நேர்வழியில் நிலைத்திருக்க….
M. சையத் முபாரக், நாகை
நாம் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹி வரசூலுஹு” (லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலில்லாஹ்) என்றும் சொல்லி விட்டோம்; இறை மறுப்பான (சிர்க்கான) செயல்களை விட்டும் தவிர்த்து கொள்கிறோம். அதனால், சொர்க்கம் நிச்சயம் என்ற தற்பெருமை, கர்வம் கொண்டிருக்கிறோம். இந்த குணங்களே போதும் நம்மை நரகப் பாதாளத்தில் கவிழ்ந்துவிட,
நாம் சிர்க்கிலிருந்து விலகியிருந்தாலும் பல நேரங்களில் மனோ இச்சை(ஆசை) நம்மைத் தூண்டுவதும், ஷைத்தான் உலக வாழ்வை அலங்கரித்துக் காட்டுவதும், நடைமுறைப் பழக்கவழக்கங்கள் மீதுள்ள மோகமும், இறை மறுப்பாளர்கள் வசதி வாய்ப்பாக வாழ்வதும், மறுமை வாழ்வு பற்றிய அலட்சியமும் நம்மை நேர்வழியிலிருந்து சறுக வைத்துவிடுகிறது.
அதனால், நாம் சொர்க்கவாதி என்று பீற்றிக்கொள்வது எந்தவிதத்திலும் பலன் தராது. அதைத்தான் கீழ்க்கண்ட ஹதீத்கள் உணர்த்துகின்றன.
“… உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார், அவருக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திவிடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக நரகம் புகுவார்) ஒருவர் (தீய) செயல் புரிந்துகொண்டே செல்வார். அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திவிடும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணமாக சொர்க்கம் செல்வார்) (புகாரி 3208)
“…(பெரும் குழப்பங்கள் தோன்றும் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை நம்பிக்கை யாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனா மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.” (முஸ்லிம் 186)
ஆகவே, நாம் எப்பொழுதும் நேர்வழிக்காகவும், பாவமன்னிப்பிற்காகவும் பிரார்த் தனை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அதில் உறுதியோடு இருந்து, எவ்வித கலப்பும் இன்றி அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும். அது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியாக இருக்கவேண்டும். அதோடு அல்லாஹ்வின் நேசமும், கருணையும், மன்னிப்பும் நமக்கு கிடைக்கவேண்டும்
நபி(ஸல்) அவர்கள் “(வணக்க வழிபாடுகளின் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாக) செயல்படுங்கள். நிதனமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினும் அதற்குரிய பிரதிபலன் இறைவனிடம் கிடைக்கும் என்ற) நற்செய்தி பெறுங்கள். ஏனெனில், (இறையருள் இல்லாவிட்டால்) யாவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் நுழைந்துவிடாது” என்று கூறினார்கள். மக்கள் தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவினார்கள். என்னையும் தான். மன்னிப்பாலும், கருணை யாலும் அல்லாஹ் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (புகாரி 6467)
மேலும், சில வழிமுறைகளை நாம் மேற்கொள்வதும் நேர்வழியில் நிலைநிற்பதற்கு உறுதுணையாக இருக்கும். அவைகள் :
1. அல்லாஹ்விடம் உதவி கோரவேண்டும்.
அல்லாஹ் நாம் நேர்வழியில் உறுதியாக இருக்க உதவி செய்வான் என்பதில் திடமான நம்பிக்கை இருக்கவேண்டும். (பார்க்க 3:146-148, 11:88)
2. அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும்.
நேர்வழியில் நிலைத்திருக்க அல்குர் ஆனோடு எப்பொழுதும் தொடர்பு இருந்து கொண்டிருக்க வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும். (பார்க்க : 2:185, 3:138, 6:153, 10:57)
3. மார்க்கத்தை (குர்ஆன், ஹதீதை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கவேண்டும்.
அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டோருக்கு இவ்வுலகிலும் உறுதி கிடைக்கிறது. மறு உலகிலும் சொர்க்கம் கிடைக்கும். (பார்க்க : 2:208, 4:13, 14:27)
4. தூதர்களின் வரலாறுகளிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.
நபிமார்களின்வரலாறுமூலம்உள்ளம்உறுதிப்படுத்துகிறது. (பார்க்க : 11:120, 26:61,62)
5. நேர்வழிக்காக அனுதினமும் பிரார்த்தனை (துஆ) செய்யவேண்டும்.
நேர்வழி என்பது அல்லாஹ் தருவது. ஆகவே, அவனிடம் துஆ செய்து கேட்கவேண்டும். (பார்க்க 3:8,7:43,14:12, 18:10,47:7)
6. அல்லாஹ்வை நினைவு கூற (திக்ர் செய்ய) வேண்டும்.
அல்லாஹ்வை நினைவு கூர்வதில் வெற்றி, ஈடேற்றம் இருக்கிறது. (பார்க்க : 8:45, 25:58, 32:15, 33:41, 76:26)
7. அதிகமதிகம் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதரே(ஸல்) அதிகமான அளவு பாவ மன்னிப்பு தேடியபோது நாம் அதிகமான அளவு பாவமன்னிப்பு தேடிட வேண்டும்.
(பார்க்க : 7:23, 20:82, 27:46, 110:3)
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் (அதிக அளவு) “அஸ்தஃக்பிருல்லாஹ் வ அதூபு இலைஹி” (நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்) என்று கூறுகின்றேன் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6307)
8. நற்செயல்களை அதிகம் செய்ய வேண்டும்.
நமது செயல்களை வானவர்கள் எழுதுகிறார்கள், அல்லாஹ் தொடர்ந்து செய்யும் நல்லறத்தை விரும்புகிறான். ஆகவே, நற்செயல்களை செய்வோம். (பார்க்க : 41:30-32, 50:17,18 , 82:11,12, 19:76, 29:69)
“நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?” என்று நபி(ஸல்) அவர் களிடம் வினவப்பட்டபோது “(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே” என்று சொல்லிவிட்டு “நற்செயல் புரிவதில் இயன்ற வரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்” என்றும் கூறினார்கள். (புகாரி 6465)
9. நற்குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களில் சிறந்தவர் நற்குணமுடையவரே என்பதால் நாம் நற்குணங்கள் அதிகம் பெற்றவராக மாறவேண்டும். (பார்க்க : புகாரி 6035, 3559, 2861)
10. அசத்தியம் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது.
அல்லாஹ்வை நம்பாதவர்களின் வாழ்க்கை வசதி, உல்லாசம், ஆடம்பரம் நம்மை மயக்கி அவர்கள் பக்கம் சாய்த்துவிடக் கூடாது. (பார்க்க 3:196,197, 13:17)
11. சோதனைகளின்போது உறுதியாக இருக்க வேண்டும்.
சோதனைகள் உறவுகள், பதவி, பொருளாதாரம், நோய் போன்றவற்றில் வரலாம். காற்றினால் மரத்தின் இலைகள் அசைவது போல் உள்ளம் தடுமாறிவிடும். ஆகவே, கவனமாக இருக்கவேண்டும். (பார்க்க : 67:2)
12. நல்லோருடன் சேர்ந்திருக்க வேண்டும்.
நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுடன் மறுமையில் இருப்போம் என்பதால் நல்லோர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். (பார்க்க 3:28, 4:69, 9:71)
13. மரணம், மறுமை (சொர்க்கம், நரகம்) பற்றிய சிந்தனை இருக்கவேண்டும்.
நேர்வழி பெற, நற்செயல்கள் செய்ய மரணத்தைப் பற்றியும் மறுமை பற்றியும் நாம் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். (பார்க்க 80:21,22, 45:26, 7:8, 21:47)
14. அழைப்புப் பணி செய்யவேண்டும்.
அழைப்புப் பணி செய்யும்போது நமது உள்ளத்தில் மேலும் மேலும் ஈமான் வலுப்படும். இல்லாவிடில் உள்ளம் துருப்பிடித்து விடும். ஆகவே, மார்க்கத்தை எடுத்துரைக்க வேண்டும். (பார்க்க 16:125, 41:33, 64:12)
ரோமச் சக்கரவர்த்தி யஹர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டது. இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன். (பார்க்க: புகாரி 7)
15. முஸ்லிமாக மரணிக்க ஆவல் கொள்ள வேண்டும்.
முஸ்லிமாக மரணிப்பதில்தான் நமது ஈடேற்றம் இருக்கிறது. (பார்க்க 2:132, 3:102, 7:126, 12:101)
ஆகவே, அல்குர்ஆன் 46:13,14க்கு ஏற்ப அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தைத் தருவானாக! அல்ஹம்துலில்லாஹ்.