உள்ளே! வெளியே!

in 2026 அக்டோபர்

உள்ளே! வெளியே!

அ. நஜ்முத்தீன்

“நிச்சயமாக தொழுகை வெட்கக்கேடான காரியங்களையும், தீமையையும் தடுக்கும்.”
அல்குர்ஆன் 29:45

மேற்கண்ட வசனத்தில், வெட்கக்கேடான காரியங்களையும், தீமையையும் தொழுகை தடுக்கும்  என்று  இறைவன்  கூறுகிறான்.

ஆனால் பெரும்பாலோருக்கு எது வெட்கக்கேடான செயல்கள், எது தீமையான செயல்கள் என்பது முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. ஒருசில செயல்களை மட்டும் வெட்கக்கேடானவை என்றும், ஒருசில செயல்களை மட்டும் தீமையானவை என்றும் நினைக்கின்றனர். விபச்சாரம் வெட்கக்கேடான செயல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில்  இதைத்  தெளிவாகக்  குறிப்பிடுகிறான்.

ஆனால் வெட்கக்கேடான செயல்கள் விபச்சாரத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இறைவன் தனது திருமறையில் பல்வேறு வகையான வெட்கக்கேடான செயல்களையும் தீமையான செயல்களையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.

வெட்கக்  கேடான  செயல்கள்  எவை?

திருக்குர்ஆனில் “அல்–ஃபஹ்ஷாஅ” என்ற சொல் மிகவும் அருவருக்கத்தக்க, ஒழுக்கக்கேடான  செயல்களைக் குறிக்கிறது. அதில் விபச்சாரம் போன்ற பாலியல் ஒழுக்கக்கேடுகள் மட்டுமல்லாமல், மானத்திற்கும், கண்ணியத்திற்கும் எதிரான செயல்களும் அடங்கும். வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஒழுக்கத்தை மீறும் செயல்கள் வெட்கக்கேடான  செயல்களாகும்.

தீமைகள்  எவை?

திருக்குர்ஆனில் “அல்முன்கர்” என்ற சொல், இறைவனாலும், நல்லறிவாளர்களாலும் மறுக்கப்படும் தவறான  செயல்களைக்  குறிக்கிறது.

உதாரணமாக : பொய் கூறுதல், மோசடி செய்தல், திருடுதல், அநியாயம் செய்தல், வஞ்சகம் செய்தல், பிறருடைய உரிமைகளைப் பறித்தல், பிறரைத் துன்புறுத்துதல், பெற்றோரை அவமதித்தல் போன்றவை தீமையான செயல்களாகும்.  ஆகவே, வெட்கக்கேடான செயல்களும், தீமையான செயல்களும் சில குறிப்பிட்ட செயல்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.

அப்படியானால் தொழுகை இவற்றை எல்லாம்  தடுக்கிறதா?

நிச்சயமாகத் தடுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பலர் தொழுது கொண்டிருந்தும் பொய் சொல்கிறார்கள்; பிறரை ஏமாற்றுகிறார்கள்; அநியாயம் செய்கிறார்கள்; பிறருடைய  உரிமைகளைப்  பறிக்கிறார்கள். அப்படியானால், “தொழுகை வெட்கக்கேடான காரியங்களையும், தீமைகளையும் தடுக்கும்” என்று இறைவன் கூறியிருக்கும் போது, ஏன் இவர்களிடம் தீமைகள் தொடர் கின்றன?

இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான  கேள்வி.

ஒருவர் தொழுகையில் “அல்லாஹு அக்பர்” என்று கூறி, தான் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் தொழுகிறார். ஆனால் தொழுகையை முடித்தவுடன் வெளியே சென்று ஒருவரை ஏமாற்றுகிறார் அல்லது பொய் சொல்கிறார் அல்லது அநியாயம் செய்கிறார் என்றால், அந்தத் தொழுகையின் உணர்வு அவரது நடத்தையில் முழுமையாகப் பிரதிபலிக்க வில்லை என்று பொருள்.

காரணம்: பெரும்பாலோரின் மனதில் “தொழும்போது மட்டுமே நான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருக்கிறேன்” என்ற எண்ணம் உள்ளது.

ஆனால் உண்மையான இறையச்சம் என்பது  தொழுகை  நேரத்தில்  மட்டும்  அல்ல. 

“நான் எங்கே இருந்தாலும் அல்லாஹ் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்ற உணர்வு எப்போதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். அந்த உணர்வு உண்மையாக உள்ளத்தில் பதிந்துவிட்டால், ஒருவர் தனியாக இருக்கும் போதும்  தவறு  செய்யத்  தயங்குவார். 

மக்கள் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் பார்க்கிறான். மக்கள் அறியவில்லை  என்றாலும்  அல்லாஹ் அறிகிறான். மக்களிடம் மறைத்துவிடலாம்; ஆனால் அல்லாஹ்விடம் எதையும் மறைக்க முடியாது. இந்த இறையச்சம் உள்ளத்தில் உருவாகும் போது, தொழுகை மனிதனுடைய நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கும்.

தொழுகை என்பது வெறும் ஒரு கடமை நிறைவேற்றுவதற்கான சடங்கு  அல்ல. தொழுகை உள்ளத்திலும், நடத்தையிலும் சீர்படுத்தும்  ஒரு  பயிற்சி. உடலை மட்டும் வணக்கத்தில் நிறுத்து வதற்காக தொழுகை ஏற்படுத்தப்படவில்லை. வாழ்க்கையையும் தவறான செயல்களிலிருந்து நிறுத்துவதற்காகவே தொழுகை மனிதனுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு நன்றி செலுத்தவும், அவனை நினைவு கூறவும், அவனுடைய கட்டளைகளின்படி வாழவும் தொழுகை மனிதனைப்  பயிற்றுவிக்கிறது.

எனவே, தொழுகையின் உண்மையான பயன் நமது வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும்.

தொழுகையில் நெற்றியைத் தரையில் வைப்பது  மட்டும்  போதாது. தொழுகைக்குப் பிறகு நமது கைகளும், நாவும், கண்களும், எண்ணங்களும் தவறானவற்றிலிருந்து  விலக  வேண்டும்.

அப்போதுதான் தொழுகை நம்மை வெட்கக்கேடான செயல்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் உண்மையாகத் தடுக்கத் தொடங்கும். அல்லாஹ்வின் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது.

எனவே, தொழுகை நம்மை மாற்றவில்லை என்றால், தொழுகையை மட்டும் குறை கூறாமல், நமது தொழுகையின் உணர்வையும், நமது இறையச்சத்தையும் நாம் சுய  பரிசோதனை  செய்ய வேண்டும். தொழுகையை நிறைவேற்றுவோம்; தொழுகையின் உணர்வோடு வாழ்வோம்.

அப்போது வெட்கக்கேடான செயல்களும் தீமைகளும் நம்மை  விட்டு விலகத் தொடங்கும்.

வெட்கக்கேடான, தீமையான செயல்களை விலக்குவது எப்படி?

1. தவறை முதலில் அடையாளம் காண வேண்டும்.

2. தவறான இடம், தவறான நட்பு, தவறான பேச்சு, தவறான இணையப் பயன்பாடுகளை, விட்டு விலகுவது.

3. மனிதர்கள் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் பார்க்கிறான் என்ற உணர்வு மனதை பாதுக்காக்கும்.

4. நான் எப்பவும் இப்படித்தான் என்று பிடிவாதம் பிடிக்காமல் தவறை விட்டுவிட வேண்டும்.

பாவம் செய்வதும், பாவத்தை விடாமல் தொடர்வதுதான் நம்மை வெட்கக்கேடான, தீமையான செயல்களிலிருந்து மாற்றாது. ஒரு செயலை (தவறை) செய்வதற்கு முன், இதை என் குடும்பத்தினர் அல்லது மதிக்கும் ஒருவருக்கு தெரிந்தால் நாம் எவ்வாறு வெட்கப்படுவோமோ அதுபோல நினைத்து  தவறிலிருந்து  விடுபடவேண்டும்.

சுருக்கமாக: தீமையை விலக்க விரும்புபவன் தீய செயலை விட்டும் விலகுவது மட்டும் முக்கியமல்ல. அந்த தீமைக்கு அழைத்துச் செல்லும் எண்ணம் நட்பு, இடம், பழக்க வழக்கங்களிலிருந்தும் விலக வேண்டும்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என பொதுவாக சொல்லுவார்கள்.

ஒருவரிடம் “ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று எப்போது நீங்க தெரிந்துக் கொண்டீர்கள் என்று கேட்டார்களாம்; அதற்கு அவர், நான் எப்போது ஆசைப்பட்டதை (தவறான முறையில்) அடைந்தேனோ அப்போதுதான் தெரிந்தது என கூறினாராம்.

Previous post:

Next post: