உபதேசம் பலனளிக்குமா?

in 2026 ஜூன்

உபதேசம் பலனளிக்குமா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

“நபியே! இவற்றைக் (இறைநூலைக்) கொண்டு உபதேசம் செய்வீராக. நிச்சயமாக நீர் உபதேசம் செய்பவர்தாம்”.  (88:21)

பொதுவாக உபதேசம் தான் மனித சமூகத்தை சீர் செய்கிறது. மற்றும் உபதேசத்தை கவனமுடன் கவனிக்கும்போது மனித மனம் தவறிலிருந்து திருந்துகிறது. மேலும்  மனித  மனம்  பக்குவப்படுகிறது.

எனவேதான் இறைவன் இறைத்தூதர்கள் அனைவரையும் “உபதேசம்‘ செய்யுங்கள் என  அறிவுறித்துள்ளான்.

இது ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி தூதராக வந்த நபி(ஸல்) அவர்கள் வரை அனைவருக்கும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட இறைவழிகாட்டுதல்படி “உபதேசம்‘  செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அருளப்பட்ட வழிகாட்டுதல் நூலான குர்ஆனை கொண்டே “உபதேசம்‘ செய்தார்கள்.

உபதேசத்தில்  இரண்டு  வகை  உண்டு.

ஒன்று : பொது சபையில் : அதாவது ஜும்ஆ மேடையில், பெருநாள் அன்று, போர் காலங்களில், ஹஜ் உம்ராவின் போது மற் றும் சில நாட்களில் பர்ளான தொழுகைக்குப் பிறகு நபி(ஸல்) செய்துள்ளார்கள்.

மற்றொன்று : தனி நபர்களிடம் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திருக்கிறார்கள். இன்று பல லட்சக்கணக்கான ஹதீத்கள் (நபிமொழிகள்) நம்மிடம் உள்ளது என்றால் அவைகள் அனைத்தும் தனி நபர்களுக்கு (தோழர்களுக்கு) செய்தவைகள்  அதிகம்.

மேற்கண்ட இரண்டில் தனி நபர்களுக்கு செய்யப்பட்ட உபதேசமே பெரும் பலனை தந்தது. தனி நபர் உபதேசமே பெரும்பாலும்  பலனளிக்கும்.

உதாரணம் : நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரை ஜும்மா பயான்கள் (உபதேசம்) நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஜும்ஆ பயான்கள் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு வீணடிக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் சமுதாயம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதில் ஜும்ஆ உபதேசமே ஒன்றாகும்.

ஜும்ஆவில் பேசக்கூடிய பலரும் கடமைக்கு பேசுகிறார்கள் (வெகு சிலரை தவிர) மேலும் ஜும்ஆவிற்கு வரக்கூடியவர்களும் அதை கவனித்து கேட்பதில்லை.

(கட்டுரையின் சுருக்கத்தை கருதி இதைப்பற்றி  விரிவாக  எழுதவில்லை)

இவ்வுலகில் விலையில்லாத ஒன்று உபதேசமாகும். அதுபோல விலை மதிக்க முடியாத  ஒன்றுமாகும்.

நபி(ஸல்) அவர்கள் தமது 23 ஆண்டு கால வாழ்க்கையில் கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமலும், உறுதியுடனும் உண்மையை மட்டுமே  சொன்னார்கள்.

நபி(ஸல்) அவர்களின் சொல்லும் (உபதேசமும்) செயலும் ஒன்றாகவே இருந்தது. செயலில் இல்லாமல் இருத்திருக்குமேயானால் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால்தான் இறைவன் ஒரு வசனத்தில் “செயலில் வராத ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது”  என்று  கூறியுள்ளான்.

மேலும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் “நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?” என்று ஒரு நபிதோழர் கேட்டப்பொழுது “குர்ஆனாகவே இருந்தது” என்று பதில்  கூறினார்கள். 

இன்று செயலை வைத்து பின்பற்றக் கூடிய தலைவர்கள் யாருமே இல்லை. மாறாக குர்ஆன்–ஹதீத் மட்டுமே நம்மிடையே உள்ளது. அதாவது முழு குர்ஆனும்–பல ஹதீத்களும் தொகுக்கப்பட்ட நிலையில் சுலபமாக பார்த்து படித்து தெரிந்துகொள்ள கூடியவர்களாக உள்ளோம். ஆனாலும் குர்ஆனை தாய் மொழியில் படித்து புரிந்து கொள்ளாதவர்களாக படிக்காதவர்களாகப்  பெரும்பாலோர்   உள்ளனர்.

அன்று குர்ஆனின் ஒருசில வசனங்களை கொண்டே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இறை மறுப்பிலிருந்தும், இணை வைப்பதிலிருந்தும் மீண்டார்கள். அது இன்றும் நடக்கிறது. அதாவது குர்ஆனின் சில வசனங்கள் மட்டுமே சிந்தித்து பார்த்ததால் இஸ்லாத்தின் பக்கம் பலரை ஈர்த்துள்ளது. இதில் சாமானியர்கள் முதல் சரித்திரம் படைத்த பெரிய ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள்  பலரும்  உள்ளனர்.

எனவேதான் அல்லாஹ் இந்த குர்ஆனை சிந்தித்துப் பார்க்கமாட்டீர்களா? என்று கேட்கின்றான்.

“அவர்கள் இந்த குர்ஆனைச் சிந்தித்து பார்க்கமாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.”  (4:82)

நம்மோடு சக காலத்தில் வாழ்ந்து மறைந்த, வாழ்கின்ற சிலரிடம் கூட ஏகத்துவப் பக்கம் நீங்கள் வந்ததற்கு எது காரணம் என்று கேட்டால், எந்தவொரு தனி நபரையும் அடையாளமாக காட்டமாட்டார்கள். குர்ஆனில் உள்ள ஒருசில வசனங்கள்தான் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக  இருந்தது  என்று  கூறுவார்கள். 

(என்னுடைய வாழ்க்கையில் கூட அத்தியாயம் 31ல்34ஆம் வசனமே திருப்பு முனையாக  இருந்தது)

உபதேசம் எப்படிப்பட்ட பலன்களை தரும்?

சுருக்கமாக சொன்னால் ஒருவருக்கு நேர்வழி எது? தவறான வழி எது என்பதை சொல்லிக் கொடுக்கும்.

உதாரணம் : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு  செய்யும்  உபதேசம்.

 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செய்யும்  உபதேசம்.

மார்க்க அறிஞர்கள் செய்யும் ஆன்மீக உபதேசம்.

உபதேசம்  எத்தனை  வகைப்படும் :

1. வாழ்க்கை, நட்பு, கல்வி, அரசியல், ஆன்மீகம், வெற்றி–தோல்வி, மனநிலை என்று பலவகையான உபதேசங்கள் உள்ளன.

உதாரணம் :  வாழ்க்கை  உபதேசம் :

வாழ்க்கை உபதேசங்கள் சில நேரங்களில் ஒரு பெரிய புத்தகத்தை விட ஆழமாக மனிதனை  மாற்றிவிடும்.

எல்லோரையும் நம்புவது எப்படி ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது யாரையும்  நம்பாமல்  இருப்பதும்.

அறிவு இல்லாத வலிமை ஆபத்தானது. 

மெதுவாக (பொறுமையாக) சென்றாலும் பரவாயில்லை. (தோல்வியை கண்டு) நின்றுவிடாமல்  சென்றால்  போதும்.

திருக்குறள்  கூறும்  வாழ்க்கை  உபதேசம் :

“இடுக்கன் வருங்கால் நகுக” அதாவது நஷ்டம் தோல்வி வந்தாலும் மனம் உடையாமல்  எதிர்கொள்.

“மனிதர்களை (நண்பர்களை) உறவினர்களை, தலைவர்களை அவர்களின் வார்த்தைகளை விட செயலால் அறிந்து கொள்.” 

உபதேசம்  யாருக்கு  பலன்  அளிக்கும்?

“அல்லாஹ்வுக்கு (அஞ்சவேண்டிய முறையில்) அஞ்சுபவனே உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ (இறைவனை மறுப்பவனும்) இணை வைப்பவனும்) அதை விட்டு விலகிக் கொள்வான். (87:9,10,11)

Previous post:

Next post: