மனிதரில் பிரிவுகள் ஏன்? எப்படி ஏற்படுகின்றன?
– அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி-மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையைப் போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள். அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள், மனிதரில் இந்த மதங்களும், பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? இதனை அறிவது தமது வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது.
ஆதம்(அலை) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பும்போதே அல்லாஹ் தெளிவாக இவ்வாறு எச்சரித்துள்ளான்.
நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அன்றி யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்”.
அ.கு. 2:38,39
இது அல்லாஹ், ஆரம்ப நபிக்கு இட்ட கட்டளை. ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் முதல் மனிதனாகப் படைத்தான். அவர்களை வானவர்களை விட உயர்ந்தவராகவும் சிறப்பித்துக் காட்டினான். மறுமை விசயத்திலும், ஷைத்தானின் விமத்தனத்தின் கொடூரத் தன்மையிலும் அனுபவப்பூர்வமான ஞானம் பெற்றவர் ஆதம்(அலை) அப்படிப்பட்ட ஒரு நபியையே தனது சொந்த மனித அபிப்பிராயப்படிச் செயல்படக்கூடாது. எனது கட்டளைப்படியே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினான். அவனது கட்டளைகளுக்கு மாறு செய்தால் அடையப்போவது மீளா நரகமாகும் என்று எச்சரிக்கவும் செய்தான். அல்லாஹ்வுடன் “வஹி” மூலம் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களின் நிலையே இதுவென்றால், மற்ற மனிதர்களின் நிலை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயமாக மனிதர்களில் யாரும், தங்கள் சொந்த அபிப்பிராயங்களை இறைவனது நேர்வழியில் புகுத்த முடியாது. அது மாபெரும் தவறு-வழிகேடு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆயினும் மனிதர்களில் யாரும் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. கல்லை வணங்கும் மனிதனும் அது இறைவனுக்குப் பிடித்தமான செயல்- நேர்வழி என்று நம்பியே செயல்படுகிறான். இதற்குக் காரணம் மனிதனை வழிகெடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத் தான் மனிதனது உள்ளத்தில் நல்லது என்ற நம்ப வைத்து தீமையைப் புகுத்தி, இறைவனுக்கு மாறு செய்யும் நிலைக்குக் கொண்டு சேர்த்து விடுகிறான். இதனை “எவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சி களை மேற்கொண்டு, தாங்கள் உண்மையில் அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் தம் செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளர்கள்” என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான். அல்குர்ஆன் 18:103,104
இவர்கள் சென்றடையும் இடம் மீளா நரகமாகும் என்பதை இங்கும் (18:106) அல்லாஹ் குறிப்பிடத் தவறவில்லை.
ஷைத்தானின் இந்நிலையை எவ்வாறு உருவாக்குகிறான்?
மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான். முன்னோர்களின் பெயரால் இறைவன் கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்பவைத்து, அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்து சென்ற முன்னோர் களையும், மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்று தான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான். இதனைச் சாதாரணமாகப் படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழந்து நோக்கும்போது இறைவன் கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழி நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும். நேர்வழியை அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால், நேர்வழி நடந்தவர்களின் செயல்கள் அனைத் தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறைவன் கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம் பெற்று விடலாம். இந்த நிலையில் இறைவன் கொடுத்த நேர்வழி அறியாது, நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்துச் செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம், அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கிறான். அந்த முயற்சியில் ஈடுபட்டுச் சரியாக நடந்தால் இரண்டு நன்மைகள், முயற்சியில் ஈடுபட்டுப் பின் தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு தன்மை தவறுக்குக் குற்றம் பிடிக்கப்படமாட்டான்.
“தீர்ப்பளிக்கும் ஒருவர், தாம் தீர்ப்பளிக்கையில் (குர்ஆன், ஹதீதின்படி முயற்சித்து) அது முறையானதாகி விட்டால் அவருக்கு இரண்டு கூலியுண்டு; முயற்சித்தபின் அது தவறானதாகி விட்டால் அவருக்கு ஒரு கூலியுண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அம்ருப்னில் ஆஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) என்ற ஹதீதின்படி அவர்கள் தப்பி விடுகிறார்கள். ஆனால் இறைவன் கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். 2:37 இறைக்கட்ட ளைப்படி இறைவன் கொடுத்த நேர்வழியை அறிய முயற்சிக்கவில்லை. இது முதல் தவறு அடுத்து உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி (அவர்களைப்) பின்பற்றாதீர்கள் (7:3) என்ற இறைவசனத்தைப் பொய்யாக்கி முன் சென்ற நல்லடியார் களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களைப் பின்பற்றுவதைக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது 3வது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண் டனையிலிருந்து தப்ப முடியாது. நரகமே கூலியாகும்.
காலங்காலமாக ஆதமின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிகேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக,
அல்லாஹ் இறக்கி வைத்த இந்நெறி நூலைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்லர் எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக் கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? அல்குர்ஆன் 2:170 மேலும் பார்க்க : 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87,109, 12:40, 14:10, 21:53,54, 26:74,76, 31:21, 34:43, 37:69, 43:22,23, 53:23 அல்குர் ஆன் வசனங்கள்.
இறைவன் கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். இதனால் மனிதனை வழி கெடுக்க இரண்டு வித வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கின்றன. மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக் கட்டி, அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழி தவறிச் செல்லச் செய்யும் வாய்ப்பு மற்றொன்று. எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழிதவறிச் செல்லும் மனிதன், அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும் போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ஆ கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே! எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” என்று கதறுவார்கள். அல்குர்ஆன் 33:66-68
இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீத்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வர வேண்டும். இதுவரை மனித சமுதாயத்தில் மதங்களும், பிரிவுகளும், வழிகேடுகளும் எப்படி ஏற்படுகின்றன என்று பார்த்தோம். இனி இறுதி மறை அல்குர்ஆனை ஒப்புக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் மத மூடச் சடங்குகள், பிளவுகள், பிரிவுகள் எப்படி ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
முஸ்லிம் சமுதாயத்திலும் பிரிவுகள் :
இறுதி நபிக்கு முன்புள்ள சமூகத்தினருக்குத் தங்கள் முன்னோர்களின் மனித அபிப்பிராயங்களை ஏற்று நடப்பதை விட்டு, அவற்றைச் சரி பார்க்கும் வழி அவர்களுக்கு இருக்கவில்லை. காரணம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நெறிநூல்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வில்லை. ஆனால் இறுதி நெறிநூலான அல்குர்ஆன் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சமுதாயத்திலும் மூடச் சடங்குகளும், பிரிவுகளும், பிளவுகளும் ஏற்படக் காரணம் என்ன? இதனைத் துல்லியமாக விளங்குவது நமது ஈடேற்றத்திற்குரிய முக்கிய அம்சமாக இருக்கிறது.
“இது அதிகமானோரை வழிகெடுக்கவும் செய்யும். அதிகமானோரை நேர்வழியில் செலுத்தவும் செய்யும். பாவிகளைத் தவிர வேறு எவரையும் வழிகெடுக்காது” (2:26) என்ற இறை வசனத்திற்கு ஒப்ப பெரும்பாலோர் இறை வசனங்களில் தவறான பொருள்களைக் கற்பனை செய்து கொண்டு வழிகெடுட்டுச் செல்கின்றனர். உதாரணமாக,
“அல்லாஹ்வின் பாதையில் வெட்டுப்பட்டவர்களை (சஹீதுகளை) இறந்தவர்கள் என எண்ண வேண்டாம்” (2:154) என்ற இறை வசனத்தை ஓதிக்காட்டி, கபுரு-சமாதிச் சடங்குகளை நியாயப்படுத்தும் பெருங்காட்டத்தையும், “அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், ரசூலுக்கும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்படுங்கள்” (4:59) என்ற இறை வசனத்தை ஓதிக்காட்டி தக்லீதை மத்ஹபுகளை நியாயப்படுத்தும் பெருங்கூட்டத்தையும்,
“அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்” அல்குர்ஆன் 62:10
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக திக்ரைக் கொண்டு, திக்ரு செய்யுங்கள். இன்னும் காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். அல்குர்ஆன் 33:41,42
போன்ற இறை வசனங்களை ஓதிக்காட்டி தரீக்காக்களை (சூபிஸத்தை) நியாயப்படுத்தும் பெருங் கூட்டத்தையும்,
“நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” அல்குர்ஆன் 9:40
“அல்லாஹ் என்னுடன் இருக்கிறான்; அவன் எனக்கு வழிகாட்டுவான்” அ.கு.26:62
போன்ற வசனங்களை ஓதிக்காட்டி அல்லாஹ்வும், அடியானும் இரண்டறக் கலக்க முடியும் என்ற அத்துவைதத்தை (வஹ்தத் துல்வுஜூது) நியாயப்படுத்தும் பெரும் கூட்டத்தையும்.
2:62, 22:17, 49:13 போன்ற வசனங்களை ஓதிக்காட்டி பிரிவுப் பெயர்களையும் குறிப்பாக 2:137, 4:115, 9:100 போன்ற வசனங்களைக் காட்டி “ஸலஃபி” பிரிவையும் நியாயப்படுத்தும் கூட்டத்தையும் இந்தச் சமுதாயத்தில் இன்று பார்க்கத்தானே செய்கிறோம்.