வாங்க MOON-ஐப் பார்க்கலாம்!
M. சையத் முபாரக், நாகை
இஸ்லாம் உலக மக்களுக்காக!
அல்குர்ஆன் உலக மக்களுக்காக!
நபி(ஸல்) அவர்கள் உலக மக்களுக்காக!
சூரியன் உலக மக்களுக்காக!
பிறை மட்டும் ஊர் மக்களுக்கா?
சூரியன், சந்திரன் :
“ஒளியை உமிழக்கூடியதாக கதிரவனை (சூரியனை)யும், ஒளியை பிரதிபலிக்கக்கூடியதாக நிலாவை (சந்திரனை)யும் படைத்தவன் அவனே! ஆண்டுகளையும், காலத்தையும் நீங்கள் கணக்கிடுவதற்காக அவற்றிற்கு பல நிலைகளை (நிலாவின் மனாஸில்களை) தீர்மானித் தான். காரணமேயில்லாமல் எந்த ஒன்றையும் அல்லாஹ் படைக்கவில்லை. அறிவார்ந்த சமூ கத்திற்காகச் சான்றுகளை விளக்கிச் சொல்கிறான் அவன்.” (அல்குர்ஆன் 10:5)
மேலும் பார்க்க : அல்குர்ஆன் 2:189, 6:96, 13:2, 14:33, 31:29, 36:38-40, 55:5.
Moon என்பதிலிருந்துதான் Month பிறந்தது. பழங்காலத்தில் இருந்து நிலாவைக் கொண்டே காலங்களை (தேதி, மாதம், ஆண்டு) கணக்கிட்டு வந்ததால் நிலாவிற்கு திங்கள் (மாதம்) என்ற பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.
சூரியனைக் கொண்டு நாட்களை, மாதங்களை, ஆண்டுகளைக் கணக்கிடும் முறை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. சூரியனைக் கொண்டு இது (இன்று) எத்தனையாவது நாள் என்பதை, நிலாவின் தோற்றத்தைக் கொண்டு இன்று எத்தனையாவது நாள் என்பதை நாம் அறிந்து கொள்வதுபோல் அறியமுடியாது. வானியல் (வானவியல்) ஆய்வாளர்களால் மட்டும்தான் அறியமுடியும். நிலாவைக் கொண்டு காலத்தைக் கணக்கிடும் முறையைத் தான் அல்லாஹ்(ஜல்)வும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின் முதல்(நாள்) பிறை தோன்றுவது வெவ்வேறு இடங்களில் என்பது உண்மைதான். அங்கிருந்து ஒவ்வொரு நாட்டின் பக்கமும் அது வரும்போது வளர் பிறையாக இருக்குமே அல்லாது ஆலிம்(கள்) கூறுவது போல் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் முதல் பிறை தோன்றாது.
சூரியன் ஒவ்வொரு நாளும் நேர்கிழக்கில் உதிக்கிறது என்று நாம் நினைக்கிறோம். அது உண்மை அல்ல. சூரியன் வருடத்தில் இரு நாட்கள் மட்டுமே நேர்கிழக்கில் தோன்றும். அதன் உதயம் சிறிது சிறிதாக ஆறு மாதம் வடகிழக்கிலும், ஆறு மாதம் தென்கிழக்கிலும் நகரும். அதுபோல உதய நேரமும் மாறக் கூடியதே.
இதைச் சாதாரணமாக கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமாகவும், குளிர்காலத்தில் இரவும் பொழுது அதிகமாகவும் இருக்கும் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். பெரிய நாடுகள் ஒவ்வொன்றிலும் கூட அதிக நேர வித்தியாசம் இருக்கும்.
அலுவலக வேலைகளுக்காக ஒரே நேரம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் தொழுகை நேரம் மாறுவதிலிருந்து இதனை அறிந்து கொள்ள முடியும். கிரீன்விட்ச்சிலிருந்து ஒவ்வொரு 15டிகிரி (பதினைந்து டிகிரி)க்கும் ஒரு மணி நேரம் வீதம் வித்தியாசம் இருக்கிறது.
அதன் காரணமாகத்தான் நாளின் ஆரம்பத்தை இரவு(காலை) 12.01மணிக்கு ஆரம்பிக் கின்றனர். இரவு 11.00(PM) மணிக்கும் அதிகாலை 1.00(AM) மணிக்கும் ஏதாவது (பகல், இரவு போன்ற மாறுதல் இருக்கிறதா? அப்படி எந்த வேறுபாடும் இல்லாதபோது நாள் மாறு கிறது என்பதில் என்ன Logic (தர்க்க ரீதியான, அறிவான காரணம்) இருக்கிறது? ஆனால், மேற்கத்தியர்கள் இதனை நம் மனதில் பதிய வைத்துவிட்டனர்.
ஒரே தேதி, ஒரே நாள் :
உலகம் முழுவதும் இன்று திங்கட்கிழமையாக இருக்கிறது. நமது நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். அந்த சர்வாதிகாரி சொல்கிறார். “நான் வித்தியாசமானவன்; மாற்றத்தை ஏற்படுத்துபவன் அதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை நமது நாட்டில்‘ என்று. அவர் பிரகடனத்தை நாம் ஏற்றுதானே ஆகவேண்டும். அல்லாஹ்வின் அச்சம் இல்லை என்றால் தேதி மாற்றம் ஆட்சியாளர்களுக்கு எளிதானதே.
இது ஆலிம்(கள்) கூறும் பிறை மாற்றத்தைப் போல் தெரிகிறதே என்று நினைத்தால் அது உங்கள் விருப்பம். தேவைப்பட்டால் சூரிய நாட்களையும் மாற்றமுடியும்.
நிலா தனது சாட்சியத்தின் மூலம் இன்று எத்தனையாவது தேதி(பிறை) என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மையை உறைத்துக் காட்டிவிடும். ஆனால், சூரியக் காலண்டரில் நாலைந்து நாட்களை மாற்றி னாலும் கூட அதனை பொதுமக்களுக்குச் சுட்டிக் காட்டிட சூரியனிடம் எந்தச் சாட்சியமும் இல்லை. சூரியனைக் கொண்டு பகல், இரவு என்று ஒருநாளை அறியலாம். நிலாவைக் கொண்டு நாட்களை (தேதிகளை), மாதங்களை, ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
தொழுகை, நோன்பு :
இக்காலத்தில், கடிகாரத்தைக் கொண்டு தொழும் நேரத்தை எளிதாக அறிந்து கொள்கிறோம். அக்காலத்தில் தொழும் நேரத்தை அனைவராலும் அறிந்துகொள்ள முடியாது. அது சிரமம். ஒவ்வொருவராலும் நிழலை அளவிட்டு (அளந்து) தெரிந்துகொள்ள முடியாது. புழுதிக் காற்று, மேகம், மழை போன்றவைகள் சூரியனை மறைக்கும்போது நிழலும் தெரியாது.
ஒருசில கருவிகளைக் கொண்டு ஒரு சிலரால் மட்டுமே நேரத்தைக் கணக்கிட முடியும். இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. இதுகூட அறிவிப்பாளர் நியமிக்கப்பட்டு அதான்(பாங்கு) சொல்லப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இன்றுகூட மாற்று மதத்தினர் பாங்கு(ஃபஜர்) சொல்வதைக் கேட்டு “பொழுது புலரப் போகிறது” என்பதை உணர்ந்து கொண்டேன் என்பர். அதானின் முக்கிய நோக்கம் தொழுகை நேரம் அறிந்து ஜமாஅத்தாக தொழ ஆண்கள் ஒன்றுகூட வேண்டும் என்பதே.
அக்காலத்தில், பிறை பார்ப்பது மக்களுக்கு எளிதாக இருந்தது. அதனால், நோன்பு பிடிப்பதில், பெருநாள் கொண்டாடுவதில், மற்ற இஸ்லாமியக் கடமைகளை, கட்டளை களை (ஜகாத், ஹஜ், இத்தா, பால்குடி மறக்கடித்தல், குழந்தை மூத்திரம்(சிறுநீர்) ஆடையில் படுதல், கடன் பத்திரம் எழுதுதல் போன்றவைகளை)க் கடைபிடிப்பதில் மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. அதனால், பிறை பார்த்து அதனை அறிவிப்புச் செய்ய எந்த அறிவிப்பாளரும் நியமனம் செய்யப்படவில்லை. இக்காலத்தில் தான் பிறை பார்ப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றி அமைக்கப்படுகிறது.
சுற்று, பயணம் :
நிலா பூமியை 27.32 நாட்கள் (27 நாள், 7 மணி, 43 நிமிடம்) சுற்றும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் ஒரு அமாவாசைக்குப் பிறகிலிருந்து வரும் (மறு) அமாவாசை வரை நிலா பூமியைச் சுற்றிவர சராசரி 29.52 நாட்கள் (29 நாள், 12 மணி, 44 நிமிடம்) ஆகின்றன. அதனால் சில மாதங்கள் 29 நாட்களைக் கொண்டதாக வும், சில மாதங்கள் 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
“…மாதம் என்பது சில வேளை 20 நாட்களாகவும், சில வேளை 30 நாட்களாகவும் இருக்கும்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1013)
பகல், இரவு :
இரவு பகல், பகல் இரவு என்றும் சூரியன் சந்திரன், சந்திரன் சூரியன் என்றும், பூமி வானம், வானம் பூமி என்றும் அல்லாஹ் தனது நூலில் முன்பின்னாக மாற்றிச் செல்கிறான். அவைகள் சிலேடைகளாக, தேவைக்கேற்பச் சொல்லப்படுபவைகள் ஆகும். நாம் கூட பால் பழம், பழம் பால் என்றும் தேன் பால், பால் தேன் என்றும் கூறுவோம். இதில் எது முதலாவது என்று ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.
ஆனால், அல்லாஹ்(ஜல்) ஒன்றைச் சத்தியமிட்டுச் சொன்னால் அது நிஜமானது; அது உண்மையானது; அது சரியானது. மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாது.
“சூரியன் மீதும் அதன் ஏறுவெயிலின் மீதும் சத்தியமாக! நிலவின் மீது, சூரியனை அது பின் தொடர்ந்து வரும்போது சத்தியமாக!” (அல்குர்ஆன் 91:1,2)
சூரியனைத் தொடர்ந்து வரும் நிலா என்பதும், ஒளி இருந்தால்தான்(சூரியன்) பிரதிபலிப்பு (நிலா) ஒளி ஏற்படும். (பார்க்க: அல்குர்ஆன் 25:61, 10:5) என்பதும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். சிந்தித்தால் பகலுக்குப் பிறகு இரவு என்பது புலப்படும்.
ஃபஜ்ரா? மஃரிபா?
அமாவாசை அன்று சூரியன்–நிலா–பூமி என்ற நிலையில் ஒரே நேர்கோட்டில் வரும். அமாவாசைக்குப் பின் சூரியனைப் பின்தொடர்ந்து நிலா வருகிறது. அப்படி வரும்போது சூரியன் 1 மணி நேரம் கடக்கும் தூரத்தை நிலா 1 மணி 2 நிமிடத்தில் கடக்கும். இப்படி நிலா சூரியனைப் பின்தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு 2 நிமிடம் பின்தங்கியதாகத் தொடர்ந்து செல்கிறது.
இப்படியாக, நிலா சூரியனைப் பின்தொடர்ந்து செல்லும்போது, முதல் வாரத்தில் சூரியன் நடுவானத்திற்கு வரும்போது நிலா கிழக்கில் உதிக்கும். பெளர்ணமி அன்று சூரியன் மேற்கில் மறையும்போது நிலா கிழக்கில் உதிக்கும்.
மாதக் கடைசியில், சூரியன் கிழக்கில் உதயமாவதற்கு முன் கிழக்கில் தேய்பிறை தெரியும். நிலா சூரியனை முந்த முடியுமா?
அல்லாஹ்(ஜல்) அவர்கள் சத்தியமிட்டுச் சொன்ன பின் இவ்வாறு நிகழ வாய்ப்பே இல்லை. அப்படியானால் சூரியனுக்கு முன் நிலா எப்படி வரமுடியும்? 29ம் தேதி சூரியன் உதயமாவதற்கு முன் தோன்றும் நிலா 28ம் தேதிக்கானது. 30ம் தேதி சூரியன் உதயமாவதற்கு முன் தோன்றும் நிலவின் தேதியோ 29 ஆகும். இதிலிருந்து நிலா சூரியனைப் பின் தொடர்ந்தே வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
“பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் சஃபான் மாதத்தை 30ஆக முழுமைப்படுத்துங்கள்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 1909)
இதைப் போன்ற ஹதீத்கள் அமாவாசையில் பிறை(நிலா) மறைக்கப்படுவதைக் கூற வில்லை. அதற்கு முன் மறைக்கப்படுவதைத்தான் கூறுகிறது. ஏனெனில், அமாவாசை அன்று நிலா மறைக்கப்படுவது ஒவ்வொரு மாதமும் நிகழக்கூடியதே.
“ரமழான் மாதப் பிறையை அறிவதற்காக சஃபான் மாதத்தின் பிறைகளை (அதன் நாட்களை) எண்ணிக் கணக்கிட்டு வாருங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ : 623)
“நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தம் மனைவியர்களுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். 29 நாட்கள் முடிந்து (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் “ஒரு மாதம் (வீட்டிற்கு) வரமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தீர்களே” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் “ஒரு மாதம் என்பது 29 நாட்களாகவும் அமையும்” என்று கூறினார்கள். (புகாரி : 1910)
இந்த ஹதீத்களிலிருந்து ஒரு மாதத்தின் நிலாவைக் கவனித்து வருதலே வரும் மாதத் தின் முதல் பிறையைத் தீர்மானிக்க உகந்தது என்பதை அறியலாம். (உ.ம்.) சஃபான் மாத நிலாவைக் கவனித்து கணக்கிட்டு வந்தால் போதும். அதன் மூலம், ரமழான் மாத முதல் பிறையை அவதானித்து விடலாம் (தெரிந்து கொள்ளலாம்).
முடிவு என்ன? கடிகாரத்தைக் கொண்டு தொழுகை நேரம் அறிவது எளிதாக்கப் பட்டிருப்பதைப் போல, சந்திரக் கணக்கீடும் (காலண்டரும்) நமக்கு மாதம் பிறப்பதை எளிதாக்கித் தருகிறது.
ஒரே தேதியில் ஒரே நாளில் (வெள்ளிக் கிழமையில்) உலகம் முழுவதும் ஜும்ஆ தொழுகிறோம். அதுபோல ஒரே தினத்தில் (நாளில்) ஒரே தேதியில் உலகம் முழுவதும் நோன்பு பிடிக்கலாம்; பெருநாள் கொண்டாடலாம். இன்ஷா அல்லாஹ். அதற்கான மனம் நம்மிடம் இருந்தால் இவைகள் எல்லாம் நமக்கு சாத்தியப்படும்.
“வானங்களிலும் வையகத்திலும் எத்தனை எத்தனை சான்றுகள்! அன்றாடம் இவர்கள் அவற்றைக் கடக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவற்றை விட்டு முகம் திருப்பிக் கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 12:105)
“அறிவுறுத்து! வானங்களிலும் வையகத்திலும் உள்ளதைக் கொஞ்சம் பாருங்கள். நம்பிக்கைக் கொள்ளத் தயாராகாத மக்களுக்குச் சான்றுகளும் பயமுறுத்தல்களும் ஒரு பயனும் அளிக்கப் போவதில்லை.” (அ.கு. 10:101)
அல்லாஹ்(ஜல்) நம் அனைவரின் அறிவை அதிகரித்து, ஞானத்தை வழங்குவானாக! நம்மிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக! அல்ஹம்துலில்லாஹ்!