வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?
அபூ இஸ்ஸத், இலங்கை
ஜூலை 2026 தொடர்ச்சி…
“பல்ஆம் பின் பாஊரா”விடம் அவருடைய நெருங்கிய உறவினர்களும், அமாலிகா சமூக மக்களும் வந்து அவரிடம் “மூஸா” இரும்பு மனிதர்; அவருடன் அதிகமான படைகளும் உண்டு அவர் எங்களை வெற்றி கொண்டால் எங்களை அழித்துவிடுவார் ஆகையால் “மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் எங்களை விட்டும் தடுப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று வேண்டினார்கள். ஆரம்பத்தில் அவர் தயங்கிய போதிலும் அவர்கள் பணிவாகவும், மென்மையாகவும், தந்திரமாகவும், பேசிப் பேசி அவரை வற்புறுத்தியதன் காரணமாக; அவரும் அழிவுக்கான குழப்பத்தில் சிக்கினார்; ஈற்றில் இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் எதிராக, அவர்கள் அழிந்து போவதற்காகப் பிரார்த்தனை செய்தார். (இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:958,959)
அவ்வளவுதான், அந்தப் பாவத்தின் கார ணமாக அதுவரை அவர் பெற்றிருந்த கல்வி ஞானங்கள் அனைத்தையும் அல்லாஹ் பறித்துக்கொண்டான். (இப்னு அப்பாஸ்(ரழி) தஃப் ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:958)
அவர் இஸ்ரவேலர்களுக்கு எதிராக எழுந்து நின்று பிரார்த்தனை புரிந்தபோது அவரது நாவை அவருடைய சமுதாயத்தாருக்கு எதிராகவும், இஸ்ரவேலர்களுக்கு ஆதரவாகவும், சாதகமானதாகவும், அல்லாஹ் திருப்பிவிட்டான், இதைக் கண்டு திகைத்த அவருடைய சமுதாயத்தார் அவரிடம் “பல்ஆம்” நீர் என்ன செய்கிறீர் என்பது உமக்குத் தெரிகிறதா? எங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவாகவுமே பிரார்த்தனை செய்கிறீர்? என்று கூறி னார்கள். அதற்கு அவர் “இது என்னையும் மீறிய செயல் இதில் அல்லாஹ்வின் கை ஓங்கி விட்டது‘ என்றார். (இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:958,959) அத்துடன்;
இறைத் தூதர் முஸா(அலை) அவர்களுக்கு எதிராகவும் அவர்களோடு இருந்தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்த அவரது நாக்கு வெளியே நீண்டு வந்து தொங்கி அவரது நெஞ்சு மீது விழுந்தது அப்போது அவர்; “இப்போது இம்மையும் மறுமையும் என்னை விட்டும் சென்றுவிட்டன என்றார். (இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ(ரஹ்), வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்), இப்னு கஸீர் 3:958, 959) அதனையே அவரது நிலை நாயின் நிலையை ஒத்திருக்கிறது. அதை நீர் துரத்தினாலும் நாக்கைத் தொங்கப் போடுகிறது. அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கப்போடுகிறது. (7:176) என்று அல்லாஹ் சொல்கிறான்.
இருந்திட்ட போதிலும் அவர் திருந்தி விடவில்லை; நபிக்கும், அவரோடு இருப்பவர்களுக்கும் எதிராக சதியும், சூழ்ச்சியும்தான், இப்போதுள்ள எஞ்சிய ஒரே வழி என்று சொன்னவர் “கன்ஆன்” குலப் பெண்களில் அழகிய பெண்களை அலங்கரித்து விபச்சாரம் செய்வதற்காக அழைக்கப்பட்டால் இணங்கிச் செல்லவேண்டும் எனக் கூறி இஸ்ரவேலர்களின் பக்கமாக அனுப்பச் சொன்னார். அப்போது இஸ்ரவேலர்களில் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான “ஸிம்ரீ பின்லூம்‘ என்பவருக்கு அருகில் அலங்கரிக்கப்பட்ட “கன்ஆன்‘ குலத்து அழகுப் பெண்களில் ஒருத்தி வஞ்சக எண்ணத்தில் சென்றபோது அவர் அவளைத் தமது கூடாரத்துக்குள் “பகிரங்கமா” அழைத்துச் சென்று அவளுடன் தவறான உறவு கொண்டார். இதனால் அவர்கள் மீதும் அல்லாஹ்வின் கோபப் பார்வை இறங்கியது. (இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தீ(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:958,959) அந்தப் பாவத்தின் விளைவு;
இதனால் மேலும் அழிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் :
இஸ்ரவேலர்களுக்கிடையே அல்லாஹ் கொத்துக் கொத்தாக அதிக மரணத்தை ஏற்படுத்தும் பொல்லாத “கொள்ளை” நோயை அனுப்பினான். அதனால் இஸ்ரவேலர்களில் எழுபதாயிரம் பேர் கொள்ளை நோயினால் அழிந்துபோனார்கள். அதில் ஒரு பகலின் சிறிது நேரத்திலேயே இருபதாயிரம் பேர் பலியானதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி), சுத்தீ(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:958,959) மேலும் பார்க்க குர்ஆன் 7:175-177.
கொள்ளை நோய் என்பதைக் குறிக்க மூலத்தில் “தாஊன்” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது இச்சொல்லுக்குப் பல பொருட்கள் கூறப்பட்டிருப்பினும் பொதுவாக; பிளேக், காலரா, அம்மை போன்ற வேகமாகப் பரவி அதிக மரணத்தை ஏற்படுத்தும் கொள்ளை நோய் அனைத்தையும் இது குறிக்கும், இந்நோயினால் பைத்துல் முகத்தீஸை அண்டிய பிரதேசங்களில் முப்பது ஆயிரம் பேர் இறந்தார்கள். இக்கொள்ளை நோயினால் தமது சமுதாயத்தாருக்குப் பேரழிவு ஏற்படும் என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். (முஸ்னது அஹ்மத், ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, புகாரி 6:375, பாடம் 30இன் 57ஆவது சிறு குறிப்பு)
இதனையே “கொள்ளை நோய்” என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது… (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்ட போது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆமிர் இப்னு ஸஅத்(ரழி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரழி), உஸாமா இப்னு ஸைத்(ரழி), புகாரி : 6974, 3473, 3474, 5728, 5729, 5730, 6973)
ஒரு சமூகத்தில் “விபச்சாரம்” பகிரங்கமாக நடக்குமாக இருந்தால் அவர்கள் தாமாகவே அல்லாஹ்வின் தண்டனையைத் தம்மீது வரவழைத்துக் கொள்கின்றார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), மஜ்மஉஸ் ஸவாயித் 4:118)
“விபச்சாரம்” ஒரு சமூகத்தில் பகிரங்கமாக நடக்குமானால் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்டிராத வியாதிகள் பரவி விடும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), இப்னு மாஜா 4019)
எனது சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம் புரிவதை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். அவர்களை இரவோடு இரவாக அல்லாஹ் அழித்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஆமிர்(ரழி), அபூ மாலிக் அல் அஷ்அரீ(ரழி), புகாரி : 6590)
அடுத்து; “நிறைந்த செல்வச் செழிப்புடன் வளமாக வாழ்ந்த ஓர் ஊராரைப் பற்றிய செய்தியை படிப்பினைக்காக அல்லாஹ் இங்கே அறியத் தருகின்றான்”. அரபி மொழிக்கு வரி வடிவம் ஆரம்பமாக உருவாகக் காரணமானதும், அரபி எழுத்து பரந்துபட்டுப் பிரபலமாகப் பரவியதும், நபி சுலைமான்(அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த அரசி பில்கீஸ் அவர்கள் ஆட்சி புரிந்ததும், இன்றைய சமன் நாடு என்று அழைக்கக் கூடியதுமான பிரதேசத்தைச் சேர்ந்ததுமான; (தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:473, சிறு குறிப்பி: 14ஆவது)
சிறந்த பாசன வசதிக்காக இரு மலைகளுக்கு இடையிலிருந்தும், இதர நீரோடைகளிலிருந்தும், மழைப் பொழிவுகளிலிருந்தும் வந்து சேரும் தண்ணீரை அவர்களின் பண்டைய மன்னர்கள் திட்டமிட்டு இரு மலைகளுக்கு இடையே உறுதி வாய்ந்த அணை கட்டி மாபெரும் வற்றாத நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மானித்ததனால் நீர்மட்டம் உயர்ந்து அதன் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டதனால் “மஃரிப்” எனும் ஊரில் அமைந்த பிரபல்யமான நீர்த் தேக்கத்தை பெரும் அருளாகப் பெற்ற பிரதேசவாசிகளான; அதனால் மலைகளின் இரு புறங்களிலும் காய்கறி கனி வர்க்கங்களின் மரங்கள் நாட்டப்பட்டு அவர்களின் சாலைகளின் வலப்புறமும், இடப்புறமும் வளமான இரண்டு செழிப்பான பழத் தோட்டங்களிலிருந்து அதி உயர்ந்த பட்சமாக எவ்வளவு அதிகமாகவும், அழகாகவும் தாராளமான வாழ்வாதாரங்கள், விளைச்சல்கள், கனி வகைகள், ரம்மியமான சூழல்கள், அடர்த்தியான நிழல்கள், ஓடும் நதிகள் என பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் வளம் பெற்று அவர்களது நகரங்களில் உல்லாசமாக வாழ்ந்தவர்களான;
ஒரு பெண் தனது தலையில் பழம் பறித்துப் போட்டு வைக்கும் கூடையையோ, பெட்டியையோ தலையில் சுமந்துகொண்டு அந்த மரச் சோலைகளுக்குக் கீழே நடந்து சென்றால் தாமாகவே கூடை நிரம்பும் அளவுக்குப் பழங்கள் தாமாகவே மரங்களிலிருந்து விழும் அவற்றைப் பறிக்க வேண்டும் என்ற தேவையோ, சிரமமோ இராது அந்த அளவுக்குப் பழங்கள் கனிந்தும் பக்குவமடைந்தும் இருந்ததுடன் அதிகமாகவும் இருக்கும் அளவிற்கு செழிப்பான பழத் தோட்டங்களை உடையவர்களான; அதற்கேற்ப சாதகமான, சமச்சீரான, தட்பவெப்ப, வசந்தமான, சீரான கால நிலையையும் ஆரோக்கியமானதும், நிறைந்ததுமான, நீர் நிலைகளையும், சுற்றுச் சூழலையும், கிடைக்கப் பெற்றவர்களான, அவர்களுக்குச் சாதகமாக மேலும் அவர்கள் செல்வச் செழிப்புடன் வசித்த ஊரில் ஈ தொல்லை, கொசு தொல்லை, தெள்ளுப்பூச்சி, விச ஜந்துகள் என்று எதையும் காணக் கிடைக்காது நிம்மதியாக, அமைதியாக, சந்தோசமாகக், களிப்புற்று வாழ்ந்தவர்களான; ஓரிறைக் கொள்கையில் இருந்துகொண்டு ஒருவனாகிய அல்லாஹ்வை மாத்திரமே வணங்கி வழிபடவேண்டும் என்பதற்காக அவர்கள் மீது அல்லாஹ் அதீத அக்கரை காட்டி சுமார் பன்னிரெண்டாயிரம் நபிமார்களைத் தொடராக அனுப்பிவைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களான, (சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:477)
இறைத் தூதர் இஸ்மாயீல்(அலை) அவர்களுடைய கொள்ளுப் பேரரின் புதல்வர் “கஹ்தான்‘ என்பவரின் வழித்தோன்றல்களில் வந்த “ஸபஉ” 34: அத்தியாயத்தின், முதலாவது சிறு குறிப்பு 2899, 3373,3507, தஃப்ஸீர் தபரீ.
“ஸபஉ” மக்கள் என்று அழைக்கக் கூடிய “சபேயியன்” சமூகத்தினராகிய அவர்களை நல்வழிப் படுத்தவென வந்த இறைத்தூதர்கள் அத்தனை பேரும் அம்மக்களிடம் நீங்கள் பேருபகாரியான அல்லாஹ் வழங்கிய வாழ்வாதாரத்தை அனுபவியுங்கள் அதே நேரத்தில் அவனுக்கு நன்றி செலுத்துங்கள் அவனை மட்டுமே ஏக இறைவன் என்று ஏற்று அவனையே வணங்கி வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார்கள். ஆனாலும் அவர்கள் தமக்கு இடைப்பட்ட இறைக் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தனர். ஷைத்தானும் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானவைகளாகக் காட்டி நல்வழியிலிருந்தும் அவர்களைத் தடுத்து விட்டான். (27:22-24)
இதனால் அவர்களின் வளமான வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வறுமையைக் கொடுத்தான் :
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சபேயியன் சமூகத்தினருக்கு எதிராகப் பெரு வெள்ளத்தை அனுப்பி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நாடியபோது அவர்களின் அணை மீது பெருச்சாளிகளை ஏவினான். அவை அணையின் அடிப்பகுதியைக் கொறித்துத் துளை போட்டன. அதனால் ஓடையின் அடிப்பகுதி வழியாக அள்ளுண்டு வந்த தண்ணீர் அடித்துப் பாய்ந்து வெளியேறியபோது, அப்பெருவெள்ளம் பிரவாகித்துப் பாய்ந்து போன பகுதியில் எதிர்பட்ட கட்டடங்கள், மரங்கள், பயிர் பச்சைகள், உள்ளிட்ட அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது ஊரின் வலப் புறத்திலும் இடப் புறத்திலும் மலையோரமாக இருந்த மரங்கள் அனைத்தும் வறண்டு மடிந்து போயிற்று. அழகாகவும், எழிலாகவும், செழிப்பாகவும், காட்சியளித்த கனிகள் தரும் மரங்கள் யாவும் காய்ந்து பட்டுப்போனது. கடுமையான வெள்ளப் பெருக்கால் உடைந்த அவ்வணையின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணப்படுகிறது. (இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா (ரஹ்), ளஹ்ஹாக்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:478,476, சிறு குறிப்பு 17ஆவது)