‘END OF LIFE’ என்பது வாழ்வின் எல்லையா? வாழ்க்கையின் எல்லையா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
மனிதன் மற்றும் உயிரினங்கள் உயிரோடு வாழ்ந்து மரணித்த காலத்தை “வாழ்வின் எல்லை” என்பார்கள். அதற்கு காரணம்,
வாழ்க்கை என்ற பயணம் பிறப்பின் மூலம் தொடங்கி மரணத்துடன் முடிவடைவதால் அவ்வாறு கருதப்படுகிறது. மேலும் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மிடம் நெருங்கிக் கொண்டு வருவதால் மரணம்தான் “வாழ்வின் எல்லை” என நினைக்கிறோம். அதனால் “வாழ்வின் எல்லை‘ என்பதும் “வாழ்க்கையின்‘ என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்பது பெரும்பாலோரின் எண்ணமாகும். மேலோட்டமாக பார்த்தோமேயானால் இரண்டும் ஒரே மாதிரியாக தோன்றும்.
ஆனால் பயன்பாட்டில், இறைவனின் அகராதியில் இதற்கு வேறுபாடு இருக்கிறது.
வாழ்வின் எல்லை: உடலோடு முடிந்துவிடும்.
வாழ்க்கையின் எல்லை: சோதனை, துன்பம், போராட்டமாகும்.
சுருக்கமாக சொல்வது என்றால் :
மரணம் உலக வாழ்வின் எல்லையை குறிக்கும். அதுவே வாழ்க்கையின் எல்லை என்பது மறுமை வாழ்வின் தொடர்ச்சியை குறிக்கும்.
அதாவது வந்தார்கள், வாழ்ந்தார்கள், சென்றார்கள்(இறந்தவர்கள) வாழ்வின் எல்லையை முடித்துக்கொண்டவர்களின் பட்டி யலோடு முடிந்துவிடும்.
ஆனால் தாங்கமுடியாத சோதனையிலும் தளராத மனநிலையிலும், துன்பத்தின் கடைசி எல்லை வரை, பொறுமையின் இறுதி கட்டம் வரை சென்றவர்கள்தான் உடல் மறைந்தாலும் வரலாறாகவும், படிப்பினையாகவும் இருக்கிறார்கள்
அவ்வாறு யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை குர்ஆன் கூறுகிறது. அதன் மூலம் நாம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக,
1. இப்ராஹீம்(அலை)
நெருப்பு குண்டத்தில் தூக்கி எரியும் வரை மனம் தளரவில்ல, அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
2. இஸ்மாயில் (அலை)
கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே அல்லாஹ்வின் உதவியை கிடைத்தது. காரணம் நம்பிக்கை.
3. அன்னை ஹாஜிரா இரண்டு மலைகளுக்கு நடுவே:
ஸஃபாமர்வா மலை குன்றுக்கு இடையே பலமுறை ஓடியும் அன்னை ஹாஜிராவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதன் பிறகே ஜம்ஜம் என்ற வற்றாத நீரின் மூலம் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
4. மூஸா(அலை)
நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்ததால் நதி(கடலை)யை பிளக்கச் செய்து அல்லாஹ் காப்பாற்றினான்.
5. யூனுஸ்(அலை)
மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. மீன் வயிற்றில் முழுகியும் கூட அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையும், துஆவும் செய்ததால் அல்லாஹ் காப்பாற்றினான்.
“லாஇலாஹா இல்லா அன்தா சுப்ஹானக்க இன்னி குன்து மினல் ஆலிமீன்” (21:87 )
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாகக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” ( 21:87 )
6. யூசுப்(அலை)
கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே அல்லாஹ் வின் உதவி வந்தது.
முகம்மது நபி(ஸல்)
இதுவரை இறுதி தூதரும், இறை தூதருமான நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சில இறை தூதர்களின் “வாழ்க்கையின் எல்லை‘யில் என்ன நடந்தது என்பதை பார்த்தோம். நமது உயிரினும் மேலான, மனித குலத்திற்கு முன்மாதிரியான நபி(ஸல்) அவர்களின் “வாழ்க்கை யின் எல்லை”யில் என்ன நடந்தது என்பதைப் பார்ப் போம்.
முகம்மது நபி(ஸல்) அவர்களும், அவர்களது நெருங்கிய தோழருமான அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்கா நகரத்தை விட்டு மதினா நகரத்திற்கு சென்ற நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகும்.
இந்த நிகழ்வு “ஹிஜ்ரா‘ என்று அழைக்கப்படுகிறது. இது தியாகம், பொறுமை, இறை நம்பிக்கை ஆகிய மூன்றையும் எடுத்துக்காட்டுவதாகும்.
நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவை விட்டு புறப்பட்டு வந்ததை எதிரிகள் பார்த்துவிடகூடாது என்பதற்காக முதலில் “தெளர் குகையில்‘ மூன்று நாட்கள் தங்கினார்கள். அது சமயம் எதிரிகளில் சிலர் இவர்கள் தங்கியிருந்த தெளர் குகையின் அருகில் வந்துவிட்டார்கள். அந்த குகையிலிருந்து அல்லாஹ் அவர்கள் இருவரையும் எவ்வாறு பாதுகாத்தான் என்றால்;
ஸயீப்பான ஹதீஸ் :
“குகையில் இருந்த இருவரில் ஒருவராக (அபூபக்கர்(ரழி) அவர்கள்) அவர் இருந்த(போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூ பக்க)ரை நோக்கி நீர் கவலைப்படாதீர்!
“நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு தன் புறத்திலிருந்து மன நிம்மதியை அளித்தான்.” (அல்குர்ஆன் 9:40)
மேற்கண்ட “ஹிஜ்ரா” சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல. அது ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாடமாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் மிகப் பெரிய ஆபத்துகளிலும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது.