அல்ஹம்துலில்லாஹ்!
K.M.H.
மறு பதிப்பு :
அந்நஜாத் எதிர்மறை அணுகுமுறையை விட்டு நேர்மறை அணுகுமுறையை கடைபிடித்தால் இன்னும் அதிக பலன்கள் ஏற்படுமே என்று சிலர் எழுதுகிறார்கள். அனாவசியமான அக்கப் போர்களையும், அடுத்தவர்களை சாடுவதையும் விட்டு ஆக்கப்பூர்வமாக குர்ஆனையும், ஹதீதையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே போகலாமே என சிலர் ஆதங்கப்படுகிறார்கள். மேல் எழுந்த நிலையில் பார்க்கும்போது இக்கருத்துக்கள் இனிக்கத்தான் செய்கின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றிலுள்ள இடர்பாடுகளை விளக்கிக் கொள்ள முடியும்.
கடந்த 1447 ஆண்டுகளாக குர்ஆன், ஹதீத் இருந்து வருகின்றன. பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டும் இருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் அவற்றைக் கொண்டு ஏன் பலனடையவில்லை என்பது தான் கேள்வி? ஆம்! குர்ஆன், ஹதீதை எல்லோராலும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் மவ்லவி இனத்தாரே அவற்றை விளக்கிக் காட்டவேண்டும் என்ற தவறான நம்பிக்கையில் ஊறிப்போன மக்கள், குர்ஆன், ஹதீதை விளங்க முற்படுவதில்லை என்பதே உண்மைக் காரணமாகும். இந்த துர்நம்பிக்கை மக்களிடையே இருந்து அகற்றப்பட்டுவிட்டால், மக்கள் குர்ஆன், ஹதீதை எங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே நாங்களும் விளங்கமுடியும் என்ற திட நம்பிக்கையோடு செயல்பட ஆரம்பித்துவிட்டால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதனை எனது சொந்த அனுபவத்திலேயே தெளிவாக அறிந்தே சொல்கிறேன். குர்ஆன், ஹதீதை நம்மால் விளங்க முடியாது. அரபி படித்த மவ்லவி இனமே விளக்கிக் காட்டவேண்டும். அவர்களைத் “தக்லீது‘ செய்யும் முகல்லிதாகத்தான் நாம் இருக்கவேண்டும் என்ற குருட்டு–இருட்டு நம்பிக்கையில் இருந்து வந்த எனது 42 வயது வரை குர்ஆன், ஹதீதை தொடுவதே எனக்கு அலர்ஜியாகத்தான் இருந்தது.
அந்த மவ்லவிகள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் பரிதாபத்திற்குரிய முகல்லிதாகத்தான் இருந்து வந்தேன். சிறிது பயம் தெளிந்து குர்ஆன் வசனங்களையும், ஹதீத்களையும் சிறிது சிறிதாகப் பார்த்து விளங்க ஆரம்பித்த பின்புதான் நான் எவ்வளவு பெரிய மடமையில் இருந்து வந்திருக்கிறேன். இந்த மவ்லவி இனம் எந்த அளவு நம்மை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது எனது அனுபவத்தை மட்டும் கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வராமல், நான் இதனை ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பித்த போது “அரபி தெரியாத நம்மால் எப்படி குர்ஆனை விளங்க முடியும். இது முஸ்லிம்களை வழிகேட்டில் கொண்டு செல்லும் முயற்சியாகும்” என்று கூறி பயங்கரமாக என்னை நல்லெண்ணத்தோடு எதிர்த்த சிலருக்கு சிறிது சிறிதாகப் பயிற்சி கொடுத்ததன் பின் அவர்களும் தங்கள் சொந்த அனுபவத்திலேயே அந்த உண்மையை உணர்ந்து ஏற்றுகொண்ட பின்தான் நமக்கு முழுத்துணிவு ஏற்பட்டது.
அதற்கு குர்ஆனும், ஹதீதும் உறுதுணையாக இருந்தன. அப்படி பயிற்சி பெற்ற அரபி தெரியாத ஏன்? எந்த மொழியும் எழுதப்படிக்கத் தெரியாத சில சகோதரர்களுக்கு முன்னால், தங்களை ஆலிம்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிகளும் தாக்குப் பிடிக்க முடியாமல், தங்களின் கெளரவம் பறிபோகிறதே என்ற அச்சத்தில் உனக்கு அரபி தெரியுமா? மிஷ்காத் சில வரிகள் படித்துப் பொருள் சொல்லத் தெரியுமா? என்று ஆணவ வினா எழுப்பி தங்களின் அறியாமையை வெளிப்படுத்திய பல சம்பவங்கள் சகோதரர்கள் அறிந்த உண்மையாகும். இது எதனைக் காட்டுகிறது? மக்களுக்கு குர்ஆன், ஹதீதை விளங்குவதில் இருக்கும் பீதியை அவநம்பிக் கையை போக்கி, அவர்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கிவிட்டால் மக்கள் குர்ஆன், ஹதீதை நேரடியாக விளங்க முற்பட்டுவிட்டால் சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த மவ்லவி வர்க்கமே இவர்களின் வஞ்சகப் போக்கை மக்களுக்குத் தோலுரித்துக் காட்டாதவரை மக்கள் உண்மையை உணரமுடியாது. அவர்களிடையே புரையோடிப் போயிருக்கும். குர்ஆனைத் தங்களால் விளங்கமுடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை அகற்றவும் முடியாது. இந்த நிலையில் இந்த மவ்லவி இனத்தின் சுயநலப் போக்கைக் கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல் ஆக்கப்பூர்வமாகக் குர்ஆன், ஹதீதை சொல்லுகிறோம் என்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். காரணம், இவர்கள் சொல்லும் குர்ஆன், ஹதீத் ஏற்கனவே மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது.
குர்ஆனை நம்மால் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டு, குர்ஆனை நம்மாலும் எளிதாக விளங்கிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்ட எனக்கும், இன்னும் பல சகோதரர்களுக்கும் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள குர்ஆனும், ஹதீத்களும் தாராளமாக உதவத்தான் செய்தன. நாங்கள் பயனடைந்ததற்குரிய காரணம், எங்களிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை போய், தன்னம்பிக்கை ஏற்பட்டதேயாகும். எனவே என் முன்னால் இப்போது இருக்கும் தலையாய வேலை மக்களிடையே இந்த மவ்லவி இனம் புரையோடச் செய்திருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றி அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதேயாகும்.
இந்த முயற்சி வெற்றியடைந்து விட்டால் இந்தச் சமுதாயத்தைப் பிடித்திருக்கும் அனைத்து வியாதிகளும் அகன்று மீண்டும் இந்தச் சமுதாயம் உலகிற்கு வழிகாட்ட ஆரம்பித்துவிடும் அடுத்து,
நேர்மறை அணுகுமுறைப்படி இன்று தமிழகத்திலுள்ள எந்தப் பகுதிக்கும் சென்று, எந்தப் பள்ளியிலும் (குத்பிய்யத் இருட்டு திக்ரை ஆதரிக்கும் மக்களாக இருந்தாலும் சரி) “அல்லாஹ்வே நமது ரப்பு; அவனே நமது தேவைகளை பூர்த்தி செய்து தருபவன் அவனிடம் மட்டுமே நமது தேவைகளைக் கேட்கவேண்டும் அவனல்லாத வேறு யாரிடம் நமது தேவைகளைக் கேட்டாலும் அது அவனுக்கு இணை வைப்பதாகும்.” என்று பேசினால், எங்குமே எவ்வித எதிர்ப்பும் ஏற்படாது. அதே சமயம் எதிர்மறை அணுகுமுறைப்படி “யா முஹ்யித்தீன்! எனது தேவைகளை நிறைவேற்றித் தாருங்கள்” என்று கேட்பது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சிர்க் ஆகும் என்று கூறிப்பாருங்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது நேர்மறை அணுகுமுறையால் மக்கள் விளங்குபவர்களாகவோ, திருந்துபவர்களாகவோ இல்லை. எதிர்மறை அணுகுமுறையே அவர்களிடம் ஆரம்பத்தில் ஒரு வேகத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தினாலும் முடிவில் அவர்கள் சிந்திக்க வும் விளங்கவும், திருந்தவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்பதை அனுபவ வாயிலாகவே அறிகிறோம். தெளிவாகச் சொல்வதாக இருந்தால் ஐந்து நேரம் தவறாமல் தொழுது வாருங்கள். நோன்பை நோற்று வாருங்கள், ஜகாத் கொடுங்கள். இன்னும் இது போன்ற விசயங்களில் நேர்மறை அணுகு முறையும் சிர்க்கான, பித்அத்தான காரியங்களில் எதிர்மறை அணுகுமுறையே உரிய பலனைத் தரும் குர்ஆனையும், ஹதீதையும் ஆழ்ந்து நோக்கும்போது கடமைகளை நிறை வேற்றாமல் விடுவதை மிகக் கடுமையாகக் கண்டித்து எதிர்மறை அணுகுமுறையே கையாளப்பட்டிருப்பதை அறிகிறோம். எனவே எதிர்மறை அணுகுமுறை கூடாது என்ற எண்ணம் தவறு என்ற முடிவுக்கே வரமுடிகிறது.
இறுதியாக அன்புச் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். அந்நஜாத் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வெளிவரும் பத்திரிக்கை அல்ல அல்லாஹ்வின் பொருத்தம் நாடி யாருக்கும் வளைந்து கொடுக்காமல் வெளி வரும் பத்திரிக்கையாகும். அந்நஜாத்திற்கு அதிகமான மக்களின் ஆதரவு இல்லை என்பது உண்மையே. இந்த நிலையில் தான் அந்நஜாத் தனது பணியைத் தொய்வின்றி தொடர வேண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தீனின் வளர்ச்சிக் காக மக்களிடம் பொருளுதவி கேட்ட பல ஆதாரங்களைப் பார்க்கிறோம். அந்த ஸுன்னத்தான முறைப்படி அந்நஜாத்தின் பணியையும், அதன் அவசியத்தையும் புரிந்துகொண்ட சகோதரர் களிடம் அதன் வளர்ச்சிக்காக துஆச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.