மனிதன் அவசரப்படக் கூடிய படைப்பா?
A. நஜ்முதீன்
கிட்டத்தட்ட பல ஆயிரம் ஆண்டுகளில் முயற்சி செய்து அடையவேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை மனிதகுலம் சுமார் 40 ஆண்டு களில் எட்டிப் பிடித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அறிவு வளர்ச்சியும், பல புதிய கண்டுபிடிப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
அதாவது இன்றைய உலகம் அதிவேகத்தில் உச்சமாகவே மாறி வருகின்றது.
எவ்வாறு என்றால்;
உடனடி செய்து,
உடனடிதொடர்பு,
உடனடி உணவு,
அதிவேக பயணம்.
என்று அனைத்தும் விரைவாக நடக்க வேண்டும். அல்லது கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. பல நேரங்களில் பொறுமையாளனாகவும், வெகுசில நேரங்களில் மட்டுமே அவசரகாரனாகவும் இருக்கவேண்டும் என்பதே எதார்த்தம்.
ஏன் என்றால்;
அவசரத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்.
எப்படி என்றால்;
கோபத்தில் அவசரப்பட்டு பேசப்பட்ட ஒருசில வார்த்தைகள் உறவுகள் முறிய காரணமாக இருக்கின்றன.
மேலும் பொறுமை இல்லாமல் அவசரப்பட்டு செய்யப்படும் சில முதலீடுகள் பொருளாதார இழப்பு ஏற்படக் காரணமாக இருக்கின்றன.
மீடியாக்கள் உண்மையை ஆராயாமல் பரப்பரப்பான செய்தியாக இருக்கவேண்டும் என்பதற்காக வெளியிடப்படும் பல அவசரச் செய்திகள் சமூகத்தில் பிளவு, குழப்பம், ஏற்பட காரணமாக இருக்கின்றன.
வாழ்க்கையில் பல மனிதர்களின் தோல்விக்குக் காரணம். திறமையின்மை இல்லை, அவசரமே! அதுபோல் மனிதர்களில் சிலரின் வெற்றிக் காரணம் அதிர்ஷ்டம் அல்ல. நிதானமே!
எனவேதான் இஸ்லாம் பொறுமையை வலியுறுத்துகிறது.
“இன்னல்லாஹா மா ஸாபிரின்”
(அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்)
மேலும் முகம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னது. நிதானம் அல்லாஹ்விடமிருந்து வருகிறது; அவசரம் ஷைத்தானிடமிருந்து வருகிறது என்பதாக. ஆயினும் பொறுமையை வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் சில விசயங்களில் அவசரப்படலாம் எனவும் கூறியுள்ளார்கள். (ஹதீத்)
அவை :
1. ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனை நல்லடக்கம் செய்ய அவசரப்பட வேண்டும்.
2. ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால் (திருமண பந்தத்திற்கு தயாரான வளாக இருந்தால்) திருமணம் செய்ய அவசரப்படவேண்டும்.
3. கடன் இருந்தால் அதை அடைக்க அவசரப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
மனிதன் அவசரப்பட காரணம் என்ன?
“மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான்” (21:37)
மேற்கண்ட இறைவசனத்தில் மனிதன் அவசரப்படக்கூடிய படைப்பாவான் என்று கூறியுள்ளதால் அவசரப்படலாம் என்று பொருள் அல்ல. மாறாக மனிதனிடமுள்ள ஒரு இயல்பை அது கூறுகிறது என்பதே சரியானதாகும். இதற்கு சான்றாக இறைநூலில் பல வசனங்கள் உள்ளன.
உதாரணமாக : மறுமை நிகழ்வுகளைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் நபி(ஸல்) அவர்கள் கூறி எச்சரித்தபொழுது இறைமறுப்பாளர்கள்;
“நீ சொல்வது உண்மையாக இருந்தால் அந்த நாள் எப்போது வரும்” (21:38) என்று அவர்கள் கேட்டதால், மனிதனிடமுள்ள இயல்பை இறைவன் சுட்டிக்காட்டி உள்ளான்.
மனிதனின் இயல்பு என்ன?
எழுதப் படிக்க கற்றுக்கொள்கிற போதே, நமக்கு எதிர்ச் சொற்களைப் பற்றியும் கற்றுத் தருகறார்கள்.
உதாரணம் : இன்பம்–துன்பம், பொறுமை–அவசரம் இன்னும் பல சொல்லித் தரப்படுகிறது. எல்லாவற்றுக்கும் எதிர்பதங்கள் இருப்பதை கற்றாலும் யதார்த்த வாழ்க்கையில் பல விசயங்களை நாம் அப்படி அணுகுவதில்லை.
இரண்டையும் கற்றுத்தர காரணம் :
ஒரு விசயத்தை கையில் எடுக்கும்போதே அதன் சாதகங்களைப் பற்றி மட்டும் யோசிக்காமல் பாதகமான இன்னொரு பக்கத்தையும் கொஞ்சம் யோசித்து பார்ப்பது நல்லது என்பதாலே, மேலும் ஒரு விசயத்தை உணர்வு சார்ந்து மட்டும் யோசிக்காமல், யதார்த்த சிந்தனைக்கு இடமளித்து நல்லது, கெட்டதுகளை ஆராய்ந்து எடுக்க கூடிய முடிவுகளே எப்போதும் சரியாக இருக்கும். அவசரம் ஆபத்தானது என்பதற்கு இறை நூலில் நபி யூனுஸ்(அலை) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வையும் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளான். அதுமட்டுமல்ல முகம்மது நபி(ஸல்) அவர்களை பல நபிமார்களின் வழியில் நடக்குமாறு கட்டளையிட்ட அல்லாஹ் நபி யூனுஸ்(அலை) அவர்களைப் போல் நடக்கக்கூடாது என்றும் கட்டளையிடுகிறான்.
“உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக அழைத்தார்”
“அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.’ (அல்குர்ஆன் 68:48,49)
இதுபோலவே அவசரப்படுகின்ற அல்லது அவசரப்பட்டு செய்த காரியங்களால் பலரும் நஷ்டவாளியாக ஆகியிருப்பார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளினாலியே அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே நிஜம். தினம் தினம் பலமுறை கண்ணாடியைப் பார்க்கிறோம், நம்மை நாமே ரசிக்கிறோம்.
நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது. அழுதால் அந்த பிம்பமும் அழுகிறது. நம்முடைய மனமும், குணமும் அப்படித்தான். தனக்கு நல்லதெனத் தெரிவதை, தோன்றுவதை அப்படி நம்பும். அவசரக்காரனாக இருப்பதும், பொறுமை யளனாக இருப்பதும் அவனவன் செய்யும் செயலை பொறுத்தே அமைகின்றன.
எனவே இறைநூலின் அறிவுரைகளையும், இறைதூதரின் வழிமுறையும் பின்பற்றுவதால் மட்டுமே நன்மைகள் ஏற்படும், சந்தோசமான வாழ்வும் நிலைக்கும். பொறுமையாளர் களில் ஒருவனாக இருக்க அல்லாஹ் அருள்புரிவானாக.