ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்…
எஸ்.எம்.அமீர், இலங்கை
“கண்ணும் சிலவேளை பொய் சொல்லும்” ஆனால் துல்லியமான கணக்கீடு ஒருபோதும் பொய் சொல்லாது என நிரூபிக்கப்பட்ட அறிவியல் சொல்கிறது அதனால்தான்!
இறை நம்பிக்கை கொண்டவர்களே! (தீயவனான) பாவி ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அது உண்மைதானா? எனத்) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்(அதனை முழுமையாக நம்பி) அறியாத்தனமாக ஒரு கூட்டத் தினரை நீங்கள் தாக்கிவிடுவீர்கள். (என்பதனாலாகும்) மேலும் அப்படி நீங்கள் செயல்பட்ட தன் பேரில் (பின்னர்) நீங்கள் (பச்சாதப்பட்டு) மனம் வருந்துவோராய் ஆகிவிடுவீர்கள். (49:6) என்னும் இவ்வசனம் அருளப்பெற்றதன் காரணமாவது:
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஹாரிஸ் பின் அபீளிரார்(ரழி) அவர்கள் வந்தார்கள். அவரை இஸ்லாத்தில் சேருமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவ் அழைப்பை ஏற்று அபீளிரார் (ரழி) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக (பைஅத் எனும்) உறுதிமொழியைக் கூறிப் புனித இஸ்லாத்தில் இணைந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஜகாத்தும் வழங்குமாறு கூறி அவரை அழைத்த போது, அதற்கும் (பைஅத் எனும்) உறுதிமொழி அளித்தார்கள்.
பின்னர், அல்லாஹ்வின் தூதரே! “நான் எனது கூட்டத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களையும் இஸ்லாத்தில் சேரும்படியும், ஜகாத் எனும் கட்டாயத் தர்மத்தை நிறைவேற்றும்படியும் அழைப்பேன். எனது அழைப்பை ஏற்று யார் பதில் அளிப்பார்களோ!” அவர்களிடம் இருந்து ஜகாத் எனும் தர்மப் பொருட்களைச் சேகரிப்பேன். எனவே அல்லாஹ்வின் தூதரே! ஒருவரை இன்ன இன்ன நாட்களில் என்னிடம் அனுப்பி வையுங்கள். அவரிடம் நான் சேகரிக்கக் கூடிய ஜகாத் பொருட்களைக் கொடுக்க அவர் உங்களிடம் அவற்றைக் கொண்டு வருவார் என்று கூறினார்கள்.
அதன்படியே அவர் தமது ஊர் சென்று தமது அழைப்பை ஏற்றுக்கொண்டவர்களிடம் இருந்து ஜகாத் பொருட்களைத் திரட்டிய பொழுது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஹாரிஸ்(ரழி) அவர்களிடம் தமது தூதுவராக ஒருவரை அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் அவர் ஹாரிஸ்(ரழி) அவர்களிடம் செல்லவில்லை. இதனால் பதட்டமடைந்த ஹாரிஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், தன்மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதாகக் கருதினார். எனவே தனது கூட்டத்தைச் சேர்ந்த தலைவர்களை அழைத்து நடந்த விசயத்தைக் கூறி அவர்களையும் அழைத்துக் கொண்டு நபியவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அங்கே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஹாரிஸ்(ரழி) அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் ஜகாத் பொருட்களை வாங்கி வருவதற்காக, வலீத் பின் உக்பா(ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவ்வாறே வலீது பின் உக்பா(ரழி) புறப்பட்டார் பாதையில் சிறிது தூரம் வந்து சேர்ந்தபொழுது தொடர்ந்து அவர்களை நோக்கிச் செல்வதில் அச்சத்திற்குள்ளானார். எனவே பாதி வழியிலேயே திரும்பி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸ்(ரழி) ஜகாத் பொருட் களை என்னிடம் தரவில்லை. என்னைக் கொலை செய்யவும் திட்மிடப்பட்டுள்ளார் என்பதாகக் கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் கோபமடைந்தார்கள். ஹாரிஸ் (ரழி) அவர் களது கூட்டத்தை நோக்கிப் போர் புரிவதற்காக காலித் பின் வலீத்(ரழி) அவர்களது தலைமையின் கீழ் ஒரு படையைத் தயார் செய்து நிதான மாக அணுகுங்கள். அவசரப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
இங்கே ஹாரிஸ்(ரழி) அவர்கள் தம்முடைய தோழர்களுடன் நபியவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார் நபியவர்கள் அனுப்பிய படையினர் மதீனாவை விட்டும் கிளம்பி எதிரே பாதையில் வந்துகொண்டிருந்தார்கள். இரு அணியினரும் நேருக்கு நேராகப் பாதையில் சந்தித்தபோது; மதீனா இருந்து தம்மை நோக்கி வந்த படையினரிடம் உங்களை எங்கே செல்லுமாறு நபியவர்கள் பணித்துள்ளார்கள்? என்று ஹாரிஸ்(ரழி) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு; உம்மிடம் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று அவர்கள் கூறினார்கள் ஏன்? என்று அவர் கேட்டார். உம்மிடம் இருந்து ஜகாத் பொருட்களை வசூலிப்பதற்காக; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; வலீத் பின் உக்பா(ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் திரும்பி வந்து நீர் ஜகாத் பொருட்களை அவரிடம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக வும் சொன்னார் என்றார். அதற்கு ஹாரிஸ்(ரழி) அவர்கள், அவ்வாறில்லையே அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களை உண்மையுடன் அனுப்பி வைத்த இறைவனின் மீது சத்தியமாக! வலீத் பின் உக்பா(ரழி) என்பவரை நான் ஒருபோதும் பார்க்கவில்லை, அவர் என்னிடம் வரவே இல்லை என்றார்.
பின்னர்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஹாரிஸ்(ரழி) அவர்கள் வந்தபோது; நீர் ஜகாத் பொருட்களைக் கொடுக்க மறுத்ததுடன் நான் அனுப்பிவைத்த தூதுவரையும் கொலை செய்யத் திட்டமிட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு; இல்லவே இல்லை. உங்களை உண்மையான தூதராக அனுப்பி வைத்த இறைவனின் மீது சத்தியமாக! வலீத் (ரழி) என்பவரை நான் ஒருபோதும் பார்க்கவே இல்லை. அவர் என்னிடம் வரவே இல்லை. தங்களிடமிருந்து தூதுவராக எவரும் என்னிடத்தில் வராத காரணத்தினால் தான் அல்லாஹ் வுடையதும், அவனது தூதருடையதும், கோபத்திற்கு நாங்கள் ஆளாகிவிட் டோமோ என்று பயந்து தான் நாங்கள் புறப்பட்டு உங்களிடம் வந்தோம் என்று கூறினார்கள். அப்போது தான், மேலே குறிப்பிட்ட (49:6) ஆகிய வசனம் அருளப்பெற்றது. “சுருக்கம்” (குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஹாரில் பின் அபீ ளிரார்(ரழி), உம்மு ஸலமா (ரழி), முஜாஹித்(ரஹ்), கத்தாதா(ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்), இப்னு அபீஹாத்திம்(ரஹ்), இமாம் தப்ரானி(ரஹ்), இப்னு ஜரீர் தபரீ(ரஹ்), ஷைக் அல்பானி(ரஹ்), அஸ்ஸில் ஸிலத்துல் ஸஹீஹா, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 8, பக்கம் 576-585)
ஆது சமூகத்தவர்களின் “கண்களும்” பொய்யே சொன்னது:
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்) அவர்கள் மழை மூட்டமாக வுள்ள சூல்கொண்ட கருமேகத்தை வானத்தில் கண்டுவிட்டால் முன்னால் நடப்பார்கள். பின்னர் திரும்பி நடப்பார்கள், தமது அறைக்கு உள்ளே போவார்கள், பின்னர் வெளியே வருவார்கள், நிம்மதியற்ற அச்சமுடன், ஒருவிதத் தவிப்புடன், பதட்டத்துடன், காணப்படுவார்கள். அவர்களுடைய முகம் அச்சத்தால் மாறிவிடும். மண்டியிட்டு அமர்ந்து கொண்டு யா அல்லாஹ்! இதை எங்களுக்கு அருளாகவும், கருணையாகவும் ஆக்கியருள் வாயாக. இதை தண்டனையாக ஆக்கிவிடாதே என்று பிரார்த்திப்பார்கள்.
அந்த சூல் கொண்ட கருமேகம் மழையாகப் பொழிந்துவிட்டால் அந்தத் தவிப்பான நிலை அவர்களை விட்டும் நீங்கிவிடும். ஆகவே ஒரு முறை நான் அவர்களிடம் இது போன்ற அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதைக் கண்டு “அல்லாஹ்வின் தூதரே மக்கள் கருமேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சி யடைகின்றார்கள். ஆனால் தாங்களோ மழை மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்களது முகத்தில் தென்படக் காண்கின்றேனே என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆயிஷா‘ அதில் அல்லாஹ்வின் வேதனை இருக்கலாம் என்பதாலேயே என்னால் கலக்கமடையாமல் இருக்க முடியவில்லை.
“ஆது” சமுதாயத்தவர்கள். அந்த வேதனையைக் கொண்டுவந்த கருமேகம் அவர்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது அது சூல் கொண்ட கருமேகம் என்று தவறாகப் புரிந்து கொண்டு “இது நமக்குக் குளிர்ந்த மழையைப் பொழிவிக்கும் கருமேகமாகும். (46:24) என்று கூறினார்களே அதுபோன்று வேதனையைக் கொண்டுவரக்கூடிய கருமேகமாகவும் இது இருந்துவிடலாம்” என்று எண்ணித்தான். அது மழை மேகமா அல்லது “”அதாபா” என்பது எனக்குத் தெரியாதே என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3206,4829, முஸ்லிம்:1640, இப்னு அப்பாஸ்(ரழி), அஷ்ஷாஃபீஈ, தபரானி) இது குறித்து அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்போது;
ஆனால் அவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனையான கருமேகத்தைத் தாங்கள் வசித்துவந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும் இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய கருமேகமாகும் என்று கூறினார்கள். அப்படியல்ல மாறாக அவர்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்களோ அதுதான் இது துன்புறுத்தும் வேதனைப் புயல் காற்று (49:24) வந்து அவர்களை அழித்தது என்றும்;
“”ஆது” சமுதாயத்தார்கள் சூறாவளிக் காற்றினால் வேதனை செய்யப்பட்டார்கள். அந்த வேதனை (யைக் கொண்டுவரும் கொடிய கருமேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்கு களை நோக்கி(வேகமாக) வந்துகொண்டிருப்பதை(க் கண்ணால்) கண்டபோது(அது மழை பொழியும் சூல் கொண்ட கருமேகம் என்று எண்ணியவர்களாக) இது நமக்கு மழை பொழி விக்கும் (குளிர்) மேகமாகும் என்று கூறினார்கள் என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி 3606, 4829)
மேலும், இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்களது சமூகத்தவர்களான “ஆது” சமுதாயத் தார் தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டு அக்கிரமம் புரிந்து வந்த பாவத்தினால் வறட்சியால் பிடிக்கப்பட்டுக் கடுமையான பஞ்சத்தினால் சோதிக்கப்பட்ட நேரத்தில் அவர் களுடைய பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருந்த சூல் கொண்ட கருமேகத்தைப் “பார்த்துவிட்டு” இது நமக்குக் குளிர்ந்த நீரைப் பொழிவிக்க வந்த அருள் மேகம் என்று அக மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களது கண்கள் பொய் சொன்னது. அது தம்மை அழிக்க வந்த வேதனை என்பதை அவர்களது பார்வையால் கண்டுகொள்ள முடியவில்லை. (46:24) அது அவர்களை நாசமாக்கக் கூடிய மலட்டுக் காற்றாக, கடுமையான ஊதக்காற்றாக மாறி, (51:41)
ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப் படுத்தி (வீசச் செய்து) இருந்தான். ஆகவே (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கம் ஈச்ச மரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர். (அல்குர்ஆன் 69:7) எதுவொன்றின் மீது அது பட்டாலும் அதனை சிதைந்து (துகளாகிப்) போன எலும்புகளைப் போல ஆக்காமல் அது விடுவதில்லை. (51:42) அது தொட்டுச் சென்ற மனிதனோ உடைமையோ எதுவானாலும் நாளங்கள் கூழமாகி நாசமாகிப் போனது.
(புகாரி 3206, 4829, 433, 3378, 3381, 4420, 4702, 4419, 4420, 4702) அவர்களது கண்கள் பொய்யே சொன்னது.
ஸமூது சமுதாயத்தவர்களுடைய “கண்களும்‘ பொய்தான் சொன்னது:
இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களுடைய சமுதாயத்தவர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அவர்களுடைய “ஹிஜ்ர்‘ எனும் பகுதியின் ஓரத்தில் தனியாகக் கிடந்த ஒரு பாறையைக் குறிப்பிட்டு அதிலிருந்து சூல் கொண்ட நிறைமாத ஒட்டகம் ஒன்று தமக்காக வெளிவரவேண்டும் என்று கோரினார்கள். அப்போது இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்கள் எழுந்து நின்று தொழுதுவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. பின்னர் அந்தப் பாறை பிளந்து அதிலிருந்து அவர்கள் கேட்டதைப் போன்றே வயிறு புடைத்த நிறைமாத சினை ஒட்டகம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது.
அதன் விலாப் பகுதிகளுக்கு இடையே அதன் வயிற்றிலுள்ள குட்டி அசைந்தது. (7:73, 54:28, 26:155, 91:11) தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 807-816) அந்த ஒட்டகம் அந்தப் பகுதியிலுள்ள பள்ளத்தாக்குகள் ஒன்றில் மேய்ந்து திரியும் ஒரு குறுகிய பாதை வழியாக வந்து வயிறு முட்ட நீர் அருந்திய காரணத் தால் விசாலமான வேறு ஒரு பாதை வழியாகத் திரும்பும். அந்த ஒட்டகமானது ஒரு குட்டியை யும் ஈன்றது தாய் ஒட்டகமும் அதன் குட்டியும் ஸமூது கூட்டத்தாரிடையே சிறிது காலமே இருந்தன.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)