அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
“மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! அவனுடைய முயற்சிக்கு ஏற்பவே பலன் கிடைக்கும்” (3:39,40)
மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முக்கியமான இரண்டு செய்திகளை மேற்கண்ட வசனங்கள் கூறுகிறது.
எந்தவொரு மனிதனும் முயற்சிக்கான பலனை மட்டும் பெறமுடியாது. அவனுடைய செயலுக்கான பலனைத்தான் பெறுவான்.
அதாவது “முயற்சி‘ & “செயல்‘ இந்த இரண்டு சொற்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் அவற்றின் அர்த்தத்தில் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை யாரெல்லாம் புரிந்து கொண்டார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
“முயற்சி‘ என்பதும் “செயல்‘ என்பதும் நெருக்கமான ஒரே தொடர்புடைய சொற்கள்தான் என பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் வேறுபாடு உள்ளது. எவ்வாறு என்றால்
“முயற்சி”
ஒரு காரியத்தை செய்ய முயலும் நிலையை மட்டுமே குறிக்கும்.
“செயல்”
ஒரு காரியத்தை நடைமுறைப்படுத்துவது, செயல்படுத்துவதை குறிக்கும்.
அதாவது முயற்சியை விட உறுதியானதை குறிக்கும். எதுவொன்றையும் செய்வதற்கு “முயற்சி‘ மட்டும் போதுமானதல்ல. அது செயலில் வரவேண்டும். செயலில் வராத முயற்சி வெறும் கனவாகவே இருக்கும். “செயல்”தான் முயற்சிக்கு உயர் கொடுக்கிறது.
வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் “முயற்சி” நிலையிலேயே தங்கி விடுவார்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தாலும் “செயல்”படாததால் வெற்றி கிடைப்பது இல்லை. மேலும் சிலருக்கு எப்போதுமே ஒரு குறை இருக்கும். அதாவது தன் உழைப்புக் கேற்ற கூலி கிடைக்க வில்லை. தான் எவ்வளவு பாடுபட்டாலும் போதிய பயன் கிட்டுவதில்லை என்பதுதான் அக்குறை.
இது மனிதர்களில் உள்ள குறைபாடு, ஆனால் அல்லாஹ் தன் அடியாருக்குக கூலி (பலன்) கொடுப்பது பற்றி எவரும்குறை சொல்லவே முடியாது.
ஏனெனில் முயற்சிக்கு முழுமையான (பலன்) கூலி கொடுப்பதில்லை. செயலுக்குத்தான் முழுமையான கூலி(பலன்) கொடுக்கப்படுகிறது.
ஒரு பழமொழி மூலம் இதை நாம் விளங்கலாம்.
“முயற்சி இல்லாமல் செயல் இல்லை; செயல் இல்லாமல் வெற்றி இல்லை”
இன்னும் தெளிவாக சொல்வது என்றால்;
“முயற்சி” என்பது ஆரம்பம் மட்டுமே,
“செயல்” என்பதுதான் நடைமுறை.
“விதைப்பதே முளைக்கும், விதைத்தால் தான் முளைக்கும்”
முயற்சி மனிதன் கடமை;
செயல் மனிதனின் அடையாளம்;
முடிவு அல்லாஹ்வின் கையில்,
இதுவே இஸ்லாம் கட்டும் வழிமுறை.
இஸ்லாம் மனிதனால் செய்ய முடியா ததை எப்பவுமே சொல்வது கிடையாது. ஆனால் முயற்சி + செய் அதன் முடிவை இறை வனிடம் ஒப்படைக்க சொல்கிறது.
இதுதான் “தவக்கல்” அல்லாஹ்வின் மீதுள்ள முழுமையான நம்பிக்கை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் செயல்களால்தான் மதிப்பிடப்படுகிறது முயற்சியால் அல்ல.அதாவது இன்பம்–துன்பம் இரண்டிற்கும் காரணம் அவனே. இரண்டின் அதிகாரமும் அவனிடமே உள்ளன.
வாழ்க்கையை சீராக்குவதிலும், சீர்கெடுப்பதிலும் மற்றவர்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. அத்தகைய சக்தி உலகில் எவருக் குமில்லை.
ஒவ்வொரு மனிதனும் தானே அவன் செயலுக்கு பொறுப்பாளியாவான். ஒரு மனிதனின் சுமையை (பொறுப்பை) இன்னொரு மனிதன் சுமக்கமுடியாது என்பதும் இஸ்லாத்தின் கோட்பாடு.