதரஸா சிஸ்டம் (அரபி மதரசா என்ற பெயரில்) ஆரம்பிக்கப்பட்டு இலவச உணவும், இருப்பிடமும் அளிக்கப்பட்டன. வட இந்தியாவில் தேவ்பந்தில் ஹிஜ்ரி 1283 (ஈ 1866) தென் இந்தியாவில் வேலூரில் ஹிஜ்ரி 1302 (ஈ 1885) மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

எந்த ஒரு அரபி கல்லூரியும் ஆரம்பிக்கும் தருணத்தில் மிகப் பெரும் தியாகம் செய்து தூய உள்ளத்தோடுதான் துவக்குகிறார்கள். ஆனால் நாட்கள் ஆக ஆக அந்த அரபிக் கல்லூரிகள் ஒரு மதத்திற்கு உண்டான குருகுல பாடசாலையாக உருமாறுகிறது. பொது மக்களுக்கும், மதரசாவிற்கும் இடைவெளி அதிகரிக்கின்றது. கல்வியை கற்று அதனை பிறருடன் பகிர்தல் என்ற நிலை காணாமல் போகிறது. தான் கற்றுக் கொடுக்கிறேன் நீ கேட்டுக் கொள் என்கின்ற குரு சிஷ்யன் மனோபாவம் கற்றுக் கொடுக்கும் நபரிடம் வருகிறது. கேட்பவனுக்கு அதிக விபரம் தெரியாததால் வாய் பொத்தி, கைகட்டி நிற்கிறான். மனோவியல் ரீதியாக கற்றவருக்கும், கற்கவேண்டிய பொதுமக்களுக்கும் ஒரு திரை விழுகிறது.

அதாவது நபி(ஸல்) அவர்களும் ஸஹாபா பெருமக்களும் காட்டி தந்த மதரஸா சிஸ்டம் காணாமல் போய் குருகுல சிஸ்டம் உருவெடுக்கிறது. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் (இப்போதைய தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்) உள்ள சில ஊர்களில் பித்அத்தான,  ´ர்க் நிறைந்த மவ்லூதுகள் ஓதுவதற்கு மாணவர்கள் தேவை என்ற தவறான எண்ணத்துடன் பெரும்பாலான மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இல்யாஸ் சாஹிபின் தப்லீக் சேவைக்குப் பின் புற்றீசல் போல் பல மதரஸாக்கள் தோன்றின. இவற்றில் சில, மதகுருமார்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமை நானா, நீயா என்ற ஆணவம் காரணமாகவே ஆரம்பிக்கப்பட்டன. இந்த மதரஸாக்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நிய்யத்-எண்ணத்தின் அடிப்படையில் இந்த மதரஸாக்களில் படித்துப் பட்டம் பெற்று வெளிவரும் கற்றவர்கள் தங்களை ஆலிம் உலமா என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிலேயே குறியாக இருப்பதால், மார்க்கம் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

அந்த மதரஸாக்களில் தொழிற் பயிற்சி இல்லாததாலும் படித்து ஆலிம் பட்டம் பெற்று வெளிவரும் கற்றவர்கள் பார்க்க பந்தாவாக இருந்தாலும், உலகியல் விவகாரம், சுயதொழில் செய்து முன்னேறும் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்படி ஜனங்களுக்கு வழிகாட்டும் தகுதியை பெற இயலும்? மதரஸாக்களில் நல்ல கல்வி தரம் இருந்திருந்தால் அதன் மூலம் அவர்கள் உலகியலில் பல்வேறு பணிகளில் வேலை செய்து சம்பாதிக்க இயலும், கிளார்க்காக, தொழிற்பயிற்சி செய்யும் டெக்னீ´யனாக, சிறு வியாபாரம் செய்யும் தொழில் முனைவராக ஆலிம்கள் வர இயலாமல் போனது. விளைவு என்ன ஆனது? கையில் உள்ள ஆலிம் பட்டங்களை வைத்து வயிற்று பிழைப்பை செய்ய வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தீன் கல்வி, துன்யா கல்வி எனப் பிரித்து, தங்களின் குருகுல கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து துன்யா கல்வியை இழிவுபடுத்திக் கூறி மக்கள் அதைப் புறக்கணிக்கச் செய்தார்கள். பழைய மத்ஹபு பிரிவினர் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் எனக் கூறுவதை மாற்றிப் புதிய மத்ஹபினர் குர்ஆன், ஹதீஃத், லாஜிக், பாலிஸி எனக் கூறி தங்களின் சுயக் கருத்துக்களைப் புகுத்தி வருகின்றனர். வழிகேட்டையே மார்க்கமாகப் போதிக்கின்றனர்.

(7:3, 33:36,66,67,68) ஆகிய அல்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பை படித்து அல்லாஹ்வின் எச்சரிக்கையை புரிந்து கொள்வோமாக.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் “அந்நஜாத்” பத்திரிக்கை ஆலிம் உலமாக் களை வசை பாடி வருகிறது என்ற ஒரு பொது கருத்து உலவுகிறது. குறிப்பாக அரபி மதரஸாக்களில் பாட திட்டங்களை பற்றி நெடு நாளாக அபூ அப்தில்லாஹ் எழுதி வந்ததையும் சில ஆலிம்களிடம் காண்பித்தேன். இவருக்கு எங்களை திட்டுவதை தவிர வேறு வேலை இல்லையா என கோபித்துக் கொண்டார். நானும் பல்வேறு பழைய “அந்நஜாத்” கட்டுரைகளை தேடி தேடி மீண்டும் படித்தேன். வார்த்தைகளில் கடுமை இருந்தது உண்மைதான். ஆனால் அந்த கருத்துக்களை மறுக்க தமிழ்நாட்டில் ஒரு ஆலிம் கூட இன்று வரை முன்வரவில்லை என்பதும் அதைவிட உண்மையாக தெரிகிறது. இனியாவது தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் இந்த ஆய்வுக் கட்டுரையை சீர்தூக்கி பாருங்கள். உங்கள் பள்ளிவாசலில் அல்லது மதரஸாவில் கலந்து பேசுங்கள். இந்த கட்டுரையை மொழி பெயர்த்து ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிரிண்ட் செய்து இந்தியா முழுவதும் அனுப்புங்கள்.

இந்த ஆய்வுக் கட்டுரை தமிழ்நாட்டு கல்வியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்த இறைவனிடம் துஆ செய்கி றோம். “அந்நஜாத்” பத்திரிக்கையை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. எங்களை வைத்து பேசுங்கள் என்றும் சொல்லவில்லை. நீங்களாகவே செய்யுங்கள், எங்களுக்கு எந்த விளம்பரமும் வேண்டாம். அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து செய்கிறேன். நீங்களும் எங்களைப் போல சிந்தித்தால் நன்றாக இருக்குமே என ஆசைப்படுகிறோம்.

இன்றைய சமுதாயம் கடும் நெருக்கடியில் இருப்பது உண்மை. வரும் காலம் இஸ்லாத்திற்கு சோதனைகள் நிறைந்தது என்று சொல்வார்கள். ஆனால் சாதனைகளும் நிக ழும் என நம்புகிறோம். ஆகவே வரும் காலத்தில் உலக கல்வி+மார்க்க கல்வி பயின்ற நிபுணத்துவ முஸ்லிம்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால் வரும் காலத்தில் சாதனைகள் மலரும். நம் வீட்டில் பிறக்கும் குழந்தை அல்லது வளரும் சிறுவர்கள் நாளைய உமராக இருக்கலாம். நாளைய அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ஆக இருக் கலாம். நம் தெருக்களில் விளையாடும் சிறார்கள் வரும் காலத்தில் அனைத்து இனமக்களையும் அரவணைத்து வழிநடத்தும் மிகச் சிறந்த சர்வதேச ஆளுமைகளாக இருக்கலாம். அதற்கான பணிகளை இன்றே நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்? அதற்கான சிந்தனையை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்துவதே இந்த ஆய்வுக் கட்டுரையில் நோக்கம்.

Previous post:

Next post: