ஆட்டுமந்தை சிந்தனை!

in 2026 ஆகஸ்ட்

ஆட்டுமந்தை சிந்தனை!

. நஜ்முத்தீன்

ஒரு பெற்றோரின் செல்ல மகள், செல்வ மகனும் கூட உயர்தரமான பள்ளியில் ஆரம்ப படிப்பு முதல் பத்தாவது வரை. பத்தாவது முடிச்சதும் வெளியூரிலுள்ள ஒரு பெரிய பள்ளியில் ப்ளஸ் டூ படிப்பு.

ப்ளஸ் டூ முடிச்சதும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேரவேமாட்டேன்னு சொன்ன  அவனை இன்ஜினியரிங் படிப்பில் கட்டாயப்படுத்தி சேர்த்தார்கள். ஒருவழியாக B.E., படிப்பை முடிச்சான். வெளியிலே வந்தவனுக்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையும் கிடைத்தது. ஆனாலும் வேலையில் ஆர்வமே இல்லை.

அவன் வேலைப் பார்த்த கம்பெனியிலிருந்து சிறிது காலத்திற்குப் பிறகு ஆள் குறைப்பு அடிப்படையில் இவனையும் வேலையை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஆறு மாதம் வீட்ல சும்மா இருந்தான். வீட்டை விட்டு வெளியிலும் பெரும்பாலும் போறதில்லை வேறு வேலையும் தேடவில்லை.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருக்கபோறாய் என்று ஒரு முறை  பெற்றோர்கள் திட்டியதற்கு தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிட்டான்.

எங்க சொந்தக்கார குடும்பத்தில் பலரும் இன்ஜினியர் படித்துவிட்டு கை நிறைய சம்பளம் சிலருக்கு வெளி நாட்டிலும் வேலை.

இவன்  நிலைமை  இப்படி  ஆயிடுச்சு

இதுபோல புலம்பும் பல பெற்றோர்களை நாம்  காண்கின்றோம். 

ஏன்  இந்த  நிலைமை?

ஆட்டு மந்தைச்  சிந்தனையே! இதற்கு காரணம். எப்படி வரிசையில் செல்கிறபோது முதலில் போகிற ஆடு திடீரென ஒரு தடையை எதிர்கொண்டால் அப்போது தாவி குதித்து தடையைத் தாண்டிச் செல்லும். 

பின்னால் வருகிற ஆடுகளும் தடையில்லா விட்டாலும் கூட முதலில் தாண்டிய ஆட்டினைப் பின்பற்றி எல்லாமே தாவி குதித்து தாண்டி அந்த  இடத்தை  கடக்கும். 

இதுதான்  ஆட்டு  மந்தைச்  சிந்தனை.

இந்த ஆட்டு மந்தைச் சிந்தனை ஆடுகளுக்கு மட்டுமல்ல. மனிதர்களாகிய சிலருக்கும்  இருக்கிறது.

அதாவது தங்கள் உறவினர்கள், நண்பர்கள் பிள்ளைகள் யாரேனும் B.E., முடித்து விட்டு நிறைய சம்பளம், வெளிநாட்டில் வேலை என இருப்பதை பார்த்துவிட்டு நம்முடைய பிள்ளையும் B.E., தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது. இதை ஆட்டு மந்தை மனோபாவமானது சிலருக்கு பகுத்தறிவைக் கூட மழுங்கச் செய்துவிடும்.

உதாரணமாக, ஒரு விவசாயி தக்காளி விவசாயம் செய்து அமோகமான விளைச்சல் கண்டு அதிக லாபம் பார்த்திருப்பார். அவரை தொடர்ந்து அந்த ஊரிலுள்ள பல விவசாயி களும் தக்காளி விளைச்சலில் இறங்குவார்கள். சில வருடங்கள் அமோகமாக இருக்கும். ஆனால் அடுத்து அடுத்து சில வருடங்களில் தக்காளி விலை சரிந்து விற்பனை வாய்ப்பும் இல்லாமல் தெருவில் கொட்டுவார்கள்.

எப்படி ய.சி., படித்தால்தான் நல்ல வேலை, நிறைய சம்பளம் என பெற்றோர்கள் நினைக்கிறார்களோ, அதுபோல எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் பலரிடம் ஆட்டு மந்தைச் சிந்தனை பரவலாக உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்துகொண்டு அது தொடர்பான படிப்பைப் பற்றி பெற்றோர்கள் சிந்திப்பது கிடையாது. அதன் விளைவே பல பிள்ளைகளின் வாழ்வு சூனியமாக  உள்ளது.

கூட்டத்தில் தனித்து நிற்க ஒரு தைரியம் வேண்டும். அப்படி நிற்க துணிகிறவர்கள்தான் தலைமைப் பொறுப்புத் தகுதி பெறுகிறார்கள். எனவே பிள்ளைகளின் ஆர்வத்தை தெரிந்து கொண்டு  அதை  படிக்க  வையுங்கள்.

பொதுவாக 16, 17 வயதில் பிள்ளைகளின் மனதில் ஏராளமான கேள்விகள், ஆசைகள், கனவுகளும் இருக்கும். பிள்ளைகளுக்கு பிடிக்காத துறையைத் திணித்து அதை நோக்கி ஓடச் செய்கிற முயற்சிகளை செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்களது ஆசைகள், லட்சியங்கள், கனவுகள் என எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி போடுவதற்குச் சமம்.

வாழ்க்கைக்கு  4  சக்திகள்  அவசியம் :

1. அறிவு,  2. உடல் உழைப்பு, 3. ஆரோக்கியம், 4. மகிழ்ச்சி.

மேற்கண்ட 3 இருந்தால் மட்டும் போதாது. நான்காவதான மகிழ்ச்சி அவசியம். மகிழ்ச்சி இல்லாவிட்டால் முதல் மூன்றும் இருந்தாலும்  வீண்தான்.

இளைஞர்களே விஸ்காம் படிப்புக்கு வாருங்கள். விஸ்காம் படிப்பு ஒன்று கேவல மில்லை. Journalist படிப்பு மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பல நன்மைகளை செய்ய முடியும். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலோர் Journalist படிக்க முன்வருவதில்லை. Journalist துறையில் கவனம் செலுத்தாததினால் சமுதாயத்தின் மீது பழி சுமத்தும் மீடியாக்களுக்கு தக்க படிலடி கொடுக்க முடியாமல் போகிறது. எனவே இளைஞர்களே பத்திரிக்கை  துறைக்கு வாருங்கள்.

Previous post:

Next post: