வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?
அபூ இஸ்ஸத், இலங்கை
மார்ச் 2026 தொடர்ச்சி…
தலைகீழாகக் கவிழ்த்துப் புரட்டப்பட்ட “”லூத்”(அலை) அவர்களின் சதூம் சமூகத் தவர்கள்:
பின்னர் நமது ஆணை பிறந்ததும் அந்த ஊரைத் தலைகீழா(கக் கவிழ்த்திப் புரட்டப்பட்டதா)க ஆக்கினோம். அதன் மீது சுட்ட செங்கற்களைத் தொடர்ச்சியாகப் பொழிந்தோம். (அவை) உம்முடைய இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தன. (இவர்க ளைப் போன்ற) அநீதியாளர் களுக்கு இ(ந்தச் சோதனையான)து தொலைவில் இல்லை. (11:82,83) இறைத்தூதர் லூத்(அலை) அவர்க ளும் அவர்களுடைய மனைவி மட்டும் நீங்கலாக அவருடைய குடும்பத்தாரும் இரவோடு இரவாக “சதூம்” எனும் ஊரை விட்டு வெளியேறிய பின் அதிகாலையில் அச்சமூகத்தார் அழிக்கப்பட்டனர். அவ்வூரைத் தலைகீழாகக் கவிழ்த்துப் புரட்டிப்போட்ட இறைவன்; அதன் மீது களிமண்ணாலான சுடப்பட்ட வலுவான அமிலச் செங்கற்களைச் சொரிந்தான். இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி : 4684, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:668-672)
மேலும், இதுகுறித்து; அதன் ஒவ்வொரு கல்லிலும் அது யார் மீது விழ வேண்டுமோ அவரது பெயர் பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்தது. அந்த மக்களில் ஒருவர் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அப்போது வானத்திலிருந்து ஒரு கல் வந்து மற்ற மக்களை விட்டு விட்டு அவர்மீது மட்டும் விழுந்து அவரை அழிக்கும். இவ்வாறு அந்தக் கற்கள் எல்லாப் பகுதி களிலும் உள்ளவர்களைப் பின்தொடர்ந்து சென்று இறுதியில் அவர்களில் ஒருவரைக்கூட விடாமல் அனைவரையும் அழித்தொழித்தது. (புகாரி: 4684, தஃப்சீர் இப்னு கஸீர் 4:668-672)
மேலும், இது குறித்துக் குறிப்பிடுகையில், அன்றைய தினம் பொழுது புலர்ந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கிவந்து தமது இறக்கையை விரித்து அதன் மூலம் லூத்(அலை) அவர்களுடைய சமூ கத்தார் வசித்துவந்த நிலப்பகுதியையும், அதை அண்டிய இதர ஏழு ஊர்களையும், அதிலுள்ள மாளிகைகள், வீடுகள், கால்நடைகள், மற்றும் தளவாடங்கள், கற்கள், மரங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஏழு பூமிக்கு அடியிலிருந்து பெயர்த்தெடுத்து மொத்தமாகத் தம்மிடம் சுருட்டி மடித்து வைத்துக்கொண்டார். பின்னர் அவற்றைத் தூக்கிக்கொண்டு வானில் ஏறினார். அந்த வானில் வசிப்போர். மனிதர்கள், மற்றும் நாய்களின் ஓலங்களைச் செவியுற்றனர். அன்றைய தினம் லூத்(அலை) அவர்களின் சமூகத்தார் நாற்பது இலட்சம் பேர் இருந்தனர்.
பின்னர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் அந்த ஊரைப் புரட்டி அப்படியே தலைகீழாகப் பூமியை நோக்கிப் போட்டார்கள். வீசிய வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியது. அதையடுத்து அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக ஆக்கினார். அவ்வாறு அந்த நிலப்பகுதி தூக்கி வீசப்பட்டபோது யார் அதில் சாகவில்லையோ அவர்கள் பூமிக்கடியில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் அவர்கள் மீது சுட்ட செங்கற்களை மழையாகப் பொழிந்தார். இதையே; மற்றொரு வசனத்தில்; “நாம் அந்த ஊரைத் தலைகீழா(கக் கவிழ்க்கப்பட்டதா)க ஆக்கினோம். அவர்கள் மீது சுட்ட செங்கற்களைத் தொடர்ச்சியாகப் பொழிந்தோம். (15:74) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (முஜாஹித்(ரஹ்), கத்தாதா (ரஹ்), சுத்தீ(ரஹ்) 53:53, 15:74, தஃப்சீர், தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 4:668-672)
மேலும் விவிலியம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதாவது; லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின் மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கோமோராவின் மேலும் கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும், அக்கினியையும், வருசிக்கப் பண்ணி, அந்தப் பட்டணங்களையும் அந்தச் சம பூமியானதையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் : 19:23-35 தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 4:668-672)
இப்ராஹீம்(அலை) அவர்களின் சகோதரர் ஹாரான் என்பவருக்குப் பிறந்த “லூத்”(அலை) அவர்கள் (29:26, தஃப்சீர் இப்னு கஸீர் 7:30,31, தஃப்சீர் மாஜிதி) ஷாம், எனும் சிரியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்து சென்று கிழக்கு ஜோர்தானில் உள்ள சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட “சதூம்”வாசிகளுக்கும் அப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள லட்சக் கணக்கான பெரும் தொகை மக்களைக் கொண்ட பகுதிகளுக்கும் இறைத்தூதராக அனுப்பப் பெற்றார்கள். (7:80,81)
அப்போது; “சதூம்” வாசிகள் அவர்களுக்கு முன்னர் உலக மக்களில் வேறு யாருமே செய்திராத ஓரினச் சேர்க்கை (றீலிdலிதுதீ) எனும் இழிவான கெட்ட பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்கள். அவர்களிடம் இருந்த இந்த இழிசெயலிலிருந்து அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த இறைத்தூதர் லூத்(அலை) அவர்கள் பல வருடங்கள் கடுமையாகப் போராடினார்கள். (7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29) ஆனாலும் அவர்கள் திருந்த மறுத்து நபிக்குப் பெரும் தொல்லை கொடுத்தனர். (7:82, 26:167, 27:56) அவர்களுக்கு உதவியாக இறைத்தூதர் லூத்(அலை) அவர்களின் மனைவியும் நபிக்கு எதிராகச் செயல்பட்டார்.
அழகிய வாலிபர்களின் தோற்றத்தில் இறைத்தூதர் லூத்(அலை) அவர்களது இல்லத்திற்கு விருந்தாளிகளாக வந்திருந்தவர்கள் குறித்து, அவருடைய மனைவி வெளியே சென்று தனது சமூகத்தாரிடம் வந்திருந்த விருந்தினர்கள் தொடர்பாகத் தகவல் சொல்லிவிட்டார். அதையடுத்து அவர்கள் லூத்(அலை) அவர்களை நோக்கி அளவு கடந்த மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து விரைந்தோடி வந்தனர். (15:67, சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் மாஜிதீ, தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்: 4:662-665, 1045-1047) இதனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் அச்சமுதாயத்தார் சுமார் நாற்பது இலட்சம் பேர் அடங்கிய நகரம் தலைகீழாகப் புரட்டப்பட்டும் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்ட கற் கள் (11:82,83) பொழியப்பட்டும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டார்கள். (7:83,84, 11:81-83, 29:34, 15:65,73,74, 26:173, 27:58, 51:33,34,35, 53:53,54, 54:34,38, 66:10, தஃப்சீர் இப்னு அபீர் ஹாத்திம், இப்னு கஸீர், பாகம் 4, பக்கம் 667)
அவர்களது மனைவியோ, ஓர் இறைத் தூதருடைய மனைவியாக இருந்தும் அவளும் அழிவுக்கு ஆளானாள்:
விரிவுரையாளர்களில் சிலர் கூறுகின்றனர். அவளும் லூத்(அலை) அவர்களுடைய குடும்பத் தாருடன் சேர்ந்து ஊரை விட்டு வெளியேறினாள். எனினும் அவள் பேரழிவு ஓசையைச் செவியுற்றதும் திரும்பிப் பார்த்து ”எனது சமூகத்தாரே” என்று கூறிவிட்டாள். அப்போது வானிலிருந்து ஒரு கல் வந்து அவள் மீது விழ அவள் அங்கேயே பலியானாள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 4667) இதையே,
இறை நிராகரிப்போருக்கு நபி(ஸல்) நூஹுடைய மனைவியையும், (நபி)லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் கெட்ட உதாரணமாகக் கூறுகிறான்:
நிராகரிப்போருக்கு நபி(ஸல்) நூஹுடைய மனைவியையும், நபி(ஸல்) லூத்துடைய மனைவி யையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்கு கீழ் (மனைவியாராக) இருந்தனர். பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடியவில்லை. இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களி டம்) நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களிருவரும் நுழைந்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்ட இறைத்தூதர் நூஹ்(அலை) அவர்களுடைய சமுதாயத்தவர்கள்:
நம் பார்வையில் நம் (வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்த வர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னி டம் பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 11:37)
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். (அதற்கு) அவர், “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பது போலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார். (அல்குர்ஆன் 11:38)
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்ய ரெனவே கூறினார். எனவே நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம். இன்னும் நம் வசனங் களைப் பொய்யயனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர். (அல்குர்ஆன் 7:64)
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள். ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம். மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம். நம்முடைய அத்தாட்சிகளைப் பொய் எனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்ச மூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 10:73)
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிட மிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர். ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம். (அ.கு. 21:77)
இன்னும் நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கி வைத்தோம். மேலும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். (அ.கு. 25:37)
அதன் பிறகு, எஞ்சியிரந்தவர்களை நாம் மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 26:120)
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 37:82)
அலி பின் அபீதாலிப்(ரழி) அவர்கள் கூறினார்கள்; ஒரு துளித் தண்ணீர் மçழாக இறங்குவதாக இருந்தாலும் வானவரின் கைகளில் இருந்த அளவுகோல் மூலம் அளக்கப்பட்டே தவிர இறங்குவதில்லை. ஆனால் நூஹ்(அலை) நபியவர்களின் காலத்து வெள்ளப்பிரளயத்தின் பொழுது மழையின் பொறுப்பாளரான வானவரை விடுத்துத் தண்ணீருக்கே நேரடியாகக் கட்டளையிடப்பட்டது. வானவரை யும் மீறித் தண்ணீர் பெருக்கெடுத்து வெளிப்பட்டது. அதைப் பற்றியே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தண்ணீர் எஃலை மீறியது என்று இந்த (69:11) வசனம் குறிப்பிடுகிறது. (தஃப்சீர் இப்னு கஸீர்: 9:610-617)
நபி நூஹ்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய உத்தரவின் பிரகாரம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த அளவுப் பிரமாண அறிவிய லின்படி அவனது நேரடி கண்காணிப்பில் அறுநூறு முழம் நீளமும், முப்பது முழம் அகலமும் முன்னூறு முழம் உயரமும், மூன்று அடுக்குகளையும் கொண்டதாக; ஓர் நீராவிக் கப்பலை நேர்த்தியாகக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் யாரேனும் கப்பலைக் கட்டிக் கொண்டிருக் கும் நபியவர்களைக் கடந்து செல்லும்போதெல் லாம் அவரை ஏளனம் செய்தனர் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். (இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), ஹசன் அல்பஸ்ரி(ரஹ்), அல்குர்ஆன் 11:37,38, 7:64, 10:73, 29:15, 21:76,77, 37:76, 26:119, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் பக்கம் 3, பக்கம் 796, பாகம் 4, பக்கம் 540,622,623,628, தஃப்ஸீர் இப்னு அயீஹாத்திம், தஃப்ஸீர் மாஜிதீ)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)