பெருநாள் ஜகாத்!
சம்ஸுள்ளுஹா ரஹ்மானி
மறு பதிப்பு :
நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு‘ என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்‘ என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு :
“எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தைக் கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழுகைக்குப் பின்னர் அதனைக் கொடுக்கின்றாரோ, ஸதகாவாக நிறை வேறும்”. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம் : அபூதாவூது, இப்னு மாஜ்ஜா, தாரகுத்னீ.
மேற்கூறிய நபி மொழியில் ஜகாத் (அதாவது கட்டாயம் செய்யப்பட வேண்டிய தர்மம்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது கட்டாயமான தர்மமாகும்.
யார் மீது கடமை?
பெருநாள் தினத்தின் செலவுகள் போக எவரிடமாவது பொருள் எஞ்சி இருக்குமானால், அவர் மீது இந்த தர்மம் கடமையாகும். அவர் தனக்காக மட்டுமின்றி தன் பொறுப்பில் இருக்கின்ற சிறு குழந்தை, பெரியவர், ஆண், பெண் அத்தனை பேர் சார்பாகவும் இந்த தர்மத்தைக் கொடுக்கவேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு தொகை வைத்திருப்பவர்கள் தான் ஃபித்ரு கொடுக்கவேண் டும் என்று நிர்ணயிக்கவில்லை.
“முஸ்லிமான அடிமை, அடிமையில்லாதவன், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அத்தனை பேர் மீதும் இதனை நபி (ஸல்) கடமையாக்கினார்கள். அறிவிப்ப வர்: இப்னு உமர்(ரழி), ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
எவ்வளவு கொடுப்பது?
பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு “சாஉ” என்றும், அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ” என்றும் அந்த தர்மத்துக்கு நபி(ஸல்) அவர்கள் அளவு நிர்ணயம் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), ஆதாரம் நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
மேற்கூறிய ஹதீதில் இடம் பெற்றுள்ள “சாஉ” என்ற சொல் அன்றைய காலத்தில் அரபு பகுதியில் வழக்கிலிருந்த ஒரு அளவாகும். இரண்டு கைகளாலும் ஒரு பொருளை அள்ளும்போது, அதன் கொள்ளளவு எவ்வளவோ, அதுபோன்ற நான்கு மடங்காகும்.
தெளிவாகச் சொல்வதென்றால், இரண்டு கைகள் நிறைய ஒரு தானியத்தை அள்ளினால் அது 1/4 “சாஉ” ஆகும். இது போல் நான்கு முறை அள்ளினால் அது ஒரு “சாஉ” ஆகும்.
இது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களுக்கு இடம் தந்து விடாமல், இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி வழங்கிடுவதே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
ஒருவனுடைய பொறுப்பில் ஐந்து பேர் இருந்தால், அந்த ஐந்து பேர் சார்பாக ஐந்து “சாஉ” தானியம் கொடுக்க வேண்டும் ஒரு நபரின் சார்பாக கொடுக்க வேண்டிய அளவு ஒரு “சாஉ” ஆகும்.
எதனைக் கொடுக்க வேண்டும்?
எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் கொடுக்கலாம். நாங்கள் ஒரு “சாஉ” கொடுத்துக் கொண்டிருந்தோம். அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரழி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா, திர்மிதி.
உணவுப் பொருள் என்ற வார்த்தை இந்த ஹதீதில் பொதுவாக பிரயோகம் செய்யப்பட்டுள்ள தால் எந்த உணவுப் பொருளையும் வழங்கலாம்.
எது சிறந்தது?
“நீங்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்ற (மனப்பக்குவம் பெறாத) வரை நீங்கள் நன்மையை அடைந்து விடவே முடியாது. (அல்குர்ஆன்)
இந்த வசனத்தின் அடிப்படையில் நமது நாட்டிலுள்ளோர் உணவாக உட்கொள்ள அரிசியையே விரும்புகின்றனர். எனவே அதனையே பெருநாள் தர்மமாக வழங்குதலே சிறப்புடையது.
எப்போது கொடுப்பது?
மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் இந்த தர்மத்தைக் கொடுத்து விடும்படி எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.
யார் தொழுகைக்கு முன்னால் இதனை நிறைவேற்றுகின்றாரோ, அதுதான் பெருநாள் தர்மமாகும். யார் தொழுதபின் நிறைவேற்றுகின்றாரோ, அது சாதாரண நாட்களில் செய்கின்ற சாதாரண தர்மத்தைப் போன்றதேயாகும். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி), ஆதாரம் : அபூதாவூது, இப்னு மாஜா
மேற்கூறிய ஹதீத்களிலிருந்து, பெருநாள் தொழுகைக்கு முன்பே இதனைக் கொடுத்தாக வேண்டும் என்பது தெளிவாகின்றது.
தேடிச் சென்று கொடுப்போம்?
இந்த தர்மத்தை வாங்குவதற்காக எந்த முஸாபிர் வீடு தேடி வருவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாறாக நாமே வலிய தேடிச் சென்று அதனைக் கொடுத்தாக வேண்டும். இந்த தர்மத்தின் நோக்கமாக அதுதான்.
“அந்த ஏழைகள் இன்று (அதாவது பெருநாள் தினத்தில்) வீடு வீடாக சுற்றி வருவதை தேவையற்றதாக்குங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), ஆதாரம்: பைஹகீ, தாரகுத்னீ
யாருக்குக் கொடுக்கக் கூடாது?
இஸ்லாம் தான தர்மங்கள் செய்வதை வலியுறுத்தும் போது, இனத்தின் அடிப்படையில் அதனைச் செய்யும்படிக் கூறவில்லை. நாம் விரும்பிச் செய்கின்ற தர்மங்களை முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்கும் கொடுப்பதை அனுமதிக்கின்றது. எனினும் பெருநாள் தர்மத்தை முஸ்லிமுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும். ஏனெனில் “பெருநாளை மற்றவர்களும் கொண்டாட வேண்டும்” என்ற உயரிய நோக்கில்தான். இது ஏற்படுத்தப் பட்டுள்ளது முஸ்லிமல்லாதவர்கள் பெருநாள் கொண்டாடும் பிரச்சனை இல்லாததால், முஸ்லிமுக்கு மட்டுமே இந்த தர்மத்தைக் கொடுக்கவேண்டும்.
ஒருவன் தான் கொடுக்க வேண்டிய ஜகாத்தை பெருநாள் தர்மத்தை தனது தந்தை, பாட்டன், தாய், பாட்டி, மகன், பேரன், மகள், பேத்தி ஆகியோருக்கும் தன் மனைவிக்குக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இந்த வகை உறவினர்களை கவனிப்பது அவன் மீது கடமையான ஒன்றாகும். ஜகாத் பணத்திலிருந்து இவர்களுக்காக செலவு செய்யக்கூடாது. இவர்களைத் தவிர மற்ற உறவுகளில் ஏழைகள் இருந்தால் இதுபோன்ற தர்மங்கள் செய்வதில் அவர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.