உலகில் நாம் செய்யவேண்டியது முதலீடா? நுகர்வா?

in 2026 மார்ச்

உலகில் நாம் செய்யவேண்டியது முதலீடா? நுகர்வா?

M. சையத் முபாரக், நாகை

அருட்கொடை :

அல்லாஹ் மக்கள் அனைவருக்கும், அனைத்து படைப்பினங்களுக்கும் தனது அருட் கொடைகளைக் கணக்கின்றி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால்  வரையறுக்கவே  முடியாது. (.கு.14:34)

அவைகளில் உலக வாழ்க்கைக்குத் தேவையானதும் இருக்கின்றன. மறுமை வாழ்விற் குரியதும் இருக்கின்றன. நாம் அதனை எவ்வாறு உபயோகப்படுத்துகிறோம் என்பதிலி ருந்து அது முதலீடா? நுகர்வா? என்பது தெரியவரும்.

அதில் மிக முக்கியமானதாக, நேர்வழி எனும் அருட்கொடையை இறை நம்பிக்கையாளர் களுக்காக வழங்கியிருக்கின் றான். வழிகேடு எனும் இழிவை அநியாயக்காரர்களுக்காகத் தந்திருக்கின்றான். நேர்வழி, வழிகேடு இரண்டுக்குமான வழிகளை அல்லாஹ்  திறந்தே  விட்டிருக்கிறான்.

தெளிவான இரு வழி (நேர்வழி, வழிகேடு)களை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம்.” (அல்குர்ஆன் 90:10)

தன்மீது குற்றம் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சிந்தனைத் திறனை, ஆராயும் குணத்தை, பிரித்தறியும் ஆற்றலை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்றான்.  இதன் மூலம் நாம் நேர்வழியையும் அடையமுடியும்; வழிகேட்டையும் அடையமுடியும். வழிகேட்டை அடைந்தவர் என்னை இழிவுபடுத்திவிட்டாயே என்று அல்லாஹ்விடம் கேள்வி கேட்கமுடியாது.

நேர்வழி :

நேர்வழி எனும் அருட்கொடை சாதாரண மானதல்ல. அது மிகப்பெரும் அருட்கொடை, கிப்ட், இதைவிட சிறந்ததாக வேறொன்றும் இல்லை. நாம் வம்சாவழியாக இந்த நேர்வழியைப் பெற்றிருப்பதால் அதன் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அதன் மதிப்பை ஓரளவு உணர்ந்து இஸ்லாத்தை வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்டவர்களைப் பாருங்கள். அவர்கள் வணக்க வழிபாடுகளை பேணி நிலைநிறுத்துகிறார்கள்; அழைப்புப் பணியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

“…என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார் களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 2:38)

ஆகவே, நாம் நேர்வழியின் மதிப்பை உணர்ந்து, அல்லாஹ்வின் வாழ்வியல் முறையைப் பின்பற்றி இரு உலகிலும் வெற்றி  பெறுவோம்.

வழிகேடு :

அல்லாஹ்வின் கட்டளைப்படி வானவர்கள் அனைவரும் பூமிக்கு இறங்கினாலும், பலர் வழிகேடு எனும் இழிநிலையையே  தேர்ந்தெடுக்கின்றனர்.

யார்(நேர்வழியை) ஏற்றுக்கொள்ள மறுத்து எமது வசனங்களைப் பொய் என்று கூறுகிறார் களோ அவர்கள்தாம் நரகவாசிகள், அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.” (.கு. 2:39)

இவர்கள் வழிகேட்டைத் தேர்ந்தெடுக்கக் கீழ்க்கண்டவைகள் காரணமாக இருக்கின்றன.

1. ஷைத்தான் இவ்வுலக வாழ்வை அலங்கரித்துக்  காட்டுவது. (15:39)

2. மனோ இச்சையைப் பின்பற்றுவது. (28:50)

3. அறியாமையில்  உழல்வது. (6:100)

4. முன்னோர்களைப்  பின்பற்றுவது. (31:21)

ஆகவே, நாம் வழிகேட்டிலிருந்து பூரணமாக  விலகி  இருக்கவேண்டும்.

முதலீடு (சேமிப்பு) :

அல்லாஹ் நமக்கு அவனது அருட்கொடைகளைக் கொடுத்திருப்பதுடன் நேர்வழியையும் காண்பித்திருக்கின்றான். அவன் நமக்குக் கடமையாக்கிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும், அவன் தந்த பொருளாதாரமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், காலமாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் நாம் அவைகளை ஆக்கப்பூர்வமாக, சரியான வகையிலே  செலவழிக்க வேண்டும்.

அதாவது, அல்லாஹ்விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை, நமக்கு நாமே செய்யவேண்டிய செயல்களை(உடல் ஆரோக்கியம், சுத்தம், தூக்கம் போன்றவைகளை) மற்றவர்களுக்கு நாம் தரவேண்டிய உரிமைகளை, உதவிகளை நாம் நிலைநிறுத்த வேண்டும். இப்படி நம்மால் பயன்படுத்தப்படும் அருட்கொடைகள் நமக்கு சேமிப்பாக, மூலதனமாக, முதலீடாக நாளை மறுமையில்  பலன் தரும்.

நுகர்வு (செலவு) :

ஷைத்தான் இவ்வுலக வாழ்வை அலங்கரித்துக் காண்பிப்பதால் அநியாயக்காரர் களை அந்த அலங்காரங்கள் மயக்கி தன் பக்கம் கவர்ந்து இழுக்கிறது. அதனால் இவர்கள் நேர்வழியின் பக்கம் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால், கந்தூரி, சந்தன கூடு, இன்னும் பலவற்றில் வீண் அனாச்சாரங்களில் ஈடுபட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை தீமைகளின் வழியில் செலவழிக்கின்றனர். அது மட்டுமின்றி, வணக்க வழிபாடுகளில் கூட ஷைத்தான் மாற்றத்தை ஏற்படுத்தி அவைகளை அலங்கரித்துக் காட்டுகிறான். அதனால் மக்கள் நமது காலத்தை, பொரு ளாதாரத்தை வீணாக்குகின்றனர். அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை இவர்கள் வீண் விரயமாக்கி முதலீடாக மாற்றுவதற்கு பதிலாக நுகர்வு (செலவு) செய்து மறுமைக்கு ஒன்றும் இல்லாமல் நரகத்திற்குரியவர்களாகி  விடுகிறார்கள்.

முடிவாக :

நேர்வழி மிகப்பெரும் நன்கொடை என்பதை மனதில் நிறுத்தி, அதிலேயே நிலைத்திருக்க அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

“(நீ) எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!” (அல்குர்ஆன் 1:6)

எங்கள் இறைவனே! எங்களை நீ நேர் வழியில் செலுத்தியபின் எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்துவிடாதே! மேலும் எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக  இருக்கின்றாய்.”   (அல்குர்ஆன் : 3:8)

உள்ளங்களைத் திருப்பக்கூடியவனே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தைத்  திருப்பி  வை.”  (முஸ்லிம் 5161)

இதனை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அடிக்கடி பிரார்த்தனை செய்து  வந்தார்கள். 

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கைக் கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரைக் கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்  தவிர!”  (அல்குர்ஆன் 103)

Previous post:

Next post: