பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?
K.M.H. அபூ அப்தில்லாஹ்
இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெரும் பாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தங் களுக்கென்று பள்ளிவாசல்களைக் கட்டிக் கொண்டு ஒருசிலராவது ஐங்கால தொழுகைகளைத் தொழுது வருகிறார்கள். அப்பள்ளிகளில் தொழ வைப்பதற்காக இமாம்கள் அமர்த்தப்பட்டு தொழ வைக்கிறார்கள். அப்படிப்பட்ட இமாம்களில் பெரும்பாலோர் தர்ஹா சடங்கு சம்பிரதாயங்களை யும், கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது போன்ற அனாச்சார சடங்குகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவுலியாக்களின் பெயர்களால் கட்டப்பட்டுள்ள சமாதிகளுக்கு முன் சென்று “சுஜூது’ செய்பவர்களாகவும், அதை நியா யப்படுத்துகிறவர்களாகவும் அவர்களில் சிலர் இருக்கலாம். அவர்கள் செய்யக்கூடிய இக்காரியங்கள் இறைவனுக்கு இணை வைக்கும் “ஷ´ர்க்’ அளவில் கொண்டு சேர்க்கும்; அவர்கள் தங்களின் ´ர்க்கான செயல் களை உணர்ந்து தவ்பா செய்து மீளவில்லை என்றால், நாளை மறுமையில் அவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்; நரகில் எறியப்படுவார்கள் என்பதை குர்ஆனும், ஹதீஃதும் மிகத் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இது விஷயத்தில் குர்ஆன், ஹதீஃத்களை முறைப் படி விளங்கியவர்களிடத்தில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஆனால் அப்படிப்பட்ட இமாம்களை இவ்வுலகிலேயே “முஷ்ரிக்’காக மாற்றி அவர்கள் பின்னால் தொழுவது கூடாது என்று ஃபத்வா கொடுத்து வாலிப உள்ளங்களில் முறுக்கேற்றி ஊரையே இரண்டாக்கி தனிப் பள்ளி கட்டி, அல்லாஹ்வும், ரசூலும் ஒரே உம்மத்-சமுதாயம் என்று தெளிவாகச் சொல்லி இருப்பதற்கு மாற்றமாக சமுதாயத்தைப் பிளவுபடுத்தலாமா? அதற்கு மார்க்கத் தில் அனுமதி இருக்கிறதா? என்பதுதான் இப்போது நம்முன் இருக்கிற தலையாய விவகாரமாகும்.
நேர்வழி நடப்பவர்கள் குர்ஆன், ஹதீஃத்படி நடப்பவர்கள் தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவர்களிடம் கண்டிப்பாக குர்ஆன், ஹதீஃத் ஆதாரமிருக்க வேண்டும். அதுவும் அவர்கள் எடுத்து வைக்கும் குர்ஆன் வசனமோ, ஹதீஃதோ அந்த வியத்தைப் பற்றியே சொல்ல வேண்டும். மற்றபடி ஒரு ஆயத்தை, ஒரு ஹதீஃதை எடுத்து எழுதி அதி லிருந்து யூகமாக ஒரு சட்டத்தைச் சொல்லக் கூடாது. மத்ஹபுகளை உண்டாக்கிய இமாம்கள் (ஹி.80லிருந்து 241 வரை வாழ்ந்த மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்கள் அல்ல. காரணம் அவர்கள் மத்ஹபுகளை அமைக்கவில்லை) இப்படித் தான் குர்ஆனிலிருந்தும், ஹதீஃதிலிருந்தும் யூகமாகச் சொல்லியே பல சட்டங்களை வகுத்தனர். அவையே சமுதாயத்தில் பெரும் பிளவுகளை உண்டாக்கி விட்டன.
இப்போது குர்ஆன், ஹதீஃத்படி நடக்கி றோம் என்று கூறிக் கொள்ளும் மவ்லவிகளும் முகல்லிது மவ்லவிகள், இமாம்கள் செய்த அதே தவறையே செய்து வருகின்றனர். இவர்களது சொந்த யூகமில்லாமல் எந்த ஆயத்தும், எந்த ஹதீஃதும் இப்படிப்பட்ட ´ர்க்கான சடங்குகளைச் செய்யும் இமாம்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சொல்லவில்லை என்பதே உண்மையாகும். இது சம்பந்தமாக வந்துள்ளதாக இவர்களால் சொல்லப்படும் ஆயத்துகள், ஹதீஃத்கள் இவை அனைத்தையும் கட்டு ரைகளாகவும், இடையிடையே இதுவரை விமர்சன விளக்கங்களாகவும் எடுத்து வைத்து தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆயினும் அச்சகோதரர்கள் பிடிவாதமாக அதே தவறைச் செய்து, தொடர்ந்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வருகின்றனர்.
எனவே மீண்டும் இந்த ஆக்கத்தில் அவர் களின் “ஃபத்வா’ எந்த அளவு குர்ஆன், ஹதீஃ துக்கு முரணானது, அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடும் பெருங்குற்றம்; அதன் மூலம் இவர்களும் இணை வைக்கும் (ஷ´ர்க்) குற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தக் கடமைப்பட்டி ருக்கிறோம். குறிப்பிட்ட ஒருசில இமா மைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ள ஒரு ஹதீஃ தையும் பார்க்க முடியவில்லை. ஆயினும் குறைகளுள்ள இமாமைப் பின்பற்றித் தொழ கட்டளையிட்ட ஹதீஃத்கள் வருமாறு :
“உங்களுக்குச் சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான்; அன்றி அவர்களுக்குத்தான் கேடு” என்று நபி(ஸல்) அவர் கள் கூறினர். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல் : புகாரி : 694.
“ஒரு கூட்டத்தார் வந்து உங்களுக்குத் தொழ வைப்பார்கள். அவர்கள் (தொழு கையை) நிறைவாகச் செய்வார்களானால் அவர்களுக்கும், உங்களுக்கும் நல்லதுதான். (அவ்வாறின்றி) அவர்கள் (தொழுகையில்) குறைபாடு செய்வார்களாயின் அவர்களுக்குத்தான் கேடு; உங்களுக்கு நல்லதுதான். (அவர்கள் தொழுகையில் செய்துள்ள குறை பாட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏது மில்லை)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல் : நஸயீ.
“தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக் கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரும். அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால் உங்கள் இல்லங்களில் (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள். பின்பு அவர்களுடனும் தொழுங்கள். அவர்களைப் பின்பற்றித் தொழும் தொழுகையை உபரியான(நஃபில்) தாகக் கருதிக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூது (ரழி), நூல்: நஸயீ.
தொழுகையிலேயே குறை செய்யும் இமாம்களையும் பின்பற்றித் தொழத்தான் வேண்டும். அந்தக் குறைகளைக் காட்டி அவர்கள் பின்னால் தொழுவதை மறுத்துக் கூறுவது கூடாது; அது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ்செயல் என்பதை நபி(ஸல்) அவர்கள் அழகுபட தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். தொழுகையின் உள்ளே அவர்கள் செய்யும் குற்றங்களோ அவர்கள் பின்னால் தொழுபவர்களின் தொழுகையைப் பாதிக்காது; அது அவர்களுக்கு நல்லதுதான் என்று நபி(ஸல்) அவர்கள் நன்மாராயங் கூறி இருக்கிறார்கள். இந்தக் காரணங்களைச் சொல்லி அவர்கள் பின்னால் தொழாமல் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடிய செயலை விட்டு விலகிக் கொண்டது அவர்களுக்கு நல்லதுதான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இப்போது சிந்திக்க வேண்டும். தொழுகையின் உள்ளே செய்யும் அவர்களின் குற்றங்களே பின்னால் தொழுபவர்களின் தொழுகையைப் பாதிக்காது என்றிருக்கும்போது, தொழுகைக்கு வெளியே அவர்கள் செய்யும் ´ஷர்க், பித்அத் போன்ற செயல்கள் எவ்வாறு அவர்கள் பின்னால் தொழுபவர்களின் தொழுகையைப் பாதிக்கும்? “ஒருவரது சுமையை இன்னொருவர்” சுமக்கமாட்டார் (அல்குர்ஆன் 6:164) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவாக அறிவித்திருக்கும் நிலையில், இமாமின் தொழுகையே கூடாமல் போனாலும் அவர் பின்னால் தொழுப வரின் தொழுகையை அல்லாஹ் எப்படி ஏற்காமல் விடுவான்?
உதுமான்(ரழி) அவர்களின் அழகிய உப தேசம் கேளுங்கள் :
அதிய்யு பின் கியார் என்பவர் உது மான் (ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டி ருந்த போது அவர்களிடம் வந்து, “”நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள்; இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். அதற்கு (உதுமான்(ரழி) அவர்கள் “தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்ப வர்களாய் இருப்பின் அவர்களின் அத் தீமையை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத் துக் கொள்வீராக” என்றார்கள். அறிவிப்பவர்: அதிய்யு பின் கியார்(ரஹ்) நூல்: புகாரி.
நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்து நன்மாராயம் பெற்ற, நேர்வழி நடந்த கலீஃபாக்களில் ஒருவரான உதுமான்(ரழி) அவர்களின் இந்த அழகிய உபதேசத்தைச் சிந்தித்து விளங்கும் ஒருவர், பின்பற்றக் கூடாத பள்ளி இமாம் ஒருவர் இருப்பதாக கனவி லும் நினைக்கமாட்டார். அது எவ்வளவு பெரிய கொடுமை, சமுதாயத்தைப் பிளக்கும் அநீதி என்பதைப் புரிந்து கொள்வார்.
உதுமான்(ரழி) யார் பின்னால் தொழச் சொன்னார்கள்? தன்னை அநீதமாகச் சிறைப்படுத்தி கொடுமைகள் செய்ததுடன், தாம் இமாமாக நின்று தொழுத இடத்தில், தம்முடைய அனுமதி இல்லாமல் அக்கிரமமாக நின்று தொழுவதற்கு ஒருவரைப் பின்பற்றித் தொழும் விஷயத்தில் இவ்வாறு அழகிய உபதேசம் செய்கிறார்கள். தொழுகை மக்களின் அழகிய அமல், அந்த அழகிய அமலை யார் செய்தாலும் அவரைப் பின் பற்றித் தொழவேண்டும். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்பதை உணர்த்தா மல் உணர்த்துகிறார்கள். அல்குர்ஆன் 39:18 இறைக்கட்டளையை ஓதி உணர்கிறவர்கள் இதை மறுக்க முடியாது. இங்கு அக்கொடியவர்கள் “ஷ´ர்க்’ செய்யவில்லையே என்று தடுமாறலாம். “அவர்கள் தீமை விளைவிப்பவர் களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராக’ என்ற அழகிய உபதேசத்தில் “அவர்கள்’ ஷ´ர்க் செய்பவர்களாக இருப் பின் அவர்களின் அந்த ஷ´ர்க்கான செயல்களை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராக’ என்ற அழகிய உபதேசமும் அதில் பொதிந்தே இருக்கிறது என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்க முடியும்.
அவர் பின்னால் தொழுவதால், அவர் தொழுகைக்கு வெளியில் செய்யும் ஷ´ர்க்கான செயல்களுக்கு நாமும் துணை போனதாக ஆகாது என்பதும் உதுமான்(ரழி) அவர்களின் அழகிய உபதேசத்திலிருந்து நமக்கு விளங்குகிறது. உதாரணமாக ஒரு முஸ்லிம் ஒரு ஹிந்து சகோதரருடன் போய்க் கொண்டிருக்கிறார். இந்த வேலையில் பக்கத்திலுள்ள பள்ளியிலிருந்து பாங்கு சப்தம் கேட்கிறது. அப்போது அந்த ஹிந்து சகோதரர் முஸ்லிமைப் பார்த்து, “பாய் போய் தொழுது விட்டு வாருங்கள்’ என்று கூறுகிறார். உடனே அந்த முஸ்லிம் “போயா?! நீ ஒரு காஃபிர்; நீ சொல்லி நான் தொழுவதா?’ என்று கூறி அந்த ஹிந்து சகோதரரின் கூற்றை நிராகரித்து தொழாமல் விட்டு விட்டார். அல்லாஹ் இந்த முஸ்லிமை விட்டு விடுவானா? அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து இவன் தப்புவானா? நல்லதை அழகானதை எவன் சொன்னால் என்ன? எவன் செய்தால் என்ன? அந்த அழகானதை எடுத்து நடப்பது, பின்பற்றுவது அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்ற ஒரு உண்மை முஸ்லிமின், ஒன்றுபட்ட சமுதாய நலன் நாடும் உண்மை விசுவாசியின் கடமை அல்லவா? இதைத்தானே 39:18 இறைக் கட்டளை உணர்த்துகிறது.
அல்லது அந்த இமாமின் தொழுகை அவர் இணை வைத்தால் வீணாகி விடுவதால் பின்னால் தொழுபவரின் தொழுகையும் வீணாகி விடும் என்று சொல்லுகிறார் களா? அதுவும் தவறாகும். இமாமின் தொழுகை நிறைவேறாமல் போனாலும், வீணாகி விட்டாலும், அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் முஃமின்களின் தொழுகை நிராகரிக்கப்படுவதில்லை இதோ இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்களின் வாழ்வின் ஒருநாள் நடந்த சம்பவம்.
ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி-குளிப்புக் கடமை உள்ளவர்களாக இருக்கும்போது, (அது தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்துவிட்டார்கள்.
பின்னர் விஷயம் தெரியவே அவர்கள் மட்டும் தொழுகையை மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை.
(அஷ்ரீ துஸ்ஸகஃபி தாருகுத்னீ)
இந்த சம்பவத்திலிருந்து இமாமின் தொழுகை வீணாகிவிட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் அதனால் மஃமூன்களின் (பின்பற்றுபவர்களின்) தொழுகை நிராகரிக்கப் படுவதில்லை என்பதை அறிகிறோம்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒரு பள்ளியில் பாங்கின்போது தற்போது சில பள்ளிகளில் நடைபெறுவது போல் பித்அத்தாக சில வாசகங்களை இணைத்துச் சொன்னதைக் கேட்டதும் அந்தப் பள்ளியில் தொழாமல் சென்றதாக தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஒரு கதை காணப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்ற கொடிய அக்கிரமம், அநியாயம் செய்பவர்கள் பின்னாலும், கஷ்பிய்யா, காரிஜிய்யா போன்ற பெரும் குழப்பவாதி களுக்குப் பின்னாலும் தொழுததாக இமாம் புகாரி(ரஹ்), நாபிஉ(ரழி) போன்றோர் அறிவித்தது, திர்மிதி, அபூதாவூது, நஸயீ, ஸுனனு ஸலீது பின் மன்சூர் போன்ற நூல் களில் பதியப்பட்டுள்ளது.
ஆக ஒருசில இமாம்களுக்குப் பின்னால் தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்களோ, நேர்வழி நடந்த கலீஃபாக் களோ, நபிதோழர்களோ கூறியதாக ஒரு ஆதாரத்தையும் இவர்களால் தரமுடியாது. அந்தக் காலத்தில் ஷ´ர்க் செய்யக்கூடிய இமாம் யாரும் இருக்கவில்லை. எனவே அப்படி தடுத்துச் சொன்ன ஆதாரத்தைப் பார்க்க முடியாது என்பது இவர்களது வாதமாகவும். இதுவும் அறிவற்ற ஒரு வாதமே யாகும். முகல்லிதுகள் “இப்போதைய பெண்களின் நிலையை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், பெண்களைப் பள்ளிவாச லுக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள்” என்று ஆயிஷா(ரழி) கூறியதாக ஒரு கற்பனைக் கதையைக் கூறுவது போல், இவர்களும் அன்று ´ஷர்க் செய்யக் கூடிய இமாம்கள் இருக்கவில்லை. அதனால் அதைத் தடுத்த ஹதீஃத்களில்லை.
இப்போது நாங்கள் தடுத்து ஃபத்வா கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். மற்றபடி அல்லாஹ் முக்காலமும் அறிந்தவன். உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் ஒரு உயரிய மார்க்கத்தையே மக்களுக்கும் கொடுத்திருக்கி றான். பின்னால் இப்படிப்பட்ட ´ஷர்க் செய்யும் இமாம்கள் தோன்றுவார்கள் என்பது அல்லாஹ்வுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். அல்லாஹ் மறதியாளனோ, தவறிழைப் பவனோ இல்லை. “எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்றும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ அவர்களுக்கே அபயமுண்டு. இன்னும் அவர்களோ நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்’ (5:82) என்று அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறும் வசனத்தின் மூலம் ஷ´ர்க் செய்யும் ஒரு முஸ்லிமை இங்கு காஃபிர், முஷ்ரிக் என்று தீர்ப்பு அளிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
எனவே எந்த ஒரு சட்டத்தையும் பின்னால் வருபவர்கள் மார்க்கத்தில் திணிக்கும் வகையில் அல்லாஹ் விட்டு வைக்க வில்லை என்பதை சரிவர உணர்ந்தவர்கள் இப்படியயாரு குருட்டு ஃபத்வாவை வெளியிடமாட்டார்கள். ஷ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழுவது கூடாது என்றால் அதை அல்லாஹ் அன்றே தெளிவாக நேரடியாக தனது இறுதி நபி மூலம் அறிவித்துக் கொடுத்திருப்பான். காரணம் இது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஒரு மிகப் பாரதூரமான விஷயம் என்று உறுதியாக நம்புவார்கள். தான்தோன்றித்தனமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு அவர்கள் ஃபத்வா கொடுக்க முற்படமாட்டார்கள். 42:21 வசனப்படி நாளை அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள். அல்லாஹ்வின் கருணையால்தான் இப்படி அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு குருட்டு ஃபத்வா கொடுத்தும் அல்லாஹ் உடனடியாகப் பிடிக்காமல் விட்டுவைத்திருக்கிறான் என்பதையும் நல்லடியார்களாக இருந்தால் உணர்ந்து கொள்வார்கள். தவ்பா செய்வார்கள்.
“´ர்க்’ செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து அதை நியாயப்படுத்துகிற சகோதரர்கள் கருணாநிதி பின்னால் தொழ முடியுமா? ஒரு காஃபிர் பின்னால் தொழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உணர்வுகளுக்கு எளிதாக அடிமையாகும் வாலிபர்களைக் கொதிப்படையச் செய்து சமுதா யத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ்செயலைச் செய்கிறார்கள். எந்த அளவு இவர்கள் ஷைத்தானின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை நிதானமாகச் சிந்தித்து உணர வேண்டும். இன்று முஸ்லிம் மஹல்லாக்களி லுள்ள பள்ளிகளில் எந்தப் பள்ளியில் கருணாநிதி இமாமாக இருந்தார்? அல்லது ஒரு காஃபிர் என்று தன்னைப் பிரகடனப் படுத்துகிறவர் இமாமாக இருக்கிறார்? சொல்வார்களா? குறைந்தது ஒரேயயாரு பள்ளியையாவது இவர்கள் காட்டுவார்களா?
“ஒருவன் தனது ஆண்குறியை தனது பின் துவாரத்தில் நுழைத்தால் குளிப்பு கடமையாகாது; ” “மனிதனுக்கும், மிருகத்திற்கும் பிறந்தவன் இமாமத் செய்யலாம்” போன்ற முட்டாள்தனமான, நடைபெற சாத்தியமே இல்லாத சட்டங்களை முகல்லிது வாத சட்டங்களை “பிக்ஹின்’ பெயரால் முகல்லிது இமாம்கள் இயற்றி வைத்திருக்கிறார்கள் என்று அவர்களை நையாண்டி பேசி கேலி செய்யும் இந்த தவ்ஹீது மவ்லவிகள், இமாம்கள்(?) அதே நையாண்டிக்கும், கேளிக்கும் ஆளாவதை உணர முடியவில்லையா? என்னே மதியீனம்? முஸ்லிமல்லாத ஒரு காஃபிரை எந்த மஹல்லாவிலாவது, பள்ளியிலாவது இமாமாக நியமிக்கும் சூடு சொரணையற்ற முஸ்லிம்கள் இருப்பதாக இவர்கள் கற்பனை செய்கிறார்களே? இப்போதாவது கருணாநிதி பின்னால் தொழலாமா? ஒரு காஃபிர் பின்னால் தொழ லாமா என்ற அறிவீனமான, முட்டாள்தனமான, ஷைத்தானுக்கு அடிமைப்பட்டு வெளிப்படுத்தும் கேள்வியை விட்டொழிப் பார்களா? தங்களை நம்பிப் பின்னால் வரும் வாலிப உள்ளங்களில் வெறியைத் தூண்டி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ்செயலை விட்டொழிப்பார்களா?
நாம் ஆரம்பத்திலிருந்தே “பின்பற்றக் கூடாத இமாமுண்டா?” என்ற தலைப்பி லேயே கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம். காரணம் காலம் காலமாகப் பள்ளிகளில் இமாமாகப் பணி புரிகிறவர்களின் பின்னால் தொழ மார்க்கத்தில் தடை இல்லை என்பதை நிலைநாட்டவே. மற்றபடி புதிதாக ஒரு இமாமை நியமிப்பது சம் பந்தமாக நாம் எழுதவில்லை என்ற சாதாரண மக்களுக்குப் புரியும் உண்மையும் இந்த அறிஞர்களுக்குப் புரியாதிருப்பது வேதனையான வியமே!
இப்போது அவர்கள் தங்களின் ஃபத்வாவுக்கு ஆதாரமாகக் கொடுக்கும் குர்ஆன் வசனங்களிலோ, ஹதீஃத்களிலோ அவர்கள் கூறிடும் கருத்து இருக்கிறதா? என்று ஆராய்வோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மாபெரும் குற்றம். அந்த குற்றத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இணை வைப்பவர்களின் அமல்கள் அனைத்தும் அழிந்துவிடும். நாளை மறுமையில் அவர்களின் நல்லமல்கள் மலைபோல் இருந்தாலும் அவை நிறுக்கப்பட்டு கூலி கொடுக்கப்படாது. அதற்கு மாறாக நாளை மறுமையில் நரகில் போடப்படுவார்கள்; நரகிலிருந்து அவர்களுக்கு மீட்சியே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு இணை வைப்பவர் கடும் பகைவர்கள். இன்னும் இவை போன்ற குர்ஆன் வசனங்களை தங்களின் ஷ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக் கூடாது என்று ஃபத்வாவுக்கு ஆதாரமாகத் தருகிறார்கள். உண்மையில் இந்த ஆயத்துக்களின் கருத்துக்களை நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஷ´ர்க்கின் மிகக் கொடூர நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக் களை அந்த கொடிய செயலிலிருந்து மீள வைக்கச் சொல்கின்றனவா? அல்லது அப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களுக்கு இவ்வுலகிலேயே “குஃப்ர்-ஷ´ர்க்’ ஃபத்வா கொடுத்து இங்கேயே தீர்ப்பளிக்கச் சொல் கின்றனவா?
இதோ இந்த வசனத்தைப் பாருங்கள்: (நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு-நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். அல்குர்ஆன் 31:23 (இன்ஷா அல்லாஹ் தொடரும்)