நினைத்தாலே  கசக்குது….. (முஸ்லிம் சமூகம் கண்ட மாற்றம்) 

in 2026 அக்டோபர்

நினைத்தாலே  கசக்குது….. (முஸ்லிம் சமூகம் கண்ட மாற்றம்) 

அ. நஜ்முத்தீன்

பொதுவாக “நினைத்தாலே இனிக்கும்” என்றுதான் சொல்வார்கள். ஆனால், “நினைத்தாலே  கசக்குது”  அது  என்ன?

அது முஸ்லிம் சமூகம் கண்ட  மாற்றம்:

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த மாற்றம் முஸ்லிம் சமூகத்தை உண்மையிலேயே  முன்னேற்றத்திற்குக்  கொண்டு   சென்றுள்ளதா?

தமிழக முஸ்லிம் சமூகம் 1980ம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இந்த மாற்றத்தை விரிவாக ஆராய்ந்து பார்ப்பது ஒரு முக்கியமான வரலாற்றுப்  பணியாகும். 

இதனை  முழுமையாக ஆராய வேண்டு மென்றால் குறைந்தபட்சம் நூறு பக்கங்களைக் கொண்ட ஒரு முழு நூலாகவே எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ். அதற்கும் ஒருநாள் முயற்சி செய்வோம். இப்போதைக்கு சுமார் நான்கு பக்க கட்டுரை வடிவில், மிகவும் சுருக்கமாகப்  பார்ப்போம்.

1980க்கு முன்பு : 1980ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களிடம் மார்க்கக் கல்விக்கே அதிக முக்கியத்துவம்  இருந்தது  என்று  பொதுவாகக்  கூறலாம்.

மார்க்கக் கல்வியைப் பெற்ற மத அறிஞர்கள் மற்றும் மதகுருமார்கள் சமூகத்தில் முக்கியமான பங்காற்றினர். அதே நேரத்தில், உலகக் கல்வி என்று சொல்லப்படும் நவீனக் கல்வியைப் பெறும் போக்கு முஸ்லிம் சமூகத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே  இருந்தது.

பின்னர் மதரஸா கல்வியுடன் உலகக் கல்வியையும் கற்கவேண்டும் என்ற போக்கு வளரத் தொடங்கியது. அதன் காரணமாக கல்வி, சமூக நலம், மார்க்கப் பணிகள், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் போன்ற பல துறைகளில் முஸ்லிம்களின் ஈடுபாடு அதிகரிக்கத்  தொடங்கியது.

புதிய  அமைப்புகளின்  வருகை :

இந்தக் காலகட்டத்தில் பல்வேறு சமூக மற்றும் மார்க்க அமைப்புகள் உருவாகி அல்லது வலுப்பெற்று, சமூகச் சிந்தனையில் தாக்கத்தை  ஏற்படுத்தின. 

அவற்றில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் அதன் மாணவப் அமைப்பான SIO (Students Islamic Organisation of India) ஆகியவற்றை யும் குறிப்பிடலாம் SIO 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக அதன் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SIO போன்ற மாணவர் இயக்கங்களின் மூலம் இளைஞர் களிடையே உலகக் கல்வி, சமூகப் பிரச்சினைகள், இஸ்லாமிய சிந்தனை, சமூகப் பொறுப்பு மற்றும் தன்னார்வச் சேவை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் விளைவாக “மார்க்கம் மட்டும் போதுமா? உலகக் கல்வியும் அவசியமல்லவா?” என்ற சிந்தனையும் இளைஞர்களிடையே வளரத் தொடங்கியது.

தமிழ்  முஸ்லிம்  ஊடகத்தின்  தாக்கம் :

“சமரசம்” போன்ற தமிழ் ஊடக முயற்சிகள் மூலம் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் அறிவு சார், மார்க்க மற்றும் சமூக விவாதங்கள் பரவலாகத் தொடர்ந்தன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு அமைப்பும் சமரசம் இதழை தனது முக்கிய ஊடக முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் மார்க்கம் மட்டுமல்லாமல், சமூகம், அரசியல், கல்வி, மனித உரிமை மற்றும் நாட்டு நடப்பு கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பகுதி முஸ்லிம் சமூகத்தில் வளர்ந்தது.

மார்க்கச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் :

1982-1985களின் நடுப்பகுதிக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு கள், நூல்கள் மற்றும் ஊடகப் பிரசாரங்கள் மூலம் மார்க்கச் சிந்தனை மக்களிடம் வேகமாகச் சென்றது. குறிப்பாக கமாலுத்தீன் மதனி, அபூ அப்தில்லாஹ், பீ.ஜே., Dr.ஹபீப் முஹம்மது போன்றவர்களும், மேலும், பல மார்க்க அறிஞர்களும் தங்களது சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள் மூலம் மக் களிடையே தாக்கத்தை ஏற்படுத்தினர். இதன் மூலம் குர்ஆன், ஹதீத் ஆதாரங்களைத் தேடுதல், மூடநம்பிக்கைகளைப் பற்றி சிந்தித்தல், மார்க்கக் கேள்விகளை எழுப்புதல் போன்ற பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் இதன் மறுபக்கமாக, கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, சில இடங்களில் குழப்பங்களும் சமூகப்  பிரிவுகளும்  உருவானது.

ஒரு புத்தகத்தின் தாக்கம் (பல்சமயச் சிந்தனை)

1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, KMH. சாகுல் ஹமீது என்ற அபூ அப்தில்லாஹ் அவர்கள், சமயம் மற்றும் சமுதாயம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து நிகழ்த்திய உரை பின்னர் நூல் வடிவில் வெளியானது.

அந்த நூல் எனது மார்க்கச் சிந்தனையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்குள் மார்க்க ரீதியாக இருந்த சில சந்தேகங்களுக்கு அதன்மூலம் விடை கிடைத் தது. அந்த நூலை 1985ஆம் ஆண்டு எனது நண்பரின் திருமணத்தில் சுமார் 300 பிரதிகள் இலவசமாக வழங்கினேன். (1984லில் இந்த நூல் வந்த பிறகு 1986 வரையிலான காலகட்டத்தில் சமூகத்தில் மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவை பெரிய அளவில் வெளிப்படாமல் இருந்தது) ஆனால் 1986க்குப் பிறகு பல்வேறு மார்க்க அறிஞர்களின் தாக்கத்தால் அந்தக் கருத்து வேறுபாடுகள் வெளிப்படை யாகத்  தெரியத்  தொடங்கின.

பொருளாதார  மாற்றம் :

இதனுடன் சமூகத்தின் பொருளாதார வாழ்க்கையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அரபு நாடுகளில் அதிகரித்த வேலைவாய்ப்புகளால் பல முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அதன் மூலம் பல குடும்பங்களின் பொருளாதார நிலை உயர்ந்தது. அதன் தாக் கம் கல்வி, உடை, வீடு, திருமணம், உணவு, போக்குவரத்து என வாழ்க்கையின் பல துறைகளிலும் தெரிந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சியுடன் சில இடங்களில் ஆடம்பரமும் அதிகரித்தது.

சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு :

முஸ்லிம்கள் தங்களது கல்வி, வேலை வாய்ப்பு, சமூக உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து முன்பை விட அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் போக்கும் அதிகரித்தது. ஆனால் ஆரம்பக் காலத்தில் இந்த விவாதங்கள் பெரும்பாலும் படித்த நகர்ப்புற இளைஞர்களிடமே அதிகமாகக் காணப்பட்டன என்று கூறலாம்.

தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றம் :

1980களில் தொலைபேசி என்பது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்காத ஒன்றாக இருந்தது. பின்னர் தொலைத்தொடர்பு வளர்ச்சி அடைந்தது. தொலைபேசி, தொலைக் காட்சி, கணினி, இணையம், செல்போன், சமூக ஊடகம் என தகவல் பரிமாற்றம் வேகமடைந்தது. ஆனால் இங்கு நாம் செய்த ஒரு பெரிய தவறு என்னவென்றால்;

“தகவல் கிடைப்பது மட்டும் அறிவு அல்ல” தகவலில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்தறியும் திறனும் அவசியம் என்பதை நாம் சில  நேரங்களில்  மறந்து விட்டோம்.

பெண்களின்  கல்வி :

பெண்களின் நிலையிலும் இந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெண்களின் கல்வி வளர்ந்தது. பல்வேறு துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் பங்கெடுக்கத் தொடங்கினர். கல்வி வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றங்களில் இதுவும்  ஒன்று.

மாற்றத்தின்  மறுபக்கம் : 

இவ்வளவு மாற்றங்களும், சில முக்கியமான முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும், சமூகப் பிரிவு, கருத்து மோதல்கள், சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு போன்றவற்றால் முஸ்லிம் சமூகம் பல புதிய சவால்களையும் சந்திக்கத் தொடங்கியது.

அந்தச்  சவால்கள்  என்னென்ன?

இன்ஷா அல்லாஹ்! அதை அடுத்த இதழில்  பார்ப்போம்…

Previous post:

Next post: