மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) அவசியமா?

in 2026 ஆகஸ்ட்

தலையங்கம் :
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) அவசியமா?

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்அந்த ஒரே இறைவன் பெயரால்….

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரின் பெயர், வயது, ஆணா, பெண்ணா, கல்வி, தொழில், குடும்ப உறுப்பினர்கள், வசிப்பிடம், வீட்டின் தன்மை போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரிக்கும் மாபெரும் பணியாகும்.

இது  (Census)  அவசியமா?

ஆம்! “ஒரு நாட்டின் மிகப் பெரிய செல்வம் எது?” என்று கேட்டால் தங்கம், வெள்ளி கையிருப்போ, இயற்கை வளங்களோ என்றால் இல்லை. உண்மையான செல்வம் அந்த நாட்டின் மக்கள்தான். ஆகவே அந்த மக்களைப் பற்றிய சரியான தகவல்களை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும். அதற்காகவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census)  நடத்தப்படுகிறது.

ஏன்  இது  அவசியம்?

ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதிக்காமல் மருந்து தரமுடியாது. மேலும் குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியாமல் குடும்ப செலவுகளை திட்டமிடமுடியாது. அதுபோலவே அரசாங்கம் சில திட்டங்களை செய்ய இந்த பணி  அவசியம்.

உதாரணமாக : 1. எங்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை  தேவை?

எங்கெல்லாம்  குடிநீர்  வசதி  தேவை? எங்கெல்லாம் சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தேவை? என்பதை எல்லாம் அறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது.

2. மக்கள் தொகையின் அடிப்படையில் சட்டமன்றம், நாடாளுமன்றம் தொகுதிகளை வரையறுக்கப்பட இது தேவை. மக்கள் அதிகரித்தால் தேவைக்கேற்ப தொகுதிகளை மறுவரையறை செய்யவும் (Delimitation) தேவையானதும்  கூட.

3. வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கையான பேரிடர் காலங்களின் போது உதவிகளை  வழங்க  இந்த  கணக்கெடுப்பு  அவசியம்.

4. நாட்டின்  எதிர்கால  வளர்ச்சி :

சுருக்கமாகச்  சொன்னால், எண்ணிக்கை தெரிந்தால்தான் திட்டமிடமுடியும், திட்டமிடல் சிறந்ததாக  இருந்தால்தான்  முன்னேற முடியும்.

இந்த உண்மையை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. யதார்த்த மும் கூட. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (பத்து ஆண்டுக்கு ஒரு முறை)  கணக்கெடுப்பு  நடத்தப்படுகிறது.

மேலும் இது வெறும் மக்களின் எண்ணிக்கை சேகரிக்கும் பணியல்ல. ஒரு நாட்டின் எதிர்கால  வளர்ச்சி  பாதையை  நிர்ணயிப்பதாகும்.

எனவே கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை கூறுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

இறைநூல் கூட (குர்ஆன்) உண்மை மற்றும்  பொறுப்பை  வலியுறுத்துகிறது. 

எவ்வாறு  என்றால்,

அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்காதீர்கள்” (அல்குர்ஆன் 2:42)

இந்த மேற்கண்ட வசனம் எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையைப் பேசவேண்டும் என்று கூறுகிறது. (மக்கள் கணக்கெடுப்புக்காக (CENSUS)  நான் இதை குறிப்பிடவில்லை)

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

உண்மை நன்மைக்கு வழிகாட்டும், நன்மை  சொர்க்கத்திற்கு  வழிகாட்டும்”.

கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான தகவல்களை கூறுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். இருப்பினும் சில சந்தேகங்களும், கேள்விகளும்  எழுகின்றன.

கேள்வி  :  ஆதார், பான்கார்டு, ரேசன் கார்டு இன்னும் சில ஆவணங்களில் பூர்வீக முகவரி இருப்பதால் வெளி மாநிலத்தில் அல்லது வேறு ஊரில் வசித்து வந்தால் எங்கே பதிவு செய்ய வேண்டும்? எந்த இருப்பிடத்தை கூற வேண்டும்.

பதில் : பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் கார்டு அல்லது ரேசன் கார்டு முகவரி முக்கியமில்லை. முக்கியமானது நீங்கள் தற்போது வசிக்கும் இடம் எதுவோ, அதை  கூறவேண்டும்.

அதாவது தற்போது முகவரியில் 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வந்தாலோ அல்லது அடுத்த 6 மாதங்களுக்கும் மேலாக (இன்ஷா அல்லாஹ்) எங்கே வசிக்கப் போகிறீர்களோ அந்த இடத்தையே (தற்போதைய இடத்தையே) சென்சஸில் பதிவு செய்ய வேண்டும். சொந்த ஊரில் உள்ள முகவரியில் ஒரு முறையும், தற்போது வசிக்கும் முகவரியில் ஒரு முறையும் இரண்டு முறை செய்வது சட்டப்படியும்  கூடாது.

கேள்வி 2 : சென்செஸ் அதிகாரிகள் நாம் சொன்னதைத்தான் பதிவு செய்தார்களா? எப்படி தெரிந்து கொள்வது? நகல் (Census Copy) கிடைக்குமா?

பதில் : சரியாக பதிவு செய்தார்களா என்பதை அறிய  சில  வழிகள்  உள்ளன.

A பதிவு செய்யும்போதே நன்கு கவனியுங்கள்.

B. பதிவு முடிந்ததும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

C. பதிவுக்கான ரசீது வழங்கப்பட்டால் அதை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். Online சரிபார்க்கும் வசதி கிடைக்கும் போது சரிபார்க்க  முடியும்.

D. மறு கணக்கெடுப்பு (Revisit) அல்லது மேற்பார்வை அதிகாரி வந்தால் அதை கேட்டு விவரங்களை  உறுதிப்படுத் த  முடியும்.

E. சென்செஸ் நகல் (Acknowledgment) பொதுவாக வழங்கப்படுவதில்லை. (இது இத் திட்டத்தில் உள்ள குறைபாடு, மேலும் மக்களுக்கு நகல் தேவை இல்லாதது என அரசு நினைக்கிறதா என்றும் தெரியவில்லை? இன்றைய (Digital) டிஜிட்டல் உலகில் இது சாத்தியமே. அப்போதுதான் அரசின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பதிவு அதிகாரிகளும் கவனத்துடன் (சரியாக)  பதிவு  செய்வார்கள்.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொறுப்புடனும், உண்மையான தகவலுடன் பங்கேற்று வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்க  பங்களிப்போம்.

Previous post: