ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : எல்லா நேரங்களிலும் பேண்ட், வேஷ்டியை கரண்டைக்கு மேல்தான் அணிய வேண்டுமா? தொழுகைக்கு மட்டும் நான் உட்பட பலர் பேண்டை மடக்கி விடுகிறோம். எனினும் கரண்டைக்குக் கீழ் இறங்கி விடுகிறது. எனவே நபிவழிப்படி விளக்கவும்?
தெளிவு : “உன் ஆடையைப் பாதிக்கால் வரை (முட்டிக்குக் கீழே) உயர்த்திக்கொள்! அதற்கு விருப்பமில்லாவிட்டால் கரண்டைக்கால் வரை உயர்த்திக்கொள்! (அதற்கு கீழ்) கீழாடையை தொங்கவிடுவதைப் பற்றி உன்னை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அவ்வாறு செய்வது பெருமையினால் ஏற்படுவதாகும். பெருமையை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி அபதாவூத், நஸயி, ஹாக்கமில் இடம் பெற்றுள்ளது.
“பெருமையின் காரணமாக எவன் தனது ஆடைகளை கீழிறங்கும்படி இழுத்தச் செல்கிறானோ அவனை அல்லாஹ் பார்க்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிம், அஹ்மத், முஅத்தா, திர்மிதி, நஸயி போன்ற நூல்களில் காணப்படுகிறது.
மேற்கண்ட ஹதீதில் தொழுகையில் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் கீழாடைகளாகிய பேண்ட், வேட்டி, கைலி ஆகியவைகளைக் கரண்டைக்கு மேல்தான் அணிய வேண்டும் என்பதை தெளிவாக அறியலாம். சில நாட்களுக்கு முன் கரண்டைக்கு மேல் முறையாக பேண்ட் அணிந்து வந்த மலேசிய தப்லீக் சகோதரர்களைப் பார்த்தேன். கற்பனைக் கலப்படமுள்ள இந்த நல்ல செயலைக் கண்டு சந்தோசப்பட்டன். அல்ஹம்துலில்லாஹ். கலப்படமில்லாத, ஒரு புள்ளி கூட மாறாத நிலையிலுள்ள அல்லாஹ்வின் நெறிநூலாகிய குர்ஆனும், உண்மையான நபி(ஸல்) வழியும் மட்டுமே மார்க்கம் என்று கூறுவோரிடம் இது விசயத்திலும் இன்னும் பல விசயங்களிலும் உள்ள பொடுபோக்கைக் கண்டு வேதனையடைகிறேன். “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்ற சொல் வழக்கு போல், எந்தச் செயலைச் செய்தாலும் முழு விருப்பத்துடன் மனம் ஒத்துச் செய்யும் பொழுதே முழு வெற்றிக் கிட்டும். நாம் உயிரிலும் போற்றும் நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் சட்டமாக்கிய பின், உலக பழக்கம், நல்லது. பேசன் நமது விருப்பம் என்று தரையைக் கூட்டுவது போல் உடை அணிவதா? வெட்கம் என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இங்ஙனம் தீர்க்கமாக செயல்பட்டாலே முழு வெற்றிக் கிட்டும். இதனை தெளிவுபடுத்தும் விதமாகவே “ஒருவனது உள்ளம் நான் கொண்டு வந்ததைப் பின்பற்றக் கூடியதாக ஆகாதபோது அவன் முஃமினாக மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.” அப்துல்லஹ் இப்னு அம்ரு(ரழி) அறி விக்கும் இச்செய்தி ஸரஹுஸ் ஸுன்னாவில் இடம் பெற்றுள்ளது.
எனவே எனதன்பு சகோதரர்கள் பேண்ட் அதிகமாக நீண்டிருந்தால் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கிணங்க கத்தரித்துத் தைத்து விடுங்கள். மேலும் கீழிறங்காமலிருக்க வழி வகைகளையும் செய்து கொள்ளுங்கள் இதையும் மீறி அவரையுமறியாமல் கீழிறங்கினால் நான் பெருமைக்காரன் பட்டியலில் சேரமாட்டார் என்பதையும் புகாரியில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐயம் : கடுமையான வெயிலைத் தாங்கிக் கொண்டு பொறுத்துக்கொள்ளும் மனிதர்களில் பலர் மழை வந்தால் சனியன் பிடித்த மழை விடமாட்டேங்குதே என்று பழிக்கிறார்களே! இவ்வாறு பழிக்கலாமா? விளக்கவும். அப்துர் ரஹ்மான்
தெளிவு : மனிதர்களில் பலர் குறிப்பா முஸ்லிம்கள் கூட இறைவனின் அருட்கொடைகளைப் போற்றிப் புகழாது நன்றி கெட்டவர்களா கவே உள்ளார்கள். மேலும் தாங்கள் கூறியபடி அல்லாஹ்வின் அருட்கொடைகளை பழிக்கும் இழிமதி படைத்தவர்களாகவும் உள்ளனர்.
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா நிச்சயமாக நாமே வறண்ட பூமியில் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல்குர்ஆன் 32:27)
வெயிலும் மழையும் இன்னப் பிற வஸ்துக்களும் மனிதனது நலனுக்காகவே வல்ல அல்லாஹ்வால் அருளப்படுகின்றன. இவ்வருட்கொடைகளைப் பழிப்பது மாபெரும் தவறு. நமக்கு நாமே நாசத்தைத் தேடிக்கொள்ளும் வழி. நாம் உயிரினும் போற்றும் நபி(ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால் “அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபியா” யா அல்லாஹ் பலன் தரும் மழையைப் பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள் என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இச்செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. அன்புச் சகோதரர்களே பழிப்பதை தவிர்ப்போம் பயன் தரும் துவாக்களைக் கேட்போம்.
ஐயம் : யாஸீன் சூராவில் 13,14ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் இரு தூதுவர்கள் யார்? மூன்றாமவர் யார்? 26, 27ம் வசனத்தில் மூன்றாம் நபரை அம்மக்கள் கொன்ற பின், இறைவன், அந்நபரை சொர்க்கத்தில் பிரவேசிப்பாயாக! என்று உடனே சொல்கிறானே, அப்படியானால் இறந்துபோன ஏனைய நபிமார்கள் இறைநேசர்கள் நிலை என்ன? அந்நபரை அல்லாஹ் சொர்க்கம் புகச் சொன்னதும் சந்தோசமடைகிறார் என்றால் அவரது ஆன்மா–ரூஹ் உயிருடன் இருக்கத்தானே செய்கிறது. இந்த ஆயத்தின் மூலம் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது மறுமை வரை இருக்கிறது எனும் தொனியும் இருப்பதாக தெரிகிறதே? வசனம் 27ல் அந்த நல்லடியார் இறைவனிடம் துஆ கேட்கும் தோரணையில் அமைந்திருப்பதால் ஒலியுல்லாக்கள் நாம் இறைஞ்சுவதை கேட்கும் சக்தியையும், நமக்காக அவர்கள் இறைஞ்சும் நன்மையையும் ஏன் பெற்றிருக்ககூடாது? இதற்கான பதிலை அதி சீக்கிரம் எழுதவும். – இறையடிமை ஜமால்
தெளிவு : அல்லாஹ் இவ்வசனங்களில் கூறும் மூன்று தூதுவர்களின் பெயரைப் பற்றி பல சஹாபாக்கள் பல்வேறு பெயரை குறிப்பிடு வதால் தீர்க்கமாக கூறமுடியாது.
அவரை அம்மக்கள் கொன்றபின், அல்லாஹ் அவருடைய ரூஹை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். அவ்வாறு புகுத்தப்பட்ட ரூஹ் தனது நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவே தொடர்ந்து வசனங்கள் வருகின்றன.
நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்துச் சொல்லும்போது, அவர்களின் ரூஹ் பச்சை நிறத்துப் பறவையின் கூட்டுக்குள் புகுத் தப்பட்டு சுவனத்தில் உள்ளன. அவை அங்கு விரும்பிய பிரகாரம் உண்டு சுற்றித் திரிகின்றன என்றார்கள். இப்னு மஸ்வூத்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்கள் என்று நாமெல்லாம் போற்றும் ஏனையோர் கப்ரில் விசாரணைகள் முடிந்தவுடன், மலக்குகள் அவருக்கு உரிய இடத்தைக் காட்டி இதுவே கியாம நாள் வரை உங்களது தங்குமிடம் என்று கூறுவர். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கும் இச் செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்கள் கூறும்போது கப்ரில் நல்ல மனிதர் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்கு கிடைத்த இம்மகத்தான வாழ்வை கூறிவிட்டு வருகிறேன் என்று கேட்கும்போது புது மணமகளைப் போல் உறங்கு என்று கூறப்படும் என்றார்கள். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் இச்செய்தி திர்மிதியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் கூறினார்கள்: கப்ரில் விசாரணை முடிந்தபின் சுவனத்து ஆடைகள் அணிவிக்கப் பட்டு, சுவனத்து விரிப்பு அவருக்கு விரித்து படுக்க வைக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். பர்ரா இப்னு ஆஸிப்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
மரணத்திற்கும், மறுமைக்கும் இடையிலுள்ள இந்நிலைகளை வைத்து உலகத்தில் உயிருடன் இருப்பது போல் ஒலியுல்லாக்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுவதும், கேட்கும் சக்தியை பெற்றுள்ளார்கள் என்று கூறுவதும், நாம் அவரிடம் இறைஞ்சினால் நமக்காக அவர் இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்பதும் பல குர்ஆன் வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் விரோதமானது. வல்ல அல்லாஹ் இம்மாதிரியான தவறான எண்ணங்கள் செயல்களை விட்டும் உலக முஸ்லிம் களைப் பாதுகாப்பானாக!
ஐயம் : “நீ இந்த உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல வாழ்ந்து விட்டுச் செல்” என்ற ஹதீதின் முழு வடிவம் என்ன? இதன் சரியான விளக்கம் என்ன? – முஹம்மத் சிராஜ்
தெளிவு : வல்ல அல்லாஹ் சூரத்துல் முஃமின் என்ற அத்தியாயத்தில் 39வது வசனத்தில் பிர்அவ்னின் குடும்பத்தில் ஈமான் கொண்டிருந்த மனிதரின் கூற்றைத் தெளிவாகக் கூறுவதைக் கவனியுங்கள். “என்னுடைய சமூகத்தாரே இவ்வுலக வாழ்க்கையயல்லாம் அற்ப சுகம்தான்” அன்றியும் நிச்சயமாக, மறுமையோ அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
மேற்கண்ட வசனத்திற்கும், ஏனைய வசனங்களுக்கும், விளக்கமாக நாம் உயிரினும் போற்றும் நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து காட்டினார்கள். இதனை தெளிவு படுத்தும் விதமாகவே நாங்கள் குறிப்பிடும் ஹதீதும் இருக்கிறது. ஹதீதின் முழுவிபரம் பின்வருமாறு :
நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்பொழுது அவர்கள் பேரீச்ச ஓலைப் பாயில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோலில் அதன் அடையாளம் பதிந்திருந்தது. எனவே நான் அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்களே நாங்கள் தங்களுக்காக ஒரு மெத்தை தயாரித்திருக்கிறோம். அதனைத் தாங்கள் ஓலைப் பாயின் மீது விரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் தாங்கள் (தங்களை பாயின் அழுத்து தலை விட்டும்) காத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். அதற்கவர்கள் எனக்கு உலகத்தில் என்ன வேண்டியுள்ளது. எனக்கும் உலகத்திற்கும் செல்லும் வழிப்போக்கன் மர நிழலைத் தேடி (சற்று நேரம் தங்கிய) பின் அதனை விட்டுச் செல்வது போன்றேயன்றி வேறில்லை என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத்(ரழி) அறிவிக்கும் இச்செய்சி திர்மிதியில் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட இறை வசனத்துடன் தாங்கள் குறிப்பிடும் ஹதீதையும் இணைத்து படிக்கும்பொழுது மிகச் சரியான விளக்கம் தமக்கு கிடைத்துவிடும்.
ஐயம் : அரபி மொழி தெரியாததால், தமிழ் மொழி பெயர்ப்பை படித்து உணர்ந்து நடந்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா? – ரபீக் அஹ்மத்
தெளிவு : உலக மக்கள் நேர்வழி வாழ்வதற்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதே அல்குர்ஆன் இதன் பொருளை எம்மொழியிலும் அறிந்து, உணர்ந்து நடப்பதிலேயே முழு வெற்றி கிடைக்கும். இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் மறுமையில் குர்ஆனையும், குர்ஆனின்படி உலகில் செயலாற்றியவர்களையும் ஒன்று சேர்க்கப்படும். குர்ஆனை ஓதி அதன்படி நடந்தவருக்காக அல்குர்ஆன் பரிந்துரை செய்யும். (ஹதீத் சுருக்கம்) நவ்வாஸ் இப்னு ஸம்ஆன்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிம் திர்மிதியில் உள்ளது.
எனவே எம்மொழியில் குர்ஆனை உணர்ந்து ஓதி நடந்தாலும் உலகில் உள்ள அனைத்து பாஷைகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வான்.