அன்பளிப்பு – கொடுப்பதும்! வாங்குவதும்!!
M. சையத் முபாரக், நாகை
நோக்கம் அனுமதி :
அன்பு + அளிப்பு = அன்பளிப்பு. அன்பை பகிர்ந்துகொள்வதே அன்பளிப்பு.
சக மனிதர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் இணைந்து வாழவேண்டும் என்பதுவே அன்பளிப்பு களைப் பகிர்ந்து கொள்வதின் நோக்கம் ஆகும். அன்பை வெளிப்படுத்துவதற்காக கொடுக்கவும், வாங்கவும் செய்யும் பரிசுப் பொருளே அன்பளிப்பு.
“நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்யுங்கள். அதனால் உங்களில் ஒருவர் மற்றொருவருக்கு விருப்பம் உள்ளவராக ஆகிவிடுவார்” என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அபி யஃலா : 6148)
அன்பளிப்பு அன்பை அதிகரிக்கும்; இதயங்களை இணைக்கும்; நேசிப்பை ஏற்படுத்தும்; மனக் கசப்பைக் களைந்து பகைமையை நீக்கும்; உறவினர், நண்பர், அண்டைவீட்டார் நல்லுறவைப் பேணும்; சமூக உறவை வலுப்படுத்தும்; சமூக ஒற்றுமையை மேம்படுத்தும். எளிய பொருளாக, மதிப்பற்ற பொருளாக இருந்தாலும் அந்த அன்பளிப்பை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளவேண்டும்.
“ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக்கொள்வேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2568) மேலும் பார்க்க : புகாரி : 5178
முன்னுரிமை யாருக்கு?
நாம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்குவோம். கணவன் மனைவிக்கும், மனைவி, கணவனுக்கும் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும்போது அவர் களிடையே நேசம் அதிகரிக்கும். தான தர்மங்களைக் கொடுப்பதில் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் அன்பளிப்புகளைப் பெறுவதற்கு முன்னுரிமை பெற்றவர்கள் அண்டை அயலாரே.
“அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் நான் யாருக்கு அன்பளிப்புச் செய்வது? என்று நான்(ஆயிஷா ரழி) கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்று பதிலளித்தார்கள். (புகாரி:6020)
“நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிக மாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக! உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் அபூ தர்(ரழி)யிடம் சொன்னார்கள். (முஸ்லிம் : 5120)
பிரதி உபகாரம் செய்யலாமா?
அன்பளிப்பைப் பெறும் நாம் நம்மிடம் இருந்தால் நம்மால் இயன்றதை பிரதி உபகாரமாகச் செய்யலாம். பிரதிபலன் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களுக்காக துஆ (பிரார்த்தனை) செய்யவேண்டும்.
“நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்”. (புகாரி : 2585, அபூதாவூத் 3069)
இழிவாகக் கருதலாமா?
அன்பளிப்பு என்பது அன்பின் அடையாளம் அல்லவா? அன்பை மதிப்பிட முடியுமா? அது உயர்ந்த பொருளாக என்று பார்க்கக்கூடாது. எளிய பொருளாக இருந்தாலும் மதிப்பு மிக்கதாக கருத வேண்டுமே தவிர இழிவாகக் கருதக் கூடாது; அற்பமாக எண்ணக் கூடாது.
“முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை(அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும், பெறுவதையும் அவர்கள்) இழிவாக கருத வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2566)
எளிய பொருள் தானே என்று அண்டை வீட்டாருக்குக் கொடுக்காமலும் இருக்கக் கூடாது. அற்பப் பொருள் தானே இதை எல்லாம் வாங்கலாமா? என்று அண்டை வீட்டாரும் இழிவாகக் கருதக் கூடாது. அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதிபலனை எதிர்பார்க்கலாமா?
வேறு இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் நாம் அன்பளிப்பு செய்யும்போதே, நம் வீட்டு நிகழ்விற்கு இந்த அன்பளிப்பு இதே அளவோ, அல்லது இதைவிட அதிகமாகவோ திரும்ப வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதனை நாம் முதலீடாக கடன் கொடுத்ததாக எண்ணிக் கொள்கிறோம். எழுதி வைத்துக் கொள்கிறோம். எதிர்பார்ப் போடு காத்திருக்கிறோம். இதனை “மொய் மேஜை” என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வசூல் வேட்டை நடத்தப்படு வதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அண்ணன், தம்பி மற்றும் உறவுக்குள் சண்டை ஏற்பட்டால், நான் இதனை அன்பளிப்பு செய்திருக்கிறேன். அதனைத் திருப்பித் தா என்று கேட்பார்கள். இதனை நாம் பல இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அன்பளிப்பு செய்ததை திரும்ப எதிர்பார்ப்பதும், திரும்ப கேட்பதும், நான் செய்ததை விட குறைத்துச் செய்கிறாயே என்று சண்டையிடுவதும் கேடுகெட்ட செயல்களாகும். இவைகள் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் ஆகும். ஆகவே, இவைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
நாய் சாப்பிடுகிறது; செரியாமையால் வாந்தி எடுக்கிறது; அது எடுத்த வாந்தியை திரும்ப அதுவே சாப்பிடுகிறது. நாம் செய்த அன்பளிப்புகளை திரும்ப கேட்பது, திரும்ப எதிர்பார்ப்பது நாய் வாந்தி எடுத்ததை திரும்ப சாப்பிடுகிறதே அதற்குச் சமமானது.
“(தான் கொடுத்த) அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன், தன் வாந்தியை திரும்பத் திண்ணும் நாயைப் போன்றவன் ஆவான். (இதுபோன்ற) இழிவான குணம் நமக்கு அழகில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (புகாரி : 6975,2622, அபூதாவூத்:3071)
அன்பளிப்பை திரும்பப் பெறக்கூடாது என்றாலும் விதிவிலக்காக தந்தை தன் மகனுக்குக் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறலாம்.
“எந்த ஒருவருக்கும் ஒரு பொருளை அன்பளிப்பு செய்ததற்கு பிறகு அதனைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதியில்லை, தந்தை தன் மகனுக்கு வழங்கிய அன்பளிப்பைத் தவிர” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத் 3072) மேலும் புகாரி 2586ல் பாருங்கள்.
நிர்ப்பந்தம் செய்யலாமா?
வீடு குடி புகும் தம்பியோ அல்லது தங்கையோ தனது அண்ணனிடம் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி எனக்கு இதை வாங்கித் தாருங்கள் என்று ஆணித்தரமாகக் கேட்கின்றனர். அதிலேயே பிடிவாதம் காட்டுகின்றனர். அன்பளிப்பு என்பது தனக்கு விருப்பமானதைச் செய்வதே. நிர்ப்பந்தித்துக் கேட்பது அன்பளிப்புக்கு எதிரானது. எனது வீட்டிற்கு இது தேவையாக இருக்கிறது. உங்கள் சக்திக்கு உட்பட்டிருந்தால், உங்களுக்கு விருப்பமிருந்தால் அதை வாங்கித் தாருங்கள் என்று கேட்கலாம். எந்தவிதத்திலும் நிர்ப்பந்தம் செய்து வாங்குவது தவறானதாகும்; தவிர்த்து கொள்ள வேண்டியது ஆகும்.
புகழுக்காக, பெருமைக்காக :
சிலர் தமது சக்திக்கு மீறி தகுதிக்கு மேலாக, கடனை வாங்கி ஆடம்பரமான பொருளை அன்பளிப்பு செய்வர். இது மற்றவர்கள் தன்னை புகழ்ந்து பேசவேண்டும்; பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக. மனம் விரும்புவதை, மகிழ்ச்சியாக, தனது சக்திக்குட்பட்டுச் செய்வதே அன்பளிப்பு. ஆடம்பரமாகவோ, வீண் விரயமாகவோ, கடன் வாங்கியோ அன்பளிப்பு செய்வது அன்பளிப்பு ஆகாது. இது மார்க் கத்திற்கு முரணானது. இப்படிச் செய்வதிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.
அன்பளிப்பை (மொய்யை)த் தவிர்க்கவும்:
சிலர் தமது வீட்டில் நிகழும் நிகழ்ச்சிக்காகப் பத்திரிக்கைக் கொடுக்கும்போது அதில் அன்பளிப்பை (மொய்யை)த் தவிர்க்கவும் என்று அச்சிடப்பட்டிருக்கும். நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கும்போது நாம் மறுக்கலாமா? கூடாது தான். அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது. அன்பளிப்பு செய்யமுடியாத ஏழைகள் தமது இயலாமையால் நிகழ்ச்சிக்கு வர தயங்குகிறார்கள். இப்படி அச்சிடுவதால் அவர்களும் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள் வர் என்று கூறுகின்றனர்.
“ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்தழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தவராவார்.” (புகாரி : 5177, முஸ்லிம் : 2816)
“வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வந்தர்கள்) அழைக்கப்படும் மண விருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். விருந்தழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 2819)
அதனால், அன்பளிப்புகளைத் தவிர்க்கவும் என்று குறிப்பிடுவதை விட பொருளாதார அன்பளிப்பை விட தங்களின் மேலான வருகையும், தங்களின் துஆவுமே மேலான அன்பளிப்பு. தங்களின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று அச்சிடலாம்.
அன்பளிப்பா? இலஞ்சமா?
உயர் பதவியில் உள்ளவர்களை, முக்கிய தலைவர்களை சந்திக்கும்போது சிலர உயர்வான அன்பளிப்புகளை வழங்குவர். இது தனது தேவைகளின்போது பலன் தரும் என்பதற்காக, இது அன்பளிப்பு அல்ல, லஞ்சம்.
“கூடா வழியில் அடுத்தவரின் சொத்தை விழுங்காதீர்கள். இன்னும் மற்றவர்களின் சொத்தில் ஒரு பாகத்தை கபளீகரம் செய்ய (அபகரிக்க) ஆட்சியாளர்களை கைக்குள் போடாதீர்கள். உரிமைளைப் பறிப்பது தவறு என்பதை அறிந்துகொண்டே!” (அ.கு. 2:188)
நபி(ஸல்) அவர்கள் “அஸ்த்‘ எனும் குலத்தைச் சேர்ந்தவரை ஜகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் “இபனுல் லுத்பிய்யா‘ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவ் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது (ஜகாத்); இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “இவர் தன் தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? என்று பார்க்கட்டும்! என் உயிரத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து (முறை கேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். (புகாரி : 2597) மேலும் பார்க்க அபூதாவூத் : 3074)
நாம் அன்பளிப்புகளையும், அன்பளிப்புப் போன்ற தோற்றத்தில் வரும் வேறு சிலவற்றையும் பிரித்தறிவோம்! அன்பளிப்புகளை மணமுவந்து கொடுத்தும் பெற்றும் அன்பை, பாசத்தை, நேசத்தை பரிமாறிக் கொள்வோம்! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்!