வாழ்வோடு  இணைந்தது  எது?

in 2026 ஆகஸ்ட்

வாழ்வோடு  இணைந்தது  எது?

. நஜ்முத்தீன்

வாழ்வோடு இணைந்தது எது? என்ற கேள்வியை ஒருவரிடம் கேட்டால் ஒவ்வொரு வரும் தங்கள் அனுபவம், விருப்பம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பதில்களைக் கூறுவார்கள். சிலர், தாய் தந்தை என்பார்கள். சிலர் கணவன் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்பார்கள். இன்னும் சிலர் தொழில், செல்வம், பதவி, புகழ், கல்வி அல்லது வெற்றி என்பார்கள்.

இவை அனைத்தும் மனித வாழ்க்கையில் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை அனைத்தும் நிலையற்றவை. காலம் மாறும்போது அவை மாறிவிடும். சிலவற்றை நாம் விட்டுப் பிரிவோம், சில நம்மை  விட்டுப்  பிரிந்துவிடும்.

ஆனால் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை விட்டு ஒருபோதும் பிரியாத ஒன்று  இருக்கிறது.  அது  சோதனை.

வாழ்க்கையோடு இணைந்திருப்பது சோதனை!

சோதனையோடு இணைந்திருப்பது பொறுமை!

பொறுமையோடு இணைந்திருப்பது இறை நம்பிக்கை!

இன்பமும் துன்பமும், வெற்றியும், தோல்வியும், ஆரோக்கியமும் நோயும், செல்வமும் வறுமையும், சந்திப்பும், பிரிவும் இவை அனைத்தும் மனித வாழ்வின் இயல்பான பகுதிகளே. இறைவன் மனிதனைச் சோதிப்பதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை அமைத்துள்ளான்.

அல்லாஹ்  கூறுகிறான் :

உங்களில் செயலால் சிறந்தவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். அவன் மிகைத்தவனும் மன்னிப்பவனும் ஆவான்.”  (அல்குர்ஆன் 67:2)

மேலும்  அல்லாஹ்  கூறுகின்றான்:

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைபொருட்களின் இழப்பாலும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.”  (அல்குர்ஆன் 2:155)

சோதனை என்பது அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளம் அல்ல. பல நேரங்களில் அது அல்லாஹ்வின் அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ, அவரைச் சோதனைக்கு உள்ளாக்குகிறான்.” (புகாரி)

எனவே, சோதனைகள் நம்மை அழிப்பதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காகவே வரு கின்றன. அவை நமது ஈமானையும், பொறுமையையும், உறுதியையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளாகும்.

சோதனை வரும்போது சிலர் மனம் உடைகிறார்கள்; சிலர் இறைநம்பிக்கையை இழக்கிறார்கள். இன்னும் சிலர்ஏன் எனக்கே!” என்று புலம்புகிறார்கள். ஆனால் ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளர், “இதிலும் அல்லாஹ்வின் ஞானம் இருக்கிறதுஎன்று நம்பி பொறுமையுடன் நிலைத்திருப்பார்.

அல்லாஹ் கூறுகின்றான்.

என் அடியார்களே! தங்கள் மீது வரம்பு மீறியவர்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்  (.கு. 39:53)

மேலும்;

நம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையையும், தொழுகையையும் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”. (.கு. 2:153)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த உலக வாழ்க்கையின் உண்மையை மிக அழகாக  எடுத்துரைத்தார்கள்.

இந்த உலகில் நீ ஓர் அந்நியனைப் போலவோ அல்லது ஒரு வழிப்போக்கனைப் போலவோ  இரு  (புகாரி)

இந்த உலகம் நிரந்தரத் தங்குமிடம் அல்ல; இது மறுமைக்கான பயணத்தில் ஒரு இடைநிலை மட்டுமே. ஆகையால், உலக வாழ்க்கையின் சோதனைகளை நிரந்தரமான தாக எண்ணி  மனம்  தளர  வேண்டியதில்லை.

மேலும், வாழ்வோடு இணைந்திருப்பது மாற்றமும் ஆகும். குழந்தைப் பருவம், இளமை, முதுமை, வறுமை, வளமை, ஆரோக்கியம், நோய் எதுவும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாற்றத்தை இறைவனின் விதியாக ஏற்றுக் கொள்வதே வாழ்க்கை. முதிர்ச்சியின்  அடையாளமாகும்.

எனவே, நமது வாழ்வோடு நிரந்தரமாக இணைந்திருக்க வேண்டியது செல்வமோ, புகழோ, மனிதர்களோ அல்ல. இறை நம்பிக்கை, திருக்குர்ஆன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சுன்னா, பொறுமை மற்றும் நற்செயல்களே நம் வாழ்வின் உண்மையான துணைகளாக  இருக்கவேண்டும்.

வாழ்க்கை முடிவடையும் போது நம்மோடு வருவது செல்வமல்ல. உறவினர்களல்ல, பதவியல்ல நம்மோடு வருவது நமது ஈமான் மற்றும் நற்செயல்கள் மட்டுமே.

எனவே, வாழ்வோடு இணைந்திருக்க வேண்டியது இறைவனுடனான உறவே. அந்த உறவு உறுதியாக இருந்தால், உலகின் எந்தச் சோதனையும்  நம்மை  வீழ்த்தமுடியாது.

Previous post:

Next post: