வெட்டுக்கிளி….

in 2026 அக்டோபர்

வெட்டுக்கிளி….

அ. நஜ்முத்தீன்

அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறும் நாளில், வெட்டுக்கிளிகளைப் போல் மண்ணறை யிலிருந்து   வெளியாவார்கள்.  அல்குர்ஆன் 54:7

மேற்கண்ட வசனம் நம்மை ஒரு கேள்வியையும் ஆழமான சிந்தனையையும் நோக்கி அழைக்கிறது. மறுமை நாளில் மண்ணறைகளிலிருந்து மனிதர்கள் வெளியே வருவார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு எந்தக் கடினமும் அல்ல. ஆனால் அல்லாஹ், “வெட்டுக்கிளிகளைப் போல்” வெளியே வருவார்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ் வெட்டுக்கிளியை உவமை யாகக் கூறியதற்குப் பின்னால் ஒரு சிந்திக்கத் தக்க  காரணம்  இருக்கிறது. வெட்டுக்கிளியின் வாழ்க்கை முறையை அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, அவை மண்ணில் முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து இளம் வெட்டுக்கிளிகள் வெளி வந்து, பல வளர்ச்சி நிலைகளைக் கடந்து முதிர்ந்த  வெட்டுக்கிளிகளாகின்றன.

குறிப்பாக சில வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாக வெளிப்பட்டும் நகரும் காட்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஆயிரக்கணக்கிலும், சில சமயங்களில் மிகப் பெரிய எண்ணிக்கையிலும் அவை  கூட்டமாக  நகர்வதை  நாம்  காண்கிறோம்.

சுமார் 1448 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கும், மறுமை நாள் வரை வாழப்போகும் மனிதர்களுக்கும் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஒரு உண்மை கூறுகிறான்.

குர்ஆனை வெறுமனே படித்துவிட்டு கடந்து செல்வதற்காக அல்ல; சிந்திப்பதற்காகவும், செயல்படுவதற்காகவும், படைப்பாளியைப் பற்றி சிந்திப்பதற்காகவும் குர்ஆன் மனிதனை அழைக் கிறது. மண்ணோடு மண்ணாகிப்போன மனிதன் மறுமை நாளில் மீண்டும் மண்ணறைகளிலிருந்து எவ்வாறு எழுந்து வருவான் என்ற கேள்விக்கு, வெட்டுக்கிளிகள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு கூட்டமாகச் செல்வதை ஓர் உவமையாகக் காட்டி சிந்திக்கச் செய்கிறது இந்த  வசனம்.

இன்று வெட்டுக்கிளியின் வாழ்க்கைச் சுழற்சி குறித்து அறிவியல் நமக்கு பல தகவல்களை வழங்கி யுள்ளது. மண்ணில் இடப்படும் முட்டைகளிலிருந்து இளம் வெட்டுக்கிளிகள் வெளிவருகின்றன என்பதும், அவை வளர்ச்சி யடைந்து முதிர்ந்த வெட்டுக்கிளிகளாகின்றன என்பதும் அறிவியல் ரீதியாக அறியப்பட்ட உண்மைகள். 

இதனால் இந்த வசனம் நம்மை மேலும் சிந்திக்க வைக்கிறது. ஆனால் இங்கே ஒரு முக்கியமான விசயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். “அறிவியல் இதை நிரூபித்துவிட்டது; ஆகவே இந்த வசனத்தை நம்ப வேண்டும்” என்று நாம் கூறவில்லை. மாறாக, குர்ஆன் இயற்கையில் காணப்படும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது என்பதே  சரியான  அணுகுமுறையாகும்.

மனிதன் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. ஏனெனில் அது மறுமை தொடர்பான நம்பிக்கை அதை இந்த உலகில் ஆய்வகப்  பரிசோதனையின்  மூலம்  நிரூபிப்பதும்  சாத்தியமில்லை.

அது ஈமானின் அடிப்படையான நம்பிக்கைகளில் ஒன்று. இதிலிருந்து இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது. அறிவியலால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியுமா? இதற்கான பதில்… நேரடியாக முடியாது.

அறிவியல் என்பது இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கவனித்து, அளந்து, பரிசோதித்து, ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான  ஒரு  முறையாகும். அறிவியலில் பல துறைகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் போன்ற துறைகள் இயற்கையின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்கின்றன. கணிதமும் அறிவியலுக்கு அடிப்படையாகப் பயன்படும் ஒரு  முக்கியமான  கருவியாகும்.

கணிதத்தில் நாம் எண்களைப் பயன்படுத்துகிறோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிக்கொண்டே செல்லலாம். பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்று எவ்வளவு பெரிய எண்ணை எடுத்தாலும், அதற்கு அடுத்த எண்ணை உருவாக்க முடியும். “இதுதான் கடைசி எண்” என்று சொல்லக்கூடிய ஒரு கடைசி இயற்கை எண் இல்லை. இதனால்தான் கணிதத்தில் ணூஐக்ஷூஷ்ஐஷ்மிதீ– முடிவில் லாது  என்ற  கருத்து  உள்ளது.

ணூஐக்ஷூஷ்ஐஷ்மிதீ என்பது ஒரு சாதாரண எண் அல்ல. அது முடிவில்லாத தன்மையை அல்லது எல்லையற்ற தொடர்ச்சியை குறிக்கும் ஒரு  கணிதக்  கருத்தாகும். இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், கணிதமும், அறிவியலும் நமக்கு உலகத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. ஆனால் அவற்றின் மூலம் ஒவ்வொரு தத்துவக் கேள்விக்கும் நேரடியாக பதில் கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அறிவியல் இயற்கை யின் நடைபெறும் நிகழ்வுகளை ஆராய்கிறது.

ஆனால், கடவுள் இயற்கையின் ஒரு பொருள் அல்ல. அவரை ஒரு கருவியில் வைத்து எடை அளப்பது போல அளக்க முடியாது. வெப்ப நிலையை அளப்பது போல பரிசோதிக்க முடி யாது. ஒரு பொருளை ஆய்வகத்தில் வைத்து அதன் இருப்பை நிரூபிப்பது போல கடவுளின் இருப்பை அறிவியல் முறையில் பரிசோதிக்க முடியாது.

எனவே, “அறிவியலால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை; ஆகவே கடவுள்  இல்லை”  என்று  கூறுவது  அறியாமை. அதேபோல், “அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு உண்மையும் கடவுள் இருப்பதற்கான நேரடி நிரூபணம்” என்று கூறுவதும் சரியான அறிவியல் அணுகுமுறை அல்ல.

இஸ்லாம் மனிதனை இந்தப் பிரபஞ்சத்தையும் அதைப் படைத்தவனையும் சிந்திக்க அழைக்கிறது.

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் சிந்திப்பவர்களுக்கு அடையாளங்கள் உள்ளன  என்று  குர்ஆன்  கூறுகிறது.

ஒரு அழகான கட்டிடத்தைப் பார்த்தால், “இந்தக் கட்டிடம் தானாகவே உருவானது” என்று எவரும் கூறுவதில்லை. அதன் வடிவமைப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பார்த்து, இதற்குப் பின்னால் ஒரு வடிவமைப்பாளர் இருக்கவேண்டும் என்று நாம் சிந்திக்கிறோம்.

அதேபோல், மிகப் பெரியதும் ஒழுங்க மைந்ததுமான இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது, “இதற்குப் பின்னால் இதன் தோற் றம், ஒழுங்கு, இயற்கை விதிகள் ஆகியவற்றைப்  பற்றி  மனிதன்  சிந்திக்க  வேண்டும். அந்தச் சிந்தனை இறுதியில் ஒரு மிகப் பெரிய  கேள்வியை  நம்முன்  நிறுத்துகிறது.

இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது என்பதற்கான காரணம்  என்ன?

அறிவியல், இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு  உதவுகிறது. ஆனால் “இது ஏன் இருக்கிறது?” என்ற கேள்வி அறிவியலைத் தாண்டி தத்துவத்திற்கும் இறையியலுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

எனவே, அறிவியலை நாம் மதிக்க வேண் டும். அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அறிவியலின் வரம்பையும்  புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் இயற்கையின் செயல்பாட்டை ஆராய்கிறது; இஸ்லாம் அந்த இயற்கையின் பின்னால் உள்ள படைப்பாளியை பற்றி சிந்திக்க அழைக்கிறது. “என்னைப் படைத்தவன் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் எங்கே செல்கிறேன்?” என்று சிந்திக்கத் தொடங்குவது தான் இந்த வசனத்தின்  நோக்கங்களில்  ஒன்றாகும்.

அதனால் குர்ஆனின் வசனங்களை வெறுமனே படித்துவிட்டு கடந்து செல்லாமல், அவற்றைச் சிந்திப்போம்; இயற்கையைப் பார்ப்போம்; அறிவியலைக் கற்றுக்கொள் வோம்; அதன் மூலம் படைப்பாளியைப் பற்றியும் சிந்திப்போம். ஒரு சிறிய வெட்டுக்கிளி கூட மனிதனை மறுமையையும், இறைவனையும் சிந்திக்க வைக்கும் அளவுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கிறது.

Previous post:

Next post: