பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோர் பங்கு…!

in 2026 ஜூன்

பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோர் பங்கு…!

M. சையத் முபாரக், நாகை

நமது வெற்றியின் இலக்கு என்பது சொர்க் கம்தான். அதற்கான வழியைக் காட்டும் நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பர். பெரும்பாலான நண்பர்கள் ஆடம்பரத்திற்கும், வீணானச் செயலுக்கும்தான் வழிகாட்டுவர். பெண் தோழிகளை எடுத்துக்கொண்டால் புடவைகளைப் பற்றி, நகைகளைப் பற்றி, மெகா சீரியலில் அவள் இப்படி இருக்கிறாள், இவள் இப்படி இருக்கிறாள் என்பது பற்றி; மற்றவர்களை புறம், அவதூறு சொல்வது பற்றி இப்படி பலவற்றை பேசி, தீய குணங்களை நம்மிடம் மேலோங்கச் செய்வர். இன்ஸ்ட்ரா கிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்களோ வீணானதைப் பார்க்கச் செய்து, அதனைப் பரிமாற செய்து, மனதைச் சலனமடையச் செய்து, தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது. இவைகள் பிள்ளைகளை வழிகேட்டில், தீமையில், கேவலத்தில் ஆழ்த்தி, நரகப் படுகுழியில்  தள்ளுகிறது.

ஆனால், நல்ல பெற்றோர்களோ தன் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் நேரிய வழியில் நடந்து மறுமை வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கம் கொண்டு அதற்காக தனது  வாழ்வை  அர்ப்பணிக்கின்றனர்.

அதன் முதல் படியாக, தமது இல்லங்களை அல்லாஹ்வை நினைவு கூறும் சூழல் நிறைந்ததாக  இருக்கச் செய்வர்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நினைவு கூறுங்கள் மிக மிக அதிகமாக! துதித்துப் போற்றி அவன் தூய்மையைப் பறை சாற்றுங்கள், அதிகாலையிலும் அந்தி மாலையிலும்! (அல்குர்ஆன் 33:41,42)

இல்லற வாழ்வில் கணவன் மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது கீழ்க்கண்ட துஆவைச்  சொல்வர்.

அல்லாஹ்வின் பெயரால்! யா அல்லாஹ்! எங்களை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பானாக! நீ எங்களுக்கு (குழந்தைப் பாக்கியம்) வழங்குவதிலும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!” என பிரார்த்தித்து உறவு கொண்டால் அத்தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.     (புகாரி 6388, முஸ்லிம் 2825)

நபிமார்கள் வாரிசுகளுக்காக துஆ கேட் பதை சுட்டிக்காட்டும் அல்குர்ஆன் வசனங்கள்.              (3:38, 19:4-6, 37:100)

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; “”என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்என்று கூறினாள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப்போலல்லன்; (மேலும் அந்தத் தாய் சொன்னாள்) “நிச்சயமாக நான் அவளுக்குமர்யம்என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் பாதுகாவல்  தேடுகின்றேன்  (.கு. 3:36)

அல்லாஹ்விடமிருந்து வந்தோம், அவனுக்கு கீழ்ப்படிகிறோம். அவனிடமே மீண்டும் செல்வோம் என்பதில் உறுதியாக இருக்கும் தம்பதிகள் அல்லாஹ்விற்கு உகந்த வகையில் தமது பிள்ளைகளை வளர்ப்பர்.

ஒரு தலைமுறை சீரழிந்து(சீர்கெட்டு) விட்டால் அதன் பின்விளைவுகள் மிக மோசமாக, கேடுகெட்டதாக இருக்கும் என்பதால் தம் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்துவர். “மகத்தான ஒழுக்கத்தில் நிலை கொண்டுள்ளீர்  நீர்.” (68:4)

மறுமை நாளில் ஒரு மூஃமினின் தராசில் அதிக கனம் ஏற்படுத்துவது நற்குணம் தான். நிச்சயமாக, அல்லாஹ் கெட்ட பேச்சுப் பேசுபவனை, தீய செயல் செய்பவனை (க் கண்டு) கோபப்படுகிறான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (திர்மிதீ : 2002)

லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்நீங்கள் சொல்லிக் கொடுத்து அவர்களை மனனமிடச் செய்யுங்கள். மார்க்கத்தை, ஒழுக்க மாண்புகளை சிறிது சிறிதாக புகுத்தி விடுங்கள். மார்க்கத்திற்கு முரணானவற்றை வெறுக்கும் பக்குவத்தை ஏற்படுத் துங்கள்.

அல்குர்ஆனை, நபிமொழிகளை அறிமுகப் படுத்துங்கள், துஆ, திக்ர்களை கற்றுக் கொடுங்கள். இஸ்லாமிய புத்தகங்களை நாம் படிப்போம். அதைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு  படிப்பதில் ஆர்வம் ஏற்படும். சிறுவர் இஸ்லாமிய புத்தகங்களை, படங்கள் நிறைந்த அறிவூட்டும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

அறிவு, தொலைநோக்குப் பார்வை உள்ளவர்களும் அறிவு, தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களும் சமமாவார்களா? அறிவுத் திறனுடையவரே நல்லுரைகளை ஏற்பர்”. (அல்குர்ஆன் 39:9)

நாம் பிள்ளைகள் மீது அன்பு, பாசம், நேசம் கொள்கிறோம். அதனை வெளிப்படுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம். அவர்கள் தலை, முதுகை தடவி, அரவணைத்து முத்தமிடுங்கள். அவர்களை கட்டியணைத்து நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆளுமையை  ஏற்படுத்தும். 

பிள்ளைகளை கடுமையான முறையில் திட்டித் தீர்க்கும்போது அவர்களது முகம் வாடி வதங்குவதைப் பாருங்கள். வளரும் செடியில் சுடுநீரை ஊற்றினால் அது கருகி விடுவதைப் போல பிள்ளைகளின் மனம் பேதலித்துவிடாதா?

பிள்ளைகளை பயமுறுத்துவது, அடிப்பது, விரட்டுவது, பயங்கரமான குரலில் மிரட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் நம்மிடம் இருந்தால் அவைகள் பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையை  ஏற்படுத்தும். 

பிள்ளைகளின் உடல்நலத்தில், அவர்களின் முன்னேற்றத்தில் (உலக வாழ்வில்) ஆர்வம் காட்டுவதை விட அதிகமான ஆர்வத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைபிடிக்கச் செய்வதில் (ஆன்மீக வாழ்வில்) காட்டுங்கள்.

நாம் சொல்லும் சொற்களை விட நமது செயல்களைத்தான் கூர்ந்து கவனிப்பர் பிள்ளைகள். அதனால் தமது செயல்களில் அதிக கவனம் செலுத்துங்கள். நமது செயல்களை அழகான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை, கேட்டதையே பேசுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பேசுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிள்ளைகளுக்குத் தொழ கற்றுக் கொடுங்கள் என்பதிலிருந்தே பிள்ளைகளின் வெற்றிக்கு பெற் றோரே காரணம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். பிள்ளைகளின் வெற்றிக்கு வழிகாட்டி பெற்றோரே என்பதை கவனத்தில் கொண்டு பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும்.

(உங்களின்) குழந்தைக்கு 7 வயதாகும் போது தொழுகையைக் கற்றுக் கொடுங்கள் (தொழ ஏவுங்கள்) 10 வயதாகும்போது தொழாவிட்டால் அவர்களை அடியுங்கள்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அபூதாவூத் 494, திர்மிதீ 407)

பெற்றோருடன் பிள்ளைகள் வீட்டில் சேர்ந்து தொழட்டும். பள்ளிவாசலுக்கு அவர்களை அழைத்துச் செல்வது நேரந்தவறாமை, சமுதாயத்துடன் சேர்ந்து வாழ்வது போன்றவற்றில் பிள்ளைகளுக்கு பிடிப்பை ஏற்படுத்தும்.

பிள்ளைகளை உருவாக்குவதில் தந்தைக் கும் தாய்க்கும் பொறுப்பு இருந்தாலும் அதில் தாயின் பொறுப்பு சிறிது அதிகமாகும்.

இஸ்லாமிய வரலாற்றை நோக்கும்போது, இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியதில் தாயின் பங்கு அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆகவே, பெண்கள் அனைத்து (சினிமா, டிவி, கணினி, செல்ஃபோன்) திரைகளைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களை சிறந்த இஸ்லாமிய ஆளுமைகளாக உருவாக்க வேண்டும்.

நமது வளர்ப்பு சரியில்லை என்றால், நமது பிள்ளைகளே மறுமையில் நமக்கு எதிராகச் சாட்சி சொல்லும். அந்த நிலை நமக்கு ஏற்படுவதோ, ஏற்படாதிருப்பதோ நமது கையில் தான் இருக்கிறது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவர். ஓர் ஆண் தன் குடும்பத்தார்க்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண் தன் கணவன் இல்லத்திற்கும், அவனுடைய குழந்தை களுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பணியாளன் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படு வான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்என  நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள். (முஸ்லிம் 3733, புகாரி 893)

நபிமார்களும், நல்லோர்களும் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவைகளையும், பிள்ளைகளுக்கு வலியுறுத்தியதையும் கீழ்க்காணும் அல்குர்ஆன்  வசனங்களில்  காணலாம்.

2:132, 11:42, 14:40, 20:132, 25:74, 31:13, 17,18,19, 66:6, 2:124,128.

நாம் நமது பிள்ளைகளுக்கு துஆ செய்து, நல்ல முறையில் வளர்க்கும்போதுதான் நமது பிள்ளைகளும் நமக்காக துஆ செய்யும் பிள்ளைகளாக  உருவாகுவார்கள்.

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோரையும், நம்பிக்கையாளர்களையும் விசாரணை நடைபெறும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!”   (அல்குர்ஆன் 14:41)

மேலும் பார்க்க 17:24, 46:15, 71:28

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவனது மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. 1. நிலையான தர்மம், 2.பயன் தரும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் அவனது பிள்ளைகள்என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(
முஸ்லிம் 3358)

நாம் நல்ல முறையில் நமது பிள்ளைகளை அல்குர்ஆனிய வழியில் வளர்க்கும்போது, அதன் மூலமாக கிடைக்கும் பரிசினைப் பாருங்கள்.

அல்குர்ஆனைப் படித்து அதன்படி நடந்த வரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியினை கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் சூரியனின் பிரகாசத்தைப் போன்றதாகும். அவர்களுக்கு இரு ஆடைகள் அணிவிக்கப்படும். அவ்விரண்டுக்கும் இவ்வுலகும் ஈடாக மாட்டாது.” நாங்கள் ஏன் இவ்வாறு அணிவிக்கப்படுகிறோம்? என்று கேட்டதற்கு உங்கள் பிள்ளை அல்குர்ஆனைக் கற்றதனால் என்று பதில் கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்) ஹதீத் எண்.

ஆகவே, நாம் நமது பிள்ளைகளை இஸ்லாமிய வழியில் வளர்ப்போமாக! அல்லாஹ் இம்மை மறுமை வெற்றியைத் தருவானாக!  அல்ஹம்துலில்லாஹ்.

Previous post:

Next post: