அல்லாஹ்விற்கு பிடித்தமான “நப்ஸ்”…!
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“…நிச்சயமாக மனித மனம், (நப்ஸ்) தீய வற்றை அதிகமாக தூண்டிவிடக் கூடியதாகும். ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் (நப்ஸை) தவிர”. (12:53)
மேற்கண்ட வசனம் மூலம் மனிதனின் மனம் (நப்ஸ்) ஒரே நிலையில் நிலைத்து இருப்பதில்லை என்பதும் மேலும் அதிகமாக தீயவற்றையே தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும் தெரியவருகிறது. ஆனால் யாருடைய மனதை (நப்ஸை) இறை வன் தவறிலிருந்து காப்பாற்ற நாடியிருக்கின்றானோ அவர்களின் மனதை தவிர என்பதும் தெரியவருகிறது.
எனவே மனித மனம் (நப்ஸ்) எப்படிப்பட்டது? அதை தீயவற்றிலிருந்து பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை இறைவனும் –இறைத்தூதரும் கூறியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் வேறுபடுவதும், உயர்வடைவதும் மனமே காரணமாகும். அதாவது மனம்தான் சிந்திக்கவும், முடிவெடுக்கவும், திட்டமிடவும் மூளை உதவுகிறது. அதாவது உடலை இயக்குவது மூளை என்றாலும் மனிதனின் எண்ணங்கள், உணர்ச்சிகள், ஆசைகள், தீர்மானங்கள் முதலியவற்றை வழிநடத்துவது மனம் (அல்லது) உள்ளமாகும்.
மனித மனம் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறது?
உள்ளம் (மனம்) நிலையானது அல்ல. அது அடிக்கடி மாறும். எனவேதான் அதனை “கல்பு‘ என்று அழைக்கப்படுகிறது “கல்பு‘ என்று சொல்லுக்கு “திரும்புதல்/மாறுதல்‘ என்பது பொருளாகும்.
அதாவது ஒரே நிலையில் நிலைத்து இருக்காது.
மனம் ஏன் மாறுகிறது?
மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்வது ஷைத்தானாகும். எனவே தான் இறைவன் கூறுகிறான்.
“ஷைத்தான் மனிதர்களின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை போடுகி றான். (அ.கு.114:5)
அதனால்தான் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் மாறி மாறி தோன்றுகின்றன.
எவ்வாறு என்றால்;
உலக வாழ்க்கை, ஒரு சோதனையாகும் அதனால் மனித மனம் சில நேரம் நல்லவற்றையும், சில நேரம் கெட்டவற்றையும் தூண்டுகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உடலில் ஒரு மாமிசத் துண்டு உள்ளது. அது நன்றாக இருந்தால் முழு உடலும் நன்றாக இருக்கும். அது கெட்டுப்போனால் முழு உடலும் கெட்டுப்போகும். அதுதான் உள்ளம். (புகாரி 52)
இத்தகைய காரணத்தினால்தான் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி கீழ்கண்ட துஆவை கேட்டு வந்ததாக ஹதீத் நூல்களில் இடம் பெற்றுள்ளது. “உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலை நிறுத்துவாயாக” (திர்மிதி 2140)
மேற்கண்ட ஹதீத்களில் இருந்து தெரிய வருவது என்னதான் ஒருவன் நல்லவனாக வாழ நினைத்தாலும் இறைவன் யாருக்கு கருணை புரிந்தானோ, அவர்களால் மட் டுமே. மனதை கட்டுப்படுத்த வாழமுடியும்.
மனம் பாதிக்கப்பட காரணம் என்ன?
1. சில அனுபவங்கள், 2. சில சொற்கள், 3. மற்றும் சூழ்நிலைகளே காரணமாகும்.
அதாவது : ஆசை, கோபம், பொறாமை, பெருமை.
இவை அதிகமாகும்பொழுது மனம் கெட்டதை தூண்டும். இத்தகைய கெட்ட எண்ணங்களிலிருந்து மாற மனம் எத்தனை வகையாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டால் தீயவற்றிலிருந்து விடுபடலாம்.
அவைகள் 7 வகைப்படும்:
1. நப்ஸ் அம்மாரா
இதுபாவத்தை தூண்டும் ஆரம்ப நிலை.
2. நப்ஸ் லவ்வாமா
இதுதவறுசெய்யும்பொழுதுமனம்வருந்தும்.
3. நப்ஸ் முல்ஹீமா
நல்லதைமட்டுமேஉணர்த்தும்உள்ளம்
4. நப்ஸ் முஃத்ம இன்னா
அமைதியான உள்ளம்.
இந்த நிலை மிகவும் உயர்ந்தது. அமைதி அடைந்த ஆன்மா(உள்ளம்) என்பது எந்தவித சந்தேகமும் இன்றி உளமார்ந்த திருப்தியுடன் இணை துணையற்ற இறைவனை மட்டுமே அதிபதியாகவும், நபிமார்கள் சொல்லிய வாழ்க்கை நெறியைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மனித உள்ளமாகும்.
“ஓ அமைதியடைந்த ஆன்மாவே! செல் உன் இறைவனின் பக்கம்! மகிழ்ந்த நிலையில், திருப்தியைப் பெற்ற நிலையில்! இணைந்து விடு. என்னுடைய நல் அடியார்களுடன் புகுந்துவிடு சுவனத்தில்” (89:27)
5. நப்ஸ் ராதிய்யா
அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு திருப்தி அடையும் உள்ளம். அதாவது வாழ்க்கையில் வரும் சோதனைகளை ஏற்றுக் கொள்வான். அல்லாஹ்வின் முடிவில் மகிழ்ச்சி அடைவான்.
6. நப்ஸ் மர்திய்யா
இது அல்லாஹ்வுக்கு பிடித்த உள்ளம் அதாவது நல்ல குணங்கள். உயர்ந்த நற்பண்புகள், மனிதர்களுக்கு நன்மை செய்வது.
இதுதான் மனிதனின் உலகாதாய வாழ்க்கை சித்தாந்தம். இந்த உலகில் செல்வமும், பதவியும், அந்தஸ்தும், அதிகாரமும் கிடைத்து வருவதைக் கண்ணியம் என்றும் அவை கிடைக்காமல் போனால் இழிவு என்றும் கருதுகின்றான்.
ஆனால் மனிதன் புரிந்து கொள்ளாத அடிப்படை உண்மை என்னவென்றால் இவ்வுலகில் ஒருவனுக்கு இறைவன் கொடுத்திருப்பதெல்லாம் அவனைச் சோதிப்பதற்காகத்தான். அதாவது செல்வம், அதிகாரம், வறுமை ஆகியவற்றிலும் சோதனை இருக்கிறது.
இதில் யாரெல்லாம் நிலைத்து இருக்கின்றார்களோ அவர்களின் உள்ளங்களே அல்லாஹ்விற்கு பிடித்த உள்ளம் ஆகும்.
7. நப்ஸ் காமிலா
இது முழுமையான உள்ளம்.
அதாவது மிகமிக உயர்ந்த நிலை. இறைத் தூதர்கள் மற்றும் அல்லாஹ் நாடியவர்கள் மட்டுமே இந்த நிலையை அடைவார்கள்.
இதற்கு உதாரணம் :
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையாகும்.
நாம் எல்லோரும் முழுமையாக நல்லவர்கள் இல்லை. மேலும் நாம் எல்லோரும் சூழ்நிலைக்கு ஏற்ப பாவம் செய்பவர்கள் தான். இதை புரிந்து கொள்வது தான் உயர்ந்த நிலை.
அதாவது :
“சூழ்நிலையும், சந்தர்ப்பமும் சாதகமாக இருந்தும் யார் ஒருவர் தவறு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களின் உள்ளங்களே அல்லாஹ்வுக்கு பிடித்தமான நப்ஸ் (உள்ளத்தை) உடையவர் ஆவார்.