இன்றைய நவீன ஸாமிரீகள் உருக்கி உருவாக்கிய தவ்ஹீத் ஃபிர்க்கா ஜமாத்கள்!
– எஸ். ஹலரத் அலி
“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள். பிரிந்துவிடாதீர்கள்!” அல்குர்ஆன் 3:103
இன்று “தவ்ஹீத்” என்ற மிகப்பெரிய கலிமாவை வைத்துக்கொண்டு, முஸ்லிம் உம்மத்தை துண்டுதுண்டாக்கும் கூட்டங்கள் அதிகமாகிவிட்டன. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே இதே சோதனை வந்தது. அதற்கு ஹாரூன் நபி என்ன செய்தார்கள் என்பதே நமக்கு வழிகாட்டி.
1. ஸாமிரீயின் சோதனை வரலாற்று பாடம்!
மூஸா நபி(ஸல்) இல்லாத நேரம். ஸாமிரீ ஒரு தங்க காளைக் கன்றை செய்து “இதுதான் உங்கள் ரப்பு என்றான். அல்குர்ஆன் 20:88
முழு பனூ இஸ்ராயீலும் வழிகெட்டது. இது வெளிப்படையான ´ர்க்.
அந்த நேரம் ஹாரூன் நபி என்ன செய்தார்கள்?
“நீர் பனூ இஸ்ராயீலை பிரித்து விட்டீர் என்று சொல்வீர் என்று நான் பயந்தேன்!” அல்குர்ஆன் 20:94
கவனியுங்கள் : ஹாரூன் நபி, “இவர்கள் காஃபிர்கள், நான் தனி ஜமாத் ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லவில்லை! அவர்கள் மத்தியிலேயே இருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது தடுத்தார்கள். உம்மத்தை காக்க பொறுமை காத்தார்கள். இது தான் நபிமார்களின் வழி.
2. நபி(ஸல்) காட்டிய மார்க்கம் என்ன?
நபி(ஸல்) சொன்னார்கள்:
“என் உம்மத் 73 பிரிவாக பிரியும். அதில் ஒன்றே சொர்க்கம் செல்லும். அது எது? நானும் என் தோழர்களும் எதில் இருக்கிறோமோ அது!” அபூதாவூத் : 4597
இங்கே நபி(ஸல்) “புது ஜமாத் ஆரம்பியுங்கள்!” என்று சொல்லவில்லை. “நானும் ஸஹா பாக்களும் இருந்த வழி” என்று சொன்னார்கள். அதாவது ஜமாஅத்துல் முஸ்லிமீன்!
3. இன்றைய யதார்த்தம் : மூன்று ஆபத்துகள்!
இன்று சிலர் ஒருவர் பித்அத் செய்தால், அல்லது சிர்க் செய்தால் உடனே: செயல் விளைவு.
1. தவ்ஹீத் பெயரில் பிரிவு!
நாங்கள் தான் உண்மையான முஸ்லிம் என்று புது பெயர் பலகை! புது மர்கஸ் தனிப்பள்ளி.
2. தக்பீர் : முழு சமூகத்தையும் காஃபிர் என்று முத்திரை குத்துதல்.
3. வெறுப்பு பிரச்சாரம் : மிம்பரில், வாட்ஸ் அப்பில் முஸ்லிமை முஸ்லிம் திட்டுதல்.
இதன் முடிவு என்ன?
ஒரு சிர்க்கை தடுக்கப் போய், 1000 பேரை ஜமாஅத்தை விட்டு பிரித்து நரகிற்கு அழைத்து விடுகிறோம். நபி(ஸல்) சொன்னார்கள்: “ஒரு முஸ்லிமை காஃபிர் என்று சொன்னால், அவ்வார்த்தை இருவரில் ஒருவரிடம் திரும்பிவிடும்”. புகாரி : 6104
4. தீர்வு என்ன? குர்ஆன்–சுன்னாவின் வழி:
படி1 : நஸீஹத் – அன்பான அறிவுரை!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!
இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறிய வர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல்குர்ஆன் 16:125
ஹிக்மத்துடன் அழகான அறிவுரையுடன் அழைக்க வேண்டும்!
படி 2 : சமுதாயத்தை பிளவுபடுத்தாத உலமாக் களிடம் கேள்! ஒரு பிரச்சனை வந்தால் தனியாக ஃபத்வா கொடுக்காமல், ஊர் ஜமாத், மார்க்க அறிஞர் களிடம் கேட்கவேண்டும்.
படி 3 : ஒற்றுமையை முன்னிறுத்து :
ஒருவர் தவறு செய்தால், அவரை விட்டு ஓடாமல், அவரை திருத்த முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ஹாரூன் நபியின் வழி.
நிறைவுரை! தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது மட்டுமல்ல. முஸ்லிம் களை ஒருமைப்படுத்துவதும் தவ்ஹீதின் ஒரு பகுதிதான். ஸாமிரீ சிர்க் செய்த போதும் ஹாரூன் நபி உம்மத்தை விட்டு பிரியவில்லை. நான் ஏன் ஒருவரின் தவறுக்காக 1000 பேரை விட்டு பிரிகிறோம்?
இறுதி வார்த்தை :
சிர்க்கை இணை வைப்பை ஒழிப்பது அல்லாஹ்வின் தவ்ஹீத்!
உம்மத்தை ஒற்றுமையை ஒழிப்பது ஷைத்தானின் தவ்ஹீத்!
அல்லாஹ் நம்மை ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகத்தில் நிலைக்க வைப்பானாக. ஆமீன்!